மிஸ்டர் கழுகு: கட்சி ஜெயிக்கலைன்னா சாகவா முடியும்?

”தி.மு.க ஏரியாவில்தான் அனல் அதிகமாக இருக்கிறது”- என்றபடி உள்ளே வந்தார் கழுகார்.

”தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியை மறுசீரமைப்பு செய்தாக வேண்டும் என்பதில் கருணாநிதி உறுதியாக இருக்கிறார். ஆனால், ஸ்டாலின் அதற்குத் தடையாக இருக்கிறார் என்பதே பலரும் சொல்வது. ‘நான்கைந்து பேர் மீதுகூட நடவடிக்கை எடுக்காமல் கட்சியைச் சீரமைக்க முடியாது’ என்றும் கருணாநிதி நினைக்கிறார். ஆனால் மாவட்டச் செயலாளர்கள் யாரும் உண்மையில் என்ன தவறு என்பதை உணர்ந்தது மாதிரி தெரியவில்லை. ஜூன் 2-ம் தேதி தி.மு.க-வின் உயர்நிலை செயல்திட்டக் குழுக்கூட்டம் நடக்கிறது. அதற்கு முன்னதாக மாவட்டக் கழக ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவதற்குத் தலைமை திட்டமிட்டது. தேர்தல் தோல்வியைப் பற்றி பரிசீலனை செய்யும் கூட்டமாக அறிவிக்கப்பட்டால் கொந்தளிப்பும் காரசாரமும் அதிகமாக இருக்கும் என்பதால், ஜூன் 3-ம் தேதி நடக்க இருக்கும் கருணாநிதியின் 91-வது பிறந்த நாள் விழாவை எப்படி சிறப்பாகக் கொண்டாடுவது என்ற தலைப்பில் இந்தக் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனாலும் இந்தக் கூட்டங்களில் கருணாநிதியின் பிறந்தநாளைவிட தேர்தல் தோல்விகள் பற்றித்தான் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஊரிலும் நடந்த விவாதங்களில் காரமான சம்பவங்களை மட்டும் சொல்கிறேன்.”

”சொல்லும்.”

”கடந்த 26-ம் தேதி திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் ஆலோ​சனை கூட்டம். திருச்சி தி.மு.க மாவட்ட செயலாளர் நேருவை நேருக்கு நேர் கேள்வி கேட்கும் கூட்டமாக மாறிப்போனது. முதலில் பேசிய கே.என்.நேரு, ‘நாடாளுமன்றத் தேர்தலில் மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கிறோம். இப்படிப்பட்ட நேரத்திலும் கவலைப்படாதீர்கள், நாங்கள் இருக்கிறோம் என்பதை நிரூபிக்கும் வகையில் இத்தனை பேர் திரண்டு வந்து இருப்பதைப் பார்க்கும்போது மனநிறைவாக இருக்கிறது. தோல்வி குறித்து உயர்மட்ட குழுக் கூட்டத்தில் ஆராயப்படும். தோல்வியைப் பற்றி கலங்கக் கூடாது. உற்சாகமாகப் பணியாற்ற வேண்டும். அடுத்த சட்டசபை தேர்தலில் நாம்தான் ஆட்சிக்கு வருவோம். வெற்றி, தோல்வி மாறி மாறி வரும். உச்சிக்குச் சென்றவர்கள் கீழிறங்கியே ஆகவேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாகப் பணியாற்றி தி.மு.க-வை அதிக இடங்களில் வெற்றி பெறச் செய்து தலைவர் கலைஞரை ஆட்சியில் அமர்த்த வேண்டும்’ என்று பேசி முடித்தார்.

அடுத்து பேசினார் மு.அன்பழகன். இவர் திருச்சி தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்டு தோற்றவர். ‘தொகுதிக்குள் சிலர் எனக்கு எதிராகத் திட்டமிட்டே வேலை செய்தனர். அவர்களை இப்படியே விட்டுவிட்டால் நமக்குத் தொடர்ந்து தோல்வியே மிஞ்சும். அதற்கு பேசாமல் எங்களிடம் இருக்கும் பொறுப்புகளில் இருந்து நீக்கிவிடுங்கள். நாங்கள் சாதாரண தொண்டர்களாகவே இருந்து​விட்டு போகிறோம்’ என்று கலங்கினார். அப்போது இடைமறித்த நேரு, ‘அன்பழகன் பேசுவதில் உண்மை​யிருக்​கிறது. ஏனெனில் அவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர். அவரின் வலியை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். இனி பேச வருபவர்கள் தேர்தல் தோல்வி குறித்து பேசக்கூடாது’ என்றார் காட்டமாக.

 

அடுத்து பேசிய தொட்டியம் ஒன்றிய செயலாளரும் பெரம்பலூர் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்டவருமான சீமானூர் பிரபு, ‘தேர்தல் தோல்வி குறித்து பேசக் கூடாது என்று மாவட்டச் செயலாளர் சொல்லியிருக்கிறார். ஆனால், இப்போது பேசவில்லை என்றால் எப்போதும் பேசமுடியாது. அதனால் பேசியே ஆகவேண்டும். திருச்சி, பெரம்பலூரில் நாம் தோற்றதற்குக் காரணம் சில துரோகிகள் என்பது எல்லோருக்கும் தெரியும். தகுதியில்லாதவர்களை நிறுத்தினால் தோற்றுப்போனதாக சிலர் கமென்ட் அடிக்கின்றார்களாம். தகுதியைப் பற்றி யார் பேசுவது? மாணவர் அணியில் இருந்த உனக்கு தலைவர் எம்.பி சீட் கொடுத்தார். அப்போது இருந்த எல்லோரும் உன்னை யார் என்று பார்க்காமல், கழக வேட்பாளராகப் பார்த்து ஜெயிக்க வைத்தார்கள். எந்தப் பொறுப்பிலும் இல்லாத உனக்கு எதற்கு சீட் கொடுத்தார்கள் என்று யாரும் நினைக்கவில்லை. தேர்தலில் ஜெயித்த கொஞ்ச நாளில், கட்சிக்குத் துரோகம் பண்ணிட்டு கட்சி மாறினாய். அடுத்த கொஞ்ச நாளில் வழியில்லாமல் வந்து நின்றபோது, தாயுள்ளம் கொண்ட தலைவர் கலைஞர் உன்னை மன்னித்து ஏற்றுக்கொண்டார். மீண்டும் சீட் கொடுத்து, மந்திரியாக்கி அழகு பார்த்தார். அதன்மூலம் கோடி கோடியா சம்பாதித்தாய்’ என்று முன்னாள் அமைச்சர் திருச்சி செல்வராஜை மறைமுகமாக விமர்சித்துப் பேசினார் சீமானூர் பிரபு. இவரை மேலும் பேசக் கூடாது என்று தடுத்தார் நேரு.

பிரபுவோ,  ‘இப்படி பேசக் கூடாது என்று சொல்லிக்கிட்டே இருங்கள். அவர்கள் நமக்கு துரோகம் பண்ணிக்கிட்டே இருப்பார்கள். மாவட்ட செயலாளர் உண்மையில் நல்ல விவசாயி. வயலில் முளைக்கும் களைகளைப் பற்றியும் அதன் தீமை பற்றியும் அவருக்குத் தெரியும், அதைப்போல் கட்சியில் இருக்கும் துரோகிகளைக் களையெடுக்க வேண்டும்’ என்று சொல்லி முடித்தார்”

”நேரு என்ன பதில் சொன்னாராம்?”

”கடைசியில் பேசிய நேரு, ‘தேர்தல் நேரத்தில் நமது கட்சிக்கு எதிராகப் பணியாற்றியவர்கள் யார் யார் என்று நன்றாகத் தெரியும். கடந்த தேர்தலில் ஏமாற்றியது போல் கட்சியில் இருந்துகொண்டே கட்சிக்கு எதிராகப் பணியாற்றியவர்கள் இந்த முறை தப்ப முடியாது. ஒன்றிய செயலாளர்கள் கட்சிக்கு எதிராகப் பணியாற்றியவர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு கொடுங்கள். அதை நான் உயர்மட்ட குழுக் கூட்டத்தில் தலைவரிடம் கொடுக்கிறேன்.  தலைவர் கலைஞர்  நல்ல முடிவெடுப்பார்’ என்று சொல்லியிருக்கிறார்.”

”மதுரையில் என்ன நடந்ததாம்?”

”27-ம் தேதி காலை மதுரை புறநகர் மாவட்ட கூட்டத்தைச் செயலாளர் மூர்த்தி நடத்தினார். இதில் தாங்கள் எவ்வளவு சிரமப்பட்டுத் தேர்தல் வேலை செய்தோம் என்பதை விளக்கிப் பேசினார். ஒவ்வொரு ஒன்றியம், பேரூர், கிளைக் கழகங்களுக்கு வழங்கப்பட்ட பணப் பட்டுவாடா விவரங்களை விலாவாரியாக விவரித்தார். ‘நாங்கள் செலவு கணக்கை சரியாக சமர்ப்பித்துவிட்டோம். என்னைப்போல மதுரை மாநகர் தி.மு.க., தலைமையிடமிருந்து எவ்வளவு நிதி பெற்றது… எவ்வளவு செலவழித்தது என்பதை இன்னும் காட்டவில்லை’ என்று பிட்டை போட்டார். மாலையில் நடந்த மதுரை மாநகர் மாவட்ட கூட்டத்தில்தான் அனல் பறந்தது. கோ.தளபதி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் தி.மு.க-வினரும் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்தது போல திரண்டு வந்திருந்தனர். தேர்தல் நேரத்தில் இஷ்டத்துக்குத் தங்களை விமர்சித்த அழகிரியின் பேச்சை அப்போது கண்டுகொள்ளாத மதுரை, தேனி வேட்பாளர்கள், இப்போது கடுமையாக பதிலடி கொடுத்தார்கள்.

மதுரை தொகுதி வேட்பாளர் வேலுச்சாமி பேசும்போது, ‘தி.மு.க-வுக்குத் தோல்வி ஒன்றும் புதிதல்ல. தோல்வியைப் பார்த்து பயப்படுகிறவர்களும் நாங்கள் அல்ல. ஆனால், எதிரிகளைக்கூட மன்னித்துவிடலாம், துரோகிகளை மன்னிக்க முடியாது. கூடவே இருந்து எங்கள் முதுகில் குத்தியவர்களை என்றைக்கும் மன்னிக்க மாட்டோம். தலைவருக்காகத்தான் அனைத்தையும் பொறுத்துக்கொண்டோம். இனி எங்கள் வேலையைக் காட்டுவோம்’ என்றவர் அழகிரிக்கு எதிராக மோசமான வார்த்தை ஒன்றை ஆக்ரோஷமாக சொல்லியிருக்கிறார்.

 

அடுத்து பேசிய தேனி தொகுதி வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கமோ, அழகிரி பேரை சொல்லாவிட்டாலும், எல்லோருக்கும் புரியும்படி நேரடி அட்டாக்கில் இறங்கினார். ‘தேர்தலில் எங்களுக்கு ஓட்டு போட வேண்டாம் என்று சொன்னவர், வேறு ஒரு கட்சியில் சேர்ந்துவிட்டு சொன்னால், அவர் தைரியமானவர் என்று நாங்கள் நினைத்திருப்போம். மக்களும் நினைத்திருப்பார்கள். ஆனால், தி.மு.க கரை வேட்டியைக் கட்டிக்கொண்டு தி.மு.க-வுக்கு ஓட்டு போடக் கூடாது என்று சொன்னீர்களே, வெட்கமாக இல்லை. தைரியமில்லாத நீங்கள் எங்களை விமர்சிக்கலாமா? நீங்கள் எங்களைக் கேவலமாக விமர்சித்த போதெல்லாம் நாங்கள் கண்டுகொள்ளாமல் இருந்ததற்குக் காரணம் தலைவர் மீதிருந்த மரியாதைதான். ஊருக்குள் சண்டியர்த்தனம் பண்ண பயப்படுறவன், வீட்டுல உடன் பொறந்தவங்ககிட்டே வந்து வம்பிழுப்பானாம். காரணம், கோபப்பட்டு அடித்தாலும் பொய்யடியாக அடித்து விரட்டுவார்களே தவிர, யாரும் ஹெவியா அடிக்க மாட்டாங்கங்கிற நம்பிக்கையில்தான். அந்தக் கதைதான் இங்க நடந்தது.

சரி, தி.மு.க-வுக்கு எதிரா பிரசாரம்

செஞ்சதுலயாவது ஒரு தெளிவு இருந்துச்சா? அதிலயும் குழப்பம். ஒரு ஊருல பம்பரம், இன்னொரு ஊருல முரசு, கைக்குன்னு ஓட்டு கேட்டீங்களே ஏன்? என்னையும், வேலுச்சாமியையும் வேட்பாளராக தலைமை அறிவித்தது தப்பா? நாங்க கூட்டி வந்த ஆளுதானே நீங்க? நானெல்லாம் உங்கள் புராணத்தைப் பாட ஆரம்பித்தால் நீங்கள் மதுரையில் குடியிருக்கவே முடியாது. சொன்னா தாங்க மாட்டீர்கள். தலைவர் மனம் புண்படுமே என்றுதான் பொறுத்துக்கொண்டு இருக்கிறோம்’ என்று, மனதிலுள்ளதைக் கொட்டித் தீர்த்துவிட்டார் பொன்.முத்து. கட்சித் தலைமையே அழகிரியை மன்னித்து ஏற்றுக்கொண்டாலும் கட்சியினர் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பது பட்டவர்த்தனமாக மதுரை தி.மு.க-வில் தெரிகிறது.”

”இது அழகிரிக்கு தெரியுமா?”

”அழகிரிக்குத் தெரியாமல் மதுரையில் எதுவும் நடக்குமா? அங்கிருந்தே ஒருவர் செல்போனை ஆன் செய்து வைத்துவிட்டாராம். வேலுச்சாமி பேச்சைக் கேட்டு கொதித்துவிட்டாராம் அழகிரி. ‘என்னை திட்டுகிறேன் என்று தலைவரையும் என் அம்மாவையும் திட்டுகிறார் ஒரு வேட்பாளர். இதைக் கேட்டு என்னால் சும்மா இருக்க முடியாது. அந்த ஆளு பேசினதை சி.டி. பண்ணி ஸ்டாலினுக்கும் அவர் மனைவிக்கும் அனுப்பி வையுங்கள்’ என்று சொன்னாராம். குடும்ப உறுப்பினர்கள் சிலரிடமும் பேசி உள்ளார் அழகிரி!”

”மற்ற மாவட்டங்களையும் சொல்லும்”

”சிவகங்கை மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் காரைக்குடி தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பேசிய இளையான்குடி ஒன்றிய  செயலாளர் மதியரசன், ‘எனது அப்பா தி.மு.க நான் தி.மு.க-வில் இருக்கிறேன். ஆனால் நமது சந்ததி தி.மு.க-வில் இருக்கிறார்களா என்றால் அது இல்லை. 62 வயது மோடியால் இளைஞர்களை ஈர்க்க முடிந்த அளவுக்கு நாம் ஈர்க்கத் தவறிவிட்டோம். இந்தத் தோல்விக்கு நாம்தான்  காரணம்’ என்றார். கூட்டத்தில் பேசிய மாவட்ட தி.மு.க துணைச் செயலாளர் சேங்கை மாறன், ‘நமது கூட்டணி சரியாக அமையாது போனது ஒரு காரணம். இஸ்லாமியர்களை ஒரு புறமும் கிருஷ்ணசாமியையும், திருமாவளவனையும் வைத்துக்கொண்டு ஒருசிறுபான்மையினர் மற்றும் தலித் பாதுகாப்பு அமைப்பு போல் கூட்டணி வைத்ததால் அவர்கள் வாக்கு மட்டும்தான் நமக்கு விழுந்தது. பிற சமூக வாக்குகள் விழாமல் போய்விட்டன’ என்று சொல்லியிருக்கிறார்.”

”யோசிக்க வேண்டிய விஷயம்தான்.”

”விருதுநகர் மாவட்ட தி.மு.க-வின் நிர்வாகிகள் கூட்டம் விருதுநகரில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வீட்டில் ரகசியமாக நடந்தது. முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் எல்லோரும் ஆஜராகியிருந்தனர். அப்போது ஸ்ரீவில்லிப்புத்தூர் ஒன்றியச் செயலாளர் மல்லி ஆறுமுகம் எழுந்து, ‘விருதுநகர் மாவட்டத்தில் கட்சிக்காக உழைத்த எத்தனையோ பேர் இருக்காங்க. ஆனா, கட்சிக்கு சம்பந்தம் இல்லாத மதுரை தொழிலதிபர் ரத்தினவேலுவை வேட்பாளரா நிறுத்துனதுதான் நாம் தோற்றதுக்குக் காரணம். வேட்பாளரை அறிவிக்குறதுக்கு முன்னாடி கட்சியில் நகரச் செயலாளர், ஒன்றிய செயலாளருங்க கிட்ட கருத்து கேட்கவே இல்லை. பணக்காரரைத் தேடிப் பிடிச்சு வேட்பாளராக அறிவிச்சதுதான் நம்ம தோல்விக்குக் காரணம்’ என்று குற்றம் சுமத்தினாராம்.. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கொதித்துப் போனார். ‘தி.மு.க தலைமையையும் கட்சிப் பொறுப்பாளர்களையும் குற்றம் சொல்லக் கூடாது. இப்படிப் பொறுப்பாளரைக் குற்றம் சொல்றவங்க இந்தக் கட்சியில இருக்க வேணாம். அவுங்க விருப்பப்பட்ட கட்சிக்குப் போகட்டும். தி.மு.க இங்க மட்டுமா தோத்துச்சு? எல்லா இடத்திலேயும்தான் தோத்துச்சு. கட்சி ஜெயிக்கலைன்னா மருந்து குடிச்சிட்டு சாகவா முடியும்? நல்ல வேளையா வைகோ தோத்துட்டாரு. இல்லைன்னா கட்சி நிர்வாகிங்க எல்லோரும் வீட்டுக்குப் போக வேண்டியதுதான். இன்னும் 15 நாளுக்குள் ஒவ்வொரு வார்டாக கட்சி நிர்வாகிங்க போய் ஏன் தோற்றோம்ன்னு காரணத்தைக் கண்டுப்பிடிக்கணும். எந்த வார்டில் தி.மு.க-வுக்குக் குறைஞ்ச ஓட்டு கிடைச்சிருக்கோ. அங்கே கட்சி நிர்வாகிகளை மாற்றிடுவோம்’ என்றாராம் ஆக்ரோஷத்துடன்.”

”பொன்முடி..?”

”தி.மு.க தோல்விக்கு ஆளாளுக்கு ஒரு குற்றச்சாட்டை சொல்லிக்கொண்டிருக்க, விழுப்புரம் மாவட்ட செயலாளர் பொன்முடி ஒரு விபரீத குற்றச்சாட்டை கூறியுள்ளார். ‘ஓட்டுப் பதிவுக்கு முன்பு அனைத்துக் கட்சி பூத் ஏஜென்டுக்கும் டெஸ்டிங் ஓட்டு தருவார்கள். தி.மு.க, அ.தி.மு.க., தே.மு.தி.க என அனைத்துக் கட்சி ஏஜென்டுகளும் வாக்குகள் சரியாக விழுகிறதா என்று பார்ப்பார்கள். அதுபோல கள்ளக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட ஆயந்தூர் பூத்தில் ஏஜென்டுகள் ஓட்டு செலுத்தியபோது பத்து ஓட்டுகளும் இரட்டை இலைக்கே விழுந்துள்ளது. இதுகுறித்து உடனே புகார் தெரிவித்தவுடன் சரி செய்வதாக அதிகாரிகள் சமாளித்துள்ளனர். இந்த விஷயத்தை நேற்றுதான் என்னிடம் கூறினர்கள். இதை வைத்து பார்க்கும்போது பலத்த சந்தேகம் எழுகிறது. இதே குற்றச்சாட்டை ஜெயலலிதாவும் கூறியுள்ளார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதே குறைபாடு எல்லா தொகுதி ஓட்டு எந்திரத்திலும் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது’ என்று கூறி அதிரவைத்தார்.”

”இதை முழுமையாகக் கண்டுபிடிக்க தி.மு.க முயற்சிக்​கலாமே?” என்று நாம் சொல்ல, சிரித்தபடி எழுந்த கழுகார், ”வரும் திங்கள்கிழமை காலையில் தி.மு.க-வின் தட்பவெப்பம் இன்னும் கூடுதலாக ஆகலாம். அதற்கு மறுநாள் கருணாநிதியின் 91-வது பிறந்தநாள். அன்று, அவருக்கு வாழ்த்துச் சொல்ல அழகிரியை வரவழைக்க சிலர் முயற்சித்து வருகிறார்கள். பதற்றம் கூடியபடி இருக்கிறது” என்று சொல்லிவிட்டுப் பறந்தார்!

கோவை மேயரை வீழ்த்திய விபத்து

கோவை செ.ம.வேலுசாமியிடம் இருந்த கட்சியின் கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் பதவியும், கோவை மாநகராட்சி மேயர் பதவியும் ஒரே நேரத்தில் பறிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள், கவுன்சிலர்கள் என யாரையும் மதிப்பதில்லை என ஏகப்பட்ட புகார்கள் அடுக்கப்பட்டாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆளும் கட்சி கவுன்சிலர்கள் 40-க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து அவரைப் பற்றி அனுப்பிய புகாருக்கும் நோ ரெஸ்பான்ஸ். இந்த நிலையில் 27-ம் தேதி இரவு திடீரென கட்சிப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் செ.ம.வேலுசாமி. அடுத்த ஓரிரு மணி நேரத்தில் அவர் மேயர் பதவியையும் ராஜினாமா செய்தார். 

”அ.தி.மு.க வென்ற இடங்களில் கோவை தொகுதியில்தான் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளது. மாநகர மாவட்டப் பகுதியிலும் சிங்காநல்லூர், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க-வைவிட பி.ஜே.பி. வாக்குகள் அதிகம் பெற்றது. இதன் காரணமாகவே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது” என பேசப்பட்டது.

வேறு காரணம் சொல்கிறார்கள் அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள். ”பல்லடத்தில் நடந்த விபத்துதான் முக்கியக் காரணம். நன்றி அறிவிப்புக் கூட்டத்துக்குச் சென்றவர் அங்குள்ள தோட்டத்துக்குச் சென்றார். அங்கிருந்து திரும்பும்போது ஒருவழிப் பாதையில் சென்ற மேயரின் கார், எதிரே வந்த பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த கனகராஜ் என்பவர் படுகாயமடைந்தார். காரில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் விழுந்தவரை கண்டும் காணாமல் மேயரின் கார் நிற்காமல் சென்றது. மேயர் கார் மோதியதால், எப்படி வழக்குப்பதிவு செய்வது என உள்ளூர் போலீஸார் கையை பிசைய… இதை அப்படியே உளவுத் துறை அறிக்கையாக மேலிடத்துக்கு அனுப்பி வைத்தது. அதுதான் பதவி நீக்கத்துக்கு முக்கியக் காரணம்” என்கின்றனர்.

  ஆட்சிப் பணியா… அரசியல் பணியா?                

நாடாளுமன்றத் தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெற்ற அ.தி.மு.க-வுக்கு ஆதரவளித்த கூட்டணி கட்சித் தலைவர்கள், கடந்த 23-ம் தேதி, முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இது வழக்கமான சம்பிரதாயம். ஆனால், தற்போது பணியில் இருக்கும் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தது மத்திய அரசு கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர்கள் அளித்துள்ள ரிப்போர்ட்டில், ஜெயந்தி (மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்), சாந்தா ஷீலா நாயர் (மாநில திட்டக்குழு துணைத் தலைவர்), ஷீலா பாலகிருஷ்ணன் (தமிழக அரசின் ஆலோசகர்) ஆகியோர் பணி ஓய்வுக்குப் பிறகு மாநில அரசின் பல்வேறு பணிகளில் இருக்கிறார்கள். ஆனால், மத்திய ஆட்சி பணி அதிகாரிகளாக இருக்கும் ஷீலா ப்ரியா, ஷீலா ராணி சுங்கத், கிரிஜா வைத்தியநாதன், சாந்தினி கபூர், டி.சபிதா, எம்.பி. நிர்மலா, கண்ணகி பாக்கியநாதன், அபூர்வா, ஆர்.வாசுகி, உமாமகேஸ்வரி, மைதிலி ராஜேந்திரன், பி.மகேஸ்வரி, சி.டி.மணிமேகலை, இன்னசென்ட் திவ்யா ஆகியோர் சந்தித்துள்ளனர்.

இந்த புகைப்படத்தை வெளியிட்ட தமிழக செய்தித்துறை, ‘நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில்  மாபெரும் வெற்றி பெற்றமைக்காக வாழ்த்து தெரிவித்தார்கள்’ என்று எழுதி அனுப்பி உள்ளது. ‘ஆட்சிப்பணி அதிகாரிகள் இப்படி அரசியல் செயல்பாட்டில் இறங்கலாமா?’ என்ற கேள்வியுடன் மத்திய உளவுத்துறை நோட் போட்டுள்ளதாம்!

%d bloggers like this: