கேப்டன் ஏன் அவுட்?

மூன்று பவுன்சர்களின் பின்னணி

 

விஜயகாந்தை விரக்தியின் விளிம்பில் தள்ளிவிட்டது இந்தத் தேர்தல். ‘தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு அடுத்து தே.மு.தி.க-தான் பெரிய கட்சி’ என்ற பூரிப்பில் இருந்த விஜயகாந்தை, நான்காவது இடத்துக்குத் தள்ளிவிட்டு பா.ஜ.க மூன்றாவது இடத்துக்கு முன்னேறிவிட்டது. அத்தோடு அந்தக் கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க. மட்டுமே தலா ஒரு தொகுதியை ஜெயிக்க முடிந்தது. ஆனால், 14 இடங்களில் போட்டியிட்டு ஒரு தொகுதியைக்கூடப் பிடிக்க முடியாத அவமானத்தை விஜயகாந்த்துக்குக் கொடுத்துவிட்டது இந்தத் தேர்தல்!

தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வுக்கு மாற்றாக வலுவான தலைமை இல்லாத தமிழக அரசியல் சூழலில்தான், தன் 30 ஆண்டு கால சினிமா பிரபலத்துடன் அரசியலில் இறங்கினார் விஜயகாந்த். இரண்டு கட்சிகளையும் சம விகிதத்தில் வைத்து அவர் விமர்சித்தது அவருக்கு தனிப்பட்ட செல்வாக்கை உருவாக்கிக் கொடுத்தது.

முந்தைய சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டார். அவர் மட்டுமே வெல்ல முடிந்தது. ஆனாலும் மற்ற தொகுதிகளில் எட்டு சதவிகித வாக்குகளை வாங்கினார். தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளையும் பிடிக்காத வாக்காளர்களுக்கு நம்பிக்கை தரும் தலைவராக மாறினார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவரைத் தங்கள் கூட்டணிக்குள் சேர்த்துக்கொள்ள கட்சிகள் விரும்பின. ஆனால் தனித்து நின்றார். எந்தத் தொகுதியையும் கைப்பற்ற முடியவில்லை என்றாலும், வாக்கு வங்கி தக்கவைக்கப்பட்டது. ‘தெய்வத்தோடும் மக்களோடும்தான் கூட்டணி’ என்று அவர் சொன்ன ஸ்லோகன் பிரபலம் ஆனது. அது அவருக்கு மரியாதையைக் கொடுத்தது. ஆனால் அதுவே, ‘தானும் ஜெயிக்க முடியாமல், அடுத்தவர்களையும் ஜெயிக்கவிடாமல் தி.மு.க-வுக்கு மறைமுகமாக உதவுகிறார் விஜயகாந்த். இதைத் தவிர அவரால் எந்தப் பயனும் இல்லை’ என்று அவர் மீது இன்னொரு விமர்சனத்தையும் வைத்தது.

 

அதனாலேயே தி.மு.க தன்னால் ஆதாயம் பெறாமல் இருக்க, கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் ஜெயலலிதாவைச் சந்தித்தார். அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து 29 தொகுதிகளை வென்று எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தையும் பெற்றார். இந்த வளர்ச்சிதான், இப்போதைய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் விஜயகாந்த்துக்கு அவ்வளவு மவுசு கூட்டியது!

விஜயகாந்த், ராமதாஸ், வைகோ கொண்ட கூட்டணியை பா.ஜ.க. தலைமையில் அமைக்க தமிழருவி மணியன் திட்டமிட்டார். ‘தங்களோடு விஜயகாந்த் சேர வேண்டும்’ என்று தி.மு.க விரும்பியது. ‘தே.மு.தி.க-வுடன் சேரலாம்’ என்று காங்கிரஸ் தலைமை விரும்பியது. அதாவது தமிழகத்தில் அ.தி.மு.க நீங்கலாக மூன்று முக்கியமான கூட்டணிகளும் விரும்பின. ஆனால், இந்த எதிர்பார்ப்பும் மரியாதையும் அடுத்து வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்துக்கு இருக்குமா என்பது கேள்விக்குறி.

ஏனென்றால், எட்டு சதவிகிதத்துக்கு மேல் வாக்கு வங்கியை வைத்திருந்த தே.மு.தி.க-வுக்கு, இந்த நாடாளுமன்றத் தேர்தல் 5.1 சதவிகித வாக்குகளையே அளித்திருக்கிறது. அதாவது 20 லட்சத்து 79 ஆயிரம் வாக்குகளை அந்தக் கட்சி வாங்கியுள்ளது. 5.5 சதவிகித வாக்குகள் பா.ஜ.க. வாங்கியுள்ளது. பா.ம.க. பெற்ற வாக்குகள் 4.4 சதவிகிதம். ம.தி.மு.க. 3.5 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, இந்த மூன்று கட்சிகளுமே தே.மு.தி.க-வுடன் ஒப்பிடும்போது எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவான தொகுதிகளிலேயே போட்டியிட்டவர்கள்.

பா.ஜ.க 7 தொகுதிகளிலும் (8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும் நீலகிரி பா.ஜ.க. வேட்பாளரின் சொதப்பல் காரணமாக, அங்கு அந்தக் கட்சி போட்டியிடவில்லை!) பா.ம.க 8 தொகுதிகளிலும், ம.தி.மு.க 7 தொகுதிகளிலும்தான் போட்டியிட்டன. அதாவது மிகக் குறைவான தொகுதிகளில் போட்டியிட்ட இந்தக் கட்சிகளைவிட, 14 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க கொஞ்சம்தான் கூடுதலாகப் பெற முடிந்தது. அந்தக் கட்சிக்கு வாக்காளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நம்பிக்கை இன்மையை இது காட்டுகிறது.

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தில் உள்ள தே.மு.தி.க, தன்னுடைய பங்களிப்பை சட்டமன்றத்திலும் சரியாகச் செய்யவில்லை; மக்கள் மன்றத்திலும் செய்யவில்லை. அ.தி.மு.க-வுடன் முரண்பட்ட பிறகு, விஜயகாந்த் சபைக்கு வருவதையே தவிர்த்துவிட்டார்; வந்தாலும் அவரைப் பேசவிடுவது இல்லை. அ.தி.மு.க-வினர் கூட்டமாகச் சேர்ந்து கூச்சல் போட்டு அவரைக் கிண்டல் செய்கிறார்கள் என்பது உண்மைதான். அதற்காக சபைக்குப் போகாமல் இருப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்?

‘சட்டசபை செத்துவிட்டது’ என்று சொல்லி, தி.மு.க ஆட்சியில் அதை மக்கள் மன்றத்தில் பிரச்னை ஆக்கினார் எம்.ஜி.ஆர். அதைக்கூட செய்யவில்லை விஜயகாந்த். மின்சாரம், குடிநீர், சட்டம்-ஒழுங்கு என்று தமிழகத்தில் நித்தமும் பிரச்னை இல்லாத நாளே இல்லை. அது சம்பந்தமாக தீவிரப் போராட்டங்கள் நடத்தினாரா என்றால், அதுவும் இல்லை. ஷூட்டிங் இருந்தால் வெளியில் வருவது மாதிரி, தேர்தல் நேரத்தில் மட்டும் வெளியில் வந்தார். அதுதான் அவரது வாக்கு வங்கியைக் குலைத்திருக்கிறது; சறுக்கலைச் சந்தித்தது. இது முதலாவது அடி!

அடுத்ததாக, கூட்டணி பற்றிய முடிவை அறிவிக்க சவ்வு மிட்டாய் மாதிரி இழுத்தது. டிசம்பர் 5-ம் தேதி விஜயகாந்த், தமிழருவி மணியன் சந்திப்பு நடந்தது. அன்றே, ‘பா.ஜ.க-வுடன் கூட்டணிக்குத் தயார்’ என்று விஜயகாந்த் தனது சம்மதத்தைத் தெரிவித்துவிட்டார். ‘எல்லாக் கட்சிகளையும்விட எனக்குத்தான் அதிக சீட்’ என்றார். அந்த வாக்குறுதியும் ஓ.கே. செய்யப்பட்டது பா.ஜ.க தலைமையால். ஆனால், கூட்டணியை அவர் மார்ச் இரண்டாவது வாரம் வரை உறுதி செய்யாமல் இழுத்தடித்தார். பிப்ரவரி 8-ம் தேதி சென்னையில் மோடியின் கூட்டம். அங்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் மேடை ஏறுவதாகத் திட்டம்.

 

பிப்ரவரி 2-ம் தேதி உளுந்தூர்பேட்டையில் ஊழல் எதிர்ப்பு மாநாடு நடத்தினார் விஜயகாந்த். அதில், அறிவித்துவிட்டு பிப்ரவரி 8-ம் தேதி மோடி மேடையில் பங்கேற்பதாக வாக்குறுதியும் தந்துள்ளார். ஆனால் உளுந்தூர்பேட்டையில் என்ன சொல்ல வருகிறோம் என்றே தெரியாமல் சொதப்பி, கட்சித் தொண்டர்களையே கிறுகிறுக்க வைத்தார். இந்தக் குழப்பம் மார்ச் 20-ம் தேதி வரைக்கும் நீடித்தது.

ஒரே நேரத்தில் மூன்று கூட்டணிக்காரர்கள் இவரை எதிர்பார்ப்பது பெருமைதான். ஆனால், ஒரே நேரத்தில் மூன்று கூட்டணிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் காண்பித்து, ஒவ்வொருவரையும் ஏமாற்றுவது எந்தத் தலைமைக்கும் அழகு அல்லவே. இது அவரது இமேஜை சறுக்கியது. தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் மட்டுமல்ல… பொதுமக்கள் மத்தியிலும் விஜயகாந்த் மீது எரிச்சல் ஏற்படுத்துவதாக இது அமைந்திருந்தது. இது இரண்டாவது அடி!

மூன்றாவதாக, கூட்டணித் தலைமையை பா.ஜ.க-விடம் கொடுத்திருக்க வேண்டும் விஜயகாந்த். இது நாடாளுமன்றத் தேர்தல். நரேந்திர மோடியா, ராகுலா என்று இழுபறியில் இருக்கும் தேர்தலை தன்னுடைய தலையில் தேவை இல்லாமல் போய் தாங்கினார் விஜயகாந்த். 14 என்பதை 1+4=5 என்ற தன் ராசிக்கான அர்த்தத்தில் கேட்டாரே தவிர, தனக்கு செல்வாக்கான 14 தொகுதிகளையும் வாங்கிவிட வேண்டும் என்ற தவிப்பில் கேட்கவில்லை. பா.ம.க-வும் ம.தி.மு.க-வும் குறிப்பிட்ட சில தொகுதிகள்தான் வேண்டும், அதில் குறிப்பிட்ட தங்கள் கட்சித் தலைவர்கள்தான் போட்டியிடப் போகிறார்கள் என்று சொல்லிக் கேட்டதைப் போல, விஜயகாந்தால் கேட்க முடியவில்லை. சுதீஷைத் தவிர மாநிலம் அறிந்த பிரபலம் யாரும் தேர்தல் களத்தில் இல்லை. வாங்கிய தொகுதிகளில் வாழும் மனிதர்களை வேட்பாளர்களாக ஆக்கினார். அதனால்தான் கூட்டணியில் மற்ற கட்சிகளைவிட குறைவான வாக்குகளை தே.மு.தி.க வேட்பாளர்கள் பெற்றார்கள். மாவட்டம் அறிந்தவர்களை மாவட்டப் பொறுப்புக்கும், மாநிலம் அறிந்தவர்களை மாநிலப் பொறுப்புக்கும் நியமிக்காமல் கட்சியை வளர்க்க முடியாது. இதில் அ.தி.மு.க-வுடன் யாரும் தங்களை ஒப்பிடக் கூடாது. அது இரட்டை இலையில் சவாரி செய்யும் வரை எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், எவரை வேண்டுமானாலும் நிறுத்தி ஜெயிக்க வைக்கும் மாய சக்தி இன்னும் முரசு சின்னத்துக்கு கைகூடவில்லை. இது மூன்றாவது அடி!

இந்த மூன்று முக்கியமான காரணங்கள்தான் அந்தக் கட்சியின் பின்னடைவுக்குக் காரணம்.

அதே நேரத்தில் தமிழகத்தில் கூட்டம் கூட்டும் தலைவராக விஜயகாந்த் மிளிர்ந்து வருகிறார் என்பதை இந்தத் தேர்தலும் காட்டிவிட்டது. அவரது பிரசாரப் பேச்சைக் கேட்க அணி அணியாக மக்கள் காத்திருந்தார்கள். ஜெயலலிதா 37 தொகுதிகளில் ஜெயிக்கலாம். ஆனால், அவரது கூட்டத்துக்கான தொண்டர்கள், பேருந்துகளில் மாவட்டச் செயலாளர்கள், மந்திரிகள் மூலமாக அழைத்து வரப்பட்டார்கள். ஒரு தொகுதிகூட வெற்றி பெறாவிட்டாலும் ஸ்டாலினுக்கும் கூடிய கூட்டம் அதிகம். இவர்கள் கூட்டங்களில் எந்தப் பரபரப்பும் பதட்டமும் இல்லை. ஆனால், விஜயகாந்துக்கு வந்தவர்கள் தள்ளுமுள்ளுவில் தவித்தார்கள்.

அவரது பேச்சு, மக்கள் மொழியில் இருந்தது. அலங்கார வார்த்தைகள், அடுக்குமொழிகள், ஆதாரங்களின் அணிவகுப்பு என்று இல்லாமல், அடித்தட்டு மக்களுக்குப் புரியும் வகையில் இருந்தது. நகர்ப்புற மக்கள் மட்டும் அறிந்திருந்த நரேந்திர மோடியின் பெயரை கிராமப் பகுதிகளிலும் கொண்டுபோய் சேர்த்தவர் விஜயகாந்த் தான்.

தே.மு.தி.க-வுக்கு 14 தொகுதிகள் தந்ததற்கு வருத்தப்பட்ட ஒரு பா.ஜ.க. தலைவர், விஜயகாந்தின் பிரசாரத்தைப் பார்த்து, ‘அவருக்கு 14 சீட் கொடுத்தது தவறே இல்லை’ என்றார். அதனால்தான் நரேந்திர மோடியை பிரதமராகவும் கூட்டணிக் கட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சிக்கு விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் ஆகிய மூவரும் அழைக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டார்கள். விஜயகாந்த்தை இழுத்து கட்டியணைத்து கன்னத்தைத் தடவி பாசத்தில் நெக்குருகிவிட்டார் மோடி. பிரேமலதாவை அனைவருக்கும் அறிமுகம் செய்துவைத்தார் மோடி. விஜயகாந்த் பிரசாரத்தின் முக்கியத்துவத்தை மோடி உணர்ந்ததன் அடையாளம் இது.

‘தேர்தல் தோல்வியைக் கண்டுகொள்ளாமல் இதே கூட்டணியில் தொடர்வதே இப்போதைக்கு நல்லது!’ என்பதே விஜயகாந்தின் இப்போதைய முடிவு. அவரைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா, ம.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளோடும் எந்த முட்டல் மோதல் முரண்பாடும் இல்லை. சிக்கல் பா.ம.க-வுக்கும் அவருக்கும்தான். அதில்கூட பா.ம.க-வுடன் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தவரை அனைத்தையும் தேர்தல் நேரத்தில் செய்தார். டாக்டர் ராமதாஸை சந்திக்க முயற்சி எடுத்தார். பா.ம.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். ‘மாம்பழத்துக்கு வாக்களியுங்கள்’ என்றார். ‘தே.மு.தி.க-வும் பா.ம.க-வும் இரட்டைக் குழல் துப்பாக்கியாகச் செயல்படும்’ என்று பிரேமலதா ஒரு கூட்டத்தில் சொன்னார். அன்புமணியுடன் அதிகமான நட்பை சுதீஷ் வெளிப்படுத்தினார். ஆனால், ராமதாஸ்தான் கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை.

‘அன்புமணியின் பா.ம.க இந்தக் கூட்டணியை ஆதரிக்கிறது. ராமதாஸின் பா.ம.க. இந்தக் கூட்டணியை ஏற்கவில்லை’ என்று சொல்லும் அளவுக்கு நடந்துகொண்டார் ராமதாஸ். எனவே, பா.ம.க-வுடன் இணைந்து செல்ல முடியும் என்ற நம்பிக்கை விஜயகாந்துக்கு இல்லை. தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு மாற்றான ஓர் அணியை தன்னுடைய தலைமையில் அல்லாமல், தன்னோடு சேர்ந்து உருவாக்க விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடும் முடிவை ஜெயலலிதா எடுத்தால் இன்னும் சில கட்சிகள் இந்த அணியோடு கைகோக்கலாம். ‘மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கும் பா.ஜ.க-வுடன் ஐக்கியமாகப்போவதுதான் சரியானது’ என்றும் விஜயகாந்த் நினைக்கிறார். அவரது அடுத்தகட்ட செயல்பாடுகள் இந்த அடிப்படையில்தான் அமையும் எனத் தெரிகிறது.

ஆனால், மக்கள் தீர்ப்பின் உண்மையான அர்த்தத்தை விஜயகாந்த் உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே, அவரின் அரசியல் எதிர்காலம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும்!

%d bloggers like this: