மகரம் -குரு பெயர்ச்சி பலன்கள்(13.6.2014 முதல் 28.6.2014)

மகரம்

உத்ராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: போ, ஜ, ஜி, ஜீ, ஜே, ஜோ, க, கா, கி உள்ளவர்களுக்கும்)

ஏழாமிடத்தில்  குரு  வருகை!  இனிமேல்  கவலை  ஏதுமில்லை!

மற்றவர்களின் மனக்குமுறல்களை மறுப்புச் சொல்லாமல் கேட்டுக் கொள்ளும் மகர ராசி நேயர்களே!

வந்துவிட்டது குருப்பெயர்ச்சி. வைகாசி 30 முதல் வசந்த காலம் உங்களுக்கு பிறந்து விட்டது. ஆசைகள் அரங்கேறும், ஆதாயம் அதிகரிக்கும். ஓசைப்படாமல் ஒப்பற்ற நல்ல காரியங்கள் பலவும் செய்து முடிக்கப் போகிறீர்கள். காசு பணம் அதிகரிக்கும். காலை  முதல் மாலை வரை உழைத்துக் கைநிறைய வருமானம் வரவில்லையே என்று நினைத்த உங்களுக்கு இனி பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படப்போகிறது.

உங்கள் ராசிக்கு 3, 12–க்கு ஆகிய இடங்களுக்கு அதிபதியாக  குரு விளங்கினாலும் சப்தம ஸ்தானத்தில் இருந்து கொண்டு அல்லவா பார்க்கிறார். எனவே புதிய ஒப்பந்தங்கள் வந்து கொண்டேயிருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வந்து சேரும்.

டிசம்பர் மாதம் சனிப்பெயர்ச்சிக்குப் பின்னால் உங்கள் ராசியையே சனி பார்க்கப் போகிறார். எனவே உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி அச்சுறுத்தல்கள் ஏற்படும். நண்பர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரம் என்றாலும் முன்கோபத்தால் நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடலாம்.

பழைய சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கையானவர்கள்!

உடன்பிறப்புகள் மீது உங்களுக்குப் பாசம்அதிகமாக இருக்கும். இருப்பினும் அவர்களுக்கு உங்கள் மீது பாசம் அதேபோல் இருக்குமா என்பது சந்தேகம் தான். மற்றவர்களின் குடும்ப ரகசியத்தை மனதில் பதித்துக் கொள்வீர்கள். ஆனால் உங்கள் குடும்ப ரகசியத்தை ஒருவரிடமும் சொல்ல மாட்டீர்கள்.

விதியின் மீது முழு நம்பிக்கை வைப்பவர் நீங்கள். உணர்ச்சி வசப்படுவதன் மூலமாக உயர்ந்த மனிதர்களின் நட்பை இழக்க நேரிடலாம். பணம் சேர்ப்பதே குறிக்கோளாகக் கொண்டிருப்பீர்கள். கொடுத்த வாக்கை எப்படியும் நிறைவேற்றி விட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு உண்டு.

இப்படிப்பட்ட குணங்களைப் பெற்ற உங்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி தரும் பலன்கள் பற்றிப் பார்ப்போம்.

ஏழினில் குருதான் வந்தால்
எதிர்காலம் சிறப்பாய் மாறும்!
வாழ்விலே வசந்தம் சேரும்!
வருமானம் திருப்தி யாகும்!
சூழ்ந்திடும் பகை விலகும்!
தொடுத்திடும் மாலை சேரும்!
கோள்களில் குருவை நீங்கள்
கும்பிட்டால் நலம் கிடைக்கும்!

என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது எதிர்காலம் சிறப்படைய எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். கல்யாண வாய்ப்புகள் கைகூடவில்லையே என்ற கவலை அகலும். காரசாரமாகப் பேசிய உறவினர்கள் இனி பிரச்சினை வேண்டாம் என்று ஒத்துப் போக முன்வருவர்.

நிலம் வாங்கலாம், வீடு வாங்கலாம் என்று திட்டம் தீட்டியவர்கள் ஆசைகள் நிறைவேற அந்நிய இனத்தவர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். கூடுதல் லாபம் தொழிலில்  வர நாடிவரும் நண்பர்களின் நல்ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்துப்பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். இடைஇடையே தேக நலக்குறைவு தலைதூக்கினாலும் தெய்வ வழிபாட்டின் மூலம் உடல் நலம் சீராகும்.

கூட்டாளிகள் உங்களோடு வந்திணைந்து பணிபுரிவர். வாட்டங்கள் அகலும். வறுமை விலகும். மாற்றங்களை நீங்கள் எப்படி எதிர்பார்த்தீர்களோ அதன்படியே வந்து சேரும். உறவினர்களின் பகை அகல மூன்றாம் நபர்களின் தலையீடுகள் நம்பிக்கைக்கு உரிய விதம் இருக்குமா என்பது சந்தேகம்தான்.

வெற்றி தரும் வியாழனின் பார்வை!

குரு உங்கள் ராசிக்கு 3, 12–க்கு அதிபதியானவர். அவர் உங்கள் ராசிக்கு 7–ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது அதன் பார்வையை 1, 3, 11 ஆகிய இடங்களில் பதிகிறார். எனவே அந்த ஸ்தானங்கள் புனிதமடைகின்றன.

எனவே, சகோதரர்கள் உதவி கிடைக்கும். தாயின் உடல் நிலை சீராகும். தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். பங்குதாரர்களுடன் பிரச்சினைகளை வரவழைத்துக்கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. இக்காலத்தில் தகாத நட்புகளை விலக்குவது அவசியம். தந்தை வழி உறவினர்களையும் அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.

ஜென்மத்தை குருதான் பார்த்தால்
சிரமங்கள் அகன்று ஓடும்!
மூன்றினை குருதான் பார்த்தால்
முயற்சியால் வெற்றி கிட்டும்!
பதினொன்றைக் குருதான் பார்த்தால்
பணத் தேவை பூர்த்தியாகும்!

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

எனவே குரு பார்க்குமிடமெல்லாம் நன்மை கிடைக்கும். கடந்த காலத்தில் ஏற்பட்ட கவலைகள் இனிமாறும். உடன்பிறப்புகள் முதல் உடனிருப்பவர்கள் வரை ஆதரவுக்கரம் நீட்ட முன்வருவர். மூடிக்கிடந்த தொழிலுக்கு இனி திறப்புவிழா நடத்திப் பார்ப்பீர்கள்.உத்தியோகத்தில் உள்ளவர்கள் உன்னத நிலையை காண்பர். உத்தியோக மாற்றத்தைக் கருதி உயர்அதிகாரிகளை சென்று பார்த்தால் உங்கள் எண்ணம் பூர்த்தியாகும்.

நல்ல வாய்ப்புகளையே இந்த குரு பார்வை வழங்கப் போகிறது. நாட்டுப்பற்று மிக்கவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு அனுசரிப்பாக இருப்பர். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போடும் வாய்ப்புகளை யோகமான ஜாதகத்தைப் பெற்றவர்கள் ஏற்றுக் கொள்ளலாம். சஷ்டாஷ்டம தோஷம் மற்றும் சனியின் ஆதிக்கத்தில் இருப்பவர்கள் யோசித்து கையெழுத்திடுவது நல்லது. மூத்த சகோதரத்தின் மூலம் இயல்பாக சுபகாரியங்கள் நடை          பெறும். வாழ்க்கைத் துணை வழி         யிலும், வாரிசுகள் வழியிலும் உதிரி வருமானங்கள் கிடைக்கலாம்.

சஞ்சாரப்பலன்கள்

குரு சுய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (13.6.2014 முதல் 28.6.2014 வரை):– இந்தக்காலத்தில் விரயங்கள் அதிகரிக்கும். வீடுமாற்றச் சிந்தனைகள் மேலோங்கும். தொழிலில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு செல்வ நிலையை உயர்த்தும். பயணங்கள் அதிகரிக்கும். அடுத்தவர் நலன் கருதி அலைச்சல்களை மேற்கொள்வீர்கள்.  குடும்பக் கவலைகளும், கூட இருப்பவர்களால் ஏற்பட்ட பிரச்சினையும் அகலும்.

குரு சனி சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (29.6.2014 முதல் 27.8.2014 வரை):– தங்கு தடைகள் அகல பொறுமையோடு செயல்பட வேண்டிய நேரமிது. குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் அகலும். குடியிருப்பவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகளும் விலகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியுமா என்பது சந்தேகம் தான். அரசாங்க உதவி பெற்றவர்கள் அதன் விளைவாக  சில சிக்கல்களையும், சிரமங்களையும் சந்திக்க நேரிடும். தம்பதிகளுக்குள் தகராறுகள் வராமல் இருக்க அனுசரித்துச் செல்வது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் மேலோங்கியிருக்கும். வியாபாரத்தில் விரோதங்களை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

புதன் சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது (28.8.2014 முதல் 2.12.2014 வரை):– புதன் உங்கள் ராசிக்கு 6, 9–க்கு அதிபதியானவர். எனவே இக்காலத்தில் உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. செய்தொழில் சீராக நடைபெறுவதில் சில தடைகள் ஏற்படும். மறைமுகப் பகை அதிகரிக்கும். குடும்பப் பிரச்சினையில் மூன்றாம் நபர் தலையிடுவதன் மூலம் மனக்கசப்பு தரும் தகவல்கள் வந்து சேரலாம். பணம் வந்த மறுநிமிடமே செலவாகி விடும். தந்தை வழி உறவில் நெருக்கம் ஏற்படும். முன்னோர் சொத்துக்களில் இருந்த வழக்குகள் நல்ல முடிவிற்கு வரும். அனுமன் வழிபாடு பலன் தரும்.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!

சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். யோக பலம் பெற்ற நாளில் நாமக்கல் சென்று விஸ்வரூப ஆஞ்சநேயரை வழிபட்டு வெற்றியை வரவழைத்துக்கொள்ளுங்கள்.

மகர  ராசியில்  பிறந்த  பெண்களுக்கு!

இந்தக் குருப்பெயர்ச்சி உங்களுக்கு யோகம் தரும் பெயர்ச்சியாகவே இருக்கப் போகிறது. ‘மாலை’ கிடைக்கவில்லையே என்று ஏங்கியவர்களுக்கும், ‘மழலை’ கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்டவர்களுக்கும் மகிழ்ச்சி கிடைக்கும் விதத்தில் அனைத்தும் நிறைவேறும். கணவன்–மனைவிக்குள் கனிவு கூடும். ஒற்றுமை பலப்படும். உங்கள் பெயரிலேயே இடம், பூமி வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். தாய்வழி அனுகூலம் உண்டு. முத்தான வாழ்க்கைக்கு முன்னுதாரணமாக இருக்கப் போகிறீர்கள். குழந்தைகளும், குடும்பப் பெரியவர்களும் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். குலதெய்வ வழிபாட்டில் ஆர்வம் காட்டுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கலாம். குடும்பச் சுமை குறையும். குழந்தைகள் வழியே சுபச்செலவுகளும், சுபகாரியங்களும் நடைபெற்று மகிழ்விக்கும்.

அக்கறை  செலுத்தவேண்டிய  வக்ர  காலம்!

குரு பகவான் 3.12.2014 முதல் 21.12.2014 வரை மக நட்சத்திரக்காலில் அதிசாரமாக செல்கிறார். டிசம்பர் 17 முதல் சிம்மத்தில் வக்ர கதியில் இருக்கிறார். தொடர்ந்து 14.4.2015 வரை வக்ர கதியில் சஞ்சரிக்கிறார். இந்த வக்ர காலத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. தன லாபாதிபதி வக்ரம் பெறுவது நல்லதல்ல. பண வரவில் தடைகள், நெருக்கடிகள் நீடிக்கும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும். எதிரிகளின் பலம் கூடும் இந்த நேரத்தில் உதிரி வருமானங்களும் கூடலாம்.

உள்ளத்தில் அமைதி கிடைக்க ஒவ்வொரு நாளும் குரு வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. முல்லைப்பூ மாலை அணிவித்தால் எல்லை இல்லாத நற்பலன்கள் கிடைக்கும். இக்காலத்தில் சொல்லைச் செயலாக்கிக் காட்ட இயலாது. தொல்லைகள் அதிகரிக்கும். நல்லவர்கள் என்று நம்பி சேர்த்த கூட்டாளிகள் பகைவர்களாக மாறுவர். வில்லில் இருந்து வரும் அம்பு போல வேகமும், கோபமும் அதிகரிக்கும். வக்ர காலத்தில் பொறுமையைக் கடைப்பிடிப்பதன் மூலம் வளர்ச்சியைக் கூட்டிக் கொள்ள இயலும்.

கணித்தவர்: ‘ஜோதிட கலைமணி’ சிவல்புரி சிங்காரம்

%d bloggers like this: