தனுசு -குரு பெயர்ச்சி பலன்கள்(13.6.2014 முதல் 28.6.2014)

தனுசு

மூலம், பூராடம், உத்ராடம், 1–ம் பாதம் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: யே, யோ, ப, பி, பு, பூ, பா, ன, டே, பே உள்ளவர்களுக்கும்)

எட்டாமிடத்தில்  குரு வருகை!  எதிலும்  கவனம்  மிகத் தேவை!

எதையும் சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிக்கும் ஆற்றலைப் பெற்ற தனுசு ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான் இப்பொழுது அஷ்டம ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கப் போகிறார். எட்டில் குரு வந்தால் எண்ணற்ற மாற்றம் வரும் என்பது உண்மை தான். ஆனால் எதிர்பார்த்த மாற்றங்கள் வருமா? என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த முறை வருகின்ற குரு பெயர்ச்சி சாதாரண குரு பெயர்ச்சி அல்ல, உச்சமாக வருகிற குரு பெயர்ச்சியாகும்.

அங்ஙனம் குரு உச்சம் பெற்று உங்கள் ராசிக்கு 8–ல் சஞ்சரித்தாலும் கூட அதன்பார்வை பலம் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்குமா? என்று நினைக்க வேண்டாம். ராசிநாதன் உச்சம் பெறும்பொழுது யோசிக்காது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும்.

உள்ளத்தில் உற்சாகம் குடிகொள்ள உங்கள் பணியைத் தொடர வாய்ப்புகள் கைகூடி வரும். இருப்பினும் கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகமாகவும் குரு விளங்குவதால் சந்தோஷங்களை மட்டுமே சந்திக்க விரும்புபவர்கள் குரு வழிபாட்டை  முறையாக மேற்கொள்வது நல்லது.

தற்சமயம் சனியின் பார்வையும் உங்கள் ராசியில் பதிகிறது. பார்க்கும் சனி உங்களுக்கு பல விதங்களிலும் நன்மையை உருவாக்கலாம். எனவே, எதையும் கொஞ்சம் முன்யோசனையுடன் செய்தால் பொன்னான எதிர்காலத்தை வரவழைத்துக் கொள்ள இயலும்.

அதற்கு அடித்தளமாக சனிக் கிழமை தோறும் சனி பகவானையும், நீங்கள் வழிபட்டு வரவேண்டும். குறிப்பாக அருகிலிருக்கும் புராதனக் கோவில்களுக்குச் சென்று மஞ்சள் வண்ண வஸ்திரம் சாற்றி குருவையும், கருப்பு வண்ண வஸ்திரம் சாற்றி சனியையும்  வழிபடுவது நல்லது.

உறவிற்கு கைகொடுக்கும் உத்தமர்கள்!

தன்னைத்தானே உணர்ந்து கொண்டு செயல்படுபவர்கள் நீங்கள். மற்றவர்கள் உங்களைக் கட்டுப்படுத்த முடியாது. எதிலும் ஒரு ஈடுபாடு கொண்டு செயல்படுவீர்கள். மனசாட்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். மறைமுகப் பகை உங்களுக்கு அதிகம் உண்டு.

தேசப்பற்றும், தெய்வப்பற்றும் மிக்க நீங்கள் மனதில் இருக்கும் லட்சியம் நிறைவேறும் வரை விடாது பாடுபடுவீர்கள். உங்களோடு பழகியவர்கள் கடைசிவரை உங்களை மறக்க மாட்டார்கள். 24 மணி நேரமும் எதிர்கால சிந்தனையிலேயே இருக்கும் உங்களுக்கு கோபம் அதிகமாகவே இருக்கும்.

இப்படிப்பட்ட குணாதிசயங்களைப் பெற்ற உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி கூடுதல் நற்பலன்களைக் கொடுக்குமா? இல்லை குழப்பங்களைக் கொடுக்குமா? தேடும் செல்வத்தைச் சேமிக்கச் செய்யுமா? என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

எட்டினில் குருதான் வந்தால்
எண்ணற்ற மாற்றம் சேரும்!
சுற்றத்தார் பகைவர் ஆவார்!
சுகமெல்லாம் குறைந்து போகும்!
கட்டாயம் குருவை நீங்கள்
கைகூப்பித் தொழுது நின்றால்
திட்டங்கள் வெற்றி யாகும்!
தெய்வங்கள் துணையாய் நிற்கும்!

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது 8–ம் இடத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது எண்ணற்ற மாற்றம் வரும் என்பது நியதி. திட்டங்கள் திசை மாறிச் செல்லலாம். திறமை மிக்கவர்கள் உங்களைவிட்டு விலகலாம். சுற்றத்தார் பகை பாராட்டுவர். துணிவும், தன்னம்பிக்கையும் மட்டும் உங்கள் கைவசம் இருந்தால் கட்டாயம் வெற்றியை நீங்கள் வரவழைத்துக் கொள்ள இயலும்.

வீடுகட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சிக்கென்று ஏற்பாடு செய்தவர்கள் கடன் வாங்க  வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். வீடு மாற்றம், நாடு மாற்றம், இலாகா மாற்றம் போன்றவற்றில் ஏதேனும் ஒரு மாற்றம் வந்து சேரும்.

சொத்துக்களை ஒரு சிலர் விற்க நேரிடலாம். ஏற்றமும், இறக்கமும் வருகிற வாழ்க்கையில் இப்போது எட்டில் குரு வரும் போது விரயங்களையும், விரக்தியையும் சந்திக்கிறோமே என்று நினைக்க வேண்டாம். பொறுமையோடு செயல்படுவதே நல்லது.

அடுத்து ஒன்பதாமிடத்திற்கு குரு வந்ததும் மகிழ்ச்சியும், மட்டற்ற வருமானமும் வந்து சேரும். இழப்புகளை ஈடுசெய்யும் வாய்ப்பு உருவாகும்.

குரு பார்வை கொடுக்கும் யோகங்கள்!

நவக்கிரகத்தில் நல்லவன் என்றும், சுபகிரகமென்றும், பொன்னவன் என்றும் வர்ணிக்கப்படும் குரு பகவான் உங்களுக்கு ராசிநாதனாக விளங்குகிறார். அவர் அஷ்டமத்தில் சஞ்சரித்தாலும் கூட அவரது பார்வை 2, 4, 12 ஆகிய இடங்களில் எல்லாம் பதிவாகிறது. எனவே அந்த ஸ்தானங்கள் எல்லாம் புனிதமடைகின்றன.

இரண்டினை குருதான் பார்த்தால்
லாபங்கள் வந்து சேரும்!
நான்கினை குருதான் பார்த்தால்
நலங்களும் சுகமும் வாய்க்கும்!
பனிரெண்டை குருதான் பார்த்தால்
பயணத்தால் பலன் கிடைக்கும்!

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். இந்த நேரத்தில் கவலை உங்களை விட்டுக் கொஞ்சம், கொஞ்சமாக அகலும். கடன்சுமை பாதிக்கு மேல் குறையும். உறவினர்களுக்கு கொடுத்த பணம் எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இப்பொழுது கணிசமான தொகை கைக்கு வந்து சேரும்.

குருவின் பார்வை 4–ம் இடத்தில் பதிவதால் சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும். மாற்று மருத்துவத்தால் உடல் நலத்தை சீராக்கிக் கொள்வீர்கள். வீடு கட்டும் பணி பாதியில் நிற்கிறதே என்ற கவலை அகலும். விரயங்கள் சுபவிரயங்களாக மாறும். தாயின் உடல் நலம் தேறும்.

குருவின் பார்வை 12–ம் இடத்தில் பதிவதால் பயணங்கள் அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும். நண்பர்கள் நல்ல செய்திகளைக் கொண்டுவந்து சேர்ப்பர்.  அந்நிய தேச வாய்ப்பு அலைமோதும். அயனசயன ஸ்தானம் என்பதால் வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். திடீர் இடமாற்றங்கள் நன்மையைக் கொடுக்கும்.

சஞ்சாரப்பலன்கள்

குரு தன் சுயசாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (13.6.2014 முதல் 28.6.2014 வரை):– நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். வீண் குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டாளிகள் கூடுதல் லாபத்தைக் கொண்டு வந்து சேர்ப்பர். வாகன யோகம் முதல் வளர்ச்சிக்கு வித்திடும் யோகம் வரை படிப்படியாக வந்து சேரும். தாய்வழி ஆதரவு பெருகும். இடம், பூமி சேர்க்கை உண்டு. விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்து சேருவர். 

சனி சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது (29.6.2014 முதல் 27.8.2014 வரை) :– வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவைகளில் இருந்த தடைகள் அகலும். கடல் தாண்டும் முயற்சிக்கு வித்திடுவீர்கள். போட்டி பந்தயங்களிலும் வெற்றி கிட்டும். பக்கத்து வீட்டாரின் பகை மாறும். குழந்தைகளின் எதிர்கால நலன்கருதி எடுக்கும்     முயற்சிகளுக்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் வீடு தேடி வருவர். அரசு வழிச் சலுகைகள், வழக்கு களில் நல்ல முடிவுகள் ஏற்படும்.

புதன் சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது (28.8.2014 முதல் 2.12.2014 வரை):– உங்கள் ராசிக்கு 7, 10–க்கு அதிபதியானவர் புதன். அதன் சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது களத்திர வழியில் மேன்மைகள் உண்டாகும். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். கவுரவம், அந்தஸ்து உயரும். கூட்டுத் தொழில் தனித்தொழிலாக மாற கூட்டாளிகளை விலக்கி விட்டு தனித்து இயங்க முற்படுவர். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வி.ஆர்.எஸ் பெற்றுக்கொண்டு தொழில் தொடங்க முன்வருவர். முன்னேற்றப் பாதையில் அடி    யெடுத்து வைக்க முக்கியப் புள்ளிகள் ஒத்துழைப்புச் செய்வர்.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!

அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் குருவால் ஆதாயத்தை மட்டுமே நீங்கள் பெற வியாழக்கிழமை தோறும் குரு வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். மேலும் புதுக்கோட்டை அருகிலுள்ள திருவேங்கிவாசலுக்குச் சென்று அறம் வளர்த்த நாயகி, வியாக்ரபுரீஸ்வரர், தட்சிணா மூர்த்தியை யோகபலம் பெற்ற நாளில் வழிபட்டு வாருங்கள். யோகங்கள் வந்து சேரும்.

தனுசு  ராசியில்  பிறந்த  பெண்களுக்கு!

வழிபாட்டின் மூலமே வளர்ச்சியைக் கூட்டிக் கொள்ளும் சூழ்நிலை உருவாகும். அஷ்டமத்தில் குரு சஞ்சரிப்பதால் காரியங்கள் கடைசி நேரத்திலேயே கைகூடலாம். குருவின் பார்வை பலத்தால் குடும்ப முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் என்றாலும் மனநிம்மதி குறையும். வெளியூர் செல்லலாமா என்று யோசிப்பீர்கள். வீடு மாற்றங்களும் ஒரு சிலருக்கு வந்து சேரும். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை மேலோங்க விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. விரயங்கள் அதிகரிக்கும் இந்த நேரத்தில் குழந்தைகள் நலன்கருதி விலை உயர்ந்த பொருட்களை வாங்கி வைக்கலாம். தெய்வப் பிரார்த்தனைகளால் நன்மைகளை வரவழைத்துக்கொள்ள இயலும். எனவே பார்க்கும் ராகுவைப் பலப்படுத்த சர்ப்ப சாந்தி செய்யுங்கள். அஷ்டமத்து குருவால் அனுகூலம் கிடைக்க வியாழக்கிழமை குரு வழிபாட்டையும், சனிக்கிழமை அனுமன் வழிபாட்டையும் மேற்கொள்வது அவசியம்.

அக்கறை  செலுத்தவேண்டிய  வக்ர  காலம்!

குரு பகவான் 3.12.2014 முதல் 21.12.2014 வரை மக நட்சத்திரக்காலில் அதிசாரமாகச் செல்கின்றார். இந்தக் காலம் ஒரு பொற்காலமாகவே உங்களுக்கு அமையும். டிசம்பர் 17 முதல் சிம்மத்தில் வக்ர கதியில் இருக்கிறார். தொடர்ந்து 14.4.2015 வரை வக்ர கதியில் சஞ்சரிக்கின்றார். இந்த வக்ர காலம் உங்களுக்கு நன்மைகளை வழங்கும் காலமாகும். தொட்டது துலங்கும், தொல்லைகள் அகலும். வெற்றிக்குரிய தகவல் வீடு வந்து சேரும். நண்பர்கள் நல்ல தகவல்களைக்கொண்டு வந்து சேர்ப்பர். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கணித்தவர்: ‘ஜோதிட கலைமணி’ சிவல்புரி சிங்காரம்

%d bloggers like this: