தமிழக திட்டங்களுக்கு சிறப்பு முன்னுரிமை கிடைக்குமா?

சென்னை : முதல்வர் ஜெயலலிதா, வரும், 3ம் தேதி, டில்லி சென்று, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். அப்போது, தமிழக திட்டங்களுக்கு, சிறப்பு முன்னுரிமை அளிக்கும்படி, கோரிக்கை மனு கொடுக்க உள்ளார். எனவே, தமிழக திட்டங்களுக்கு சிறப்பு முன்னுரிமை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் ஜெயலலிதாவும், நெருங்கிய நண்பர்கள். பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதும், தமிழகத்தில் பா.ஜ., – அ.தி.மு.க., கூட்டணி ஏற்படும் என, எதிர்பார்க்கப்பட்டது.
தனித்து போட்டி:


ஆனால், ‘லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., 40 தொகுதிகளிலும், தனித்து போட்டியிடும்’ என, ஜெயலலிதா அறிவித்தார். எனவே, பா.ஜ., பிற கட்சிகளுடன் இணைந்து, தனி அணியாக களம் இறங்கியது.தனித்து போட்டியிட்டாலும், தேர்தல் பிரசாரத்தின் துவக்கத்தில், முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க., மற்றும் காங்கிரசை மட்டும் சாடினார். பா.ஜ., மற்றும் அதன்
கூட்டணி கட்சிகள் குறித்து விமர்சிக்கவில்லை.இதனால், தேர்தலுக்கு பிறகு, பா.ஜ., கூட்டணிக்கு, அ.தி.மு.க., ஆதரவு அளிக்கும் என்ற எண்ணம் மக்களிடம் பரவியது. தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தில், தமிழகத்தில் பிரசாரம் மேற்கொண்ட நரேந்திர மோடி, ‘அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., மாறி மாறி ஆட்சிக்கு வந்தும், தமிழகத்திற்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை’ என, விமர்சித்தார்.இதற்கு பதிலடி கொடுத்த ஜெயலலிதா, ‘நிர்வாகத்தில், மோடியை விட, இந்த லேடி தான் சிறந்தவர்’ என முழங்கினார். இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே, இடைவெளி அதிகரித்தது.
அதிர்ச்சி
தேர்தல் முடிவில், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காது. மாநில கட்சிகள் உதவியுடன் பிரதமராகலாம் என, ஜெயலலிதா திட்டமிட்டார். அந்த வாய்ப்பு வராவிட்டால், பா.ஜ.,விற்கு ஆதரவு அளித்து, மத்திய அரசில் அங்கம் வகிக்கலாம் என, முடிவு செய்தார்.

இதனால், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டவர்கள், அமைச்சர் கனவில் மிதந்தனர். ஆனால், தேர்தல் முடிவு வேறு விதமாக அமைந்தது. பா.ஜ., தனிப் பெரும்பான்மையுடன், ஆட்சியைப் பிடித்தது.தமிழகத்தில், 37 இடங்களை கைப்பற்றியும், மத்திய அமைச்சரவையில், இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டதும், அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சி அடைந்தனர்; முதல்வர், ‘அப்செட்’டானார். அ.தி.மு.க.,வினரின் மத்திய அமைச்சர் கனவு தகர்ந்தது.அதன் பிறகு, பிரதமராக தேர்வு செய்யப்பட்ட நரேந்திர மோடிக்கு, முதல்வர் வாழ்த்து செய்தி அனுப்பினார். அதில், ‘மத்திய அரசு, தமிழக அரசுடன் நல்லுறவு பேண வேண்டும்’ என்றார். அதற்கு நன்றி தெரிவித்த நரேந்திர மோடி, ‘மத்திய அரசு, மாநில அரசுடன் நல்லுறவு பேணும்’ என, உறுதி அளித்தார்.இதனால், மத்திய அரசுடன் இணக்கமான சூழல் ஏற்படும் என, அ.தி.மு.க.,வினர் நம்பினர்; அதிகாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மோதல்
கடந்த முறை, மத்தியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுடன், ஜெயலலிதா மோதல் போக்கை கடைபிடித்தார். இதனால், தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகள் பாதிப்படைந்தன; நிதி ஒதுக்கீடு குறைந்தது.இந்நிலை மாற, மத்திய அரசுடன் இணக்கமாகச் செல்ல வேண்டும் என, அதிகாரிகள் விரும்பினர். அதற்கேற்ப பா.ஜ., ஆட்சி அமைந்ததும், மகிழ்ச்சி அடைந்தனர்.மத்திய அரசுடனான உறவை பலப்படுத்தும் வகையில், நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில், ஜெயலலிதா பங்கேற்பார் என, எதிர்பார்க்கப்பட்டது.
எதிர்ப்பு
ஆனால், நரேந்திர மோடி பதவியேற்பு விழாவிற்கு, ‘சார்க்’ நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டனர். அதை ஏற்று, இலங்கை அதிபர் ராஜபக்?ஷே உட்பட பல நாட்டு தலைவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.ராஜபக்?ஷே வருகைக்கு, தமிழர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. முதல்வர் ஜெயலலிதாவும் எதிர்ப்பு தெரிவித்து, காட்டமாக அறிக்கை விடுத்தார்.அதைத் தொடர்ந்து, அவர், பதவியேற்பு விழாவிற்கு செல்லவில்லை; அ.தி.மு.க., சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதனால், மீண்டும் இடைவெளி உருவானது.இதை குறைக்கும் வகையில், அடுத்த மாதம், 3ம் தேதி, டில்லி சென்று பிரதமரை சந்திக்க, முதல்வர் முடிவு செய்துள்ளார். டில்லியில், பிரதமர் அலுவலகத்தில் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான உதவிகளை செய்யும்படி, கோரிக்கை மனு கொடுக்க உள்ளார். மத்திய அரசு உதவி இல்லாததால்,தமிழகத்தில் முடங்கியுள்ள திட்டங்கள் குறித்தும் விளக்க உள்ளார்.பிரதமரை சந்திக்க முதல்வர் முடிவு செய்திருப்பது, அ.தி.மு.க., வினரிடம் மட்டுமின்றி, அதிகாரிகளிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கு, நரேந்திர மோடி உதவுவார் என்று நம்புகின்றனர்.
முதல்வர் முன்வைக்கும் கோரிக்கைகள்
*முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை, 142 அடியாக உயர்த்திக் கொள்ள, சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. இதை கண்காணிக்க, மத்திய, மாநில அரசு பிரதிநிதிகள் கொண்ட குழு அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழக பிரதிநிதி நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், மத்திய அரசின் பிரதிநிதி நியமிக்கப்படவில்லை; அவரை விரைவில் நியமிக்க வேண்டும்.
*தமிழகத்திற்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீடை, அதிகரிக்க வேண்டும்.
*தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு, கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
*ரயில்வே திட்டங்களுக்கு, கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
*நிலுவையில் உள்ள பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என, முதல்வர் வலியுறுத்த உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

%d bloggers like this: