இந்திய மொழிகளில் இணையம் வளர்கிறது

இணையத்தை இந்திய உள்ளூர் மொழிகளில் கொண்டு வரும் முயற்சி தற்போது அனைத்து இணைய நிறுவனங்களாலும், தீவிரமாக மேற்கொள்ளப் பட்டு வருவதனைக் காண்கிறோம். நாம் எதிர்பார்க்கின்ற அளவிற்கு, இந்த மொழிகளில் கருத்துரைகள் போதுமான அள வில் உருவாக்கப் படுவதில்லை என்பதே இன்றைய நிதர்சன மான நிலையாக உள்ளது.

டிம் பெர்னர்ஸ் லீ வைய விரி வலை வழியாகத்தான், நாம் ஒருவருக்கொருவர் தகவல் பரிமாறிக் கொள்ளும் பழக்கத்தில் அதிசயத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. இன்னும் சில ஆண்டுகளில், தகவல்களைக் கொண்டுள்ள கம்ப்யூட்டர் சர்வர்களே, தேவைக்கேற்ப தகவல்களைத் தாங்களாகவே பரிமாறிக் கொள்ளும் காலம் வரத்தான் போகிறது. இன்னும் கூகுள் நிறுவனத்தின் கூகுள் கிளாஸ் (Google Glass), ட்ரைவர் இல்லாத கார், சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் (Smart Watch), ஆப்பிள் நிறுவனம் தர இருப்பதாகக் கூறப்படும் ஐ வாட்ச் (iWatch) ஆகியவை நம் வாழ்க்கையின் நடைமுறைச் செயல்பாடுகளை முற்றிலுமாக மாற்றிப் போட இருக்கின்றன.
இந்த முன்னேற்றங்கள், நம் தனிநபர் சுதந்திரம் குறித்து கேள்விகளை எழுப்பினாலும், வைய விரி வலை தரும் இணையத்தை நாம் ஒதுக்கவே முடியாது. எகிப்து மற்றும் சீனா போன்ற 40 நாடுகள் இணையத்தைக் கட்டுப்படுத்தியே தங்கள் மக்களுக்குத் தந்தாலும், இணையத்தைப் பொதுமக்கள் வாழ்விலிருந்து பிரிக்கவே இயலாது என்பதே உண்மை.
இந்தியாவிலும் இணையத்தில், ஓரளவிற்குத் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ள Central Monitoring System (CMS) என்னும் அமைப்பு போன் அழைப்புகள், மின் அஞ்சல்கள் மற்றும் பிற இணைய சேவைகளைக் கண்காணிக்கும் அதிகாரம் கொண்டதாக இயங்கி வருகிறது.
இது போன்ற அரசு விதிக்கும் வரையறைகளும் தடைகளும், இணையம் வளர்வதனைத் தடை செய்திடுமா என்று எண்ணலாம். இவற்றினால் வரும் வளர்ச்சித் தடையைக் காட்டிலும், இந்தியர்கள் அனைவரும் தங்கள் மொழிகளின் வாயிலாக, இணையத்தை அணுகிப் பயன்படுத்தா நிலை தான், இணையத்தை நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு வளர்ச்சி அடைய விடாமல் வைத்துள்ளது என்பதுதான் உண்மை.
""இந்திய மொழிகளில், இணையத்தில் தகவல்கள் கிடைத்தால், இன்னும் 24 சதவீத மக்கள் கூடுதலாக இணையத்தைப் பயன்படுத்துவார்கள்,” என கடந்த பிப்ரவரி 25ல், Internet and Mobile Association of India (Iamai) மற்றும் IMRB International என்ற அமைப்புகள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
கிராமப் புறங்களில், 43 சதவீத மக்கள் இன்னும் இணையத்தைப் பயன்படுத்தாதவர்களாகவே உள்ளனர். எங்களுக்குத் தெரிந்த மொழி களில், நாங்கள் புரிந்து கொள்ளும் மொழிகளில், இணையத்தில் தகவல்கள் இருப்பின், நாங்களும் பயன்படுத்துவோம் என்றே இவர்கள் கூறுகின்றனர்.
இந்த அறிக்கையில், இணையப் பயன்பாட்டினை கிராமப் புறங்களில் அதிகமாக்கிட, உள்ளூர் மொழி தான் சிறந்த ஊக்குவிப்பாக இருக்கும் என்று உறுதியாக, ஆதாரங்களுடன் தரப்பட்டுள்ளது.
மாதம் குறைந்தது ஒரு முறையாவது இணையத்தைப் பயன்படுத்தும் பயனாளர்களில், 42 சதவீத மக்கள், உள்ளூர் மொழிகளின் வழியேதான் பயன்படுத்துகின்றனர். நகர்ப்புற இணையப் பயனாளர்களைப் பொறுத்த வரை, ஆங்கில மொழி வழி பயன்பாடும், உள்ளூர் மொழி வழிப் பயன்பாடும் சமமாகவே இருந்து வருகிறது. இங்கு மின் அஞ்சல், செய்தி மற்றும் தேடல் பணிகளே அதிகம் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆனால், கிராமப்புறப் பகுதிகளில், பொழுதுபோக்கு, சமுதாய இணக்க தொடர்புகள் மற்றும் மின் அஞ்சல்களே, முக்கிய பணிகளாக இணையத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. கிராமப் பகுதிகளில் உள்ள இணையப் பயனாளர்களில் 27 சதவீதத்தினர், இணையத்தில் உள்ள தகவல்களை இந்தி மொழியில் தேடிப் பயன்படுத்துகின்றனர். இதனை அடுத்து மராத்தி மற்றும் தமிழ் மொழிப் பயன்பாடு உள்ளது.
நகர்ப்புறப் பகுதிகளில், இந்திக்கு அடுத்த இடத்தை தமிழ் பெற்றுள்ளது. அதன் பின்னரே, மராத்தி மொழி இடம் பெற்றுள்ளது.
மொபைல் போன் வழியாக இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை, ஜனவரி 2013ல், 63 லட்சமாக இருந்தது. இது ஜனவரி 2014ல், 2 கோடியே 7 லட்சமாக உயர்ந்திருப்பது, நல்லதொரு வளர்ச்சியையே காட்டுகிறது.
ஜூன் 2013ல், இந்திய இணையப் பயனாளர்கள் 19 கோடியாக இருந்தனர். இவர்களில் 13 கோடிப் பேர் நகர்ப்புற மக்கள். அக்டோபர் மாதத்தில், இணையப் பயனாளர் எண்ணிக்கை 20.5 கோடியாக உயர்ந்தது. 2014ல் இது 30 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வளர்ச்சி இன்னும் வேகமாக இருக்க வேண்டும் என்றால், உள்ளூர் மொழிகளில் இணைய தளங்கள் பதியப்பட வேண்டும் என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட உண்மையாக உள்ளது. இந்த எதிர்பார்ப்பு மிக எளிதாக நிறைவேற்றப்படக் கூடியதாகத் தோன்றலாம். ஆனால், அதிகாரபூர்வமாக, அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாக நாம் 22 மொழிகளைக் கொண்டிருக்கின்றோம். இவற்றின் துணை மொழிவடிவங்களாக ஏறத்தாழ 1,500 பயன்படுத்தப் பட்டு வருகின்றன. எனவே, உள்ளூர் மொழிகளில் இணையம் என்பது, எளிதில் சாதிக்கக் கூடிய ஒரு பணி அல்ல. இருப்பினும், இதனை எப்படியும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், இந்தியாவில் பல வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்ற பிப்ரவரி 21ல், கூகுள் இந்தியா நிறுவனம், பெங்களூருவில், ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை இந்திய மொழிகளில் வடிவமைத்துத் தயாரிக்கும் கருத்தரங்கினை நடத்தியது. ""இந்தியாவில் அடுத்து வர இருக்கும் 30 கோடி இணையப் பயனாளர்கள், இணையத்தில் ஆங்கிலத்தைப் பயன்படுத்தப் போவதில்லை. அதனால் தான், உள்ளூர் மொழிகளில் இணையம் இயங்க வேண்டுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்,” என கூகுள் இந்தியா நிறுவனப் பிரிவின் நிர்வாக இயக்குநர் ராஜன் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
யாஹூ இந்தியா நிறுவனம் எட்டு இந்திய மொழிகளில் மின் அஞ்சல் சேவையினை வழங்கி வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் மற்றும் ஆபீஸ் தொகுப்புகளை தமிழ், தெலுங்கு, அசாமீஸ், வங்காள மொழி, குஜராத்தி, இந்தி, கன்னடம், கொங்கணி, மலையாளம், மராத்தி, ஒரியா மற்றும்பஞ்சாபி மொழிகளில் கொண்டு வந்துள்ளது. இந்திய மொழிகளில் தகவல்களை இணைய தளங்களில் பதிப்பது என்பது எளிதான செயலும் அல்ல. மொழிகளின் எழுத்துக்கள் அந்த அளவிற்கு எளிமையானவை அல்ல. எனவே தான், இதற்குப் பல முனை உதவி மற்றும் ஆய்வும் தீர்வுகளும் தேவைப்படுகின்றன.
மத்திய அரசும் மாநில அரசுகளும் இதற்கென பல பொதுத்துறை அமைப்புகளை நிறுவி, இணையத்தில் இந்திய மொழி வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்ளச் செய்து வருகின்றன. மக்களின் ஆதரவோடு, இணையத்தில் இந்திய மொழிப் பயன்பாடு, மிக வேகமாக இனி இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஒரு மறுமொழி

  1. சிறந்த பகிர்வு

%d bloggers like this: