மீனம் -குரு பெயர்ச்சி பலன்கள்(13.6.2014 முதல் 28.6.2014)

பூரட்டாதி 4–ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: தீ, து, ஓ, ஸ்ரீ, தே, தொ, சு உள்ளவர்களுக்கும்)

பஞ்சம ஸ்தான  குருவாலே  பறந்தது கவலை! இனியோகம் தான்!

இல்லத்திற்கு வருபவர்களை இன்முகத்தோடு உபசரிக்கும் மீன ராசி நேயர்களே!

வந்துவிட்டது குருப்பெயர்ச்சி. ராசிநாதன் குரு உச்சம்பெற்று 5–ம் இடத்தில் சஞ்சரித்து அற்புதப் பலன்களை வழங்கப் போகிறார். வைகாசி 30 முதல் இனி வசந்த காலம் தான். அஷ்டமத்து சனியின் வலிமையால் இதுவரை இருந்த கசந்த காலங்கள் இனி மாறப்போகின்றன.

டிசம்பர் மாதத்தில் சனியும் மாறப்போகிறது. உங்கள் சஞ்சலமும் தீரப் போகிறது. பணியில் முன்னேற்றமும், பண மழையில் நனையும் வாய்ப்பும் இனிமேல் உங்களுக்கு எப்பொழுதும் கிடைக்கப் போகிறது.

நான்காமிடத்தில் இதுவரை சஞ்சரித்து வந்த குரு பகவான் நல்லவர் தான். என்றாலும், அர்த்தாஷ்டம குருவாக அல்லவா அவர் காட்சியளித்தார். எனவே வீண் சண்டைகளும், விரோதங்களும், தேனான வாழ்க்கையில் திண்டாட்டங்களும் வந்திருக்கலாம். 

பிள்ளைகளால் கவலையும், பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்க்கையும், சொல்லைச் செயலாக்கிக் காட்ட முடியாத சூழ்நிலையும், சுற்றத்தாரால் அவமதிப்பும் கொண்டிருந்த நிலையும் இனி மாறும். வெற்றி தேவதை வீட்டில் அடியெடுத்து வைக்கப் போகிறது. வியக்கும் செய்திகள் இனி வந்து கொண்டேயிருக்கும். கலக்கம் அகலவும், கனிவான வாழ்க்கை அமையவும், அருகில் இருக்கும் புராதனக் கோவில்களுக்குச் சென்று குருவை வழிபட்டு குதூகலம் காணுங்கள். அதுமட்டுமல்லாமல் சனி விலகும் நேரத்தில் திருநள்ளாறு சென்று தித்திக்கும் தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்.

‘நளன்’ குளத்தில் நீராடி நள்ளாற்று ஈசனை வழிபட்டு, உளமாற அன்ன தானம் செய்து ஊர் திரும்பி வாருங்கள். வளமான வாழ்க்கையும் அமையும். வருங்காலமும் நலமாக இருக்கும். உள்ளூரில் அருகிலிருக்கும் ஆலயத்திற்கு சென்று சனி பகவான் சன்னிதியில் எள் தீபம் ஏற்றுங்கள். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும்.

ஊர் பற்றும், உறவினர் பற்றும் மிக்கவர்கள் நீங்கள்!

தர்ம நெறிகளை கடைப்பிடிப்பவர்கள் நீங்கள். தாட்சிண்யத்திற்கு அடிமைப்பட்டவர்களாகவும் விளங்குவீர்கள். கற்பனைத் திறனும், அறிவாற்றலும் உங்களுக்கு கைவந்த கலையாக இருக்கும். 

ஊர் பற்று மிக்க நீங்கள் தேசபக்தியும், தெய்வ பக்தியும் மிக்கவர்கள். ஆசை உங்களுக்கு அதிகமாகவே இருக்கும்.  ஓசைப்படாமலேயே நல்ல காரியங்கள் பலவும் செய்பவர்களாக விளங்குவீர்கள். 

இப்படிப்பட்ட உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி தரும் பலன்கள் என்ன என்று பார்ப்போம்.

ஐந்தினை குருதான் பார்த்தால்
அனைத்திலும் வெற்றி கிட்டும்!
பைதனில் பணமும் சேரும்!
பாராளும் யோகம் வாய்க்கும்!
வையகம் போற்றும் வண்ணம்
வாழ்க்கையும் அமையும் உண்மை!
செய்தொழில் வளர்ச்சி யாகும்!
செல்வாக்கும் அதிகரிக்கும்!

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது 5–ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு அற்புதப் பலன்களை அள்ளி வழங்கப் போகிறது. தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவர்.

அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். ஆதாயம் தரும் தகவல்கள் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டே இருக்கும். நிதி நிலை உயரும். பஞ்சாயத்து தலைவர் முதல் பாராளும் யோகம் வரை ஏதேனும் ஒரு பொறுப்பை இந்த உலகம் உங்களுக்கு வழங்கும்.

செய்தொழிலில் வளர்ச்சி கூடும். சேமிப்பு உயரும். வையகத்தார் போற்றும் விதம் வாழ்க்கை அமையும்.  வேலைகளில் முன்னேற்றமும் கிடைக்கும். விருப்ப ஓய்வில் சுய       தொழில் செய்யும் வாய்ப்பும் ஒரு சிலருக்கு உருவாகும். கூட்டாளிகள் கூடுதல் லாபம் தர முயற்சிப்பர்.

குரு பார்வை கொடுக்கும் யோகங்கள்!

நவக்கிரகங்களில் சுப கிரகமாக விளங்கும் குரு பகவான் உங்கள் ராசிக்கு அதிபதியாவார். அவர் உச்சம் பெற்று உங்கள் ராசியைப் பார்ப்பது மிகமிக யோகமாகும். உடல் நலமும், மனலமும் சிறப்பாக இருக்கும். கல்யாணக் கனவுகள் நனவாகும். கையில் தவழ குழந்தை இல்லையே என்று ஏங்கியவர்களுக்கு அதுவும் வாய்க்கும்.

குருவின் பரிபூரண பார்வை 1, 9, 11 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே, ஜென்மம், உடல், செயல்பாடு, வாழ்க்கைத் தரம், தந்தையின் நிலை, உறவினர் பாசம், பயணங்கள். எதிர்பாராத தன லாபம், இளைய சகோதரம், போன்றவற்றை விளக்கும் இடங்கள் எல்லாம் புனிதமடையப் போகின்றன.

ராசியை குருதான் பார்த்தால்
இனியதோர் வாழ்க்கை சேரும்!
ஒன்பதை குருதான் பார்த்தால்
உன்னத நிலையும் வாய்க்கும்!
பதினொன்றை குருதான் பார்த்தால்
பணத்தேவை பூர்த்தி யாகும்!

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

குரு பகவான் 5–ம் இடத்தில் இருந்து கொண்டு ஜென்ம ராசியைப் பார்ப்பது யோகம் தான். பஞ்சம ஸ்தானமும், பலம் பெறுகிறது. பார்க்குமிடமும் பலம் பெறுகிறது. எனவே, குடும்பச் சுமை கூடினாலும் ஒரு வழியாகச் சமாளிப்பீர்கள். கடந்த காலத்தை பற்றிக் கவலைப்பட வேண்டாம். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். எதிர்காலத்திற்காக நீங்கள் தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும்.

குடும்ப உறவில் இருந்த பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். பகை விலகி பாசம் கூடும். இந்த நேரத்தில் நகை என்றும், தொகை என்றும், கார் என்றும், வண்டி என்றும் வீடு என்றும் நச்சரித்து வந்த உங்கள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் பொருட்டு எல்லாவற்றையும் வாங்கி மகிழப் போகிறீர்கள்.

‘குரு பார்க்கக் கோடி நன்மை’ என்பதற்கேற்ப குருவின் பார்வை 9, 11 ஆகிய இடங்களில் பதிவதால் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும், என்ன நினைத்தாலும் அதைச் செய்ய நண்பர்கள் ஒத்துழைப்புச் செய்வர். உத்தியோகஸ்தர்களுக்கு சம்பள உயர்வு பற்றிய சந்தோஷச் செய்திகள் வந்து சேரும். வைத்தியச் செலவுகள் குறையும். வாய்தாக்கள் ஓயும். புதிய கிளைத் தொழில்கள் தொடங்கி தொழில் வளத்தைப் பெருக்கிக் கொள்ளப் போகிறீர்கள்.

பார்க்கும் குருவைப் பலப்படுத்த அப்போதைக்கப்போது சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். பவுர்ணமி நாளில் கிரிவலம் வருவதன் மூலமும் சிறப்புகளைக் காண இயலும். வேந்தன்பட்டி நெய் நந்தி, தஞ்சாவூர் பெரிய நந்தி, திருப்புன்கூர் சாய்ந்த நந்தி இப்படிப்பட்ட நந்தீஸ்வரர் வழிபாடுகளை பிரதோஷ நாளில் செய்வதோடு அனுகூல நாளில் சர்ப்ப சாந்தியும் செய்தால் சந்தோஷங்களையே சந்திக்க இயலும்.

சஞ்சாரப்பலன்கள்

குரு தன் சுயசாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (13.6.2014 முதல் 28.6.2014 வரை):– இக்காலம் ஒரு பொற்காலமாக அமையும். இல்லத்தில் அமைதி கூடும். கடிதம் கனிந்த தகவலைத் தரும். தொழில் கூட்டாளிகளால் லாபம் வந்து சேரும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உருவாகும். வருமானம் இரு மடங்காகி வளர்ச்சியைக் கூட்டும். நிறைவேறாத ஆசை நிறைவேறும். அரசு வழிச் சலுகைகளும், உதவிகளும் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள்.

சனி சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது (29.6.2014 முதல் 27.8.2014 வரை):– சனி உங்கள் ராசிக்கு 11, 12–க்கு அதிபதியாவார். எனவே வரவும், செலவும் சமமாக இருக்கும். பணத்தைக் கையில் வைத்துக்கொண்டு எந்தக் காரியமும் செய்ய இயலாது. காரியத்தைத் தொடங்கிவிட்டால் காசு, பணம் தானாக வந்து சேரும். பூர்வீக சொத்துப் பிரச்சினை அகலும். புதிய வீடு, வாகனம் வாங்குவதில் சிக்கல்கள் ஏற்படும். யாருக்கும் பணப் பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.

புதன் சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது (28.8.2014 முதல் 2.12.2014 வரை):– உங்கள் ராசிக்கு 4, 7–க்கு அதிபதியானவர் குரு பகவான். எனவே இக்காலத்தில் இனிய பலன்களே வந்து சேரும். பணியிலிருந்த தொய்வு அகலும். பாராட்டும், புகழும் கூடும். வீடு கட்டிக் குடியேறும் எண்ணம் நிறைவேறும். வேற்று மனிதர்களின் ஒத்துழைப்பால் கூட்டு முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். ஆரோக்கியத்தில் மட்டும் அக்கறை செலுத்த வேண்டிய நேரமிது.

செல்வ வளம் தரும்  சிறப்பு வழிபாடு!

வியாழக்கிழமை தோறும் குரு தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வருவதோடு அனுகூலம் தரும் நட்சத்திர நாளில் மதுரையில் உள்ள இன்மையில் நன்மை தருவார் கோவிலுக்குச் சென்று சிவன், உமையவள், நந்தீஸ்வரர், தட்சிணாமூர்த்தியை வழிபட்டு நல்ல வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்ளுங்கள்.

மீன  ராசியில்  பிறந்த  பெண்களுக்கு!

இந்த குருப்பெயர்ச்சி சீரும், சிறப்பும், செல்வாக்கும் கொடுக்கப் போகிறது. குடும்ப ஒற்றுமை பலப்படும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். கணவன்–மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பெண் குழந்தைகளின் சுப சடங்குகள் முதல் பெரிய பிள்ளைகளின் திருமண முயற்சிகள் வரை எதிர்பார்த்தபடியே நற்பலன்கள் நடைபெறும். தம்பதியர் ஒற்றுமை பலப்படும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து இணைவர். பாதியில் நின்ற பணிகளை மீதியும் தொடருவீர்கள். பகை விலகி பாசம் கூட சர்ப்ப சாந்திகளை செய்வது நல்லது. வக்ர காலத்தில் ஆரோக்கியம் சீராக குரு வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள்.

அக்கறை  செலுத்தவேண்டிய  வக்ர  காலம்!

குரு பகவான் 3.12.2014 முதல் 21.12.2014 வரை மக நட்சத்திரக் காலில் அதிசாரமாகச் செல்கிறார். இக்காலத்தில் எதையும் யோசித்துச் செய்வது நல்லது. ஆரோக்கியக் குறைகள் அதிகரிக்கும். மருத்துவச் செலவுகள் கூடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. கூடுதல் விழிப்புணர்ச்சி இருந்தால் தான் தொழிலில் லாபம் கிடைக்கும். இட மாற்றம், ஊர் மாற்றம், உத்தியோக மாற்றங்கள் போன்றவைகள் ஏற்படும். விரயங்கள் அதிகரிக்கும் இந்த நேரத்தில் சுய ஜாதக அடிப்படையில் திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.

%d bloggers like this: