கும்பம் -குரு பெயர்ச்சி பலன்கள்(13.6.2014 முதல் 28.6.2014)

கும்பம்

அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: கு, கூ, கோ, ஸி, ஸீ, ஸே, ஸோ, தா  உள்ளவர்களுக்கும்)

ஆறாமிடத்தில்  குரு வருகை!  அனுசரிப்பாலே  வரும்  பெருமை!

எதை எப்பொழுது செய்தால் வெற்றி கிடைக்கும் என்பதை அறிந்து வைத்திருக்கும் கும்ப ராசி நேயர்களே!

வைகாசி 30–ல் வருகிறது குருப்பெயர்ச்சி. இதுவரை 5–ம் இடத்தில் சஞ்சரித்து வந்தார். இப்பொழுது 6–ம் இடத்திற்கு வரும் குரு பகவான், தனது பார்வை பலத்தால் நல்ல பலன்களை அள்ளி வழங்குவார். 

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கடக ராசியில் உச்சம் பெறும் குரு உங்கள் ராசிக்கு 2, 11 –க்கு அதிபதியாவார். தன லாபாதிபதியான குரு உச்சம் பெறும் பொழுது தன வரவு தாராளமாக வரவேண்டுமல்லவா? அதே நேரத்தில் அது இருக்கும் இடமோ 6–ம் இடம் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். எனவே தொகை வந்த மறுநிமிடமே செலவாகிவிடலாம். உடல் நலத்தை சீராக்கிக் கொள்ள ஒவ்வொரு நாளுமே செலவிட வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்கள் குடும்ப பெரியவர்களைக் கேட்டுக் கலந்து ஆலோசித்துக் காரியங்களைச் செய்வதன் மூலம் வாட்டங்கள் அகலும். மாற்றுக் கருத்துடையோர் எண்ணிக்கை அதிகரிக்க விடாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

குருவின் ஆதிக்கம் 6–ம் இடத்தில் வருகின்ற பொழுது எதிர்ப்பு, வியாதி, கடன் எனப்படும் ஸ்தானம் புனிதமடைகிறது. இது போன்ற காலங்களில் பொறுமையைக் கடைப்பிடித்தால் பெருமை வந்து சேரும். ஒரு தொகை கைக்கு வரும் பொழுதே சுபவிரயங்களை மேற்கொள்ளுங்கள்.

உபசரிப்பின் மூலம்  உள்ளத்தில் இடம்பெறுபவர்!

தனித்தன்மையோடு வாழவேண்டும் என்று விரும்புபவர்கள் நீங்கள். தர்ம சிந்தனை உங்களுக்கு உண்டு. செய்யும் தொழிலே தெய்வம் என்ற தத்துவத்தை மறவாதவர்கள் நீங்கள். சிறுசிறு குழப்பங்கள் உங்கள் மனதில் எப்பொழுதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும். யாரேனும் ஒருவரது தூண்டுதல் இருந்தால் மட்டும் வெற்றிக்     கனியை நீங்கள் வரவழைத்துக்கொள்ள இயலும். 

வேடிக்கையாகப் பேசும் சுபாவம் உங்களுக்கு இருப்பதால் நாடிவரும் நண்பர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். எளிமையை விரும்பும் உங்களுக்கு வலிமையான ஆயுதமாக இருப்பது பொறுமைதான். சொந்த வேலையைக் காட்டிலும் வந்த வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். இப்படிப்பட்ட குணாதிசயங் களைப் பெற்ற உங்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி தரும் பலன்களை பார்ப்போம்.

தேவகுரு ஆறில் வந்தால்
தேவைகள் பூர்த்தியாகும்!
ஆவல்கள் தீர வேண்டின்
அனுசரிப்பும் தேவையாகும்!
கோபத்தை விலக்கினால் தான்
குடும்பத்தில் அமைதி கூடும்!
தீபத்தில் குருவைக் கண்டு
தரிசித்தால் நன்மை சேரும்!

என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது 6–ல் சஞ்சரிக்கும் குருவால் உங்கள் ஆற்றல் பளிச்சிடும். கூட்டு முயற்சியில் அடிக்கடி மாற்றம் செய்வீர்கள். குடும்ப பெரியவர்களையும், ஆன்மிகப் பெரியவர்களையும் ஆலோசித்து எடுக்கும் முடிவுகளில் வெற்றி காண்பீர்கள். 

6–ம் இடம் என்பது ரோக ஸ்தானமாகும். எதிர்ப்பு, வியாதி, கடன் வழக்கு, பொருள் இழப்பு, மனத்தடுமாற்றம், வீண் பழிகள், கண் நோய், மூட்டுவலிகள், பங்காளிப் பகை, பிறரிடம் உதவி கேட்கும் நிலை போன்றவற்றை அறிந்து கொள்ளும் இடமாகும். அந்த 6–ம் இடத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஆரோக்கியப் பாதிப்பு ஏற்பட்டு அகலும். மேலதிகாரிகளின் அனுசரிப்பு இக்காலத்தில் உங்களுக்குத்தேவை. வீடு மாற்றங்கள், ஒரு சிலருக்கு உருவாகி சொந்த வீடுகள் கட்டிக் குடியேறும் வாய்ப்புகள் கூட வந்து சேரும்.

குரு பார்வை கொடுக்கும் யோகங்கள்!

உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியாக விளங்கும் குரு பகவான் உச்சம் பெற்று இருக்கும் பொழுது தனவரவு தாராளமாக இருந்து கொண்டேயிருக்கும். மங்கல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். தங்கு தடைகளை அகற்றும் தனிப்பார்வை குருவிற்கு உண்டு. அப்படிப்பட்ட குருவின் பார்வை 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே அந்த இடங்களெல்லாம் புனிதமடைகின்றன.

இரண்டினை குருதான் பார்த்தால்
இனியதோர் வாழ்க்கை சேரும்!
பத்தினைக் குருதான் பார்த்தால்
முத்தான தொழில்கள் வாய்க்கும்!
பனிரெண்டை குருதான் பார்த்தால்
பயணத்தால் பலன் கிடைக்கும்!

என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

குருவின் பார்வை 2–ம் இடத்தில் பதிவதால் இடையூறுகள் அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வரவு செலவு திருப்திகரமாக இருக்கும்.

விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து சேருவர். உயர்ந்த மனிதர்களின் நட்பு கிட்டும். ஒப்பற்ற குருவின் பார்வை 10–ம் இடத்தில் பதிவதால் செயல்பாடுகளில் இருந்த சிக்கல்கள் விலகும். தொழிலில் ஏற்பட்ட தொல்லைகளைச் சமாளித்து தொகை வரவைப் பெருக்கிக் கொள்வீர்கள். குழந்தைகளின் கல்வி நலன் கருதி எடுத்த முயற்சிகளில் எதிர்பார்த்தபடியே வெற்றி கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் தனித்தும் தொழில் செய்ய முன்வருவர். சுய ஜாதகத்தில் தொழில் ஸ்தானம் வலுவாக இருப்பவர்கள் உத்தியோகம் நீங்கலாகத் தொழிலிலும் கவனம் செலுத்தலாம்.

சலனங்கள் அதிகரிக்கும் இந்த நேரத்தில் எடுக்கும் முடிவுகளை யோசித்து செய்வது நல்லது. குருவின் பார்வை அயன சயன ஸ்தானத்தில் பதிவதால் பாகப் பிரிவினைகள் சுமூகமாக முடியும். தூரதேசத்தில் இருந்து வரும் தகவல் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும்.

சஞ்சாரப்பலன்கள்

குரு தன் சுயசாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (13.6.2014 முதல் 28.6.2014 வரை):– குரு தன் சுய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கொள்கைப் பிடிப்போடு செயல்பட இயலும். தடுமாற்றங்கள் அகலும். தனவரவு தாராளமாக வந்து சேரும். இளைய சகோதரத்துடன் இணக்கம் ஏற்படும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர்.

சனி சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது (29.6.2014 முதல் 27.8.2014 வரை):– உங்கள் ராசிநாதனாகவும், விரயாதிபதியாகவும் சனி விளங்குகிறார். எனவே வரவும், செலவும் சமமாகும். நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். அரைகுறையாக பல பணிகள் நிற்கும். இன்றைக்கு ஒரு ஊர், நாளைக்கு ஒரு ஊர் என்று சிந்தையில் கலக்கத்தோடு சென்று கொண்டேயிருப்பீர்கள். விரும்பிய பொருட்களை விரும்பிய நேரத்தில் வாங்கி மகிழ்வது நல்லது. இல்லையேல் வீண் விரயத்திற்கு ஆளாக     நேரிடும். எதைச் செய்தாலும் ஒரு        முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாக வழிபாட்டில் கவனம் செலுத்துவது நல்லது.

குரு புதன் சாரத்தில் சஞ்சரிக்கும்பொழுது (28.8.2014 முதல் 2.12.2014 வரை):– புதன் உங்கள் ராசிக்கு பஞ்சம அஷ்டமாதிபதியாகிறார். எனவே பிள்ளைகளால் பெருமை வந்து சேரும்.  நிரந்தர வருமானத்திற்கு வழிபிறக்கும். முன்னோர் வழிச் சொத்தில் முறையாக லாபம் கிடைக்கும். சஞ்சலங்கள் தீரும். சந்தோஷங்கள் சேரும். பிறருக்கு ஜாமீன் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையும் வந்து சேரும். குடும்ப நலன் கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள். கடன் பிரச்சினை கட்டுக்கு அடங்கியிருக்கும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!

சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். பவுர்ணமி அன்று மலை வலம் வருவதன் மூலம் மகத்துவம் காணலாம்.

யோக பலம் பெற்ற நாளில் திருக்    கடையூர் சென்று கள்ள வாரணப்பிள்ளையார், அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்மனை வழிபட்டு வருவது நல்லது.

கும்ப  ராசியில்  பிறந்த  பெண்களுக்கு!

மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப்பொருட்களை வாங்கி சேர்க்க முன்வருவீர்கள். சேமிப்பு உயரும். செயல்பாடுகளில் தீவிரம் காட்டுவீர்கள். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். குடும்பப் பெரியவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.

குருவின் வக்ர காலத்தில் பண நெருக்கடிகள் அதிகரிக்கும். உறவினர் பகை உருவாகும். நீங்கள் நன்மை செய்தாலும் அது தீமையாகக் காட்சியளிக்கும். பிள்ளைகளுக்கு வரன் பார்ப்பவர்கள் மகிழ்ச்சியடையும் விதத்தில் நல்ல வரன்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். விரும்பும் விதத்தில் பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். குல தெய்வ வழிபாடும் குடும்ப முன்னேற்றத்திற்கு வித்திடும்.பஞ்சம ஸ்தான  குருவாலே  பறந்தது கவலை! இனியோகம் தான்!

அக்கறை  செலுத்தவேண்டிய  வக்ர  காலம்!

குரு பகவான் 3.12.2014 முதல் 21.12.2014 வரை மக நட்சத்திரக்காலில் அதிசாரமாக செல்கிறார். டிசம்பர் 17 முதல் சிம்மத்தில் வக்ர கதியில் இருக்கிறார். தொடர்ந்து 14.4.2015 வரை வக்ர கதியில் சஞ்சரிக்கிறார். இந்த வக்ர காலத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. தன லாபாதிபதி வக்ரம் பெறுவது நல்லதல்ல. பண வரவில் தடைகள், நெருக்கடிகள் நீடிக்கும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும். எதிரிகளின் பலம் கூடும் இந்த நேரத்தில் உதிரி வருமானங்களும் கூடலாம்.

உள்ளத்தில் அமைதி கிடைக்க ஒவ்வொரு நாளும் குரு வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. முல்லைப்பூ மாலை அணிவித்தால் எல்லை இல்லாத நற்பலன்கள் கிடைக்கும். இக்காலத்தில் சொல்லைச் செயலாக்கிக் காட்ட இயலாது. தொல்லைகள் அதிகரிக்கும். நல்லவர்கள் என்று நம்பி சேர்த்த கூட்டாளிகள் பகைவர்களாக மாறுவர். வில்லில் இருந்து வரும் அம்பு போல வேகமும், கோபமும் அதிகரிக்கும். வக்ர காலத்தில் பொறுமையைக் கடைப்பிடிப்பதன் மூலம் வளர்ச்சியைக் கூட்டிக் கொள்ள இயலும்.

கணித்தவர்: ‘ஜோதிட கலைமணி’ சிவல்புரி சிங்காரம்

%d bloggers like this: