விருச்சிகம் -குரு பெயர்ச்சி பலன்கள்(13.6.2014 முதல் 28.6.2014)

விருச்சிகம்

விசாகம் 4–ம் பாதம், அனுஷம், கேட்டை வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: தோ, ந, நி, நே, நோ, ய, யி, யு உள்ளவர்களுக்கும்)

உச்ச குருவின் பார்வையினால் உலகம் போற்றும் வாழ்வமையும்!

லட்சங்களைக் காட்டிலும் லட்சியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விருச்சிக ராசி நேயர்களே!

வந்து விட்டது குருப்பெயர்ச்சி. வைகாசி 30 முதல் வசந்த காலம் உருவாகப் போகிறது. குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் இன்று முதல் உங்களுக்கு யோகம்தான்.

‘குரு பார்க்க கோடி நன்மை’ என்ற பழமொழிக் கேற்ப அதன் அருட்பார்வை 5–ம் பார்வையாக பதிவதால் மிஞ்சும் பலன் கிடைக்கும். ஆசைகள் அரங்கேறும். அரசியல்வாதிகளால் நன்மை கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு 2, 5–க்கு அதிபதியாவார். தன பாக்யாதிபதியாக விளங்கும் குரு உச்சம் பெற்று உங்கள் ராசியையே பார்க்கப் போகிறார். எனவே, உடல் ஆரோக்கியமும் சீராகும். ஒவ்வொரு நாளும் நல்ல தகவல்கள் இல்லம்தேடி வந்து கொண்டேயிருக்கும். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். உங்கள் கரம் பட்டதெல்லாம் வெற்றியைக் கொண்டு வந்து சேர்க்கும்.

சாதனை நிகழ்த்தி சரித்திரத்தில் இடம் பெறுபவர் நீங்கள்!

எதையும் வெளிப்படையாக பேசுபவர்கள் நீங்கள். மிகுந்த தெய்வ பக்தி உங்களுக்கு உண்டு. பேச்சால் கவர்ந்திழுக்கும் நீங்கள் பிறருக்கு யோசனை சொல்வதிலும் அசகாய சூரர்கள். இளமையான காலத்திலேயே உங்கள் எண்ணங்களெல்லாம் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து பெற்று, சகல வசதியோடும் வாழவேண்டும் என்பது தான்.

இப்படிப்பட்ட குணாதிசயங்களைப் பெற்ற உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு தரும் பலன்கள் பற்றிப் பார்ப்போம்.

பொதுவாக 9–ல் சஞ்சரிக்கும் குரு பொன், பொருள்களை அள்ளி வழங்கும். புகழைக் கூட்டும். அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். வம்பு, வழக்குகளிலிருந்து விடுபட்டு வரலாற்றின் பொன்னேட்டில் உங்கள் பெயர் இடம்பெறும் விதத்தில் அமையுமென்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.

ஒன்பதில் குருவும் வந்தால்
ஒப்பற்ற வாழ்க்கை சேரும்!
பொன் பொருள் அதிகரிக்கும்!
பூமியால் லாபம் கிட்டும்!
நண்பர்களின் ஒத்துழைப் பால்
நலம்யாவும் வந்து கூடும்!
இன்பத்தின் எல்லை காண
இறையருள் கைகொடுக்கும்!

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

எனவே 9–ல் வந்த குரு உங்கள் உன்னத வாழ்விற்கு அடித்தளமிடப் போகிறது. தன ஸ்தானத்திற்கும், ஐந்தாமிடத்திற்கும் அதிபதியான குரு பகவான் 9–ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது ஐந்தும், ஒன்பதும் மிஞ்சும் பலன் தரும் என்பதற்கேற்ப பொருளாதார நிலை உயர்ந்து கொண்டே போகும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்வுகள் ஒவ்வொன்றாக நடைபெற வழிபிறக்கும்.

குருவின் பலம் கூடுதலாக இருக்கும் இந்த நேரத்தில் நூதனப் பொருள் சேர்க்கையும், மனைகட்டிக் குடியேறும் வாய்ப்பும், புதிய சொகுசு வாகனங்கள் வாங்கும் வாய்ப்பும் உருவாகும். புதிய கிளைத் தொழில்கள் தொடங்கவும் முன்வருவீர்கள்.  குழந்தைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவதோடு அதன் எதிர்கால நலன்கருதி வெளிநாட்டு முயற்சி மற்றும் வேலைவாய்ப்பு முயற்சிகளிலும் அனுகூலம் ஏற்படும்.

மேலும் நன்மைகள் வந்து குவிய தென்முகக் கடவுளாக விளங்கும் குரு தட்சிணா மூர்த்தியின் சன்னிதியில் நின்று குரு கவசம் பாடி ‘குருவே நீ பார்த்தால் போதும், கோடியாய் நன்மை சேரும்’ என்று சொல்லிச் செல்வச் செழிப்போடு வழிபாடு செய்து வாருங்கள். கோடி நன்மைகள் உங்களைத் தேடி வந்து சேரும்.

வெற்றி தரும் வியாழனின் பார்வை!

குரு உங்கள் ராசிக்கு 9–ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது அதன் புனிதப் பார்வை உங்கள் ஜென்ம ராசியிலும், மூன்றாமிடத்திலும், ஐந்தாமிடத்திலும் பதிவாகிறது. எனவே, உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பொன், பொருளும் போற்றுகிற செல்வாக்கும் இன்னும் பெருகி இயல்பாக வளம் கிடைக்கும்.

ஜென்மத்தை குருதான் பார்த்தால்
செல்வாக்கு அதிகரிக்கும்!
மூன்றினை குருதான் பார்த்தால்
முன்னேற்றம் வந்து சேரும்!
ஐந்தினை குருதான் பார்த்தால்
அனைத்துமே வெற்றி யாகும்!

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது வாழ்க்கையில் வளர்ச்சி மீது வளர்ச்சி காணப் போகிறீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள நேசக்கரம் நீட்ட உறவினர்கள் முன்வருவர். நீண்ட நாள் நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள்.

உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிகளுக்கு அவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விலகிச் சென்ற சகோதரர்கள் விரும்பி வந்து சேருவர். பூர்வீக சொத்துக்             களில் எதிர்பார்த்தபடியே பாகப் பிரி     வினைகளில் முறையான பங்கீடு கிடைக்கவில்லையே என்ற கவலை இனி அகலும்.

வாக்கு பலிதத்தால் வளர்ச்சி காண்பீர்கள். கனவுகள் மூலமும் உங்களுக்கு முன்னதாகவே நடக்கும் காரியங்கள் தெளிவாகத் தெரியும். அப்படிக் கனவில் கண்டவைகள் எல்லாம் நனவாகப் போகிறது. வழக்கு     களில் வெற்றி கிடைக்கும். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். அரசு வழிச் சலுகைகளை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு அதுவும் கைகூடும்.

கல்வித்துறை, கலைத்துறை, பத்திரிகை, எழுத்துத்துறை, ஆன்மிகம், ஜோதிடம் சம்பந்தப்பட்ட துறைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அதிகமான நற்பலன்கள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும் இந்த நேரத்தில் பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். குருவின் பார்வை புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும் இடத்தில் பதிவதால் பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் பெருகும். அவர்கள் கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். வெளிநாட்டில் படிக்க வைக்க வேண்டுமென்று ஆசைப்பட்டவர்கள் அதற்காகச் செய்த ஏற்பாடுகள் வெற்றிகரமாக அமையும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

சஞ்சாரப்பலன்கள்

குரு தன் சுயசாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (13.6.2014 முதல் 28.6.2014 வரை) :– இது மிகுந்த யோகமான நேரமாகும். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். குடும்ப வருமானம் அதிகரிக்கும்.  கொடுக்கல்–வாங்கல்களில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் தெம்பும், உற்சாகமும் பிறக்க பணிபுரிய தொடங்குவீர்கள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். விருந்து, உபசாரங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும்.

குரு சனி சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (29.6.2014 முதல் 27.8.2014 வரை) :– உடல் நலமும், மனநலமும் மகிழ்ச்சியாக இருக்கும். உற்றார், உறவினர்கள் உங்கள் செயல்பாடுகளுக்கு உறுதுணை புரிவர். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். பயணங்கள் பலன் தரும். கட்டிடப் பணி தொடரும். காரிய வெற்றிக்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்பு செய்வர்.

குரு புதன் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (28.8.2014 முதல் 2.12.2014 வரை) :– புதன் உங்கள் ராசிக்கு 8, 11–க்கு அதிபதியாவார். எனவே வரவும், செலவும் சமமாகவே இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். தொழிலில் ஒரு சிலர் இடமாற்றம், ஊர்மாற்றம் செய்ய விரும்புவர்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. தேவையான இடத்திற்கு மாறுதல்கள் கிடைக்கலாம். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் முதல் ஆடம்பரப் பொருட்கள் வரை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள். இக்காலத்தில திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை செய்வது நல்லது.

செல்வ வளம் தரும்  சிறப்பு வழிபாடு!

பவுர்ணமி தோறும் கிரிவலம் வருவது நல்லது. செவ்வாய்க்கிழமை சிவாலயம் சென்று விநாயகப் பெருமான், முருகப் பெருமான், சிவபெருமான், நந்தியெம்பெருமான், குரு பகவான், சனி பகவான் ஆகியவற்றை வழிபாடு செய்யுங்கள்.

யோக பலம் பெற்ற நாளில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை கை    தொழுது வழிபட்டால் அற்புதப் பலன்களை வரவழைத்துக் கொள்ளலாம்.

விருச்சிக  ராசியில்  பிறந்த  பெண்களுக்கு!

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு குதூகலம் தரும் விதத்தில் அமைகிறது. நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். கணவன்–மனைவிக்குள் பாசமும், நேசமும் கூடும். மன அமைதியோடு வாழ வழிகிடைக்கும். மக்கள் செல்வங்களால் மேன்மை உண்டு. குழந்தைகளுக்கு நல்ல இடத்தில் வரன்கள் வந்து சேரும். அவர்களுக்கு வேலை கிடைத்து அதன் மூலமாகவும் உதிரி வருமானங்கள் உங்களுக்கு கிடைக்கலாம். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு உயர்பதவி கிட்டும். வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். திசைமாறிய தென்முகக் கடவுளை வழிபடுவதோடு திசாபுத்திக்கேற்ப தெய்வ வழிபாடுகளையும் தேர்ந்தெடுத்துச்செய்தால் தித்திக்கும் விதத்தில் வாழ்க்கை அமையும்.

அக்கறை  செலுத்தவேண்டிய  வக்ர  காலம்!

குரு பகவான் 3.12.2014 முதல் 21.12.2014 வரை மக நட்சத்திரக்காலில் அதிசாரமாகச் செல்கின்றார். டிசம்பர் 17 முதல் சிம்மத்தில் வக்ர கதியில் இருக்கிறார். தொடர்ந்து 14.4.2015 வரை வக்ர கதியிலேயே சஞ்சரிக்கிறார். இந்த வக்ர காலத்தில் விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். விழிப்புணர்ச்சியோடு செயல்படுவது நல்லது. உறவினர்களையும், நண்பர்களையும் நம்பி செயல்பட்ட காரியங்கள் உங்களிடமே மீண்டும் வந்து சேரலாம். குடும்பச் சுமை கூடும். எதிலும் முன்யோசனையுடன் செய்தால் முன்னேற்றம் கிடைக்கும்.

%d bloggers like this: