மிஸ்டர் கழுகு: முப்பெரும் விழாவில் முடிசூட்டல்!

அறிவாலயத்தில் இருந்து பறந்து வந்தார் கழுகார்!

”கடந்த இரண்டு வாரங்களாக கொதிநிலையில் இருக்கிறது தி.மு.க. அதற்கு இன்னும் கூடுதலாக எண்ணெய் வார்த்துவிட்டார் கருணாநிதி” என்றபடி உள்ளே நுழைந்தார் கழுகார்.

”தேர்தல் தோல்விக்குப் பிறகு தி.மு.க-வில் ஏராளமான பரபரப்புகள் தொற்றிக்கொண்டுவிட்டன. தான் வகித்துவந்த கட்சிப் பதவியை ராஜினாமா செய்வதாக ஸ்டாலின் அறிவிப்பு செய்தார். இதனால் கருணாநிதிக்கும் அவருக்குமே பேச்சுவார்த்தைகள் சகஜமாக இல்லை. இதற்குத்தான் காத்திருந்தார் என்பதைப்போல, அழகிரி மீடியாக்களில் பொங்கித் தீர்த்தார். இந்த நிலையில் தி.மு.க உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் ஜூன் 2-ம் தேதி நடக்கும் என்று அன்பழகன் அறிவித்தார். ‘நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆராய்ந்திடவும் எதிர்காலத்தில் கழகத்தின் வலிமையையும் வளர்ச்சியையும் மேலும் பெருக்குவதற்கேற்ப நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து முதல் கட்டமாக ஆலோசனை செய்து முடிவுகளை எடுத்திடவும் இந்தக் கூட்டம்’ என்று அன்பழகன் வெளிப்படையாக அறிவித்திருந்தார். உயர்நிலை செயல்திட்டக் குழுவில் அன்பழகன், ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள் ஆகியோருடன் முன்னாள் அமைச்சர்கள் இடம்பெற்று இருப்பார்கள். கனிமொழி, தயாநிதி, ஆ.ராசா ஆகியோரும் உண்டு. இந்தக் கூட்டம் அறிவிக்கப்பட்டதுமே மாவட்டச் செயலாளர்கள்தான் அதிகமான பீதிக்கு உள்ளானார்கள்!”

”மாவட்டச் செயலாளர்கள் பற்றி கருணாநிதி முன்பு சொன்னதை நீர் சொல்லியிருக்கிறீர்?’

”ஆமாம்! ‘மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரை செய்தவர்களைத்தான் வேட்பாளர்களாகப் போட்டோம். அவர்கள் தகுதி வாய்ந்தவர்களாக இல்லை. மாவட்டச் செயலாளர்கள் கட்சிக்காக உழைக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், அவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களைக் கொண்ட கோஷ்டி அரசியலைத்தான் செய்கிறார்கள். அது எப்படிச் சரியாகும்? எந்தத் தனி நபரையும் நம்பி கட்சி இருக்கக் கூடாது. மாவட்டச் செயலாளர்களை மாற்றிவிட்டு புதியவர்களை, சிறப்பாக செயல்படுபவர்களை அந்தப் பதவிக்குப் போடலாம்’ என்று கருணாநிதி சொல்ல ஆரம்பித்தார். அதனை துரைமுருகன் உள்ளிட்ட சிலர் ஆதரித்ததாகவும் கூறப்படுகிறது. இது மாவட்டச் செயலாளர்கள் யாருக்கும் பிடிக்கவில்லை. குறிப்பாக ஸ்டாலினே இதனை விரும்பவில்லை.

 

‘மாவட்டத்தில் அதிக செல்வாக்கு படைத்தவர் எவரோ அவரைத்தான் மாவட்டச் செயலாளராகப் போட்டுள்ளோம். அவர்கள் பேச்சையே கட்சிக்காரர்கள் கேட்கவில்லை என்றால், மற்றவர்கள் பேச்சை எப்படி கேட்பார்கள்? பணம் வசூல் செய்து கூட்டங்களோ, மாநாடோ நடத்த முடிகிறவர்களாகப் பார்த்துத்தான் மாவட்டச் செயலாளர்களாக நியமித்துள்ளோம். அப்படிப்பட்டவர்களை பதவியில் இருந்து நீக்கினால், கட்சி இன்னும் பின்னடைவைத்தான் அடையும். மேலும், தேர்தல் தோல்வி அடைந்த நேரத்தில் இந்த அதிரடி மாற்றத்தைச் செய்தால், கட்சியே கலகலத்துப்போகும்’ என்று ஸ்டாலின் தடை போட்டார். அதனால் அடுத்த கட்டத்துக்கு தன்னுடைய சிந்தனையை கருணாநிதியால் நகர்த்த முடியவில்லை. ‘மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் ஸ்டாலின் ஆட்கள். அதனால்தான் அவர்களைக் காப்பாற்றுகிறார்’ என்று சிலர் சொன்னார்கள். ‘நான் யாரையும் மாற்றவே கூடாது என்று சொல்லவில்லை. அவசரம் வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்’ என்றாராம் ஸ்டாலின். இவை அனைத்தும் கருணாநிதி கவனத்துக்குப் போனது. கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் இதே வாதப் பிரதிவாதங்கள் நடந்தன.”

”ம்!”

”இதற்கு மத்தியில் ஸ்டாலின் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் சென்னையில் குவிய ஆரம்பித்தனர். அவர்கள் ஸ்டாலினைச் சந்தித்துவந்தனர். ‘தளபதிக்கு முழு அதிகாரம் கொடுத்தால் மட்டுமே கட்சியைக் குழப்பம் இல்லாமல் கொண்டுபோக முடியும்’ என்று இவர்கள் சொல்லிவந்தார்கள். கட்சியில் தன்னைத் தவிர குடும்ப உறுப்பினர்கள் யாரும் பங்கேற்கக் கூடாது என்று ஸ்டாலின் சொல்லிவந்ததை முன்பே சொல்லியிருக்கிறேன். ‘கனிமொழி, தயாநிதி ஆகியோர் ஒதுங்கி இருக்க வேண்டும்’ என்பதும் ஸ்டாலினின் எண்ணம். மேலும், ஆ.ராசா அரசியல் பங்கேற்புகளில் இடம்பெறாமல் இருப்பது நல்லது என்பதும் அவரது எண்ணமாம். இதனை அவரால் கருணாநிதியிடம் சொல்லவும் முடியவில்லை; தடையும் போட முடியவில்லை. இப்படி தேர்தல் தோல்விக்கு மாவட்டச் செயலாளர்கள் காரணம் என்று கருணாநிதி நினைக்க, குடும்ப உறுப்பினர்கள்தான் காரணம் என்று ஸ்டாலின் சொல்ல… முடிவெடுக்க முடியாமல் இருவருமே தவித்தார்கள்.

இதற்கு மத்தியில் குடும்ப உறுப்பினர்கள் சிலரே அழகிரியிடமும் பேசியிருக்கிறார்கள். அவர், ‘கட்சியில் மிகப்பெரிய களையெடுப்பு நடக்க வேண்டும். மதுரைக்கு அந்தப் பக்கம் போட்டியிட்ட வேட்பாளர்களில் மதுரை வேலுச்சாமி, தூத்துக்குடி ஜெகன் ஆகிய இருவர் மட்டும்தான் கட்சிக்காரர்கள். தேனி பொன்.முத்துராமலிங்கம், சிவகங்கை துரைராஜ், திண்டுக்கல் காந்திராஜன், கன்னியாகுமரி ராஜரத்தினம் ஆகியோர் வேறு கட்சியில் இருந்து வந்தவர்கள். விருதுநகர் ரத்தினவேல், நெல்லை தேவதாச சுந்தரம், ராமநாதபுரம் ஜலீல் ஆகிய மூவரும் கட்சிக்காரர்களே அல்ல. இப்படிப்பட்ட ஆட்களை வேட்பாளர்களாகப் பரிந்துரைத்தவர்களை பதவியை விட்டு நீக்காமல், கட்சியை வளர்க்க முடியாது. இதைச் செய்யாமல் உயர்நிலைக் குழு, பொதுக்குழு, செயற்குழு கூடுவதால் எந்தப் பயனும் இல்லை’ என்று சொல்லி அனுப்பினாராம். ‘தலைவரை வந்து பாருங்கள்’ என்று சொல்லி அழைத்துள்ளார்கள். வர மறுத்துவிட்டாராம் அழகிரி. தயாளு அம்மாள், அழகிரியிடம் பேசியதாகவும் சொல்கிறார்கள். ‘ஒரு மாதம் ஆகிவிட்டது, உன்னைப் பார்த்து’ என்றாராம் தயாளு. ‘தலைவர் பிறந்த நாள் எல்லாம் முடிந்த பிறகு வருகிறேன்’ என்று சொன்னாராம் அழகிரி.”

”உயர்நிலை செயல் திட்டக்குழுவில் என்ன நடந்ததாம்?”

”கருணாநிதி அதிரடியாக எந்த அறிவிப்பையும் செய்துவிட மாட்டார் என்று இருந்தாலும், ஆக்ரோஷமாக எதையாவது பேசிவிடுவார் என்று பயந்துள்ளார் ஸ்டாலின். அதனால், இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தனது ஆதரவுப் பிரமுகர்களிடம் எதுவும் பேச வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். ‘அவரே தலைவராகத் தொடரட்டும். எனக்கு எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை’ என்று சில நாட்களாக ஸ்டாலின் பேச ஆரம்பித்ததும் கருணாநிதி காதுக்குப் போனது. ‘ஸ்டாலின் கையில் முழுப் பொறுப்பை இப்போது கொடுத்தால், தூங்கிக்கொண்டிருக்கும் அழகிரியை தேவையில்லாமல் தட்டி எழுப்பியதாகிவிடும்’ என்றும் கருணாநிதி பயந்தார். அதே நேரத்தில் மாவட்டச் செயலாளர்களுக்கு செக் வைக்க நினைத்தார் கருணாநிதி. அதற்கான தீர்மான வாசகங்களை அவரே மனதுக்குள் எழுதியபடிதான் இந்தக் கூட்டத்துக்கே கருணாநிதி வந்தார். காலை 10 மணிக்கு கூட்டம் என்று அறிவிக்கப்பட்டது. ஒன்பதரை மணிக்கே ஸ்டாலின் வந்துவிட்டார். அடுத்து பேராசிரியர் அன்பழகன் வந்தார். கனிமொழியும் தயாநிதியும் வந்துவிட்டார்கள். கருணாநிதியின் வருகைக்காக அவர்கள் இருவரும் காத்திருந்தார்கள். சுமார் 40 நிமிடங்கள் தாமதமாக கருணாநிதி வந்தார். ‘எந்தக் கூட்டமாக இருந்தாலும் தலைவர் நேரம் தவற மாட்டார். ஆனால் ஏனோ இந்தக் கூட்டத்துக்கு மனசு இல்லாதவர் மாதிரி தாமதமாக வந்தார்’ என்று சொல்கிறார்கள். துரைமுருகன், பொன்முடி, ஆ.ராசா ஆகியோர் கருணாநிதியின் வாகனத்தில் உடன் வந்தார்கள். கூட்டம் ஆரம்பித்து ஒரு மணி நேரம் கழித்துதான் திண்டுக்கல் பெரியசாமி வந்தார். விமானத்தில் வந்தாராம். அதனால் தாமதம் என்கிறார்கள். ஒரு மணி நேரம் உட்கார்ந்துவிட்டு அதற்கு மேல் உட்கார முடியாமல் புறப்பட்டுப் போய்விட்டார் கோ.சி.மணி.”

”வயது முதிர்ந்த நிலையில் அவர் வந்ததே பெரிய விஷயம்தானே?”

”எல்லோரையும் இரண்டு இரண்டு நிமிடங்கள் பேசச் சொல்லியிருக்கிறார் கருணாநிதி. முக்கியமான ஆட்கள் சொன்னதன் சாராம்சம் மட்டும் சொல்கிறேன். ‘நமக்கு கூட்டணி பலம் இல்லை. அதனால்தான் தோற்றோம்’ என்று துரைமுருகன் சொல்ல, ‘அ.தி.மு.க கூட்டணியா வைத்திருந்தது? தனித்துதானே நின்றது. அவர்கள் ஜெயிக்கவில்லையா?’ என்று எதிர்கேள்வி போட்டுள்ளார் கருணாநிதி. ‘சரியில்லாத மாவட்டச் செயலாளர்களை மாற்றிவிடுங்கள். ஒரு கால எல்லை வைத்திருந்து மாவட்டச் செயலாளர்களை மாற்ற வேண்டும்’ என்றும் துரைமுருகன் சொல்லியிருக்கிறார். அப்போது குறுக்கிட்ட கே.என்.நேரு, ‘நன்றாக வேலை பார்க்கும் மாவட்டச் செயலாளர்களையும் நீக்கிவிடுவீர்களா? தலைவர் விரும்புகிறவர்கள் மாவட்டச் செயலாளராக இருக்கட்டுமே. அவர் விரும்பாதவர்களை நீக்கட்டும்’ என்று சொல்லியிருக்கிறார். ‘மூத்த உறுப்பினர்கள் கட்சியின் வளர்ச்சிக்கு செயல்பட வந்துவிடட்டும். இதனை கே பிளான் மாதிரி அறிவிக்க வேண்டும்’ என்றும் துரைமுருகன் சொல்லியிருக்கிறார். ‘தேர்தல் கமிஷன் வைத்திருந்த ஓட்டிங் மெஷினில் தகிடுதத்தம் செய்துவிட்டார்கள். அதில் ஏதோ தவறுதல் இருக்கிறது. எனவே, தேர்தல் கமிஷன் செயல்பாடுகளை நாம் கேள்வி கேட்க வேண்டும்’ என்று சொன்னாராம் முன்னாள் அமைச்சர் பொன்முடி. ‘அதனை நான் ஏற்கவில்லை’ என்றாராம் டி.கே.எஸ்.இளங்கோவன். ‘அப்படி அனைத்து மெஷினிலும் ஏதாவது செய்ய முடியும் என்பதை நம்ப முடியாது. அந்தக் காரணத்தைச் சொன்னால் மக்கள் நம்ப மாட்டார்கள்’ என்றும் டி.கே.எஸ்.இளங்கோவன் சொல்லியிருக்கிறார். பெ.வீ.கல்யாணசுந்தரம், ‘இதே குற்றச்சாட்டை ஜெயலலிதா சொன்னார். அப்போது நாம் இதனை மறுத்துச் சொன்னோம். இப்போது அதே குற்றச்சாட்டை நாம் சொல்ல முடியாது’ என்று சொல்லியிருக்கிறார். ஓட்டிங் மெஷின் பற்றிய சந்தேகங்களை வைத்து தீர்மானம் போடலாம் என்று சொன்னபோது தயாநிதிமாறன், ‘அதுபோன்ற தீர்மானம் வேண்டாம்’ என்று சொன்னாராம். முன்னாள் அமைச்சர் நேரு, நீண்ட உரை ஆற்றி இருக்கிறார்.”

”என்னவாம்?”

”நேரு பேசும்போது, ‘தேர்தல் தோல்விக்கு மாவட்டச் செயலாளர்கள்தான் முழுப் பொறுப்பு என்று சொல்லிவிட முடியாது. மாவட்டச் செயலாளர்கள் மீது தவறு இருந்தால் நடடிக்கை எடுங்கள். ஆனால், விசாரித்து நடவடிக்கை எடுங்கள். சில இடங்களில் கிளை, ஒன்றியப் பொறுப்பாளர்கள் சரியாக வேலை பார்க்கவில்லை. கட்சித் தேர்தலில் போட்டி இருப்பதால்தான் யாரும் சரியாக வேலை செய்ய மாட்டேன் என்கிறார்கள். எனவே, ஒன்றியச் செயலாளர்களை தேர்தல் இல்லாமல் நியமனம் செய்யலாமா என்று யோசிக்க வேண்டும். ஆட்சி அதிகாரம் அவர்கள் கையில் இருக்கிறது. போலீஸ், தேர்தல் கமிஷன் ஆகியவற்றை வைத்து இந்த வெற்றியை வாங்கிவிட்டார்கள்’ என்று சொல்லியிருக்கிறார். ‘பணத்தால்தான் வென்றார்கள் என்றால் இவ்வளவு வாக்குகள் வித்தியாசம் எப்படி வந்தது?’ என்று கேட்டாராம் கருணாநிதி.

திருச்செந்தூர் ஜெயசீலன், ஏதோ தூத்துக்குடி அரசியல் சம்பந்தமாகப் பேசியிருக்கிறார். ராமநாதபுரம் சுப.தங்கவேலன், அண்ணா காலத்தில் இருந்து கருணாநிதி அரசியல் நடத்திவருவதை புகழ்ந்துள்ளார். ‘நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளை விடுங்கள். இனி நடக்கப்போகும் தேர்தலைப் பார்ப்போம். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு என்ன தீர்ப்பு வரும் என்பதைக் கவனிப்போம்’ என்று சொல்லியிருக்கிறார். நாமக்கல் துரைசாமி, பத்திரிகைகளில் வந்த செய்திகளை வைத்து வாதங்களை அடுக்கியிருக்கிறார். ’40 தொகுதிகளுக்கும் தனித்தனி பொறுப்பாளர்களை போட்டால்தான் கட்சியை வளர்க்க முடியும்’ என்று தயாநிதி மாறன் ஆலோசனை சொல்லியிருக்கிறார். சுப்புலட்சுமி ஜெகதீசன் வார்த்தைகளில் கோபம் இருந்துள்ளது.”

”என்ன மாதிரி?”

”தேர்தல் தோல்விக்குக் காரணம் என்ன என்பதை வேட்பாளர்களும் தொகுதி பொறுப்பாளர்களும் அறிக்கை தர வேண்டும் என்று சொல்லும் தீர்மானத்தை சுட்டிக்காட்டிய சுப்புலட்சுமி ஜெகதீசன், ‘யாரும் எழுதிக் கொடுத்துதான் தலைவருக்குத் தெரிய வேண்டுமா? தவறு யார் செய்துள்ளார்கள் என்று தெரிந்தால், உடனே தலைவர் நடவடிக்கை எடுக்கலாமே? ஏன் தயங்க வேண்டும்? அறிக்கை கேட்பார்கள்; ஆறப் போட்டுவிடுவார்கள் என்று கட்சிக்காரர்களுக்கே தெரிகிறது. அதனால்தான் யாருக்கும் பயம் இல்லை’ என்றாராம் அவர். அதனை அமைதியாகக் கேட்டுக்கொண்டாராம் கருணாநிதி.”

”ஸ்டாலின்?”

”குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவும் சொல்லவில்லை. ‘வேட்பாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் கொடுக்கும் அறிக்கையை வைத்து, உங்களுக்கு நம்பிக்கைக்குரிய இரண்டு மூன்று பேரை வைத்து பரிசீலனை செய்யுங்கள். அதன்மீது நடவடிக்கை எடுங்கள். நாங்கள் அதனை ஏற்றுக்கொள்வோம்’ என்று ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். கருணாநிதி அதனை தலையாட்டி ஏற்றுக்கொண்டாராம். ஒரு மணி நேரத்தில் கூட்டம் முடிந்து கருணாநிதி கிளம்பிவிட்டார். அதன் பிறகு ஸ்டாலின் உட்கார்ந்து இருந்தார். சும்மா பேசிக்கொண்டு இருந்துள்ளார். அவரைப் பொறுத்தவரை எந்த விவகாரமும் வெடித்துவிடாததும், கருணாநிதி கோபக் கருத்துகள் உதிர்க்காததும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.”

”தீர்மானங்களைப் பற்றிச் சொல்லும்!” 

”91-வது பிறந்தநாள் காணும் கருணாநிதிக்கு வாழ்த்து, நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த 96 லட்சம் பேருக்கு நன்றி, நாடாளுமன்றத் தேர்தலில் பிரசாரம் செய்த கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி ஆகியவை வழக்கமானவை. தேர்தல் ஆணையத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடைசி இரண்டு தீர்மானங்கள்தான் முக்கியமானவை. ‘மாவட்டக் கழக எல்லைகளை மாற்றி அமைத்து, மாவட்டக் கழக நிர்வாகங்களை எளிமையும் வலிமையும் படுத்துவது பற்றி ஆராய ஒரு குழு அமைக்கப்படும்’ என்று கருணாநிதி முடிவெடுத்துள்ளார். தேர்தலில் ஏன் தோற்றோம் என்பது பற்றி, வேட்பாளர்களும் தொகுதிப் பொறுப்பாளர்களும் தனித்தனியாக அறிக்கை தர வேண்டும். அதனை கருணாநிதியிடம் நேரில் வந்து தர வேண்டும் என்று சொல்லப்பட்டு உள்ளது. ‘தலைமைக்கு அனுப்ப வேண்டும்’ என்றுதான் இதுவரை சொல்வார்கள். இப்போது, தன்னிடம் நேரில் வந்து தர வேண்டும் என்று கருணாநிதி சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கது. ‘தலைமைக் கழகத்துக்கு அனுப்பிவைக்கப்படும் சில கடிதங்கள் தலைமையின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்படவில்லை என்ற புகார் உள்ளது. அதனால்தான் தலைவர் தன்னிடம் நேரில் தரச் சொல்லியிருக்கிறார்’ என்று சொல்கிறார்கள்.”

”மாவட்டக் கழக எல்லைகளை மாற்றி அமைப்பது என்றால்?”

”தமிழகத்தை இப்போது 34 மாவட்டக் கழகங்களாக தி.மு.க பிரித்து வைத்துள்ளது. அ.தி.மு.க-வோ 52 மாவட்டக் கழகங்களாக பிரித்து வைத்துள்ளது. அ.தி.மு.க-வைப் போலவே தி.மு.க மாவட்டக் கழகங்களும் எண்ணிக்கை கூடுதல் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதன்மூலமாக சில மாவட்டச் செயலாளர்களின் அதிகாரம் குறையும். சிலருக்கு, புதிய மாவட்டச் செயலாளர்களாக அந்தஸ்தும் கிடைக்கும். சென்னை இதுவரை வட சென்னை, தென் சென்னை என்று இருக்கிறது. இனி மத்திய சென்னை புதிய மாவட்டம் ஆகலாம். இதுபோல், விழுப்புரம், நெல்லை, வேலூர் உள்ளிட்ட பெரிய மாவட்டங்கள் இரண்டாகப் பிரிய வாய்ப்பு இருக்கிறது. மாவட்டச் செயலாளர் பதவிக்கு இனி தேர்தல் கிடையாது என்றும் அறிவிக்கப் போகிறார்களாம். அதாவது நியமனங்கள். வேலை செய்யும் ஒருவரை மாவட்டச் செயலாளராக வைத்திருக்கலாம், வேலையில் சுணக்கம் காட்டுபவரை உடனடியாக நீக்கம் செய்யலாம் என்பதே தலைமையின் திட்டம். இன்னும் சில நாட்களில் உட்கட்சித் தேர்தல் சம்பந்தமான அறிவிப்பு வரப்போகிறது. அது செப்டம்பர் மாதம் வரை நடக்கும். செப்டம்பர் 15-ம் தேதி முப்பெரும் விழாவை சென்னையில் கொண்டாடும்போது, பல்வேறு மாவட்டச் செயலாளர்களை மாற்றி, அதிகார ஆட்டம் போட்டவர்களின் ஆட்டத்தைக் குறைத்து, புதியவர்களுக்கு மாவட்டச் செயலாளர் அந்தஸ்தும் கொடுத்து கலகலப்பாக ஆக்க கருணாநிதியும் ஸ்டாலினும் திட்டமிட்டுள்ளனர். அதே தேதியில் ஸ்டாலினுக்கும் மகுடம் சூட்டப்படும்!”

”தலைவராகவா?”

”அதற்கு என்ன பெயர் என்பது கருணாநிதி கற்பனை வளம் சம்பந்தப்பட்டது” என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்.

%d bloggers like this: