அன்றாட வேலையில் அதிக கலோரியை எரிக்கலாம்!

ஆரோக்கியமாக வாழ நமக்கு நாள் ஒன்றுக்கு 2,500 முதல் 2,800 கலோரிகள் தேவை. ஆனால், மாறிவிட்ட உணவுப் பழக்கம்,  உடல் உழைப்புக் குறைவு போன்ற காரணங்களால் 2,800-க்கும் அதிகமான கலோரிகளை நாம் எடுத்துக்கொள்கிறோம். இப்படி அதிகப்படியான கலோரிகள் உடலில் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேமித்து வைக்கப்படுகிறது. இதன், விளைவாக உடல் பருமன், சர்க்கரை நோய், இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

என்னதான் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்தும் நம்மால் போதுமான அளவு கலோரிகளை எரிக்க முடிவது இல்லை. வீட்டில், நாம் செய்யும் அன்றாட வேலைகளை அதிகக் கவனத்துடன் செய்வதாலும் அல்லது வாழ்வில் சில மாற்றங்களைச் செய்து கொள்வதன் மூலமும் கூடுதலாகச் சில கலோரிகளை எரிக்க முடியும்” என்கிற திருநெல்வேலியைச் சேர்ந்த உடற்பயிற்சியாளர் சாம், அதற்கான அசத்தல் வழிமுறைகளை விவரித்தார்.

  வீட்டில் பாத்திரம் கழுவுவது, தரை துடைப்பதன் மூலம் எவ்வளவு கலோரி செலவிடப்படுகிறது என்பது அவரவர் உடல் எடையைப் பொருத்தது. ஒருவரின் எடை 45 கிலோவாக இருந்து, 15 நிமிடங்கள் பாத்திரம் கழுவினால் 38 கலோரிகள் வரை எரிக்கப்படும். தரையை சுத்தம் செய்தால் 65 கலோரிகள் வரை எரிக்கலாம்.

  வீட்டுச் சுவற்றில் பந்து வீசிப் பிடிப்பதன் மூலம், அரை மணி நேரத்தில் 105 முதல் 285 கலோரி வரை எரிக்கலாம். 

  வீட்டில் தினமும் 50 நிமிடங்களுக்கு ஸ்கிப்பிங் விளையாடினால், 500 கலோரிகளை எரிக்கலாம்.

  ஒரே இடத்தில் உட்கார்ந்துகொண்டு போன் பேசுவதற்குப் பதில், பாதுகாப்பாக நடந்தபடியே பேசுங்கள். அவ்வப்போது எழுந்து உட்காருங்கள். இதனால், கூடுதல் கலோரிகளை எரிக்க முடியும்.

  வீட்டில் உள்ள மியூசிக் சிஸ்டத்தை ஆன் செய்துவிட்டு, சில நிமிடங்கள் நடனம் ஆடலாம்.

  மணிக்கணக்கில் உட்கார்ந்த நிலையில் இல்லாமல், ஃபைல், பேப்பர் படிக்கும்போதுகூட எழுந்து நின்று படிக்கலாம். காலாற ஓய்வு அறைக்கு நடந்து ஐந்து நிமிடங்கள் புஷ் அப்ஸ் அல்லது ஜம்ப் செய்யலாம். இதனால், உடலுக்கு புத்துணர்வு கிடைப்பதுடன் 50 கலோரிகள் வரை எரிக்க முடியும்.

துடிப்பான வேகத்துடன் அதாவது மணிக்கு 4 மைல் வேகத்தில் 90 நிமிடங்கள் நடந்தால், 500 கலோரிகளை எரிக்கலாம்.

அலுவலகத்தைச் சுற்றிலும் ஒரு 10 நிமிடத்துக்கு நடந்தாலே, குறைந்தது 80 முதல் 100 கலோரிகளை எரிக்க முடியும்.

இளைஞர்கள், மூட்டுப் பிரச்னை இல்லாதவர்கள் மணிக்கு 6 மைல் வேகத்தில் ஓடலாம். இதன் மூலம் 42 நிமிடங்களில் 500 கலோரிகளை எரித்துவிடலாம்.

குழந்தைகளுடன் விளையாடுங்கள். குழந்தைகளுடன் ஒரு ஒன்றரை மணி நேரத்தை செலவிடுவதன் மூலம் 500 கலோரிகளை எரிக்கலாம். இதனால், மன அழுத்தமும் குறையும். உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறும்.

  தினசரி 65 நிமிடங்கள் நீச்சல் செய்யலாம். நீச்சல் செய்யும் திறன், என்ன மாதிரியான நீச்சல் பயிற்சி செய்கிறீர்கள் என்பதைப் பொருத்து, ஒரு மணி நேரத்தில் 450 முதல் 950 கலோரிகள் வரை எரிக்க முடியும்.

  சைக்கிளிங் உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. பெடல் மிதிப்பதைப் பொருத்து 75 முதல் 670 கலோரிகளை வெறும் அரை மணி நேரத்திலேயே கூடுதலாக எரிக்க முடியும்.

ஒரு மறுமொழி

  1. சிறந்த உளநல வழிகாட்டல் பதிவு
    தங்கள் பதிவை எனது தளத்திலும் அறிமுகம் செய்துள்ளேன்.
    கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் பார்க்கலாம்.
    http://wp.me/3oy0k

%d bloggers like this: