மோடி தர்பார் ஆரம்பம்!

நரேந்திர மோடி… இன்னும் ஐந்து வருடங்களுக்கு இந்தியாவும் உலக நாடுகளும் தவிர்க்கவே முடியாத பெயர்.

 

வாக்குகள் எண்ணும்போது மோடி குஜராத்தில் இருந்தார். பின்னர் வாரணாசி வழியாகவே டெல்லி திரும்ப இருந்தார். ஆனால், தேர்தல் முடிவுகள் வந்த அன்று டெல்லி பி.ஜே.பி தலைமை அலுவலகத்தில் மோடி இல்லை. இங்கு ராஜ்நாத்துடன் அத்வானி தோன்றினார். வெற்றியில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்ட அத்வானி, ‘வெற்றிக்குக் காரணம் காங்கிரஸின் தவறான ஆட்சியும் வாரிசு அரசியலும்தான்’ என்றார். மோடி பெயரைக் குறிப்பிடவில்லை. பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டுதான் மோடி பெயரை அத்வானி சொல்ல வேண்டிய நிலைமை. இதையெல்லாம் டெல்லி மீடியாக்கள் பெரிய செய்திகள் ஆக்கின. இதனால் மோடி பயணத்தில் மாற்றம்.

ஆட்சி மன்றக் கூட்டம் உடனடியாகக் கூட்டப்பட்டது. இதற்காகக் கடந்த 17-ம் தேதி மோடி டெல்லிக்கு வர, அவருக்குத் தொண்டர்கள் உற்சாக வரவேற்புக் கொடுத்தனர். 30 ஆண்டுகளுக்குப் பிறகு மத்தியில் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடித்த சாதனை மோடியைச் சேரும் என்பதை

வெளிப்படுத்தும்விதமாக வரவேற்பு இருந்தது. ஸ்கார்ப்பியோ காரின் படிக்கட்டில் நின்றுகொண்டு வழி நெடுகிலும் உள்ள தொண்டர்களுக்கு வெற்றிச் சின்னத்தைக் காட்டியபடி நன்றி கூறிச் சென்றார். சர்தார் பட்டேல் சாலையில் பல உயர்ந்த கட்டடங்களும் நட்சத்திர ஹோட்டல்களும் உண்டு. இந்தக் கட்டடங்களில் எல்லாம் கூட்டம் கூட்டமாக மக்கள் நின்றனர். நேருவின் நினைவு வீடு இருக்கும் தீன்மூர்த்தி மார்க், காங்கிரஸ் தலைமை அலுவலகம் இருக்கும் அக்பர் ரோடு வழியாகவே பி.ஜே.பி அலுவலகத்துக்குச் சென்றார் மோடி. அவர் தலைமை அலுவலகத்துக்கு வந்தபோதும் கூட்டம் பெரும் திரளாக வந்தது. ஆட்சி மன்றக் கூட்டத்தில் தலைவர்கள் மோடியை வாழ்த்தினர். லட்டு கொடுத்து வாழ்த்திய அத்வானியின் காலைத் தொட்டு மோடி வணங்கினார். அத்வானியை மட்டுமல்ல… குஜராத்தில் உள்ள தன் அரசியல் எதிரி கேசுபாய் பட்டேல் காலில்கூட விழுந்து வணங்கத் தவறவில்லை. மரியாதை வேறு… மோடியின் அரசியல் வேறு! 

இப்போது குஜராத் பவனில் தங்கியிருக்கிறார் மோடி. தேர்தல் சமயத்திலும் மோடிக்கு காந்தி நகரும் இந்த குஜராத் பவனும்தான் மையமாக இருந்தது. பிரதமரின் அதிகாரபூர்வமான வீடும் இந்த குஜராத் பவனுக்கு அருகிலேதான் உள்ளது. மத்திய அரசின் மையமே இந்த குஜராத் பவன்தான். இந்த பவனுக்குள் கடந்த மூன்று மாதங்களாக அனுமதி இல்லாமல் யாரும் போக முடியாது. அதிலும் மோடி உள்ளே இருந்தால், தகவல் தொடர்புகள்கூட ஸ்தம்பித்துவிடும். அந்த அளவுக்கு மோடியிடமும் அவரது குஜராத் பாதுகாவலர்கள் வசமும் சாதனங்கள் உண்டு. இப்போது கூடுதலாக டெல்லி போலீஸின் பாதுகாப்பு சாதனங்களும் வந்துவிட்டன.

இந்த குஜராத் பவனில் இருந்தபடிதான் மோடி தனது புதிய ஆட்சிக்கான வியூகத்தை அமைக்கிறார். இதில் பி.ஜே.பி-யின் தலைமை அலுவலகத்தில் உள்ளவர்களோ பி.ஜே.பி-யின் மூத்த தலைவர்களோ இல்லை. இப்படிப்பட்ட நெருக்கடியான கட்டத்தில் கட்சியின் மூத்தத் தலைவர்களான ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி போன்றவர்கள் யோகா குரு ராம்தேவ் யாதவுக்கு பாராட்டு விழா நடத்திக்கொண்டு இருந்தனர். சுமார் 80 அமைச்சர்களையும் சபாநாயகர் முதல் பல்வேறு பதவிகளுக்கு உரியவர்களையும் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் இந்தத் தலைவர்கள் யாரும் இதுவரையில் இல்லை. மோடிக்கு உதவுவதில் ஏழு பேர் கொண்ட டீம்தான் குஜராத் பவனில் உள்ளது. இந்த ஏழு பேர் டீமில் பிரதானமானவர் அமித் ஷா!

மோடி முதலில் வாஜ்பாய் வீட்டுக்குச் சென்று ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். அதன் பின்னர்தான் அத்வானி வீட்டுக்கு சென்றார். அத்வானியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். ஆட்சிக்கு ஆலோசனை சொல்லும் என்.டி.ஏ சேர்மன் பதவியை அத்வானி கேட்கிறார். அதனை மோடி மறுக்கும் நிலையில், அவருக்குக் கீழே அமைச்சராக இருக்க அத்வானி விரும்பவில்லை. கௌரவமான சபாநாயகர் பதவிதான் தனக்குத் தேவை என்று ஒன்றைக்காலில் நிற்கிறாராம். மோடிக்கு மட்டும் அல்ல… ஆர்.எஸ்.எஸ்-க்கும் அத்வானியை சபாநாயகர் பதவியில் உட்காரவைப்பதில் பயம் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. சபாநாயகருக்கு உரிய அதிகாரத்தை வைத்து ஏதாவது வம்புகள் செய்வார் என எதிர்பார்க்கின்றனர்.

முரளி மனோகர் ஜோஷியோ முழுமையாக மோடியோடு ஒத்துழைக்கத் தாயாராகிவிட்டார். இதனால், மோடியே அவரது வீட்டுக்குச் சென்றார். ‘எனக்கு எந்தப் பதவி கொடுத்தாலும் பரவாயில்லை. முன்பு வகித்த மனிதவளத் துறையைத் திரும்பக் கொடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்ளத் தயார்’ என்று கூறிவிட்டார் ஜோஷி என்கின்றனர்.

அமைச்சர் பதவிக்கு யாரும் மோடியை தேடிச் செல்லவில்லை. சுஷ்மா போன்ற பலர் டெல்லி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்துக்கு சென்று வருகின்றனர். அங்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் இல்லை. இருந்தாலும், இவர்கள் மரியாதை நிமித்தமாகவும் பத்திரிகைகளில் பெயர் வந்து மோடிக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவும் சென்று வருகின்றனர்.

மோடியோடு ராஜ்நாத் சிங் வாரணாசிக்குச் சென்று வந்தார். அமைச்சரவை மற்றும் புதிய அரசு குறித்து பேசவே இருவரும் ஒன்றாகச் சென்றனர் என்றனர். ‘முன்பு வாஜ்​பாயும் அத்வானியும் இரட்டையர்களாக இருந்த மாதிரி, மோடியும் ராஜ்நாத்தும்  இரட்டையர்களாக இருப்​பார்கள். மோடிக்கு செக் வைக்க ராஜ்நாத்துக்கு சம அந்தஸ்து கொடுக்கப்படும்’ என்றும் சொல்லப்பட்டது. இதை மறுப்பவர்களும் இருக்கிறார்கள். ‘ராஜ்நாத் சிங்குக்கு உள்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டாலும், ஆட்சியில் இரட்டையர்​களுக்கு இடம் இல்லை. மோடிக்கு சமம் யாரும் இல்லை’ என்கின்றனர். ஆட்சியை தன் வசப்படுத்தும் மோடி, கட்சிக்கு அமித் ஷாவை தலைவராகக்கூட ஆக்கிவிடுவார் என்கின்​றனர்.

தேர்தல் முடிவுகளுக்கு முன்பே, அமைச்சர்கள் பட்டியலை மோடி தயாரித்துவிட்டார் என்றே சொல்கின்றனர். இதில் தமிழகக் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடம் உண்டு என்கின்றனர். தமிழக விவகாரத்தில் இரண்டு கருத்துகள் உள்ளன. ஒன்று… அ.தி.மு.க-வை அரவணைத்துச் செல்வது; மற்றொன்று… பி.ஜே.பி-யை நம்பி வந்த தமிழகக் கூட்டணிக் கட்சிகளை விரக்தியடையச் செய்யாமல் அமைச்சரவையில் இடம் கொடுப்பது. இந்த இரண்டில் எந்த நிலையை எடுப்பது என்பதில் சில குழப்பங்கள் உள்ளன. காரணம்…  மக்களவையில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் பி.ஜே.பி வந்திருந்தாலும், மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை. 240 பேர் கொண்ட அவையில் பி.ஜே.பி அணிக்கு 64 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால், நிலுவையில் இருக்கும் மசோதாவையும் புதிய மசோதாவையும் நிறைவேற்ற மேலும் 57 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்த நிலைமை காங்கிரஸ் ஆட்சியிலும் இருந்தது. மாநிலக் கட்சிகளின் ஆதிக்கத்துக்குப் பின்னர் மாநிலங்களவையில் இந்தப் பிரச்னை தொடர்கிறது. இதற்கு காங்கிரஸ் ஆதரவைக் கோர முடியாது. இதனால் யு.பி.ஏ கூட்டணியில் இல்லாத மாநிலக் கட்சிகளான அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகளின் ஆதரவை பி.ஜே.பி பெற வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது. தமிழக முதல்வரின் விருப்பத்தையும் பி.ஜே.பி அறியும். தமிழகக் கூட்டணியில் வெற்றிபெற்ற கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த அன்புமணிக்கு அமைச்சர் பதவி கிடைப்பதில் இப்படிதான் சிக்கல் இருக்கிறது. அதிலும், தமிழக முதல்வர் இதை விரும்ப மாட்டார் என்கிற சூழ்நிலை இருந்தால், ஏற்கெனவே அன்புமணி மீது இருக்கும் வழக்கைக் காட்டி அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படலாம்.

இந்துத்துவா கட்சி என்றாலும், தேய்பிறையில்​தான் பதவி ஏற்க வேண்டிய சூழ்நிலை. இருப்பினும், 24-ம் தேதி ஏகாதசி அன்று பதவி ஏற்கலாம் என்று சொல்லப்படுகிறது. இப்போதைக்கு முதல் அஜெண்டா 20-ம் தேதி பி.ஜே.பி எம்.பி-க்கள் ஒன்றுசேர்ந்து மோடியை மக்களவைத் தலைவராக தேர்ந்தெடுப்பது. பின்னர், குஜ்ராத் முதல்வர் பதவியை மோடி ராஜினாமா செய்யப்போவார். அங்கு தனது அமைச்சரவையில் இருக்கும் ஆனந்தி பட்டீலையோ அல்லது பழங்குடி இனத்தினரை கவர வனத் துறை அமைச்சர் கண்பட் வசவாவையோ 21-ம் தேதி முதலமைச்சர் பதவியில் உட்காரவைத்துவிட்டு, பின்னர் பிரதமர் பதவி ஏற்கத் திரும்புவார் மோடி. ராஷ்ட்ரபதி பவனுக்கு முன்புள்ள திறந்தவெளியில் பதவி ஏற்கலாம் என்று சொல்லப்படுகிறது. இங்குதான் வெளிநாட்டு பிரமுகர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும். ஆனால், ராஷ்ட்ரபதி பவனுக்கு உள்ளே உள்ள தர்பார் ஹால் என்பது சரித்திரம் வாய்ந்த பகுதி என்பதால், அங்கே நடப்பதுதான் சரியானது என்றும் சொல்லப்படுகிறது. இங்கு வெறும் 500 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பதால், முதலில் தர்பார் ஹாலிலும் விரிவான அமைச்சரவையை மற்றொரு நாளில் வெளியேயும் நடத்தவும் யோசனை உள்ளது. ஆனால், இவற்றில் மோடி பெரியதாக ஆர்வம் எடுத்துக்கொள்ளவில்லை. அவரின் முக்கியத் திட்டம்… ராணுவம், உள்துறையை வைத்து உள்நாட்டு, வெளிநாட்டு பாதுகாப்பை மேம்படுத்துவது; நாட்டின் உள்நாட்டு போக்குவரத்தான தரைவழி மற்றும் ரயில் மார்க்கங்களை மேம்படுத்துவது; அதற்காக திறமையான நபர்களைத் தன்னுடைய அமைச்சரவையில் இணைப்பது… இதுதான். அது நிறைவேறினால் நாட்டுக்கும் நல்லது!

%d bloggers like this: