விஜயகாந்தை நெகிழவைத்த மோடி!

பி.ஜே.பி-யின் கூட்டணிக் கட்சிகள் கூட்டத்துக்கு தமிழகத்தில் இருந்த அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு போயிருந்தது. அனைவருக்கும் இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. தே.மு.தி.க சார்பில் மூன்று இருக்கைகள் கேட்டார்களாம். தயக்கம் இல்லாமல் தரச் சொல்லிவிட்டாராம் ராஜ்நாத் சிங். எனவே, விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் ஆகிய மூவரும் சென்றிருந்தார்கள். இந்தக் கூட்டத்துக்கு முந்தைய நாள் டெல்லி சென்ற வைகோ, அங்கு மோடி, ராஜ்நாத் சிங் ஆகியோரைச் சந்தித்துவிட்டு திருச்சி வந்துவிட்டார். ம.தி.மு.க மூத்தத் தலைவர்களில் ஒருவரான மலர்மன்னன் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்துவிட்டார். அவருக்குப் பதிலாக ஈரோடு கணேசமூர்த்தி வந்தார். அன்புமணி ராமதாஸ், கொங்கு ஈஸ்வரன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் ஆகியோரும் சென்றிருந்தார்கள்.

புதுவை முதல்வர் ரெங்கசாமி, புதுவை எம்.பி-யாக ஜெயித்த ராதாகிருஷ்ணனுடன் வந்திருந்தார். இவர்கள் அனைவருக்கும் உரிய இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன.

பி.ஜே.பி நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதும், அனைத்து பிரமுகர்களும் அவருக்கு பூங்கொத்து, சால்வைகள் கொடுத்து வந்தார்கள். அப்போது வரிசையில் நின்ற ஒருவரைப் பார்த்து, ஆச்சர்ய முகத்தோடு ‘வாருங்கள்’ என்று கையசைத்தார் மோடி. அது விஜயகாந்த். முன்னால் நின்றுகொண்டிருந்த நான்கைந்து பேரைத் தாண்டி வந்தார் விஜயகாந்த். அவர் தனக்கு அருகில் வந்ததும் அவரை இழுத்து அணைத்துக்கொண்டார் மோடி. விஜயகாந்த் கண்கலங்கிவிட்டார். பிரேமலதாவும் சுதீஷ§ம் அதற்குள் அருகில் வந்துவிட்டார்கள். அணைப்பைத் தளர்த்திய மோடி, விஜயகாந்த் கையைப் பிடித்து தட்டிக் கொடுத்தார். கன்னத்தைத் தொட்டு வருடிவிட்டார். தேர்தல் தோல்விக்கு ஆறுதல் சொல்வதுபோல இருந்தன அந்தக் காட்சிகள். பிரேமலதாவை அழைத்தும் ஆறுதல் சொன்னார். சுதீஷிடமும் பேசினார். இது விஜயகாந்தை உருக்கிவிட்டது. ‘எவ்வளவு மரியாதையான, அன்பான மனிதராக இருக்கிறார் மோடி’ என்று சொன்னாராம் விஜயகாந்த். ‘தேர்தலில் தோற்ற கவலை எல்லாம் போய்விட்டது’ என்று சொன்னாராம் சுதீஷ்.

%d bloggers like this: