துலாம் -குரு பெயர்ச்சி பலன்கள்(13.6.2014 முதல் 28.6.2014)

துலாம்

சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ர, ரி, ரு, ரே, த, தி, து, தே உள்ளவர்களுக்கும்)

வரப்போகிறது குரு பத்தில்!  தரப்போகிறது இடமாற்றம்!

ஜன சக்தியும், பண சக்தியும் ஒருங்கே இணையப் பெற்ற துலாம் ராசி நேயர்களே!

உங்கள் ராசிக்கு இதுவரை 9–ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான் இப்பொழுது 10–ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். 10–ல் குரு வந்தால் பதவி மாற்றம், இட மாற்றம், ஊர் மாற்றம் என்று பலருக்கும் வருவது இயற்கை தான். எத்தனை மாற்றங்கள் வந்தாலும் இப்பொழுது சஞ்சரிக்கப் போகும் குரு, உச்சம் பெற்ற குருவாக அல்லவா சஞ்சரிக்கப் போகின்றார்.

எனவே, அதன் பார்வை பலத்தால் ஒப்பற்ற நல்ல பலன்களை அற்புதமாக அள்ளி வழங்கப் போகிறார். இதுவரை ஜென்மச் சனியின் ஆதிக்கத்தில் இருக்கும் பொழுது, யோசித்து செயல்பட்டால் தான் யோகம் வருமென்று சொல்வார்கள். ஆனால் இப்பொழுது பெயர்ச்சியாகும் குரு தன ஸ்தானத்தைப் பார்க்கப் போவதால் தனவரவு தாராளமாக வந்து சேரும்.

இருப்பினும் ஏழரைச் சனியில் தொடர்ச்சி இருப்பதால் மற்றவர்களுக்கு பொறுப்புகள் சொல்வதை மட்டும் தவிர்க்க வேண்டிய நேரமிது.

கடந்த ஓராண்டாக உங்கள் ராசியை குரு பார்த்துக் கொண்டுதான் இருந்தார். அப்படியிருந்தும் பல காரியங்கள் முடியவில்லை. கூடுதல் விரயத்தோடு குழப்பங்களில் ஆழ்ந்திருந்தீர்கள்.

இது எதனால் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு குரு பகைவனாக விளங்குகிறார். பகைவனின் பார்வையில் சிக்கியதால் தான் பல வகையான பிரச்சினைகள் உங்களுக்கு வந்தது. இப்பொழுது அந்த நிலை மாறி, வைகாசி 30 முதல் வசந்தகாலம் தொடங்கிவிட்டது.

செயல் ஸ்தானம் எனப்படும் பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, குரு முத்தான வாழ்க்கையை வழங்கப் போகிறது. அத்தனைக்கும் மேலாக, தொழில் ஸ்தானத்தில் அடியெடுத்து வைத்த குரு பகவான் தொழிலை வளப்படுத்தப் போகிறார். 

நன்றி மறக்காத குணத்தைப் பெற்றவர் நீங்கள்!

கற்பனா சக்தி அதிகம் கொண்ட உங்களுக்கு கடின உழைப்பு பிடிக்காது. எளிதில் சம்பாதிக்க வேண்டுமென்று விரும்புவீர்கள். இளமை, இனிமை, புதுமை இந்த மூன்றும் இருந்தால் எல்லோரும் தன்னை நாடிவருவர் என்று எடுத்துரைப்பீர்கள். சங்கீதம், கலை, இலக்கியம் போன்றவற்றில் ஆர்வம் அதிகமிருக்கும்.

அதிர்ஷ்டமானவர்கள் நீங்கள் என்று அருகில் இருப்பவர்கள் உங்களைப் பார்த்துச் சொல்வர். ஒரு சிலர் புத்தகப் பிரியர்களாகவும் விளங்குவர். பிறருக்கு அடிமையாக இருக்கச் சிலருக்குப் பிடிக்காது. 

இப்படிப்பட்ட குணங்களைப்பெற்ற உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி தரும் பலன்கள் எவை என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

பத்திலே குருதான் வந்தால்
பதவியில் மாற்றம் தோன்றும்!
முத்தான வாழ்வில் நாளும்
முன்னேற்றத் தடைகள் கூடும்!
கொத்தோடு துயரம் தீர
குருவினை வணங்க வேண்டும்!
தத்தளிக்கின்ற உள்ளம்
தானாக அமைதி காணும்!

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது.

அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது தொழில் ஸ்தானம் எனப்படும் பத்தாமிடம் குரு பலத்தால் புனிதமடைகிறது. எனவே ஒருசிலர் புதிய பொறுப்புகளையும், பதவிகளையும் காண்பர். அரசியலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அதிரடி மாற்றங்கள் வந்து சேரலாம்.

மூன்றாமிடம் மற்றும் ஆறாமிடத்திற்கும் அதிபதியாக குரு விளங்குவதால் சகோதர வர்க்கத்தினரால் ஏற்பட்ட சஞ்சலம் அகலும். உத்தியோகத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு அழைப்பதற்கான அறி குறிகள் தென்படுகின்றன. மேலதிகாரிகளின் ஆதரவு கூடும். திடீரென பொறுப்புகள் வந்து சேரலாம். அந்நிய தேசத்திலிருந்து கூட ஒருசிலருக்கு அழைப்புகள் வந்து சேரும். சங்கிலித் தொடர்போல வந்த கடன் சுமை குறையும்.

உடல்நலம் சீராக ரண சிகிச்சை செய்ய வேண்டுமென்று சொல்லி வந்த மருத்துவர்கள், சாதாரண சிகிச்சையிலேயே உங்களுக்கு உள்ள நோயைப் போக்கி விடுவர். 

குரு பார்வை  தரும் யோகங்கள்!

பத்தாமிடத்தில் இருக்கும் குருவின் பார்வை 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே அந்த இடங்கள் எல்லாம் புனிதமடைகின்றன. வாழ்வில் செல்வச் செழிப்போடு சுகங்களையும், சந்தோஷங்களையும் அனுபவிக்க வேண்டுமானால் குரு இரண்டு, நான்கு ஆகிய இடங்களைப் பார்க்க வேண்டும். அந்த அமைப்பு உங்களது சுய ஜாதகத்தில் இல்லாவிட்டாலும் அதன் பார்வை பதிவதால் யோகங்கள் ஏற்படும்.

இரண்டினை குருதான் பார்த்தால்
இல்லத்தில் அமைதி கூடும்!
நான்கினை குருதான் பார்த்தால்
நல்லதோர் சுகங்கள் வாய்க்கும்!
ஆறினைக் குருதான் பார்த்தால்
அகிலத்தில் கடன்கள் தீரும்!

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

எனவே இரண்டாமிடத்தைப் பார்க்கும் குருவால் குடும்பத்தில் அமைதி கூடும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை அகலும். சுபகாரியப் பேச்சுக்கள் அடுக்கடுக்காக வந்து சேரும். குறிப்பாக யாருக்காவது வாக்கு கொடுத்தால் அதைக் காப்பாற்ற முடிய வில்லையே என்ற கவலை இனி அகலும். பழைய பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும்.

கடுமையாக பிரயாசை எடுத்தும் இதுவரை முடிக்க இயலாத காரியத்தை எல்லாம் இப்பொழுது முடித்து வெற்றி காண்பீர்கள். இந்த நேரத்தில் குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றுவீர்கள்.

தாயின் உடல்நலம் சீராகும். தக்க விதத்தில் வீடு கட்டிக்குடியேற வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

உத்தியோகத்தில் வேலைப்பளு கூடுகிறதே, எதிர்பார்த்த சமபளம் கிடைக்கவில்லையே என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு இப்பொழுது நல்லநேரம் வந்து விட்டது. உயர் அதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர்.

சஞ்சாரப்பலன்கள்

குரு தன் சுயசாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (13.6.2014 முதல் 28.6.2014 வரை) :– 6–க்கு அதிபதியான குரு தன் சுய காலில் சஞ்சரிக்கும் பொழுது தேக ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு அகலும். வேகமாக வளர்ச்சியடைந்த பணிகள் பாதியிலேயே நிற்கும். உத்தியோக மாற்றங்கள் உறுதியாவது போல் தோன்றி கைநழுவிச் செல்லலாம். சுபகாரிய நிகழ்ச்சிகளில் தடைகள் உருவாகும். சகோதர வர்க்கத்தினர்களை சார்ந்திருப்பவர்கள் பிரச்சினைகள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது.        

சனி சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது (29.6.2014 முதல் 27.8.2014 வரை) :– நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடிவரும். நாட்டுப்பற்று மிக்கவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு உறுதுணை புரிவர். வாகன யோகம் உண்டு. பயணங்களால் பலன் கிடைக்கும். கடிதம் கனிந்த தகவல்களைக் கொண்டு வந்து சேர்க்கும். பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவடையும்.  தொழில் தொடங்க மூலதனம் கேட்கும்பட்சத்தில் அதன் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.  பழைய வாகனங்கள் பழுதாகி அதிகத் தொல்லைகள் கொடுக்கிறதே அதை விற்றுவிட்டு புதிய வாகனம் வாங்கலாமா என்ற யோசனையில் இருந்தவர்களுக்கு இப்பொழுது நல்ல வாய்ப்பு வந்து சேரும்.  நண்பர்கள் கூட்டு முயற்சிக்கு உறுதுணை புரிவர்.

புதன் சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது (28.8.2014 முதல் 2.12.2014 வரை) :– புதன் உங்கள் ராசிக்கு 9, 12–க்கு அதிபதியாவார். அவரது சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது விரயங்கள் அதிகரிக்கும். வெளிநாட்டுத் தொடர்பான முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த  பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தைவழி உறவில் நன்மை கிட்டும். பூர்வீக சொத்துக்கள் எதிர்பார்த்தபடியே பாகப்பிரிவினைகள் அமையும்.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!

வெள்ளிக்கிழமை தோறும் அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகிலுள்ள பட்டமங்கலத்திற்கு யோகபலம் பெற்ற நாளில் சென்று திசைமாறிய தென்முகக் கடவுளை இன்முகத்தோடு வழிபட்டு செல்வ வளத்தைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

துலாம்  ராசியில்  பிறந்த  பெண்களுக்கு!

இந்தக் குருப்பெயர்ச்சியால் தாய் வழி ஆதரவு பெருகும். வீடு கட்டிக் குடியேற வேண்டுமென்ற எண்ணத்தை பூர்த்தி செய்து கொள்வீர்கள். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். ஊர் மாற்றச் சிந்தனைகள் மேலோங்கும். குருவின் பார்வை பலத்தால் உடல் ஆரோக்கியம் சீராகும். மாற்று மருத்துவத்தை மேற்கொண்டு ஆரோக்கியத்தை சீராக்கிக் கொள்வீர்கள். பக்கத்து வீட்டாரின் பகை மாறும். கணவன்–மனைவிக்குள் அடிக்கடி பிரச்சினைகள் உருவாகாமல் இருக்க விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. குழந்தைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. அவர்களின் எதிர்கால நலன் கருதி ஒரு தொகையைச் செலவிடுவீர்கள். ஆதியந்தப்பிரபு வழிபாடு ஆனந்தம் வழங்கும்.

அக்கறை  செலுத்தவேண்டிய  வக்ர  காலம்!

குருபகவான் 3.12.2014 முதல் 21.12.2014 வரை மக நட்சத்திரக்காலில் அதிசாரமாக செல்கிறார். டிசம்பர் 17 முதல் சிம்மத்தில் வக்ர கதியில் இயங்குகிறார். தொடர்ந்து 14.4.2015 வரை வக்ர கதியிலேயே சஞ்சரிக்கிறார். இந்த வக்ர காலம் உங்களுக்கு நன்மையை வழங்குமென்றே சொல்லலாம். ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்பதற்கேற்ப விபரீத ராஜயோகம் உங்களுக்கு செயல்படப் போகிறது.

எனவே, வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு போன்றவைகள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். ஒரு சிலர் விருப்ப ஓய்வில் தனித்து இயங்க முற்படுவர். நல்ல மாற்றங்கள் இல்லம் வந்து சேரும் நேரமிது.

கணித்தவர்: ‘ஜோதிட கலைமணி’ சிவல்புரி சிங்காரம்

%d bloggers like this: