தமிழகத்திற்கு ரூ.3.54 லட்சம் கோடி தேவை: பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தல்

Jayalalithaa Meets PM Narendra Modi in Delhi

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று, டில்லியில் சந்தித்து, 64 பக்கங்கள் கொண்ட, கோரிக்கை மனு கொடுத்தார். அதில் தமிழக வளர்ச்சிப் பணிகளுக்கு, 3.54 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கும்படி கோரியுள்ளார்.
மனுவில் அவர் கூறியிருப்பதாவது:


*மாநிலங்களுக்கு இடையே மின்சாரம் கொண்டு வர, தேவையான மின் தடங்களை உருவாக்க, 2,250 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்.
*அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க, மத்திய அரசு பங்காக, 284.95 கோடி ரூபாய் வழங்க வேண்டும். இதுவரை 57 கோடி ரூபாய் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மீதி பணத்தை, விரைவாக வழங்க வேண்டும்.
*போலீஸ் துறையை நவீனப்படுத்த, 10 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும்.
*சென்னையில் திருவொற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நீட்டிப்புக்கு, 3,253 கோடி ரூபாய்; மெட்ரோ ரயில் இரண்டாம் திட்டத்திற்கு, 36,100 கோடி ரூபாய் தேவை.
*தமிழகத்தில், ரயில்வே கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, ‘2023 தொலைநோக்கு திட்டம்’ 15 லட்சம் கோடி ரூபாய் தேவை. முக்கியமாக, 10 ரயில்வே திட்டங்களை மேம்படுத்த, 1.88 லட்சம் கோடி ரூபாய் தேவை.
*சென்னை பெங்களூரு விரைவு சாலை, சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை, எட்டு வழிச் சாலையாக மாற்றுவது; மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி விமான நிலையங்களை மேம்படுத்த, 21,320 கோடி ரூபாய் தேவை.
*துறைமுகங்களை இணைக்கும் சாலை, மாநிலங்களை இணைக்கும் சாலைகளுக்கு நிலம் கையகப்படுத்த, 12 ஆயிரம் கோடி ரூபாய் தேவை.
*தமிழ்நாடு அரசு கேபிள் ‘டிவி’ கார்ப்பரேஷனுக்கு, டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
*தமிழக உயர்நீதிமன்றத்தில், தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*நெய்யாறு அணையில் இருந்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி, கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
*தமிழகத்தில், அத்திகடவு அவினாசி வெள்ள நீர் கால்வாய் இணைப்புக்கு, 1,862 கோடி ரூபாய்.
*பெண்ணையாறு பாலாறு இணைப்புக்கு, 500 கோடி ரூபாய்; காவிரி வைகை குண்டாறு இணைப்புக்கு, 5,166 கோடி ரூபாய்.
*தமிழகத்தில் உள்ள, 32 ஆயிரம் கட்டு மரங்களை மோட்டார் படகுகளாக மாற்ற, ஆண்டுக்கு குறைந்தபட்சம், 9 கோடி ரூபாய்.
*ராமநாதபுரம் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில், ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு தேவையான, உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள, 420 கோடி ரூபாய்.
*மீன்பிடித் துறைமுகங்களை ஆழப்படுத்த, 1,520 கோடி ரூபாய் தேவை. எனவே, ஆண்டுக்கு, 10 கோடி ரூபாயாவது ஒதுக்க வேண்டும்.
*காவிரி கால்வாய்களை நவீனப்படுத்த, 11,421 கோடி ரூபாய் வழங்க வேண்டும்.
*இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

நிதி பற்றாக்குறை

*மத்திய அரசிடம் இருந்து, பல திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி வராமல் உள்ளது. அதை வழங்க வேண்டும்.
*13வது நிதிக்குழு, தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 1,888 கோடி ரூபாய் வழங்க பரிந்துரைத்தது. ஆனால், 2013 14 வரை, 125 கோடி ரூபாய் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
*தமிழகத்தில், ஐந்து வெள்ள தடுப்பு பணிகளுக்கு மத்திய அரசு பங்கான, 388.08 கோடி ரூபாயை வழங்க வேண்டும்.
*சாலைகள், பாலங்களை சீரமைக்க, குடிசைப்பகுதி மேம்பாடு, கடற்கரை பாதுகாப்பு, மாற்றத்தக்க எரிசக்தி, ஆகியவற்றுக்கு, மத்திய அரசு வழங்க வேண்டிய, 1576.87 கோடி ரூபாயை, விரைவாக ஒதுக்க வேண்டும்.
*முதியோர் உதவித் தொகையை, மத்திய அரசு, 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.
*மத்திய அரசு திட்டங்களில், பயனாளிகள் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பு விதிப்பதை நீக்க வேண்டும்.
*சரக்கு மற்றும் சேவை வரி கொள்கையை, மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
*உரக் கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். விவசாயிகளுக்கு உரிய நேரத்தில், உரம் கிடைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*பொது வினியோக திட்ட சர்க்கரை கொள்முதல் கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
*தமிழகத்திற்கு, 65,140 லிட்டர் மண்ணெண்ணெய்யை வழங்க வேண்டும்.
*அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கப்படும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதை, திரும்பப் பெற வேண்டும்.
*மத்திய அரசு துறைகளின் நிலத்தை கையகப்படுத்த, ‘நிலத்திற்கு நிலம்’ கொள்கையை மாற்ற வேண்டும்.
*தமிழக மருத்துவக் கல்லூரிகளில், மாணவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த, அனுமதி அளிக்க வேண்டும்.
*தேசிய முதலீடு மற்றும் உற்பத்தி மண்டலம் அமைக்க, 5,000 எக்டேர் தேவை என்ற விதியை தளர்த்த வேண்டும்.
*அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ், பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, 570.18 கோடி ரூபாயை வழங்க வேண்டும்.
*எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில், 35 சதவீத மதிப்பெண் எடுத்தாலே, பொறியியல் கல்லூரிகளில் சேர்க்க அனுமதிக்க வேண்டும்.
*பொது மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவை, திரும்பப் பெற வண்டும்.
*பஹ்ரைன் நாட்டில் இருந்து, தமிழகம் வர விரும்பும், 18 மீனவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*நகர்ப்புற உள் கட்டமைப்பு வசதிக்கு, 1,250 கோடி ரூபாய்; 117 நகராட்சி மற்றும் 516 பேரூராட்சிகளில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த, 20,820 கோடி ரூபாய் தேவை.

%d bloggers like this: