வளைந்து கொடுக்கும் டாஸ்க்பார்

விண்டோஸ் சிஸ்டத்தில் அதிகம் பயன்படுத்தப்படாத பிரிவுகளில் ஒன்றாக டாஸ்க் பார் இருப்பதைப் பலர் சுட்டிக் காட்டியுள்ளனர். பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாட்டில், இதனை நம் விருப்பப்படி மாற்றி அமைத்து, ஒரு புதிய அனுபவத்துடன், விண்டோஸ் சிஸ்டத்தினை இயக்கலாம். அதற்கான இரண்டு வழிமுறைகளை இங்கு காணலாம். முதலாவதாக, திரையில் அதிக இடம் பெறும் வகையில், டாஸ்க் பாரினை மறைத்து வைத்து, தேவைப்படும் போது பெறுவது. இரண்டாவதாக, நாம் அதிகம் பிரியப்பட்டு பயன்படுத்தி வரும், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் தந்த வகையில், டாஸ்க் பாரினை அமைப்பது.
டாஸ்க் பார், நமக்கு திறந்து வைத்து இயக்கும் புரோகிராம்களுக்கிடையே எளிதாகச் சென்று வர உதவும் ஒரு டூலாகப் பயன்படுகிறது. நேரத்தை அறிய உதவுகிறது. சிஸ்டம் அறிக்கைகளைக் காண வழி தருகிறது. இதற்காக, நாம் பணி செய்யும் இடமான திரையில் இடத்தை வீணடிக்க வேண்டுமா என நீங்கள் எண்ணலாம். அப்படியானால், இதனை மறைக்க முடியுமா? முடியும். அப்புறம் தேவை என்றால், என்ன செய்வது? தேவை என்றால், பெறவும் முடியும். அதற்கான வழி என்ன?

விண்டோஸ் 7 சிஸ்டத்தில், டாஸ்க் பாரினை மறைப்பதனை, ஒரு சில கிளிக் மூலம் நிறைவேற்றலாம். இன்னும் சொல்லப்போனால், அதனை அங்கு வைத்திடாமல் நீக்கிவிட்டு, தேவைப்படும்போது மீண்டும் தோன்றும்படியும் அமைக்கலாம். விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 / 8.1 சிஸ்டங்களில் இதனை கீழே குறித்துள்ளவாறு செயல்பட்டு கொண்டு வரலாம்.
முதலில் டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர், காட்டப்படும் மெனுவில், Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு முதல் முதலாகக் கிடைக்கும் Taskbar என்ற டேப்பின் கீழாக, Autohide the taskbar என்று இருக்கும் இடத்தில் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தினை அமைக்கவும். தொடர்ந்து Apply மற்றும் OK கிளிக் செய்து வெளியேறவும். இந்த வேலைகளை மேற்கொள்கையில், உங்கள் டாஸ்க் பார் ஓரிரு முறை மறைந்து மீண்டும் வரலாம். இறுதியில், அது திரையின் கீழாகச் சென்று மறைந்துவிடும்.
டாஸ்க் பார் தேவை என்றால், மவுஸினை திரையின் கீழாக எடுத்துச் சென்றால், டாஸ்க் பார் மேலாக மீண்டும் வரும். விண்டோஸ் 8ல், டாஸ்க் பார் ஒளி ஊடுறுவும் நிலையில் காட்டப்படும்.
பழையபடி, தொடர்ந்து டாஸ்க் பார் காட்டப்பட வேண்டும் எனில், மேலே காட்டியபடி சென்று Autohide the taskbar என்ற இடத்தில் இருக்கும் டிக் அடையாளத்தை எடுத்துவிட வேண்டும்.
விண்டோஸ் எக்ஸ்பி டாஸ்க் பார் தான் தேவையா?
சிலர் இன்னும் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் பழகிப் போன டாஸ்க் பாரினையே வேண்டும் என விரும்புகின்றனர். இவர்களுக்கு விண்டோஸ் 7 சிஸ்டத்தில், அதனை எப்படிக் கொண்டு வருவது எனப் பார்க்கலாம். விண்டோஸ் 7 சிஸ்டத்தில், எத்தனை பைல்கள் ஒரு புரோகிராமினால் திறக்கபட்டிருந்தாலும், அவை அனைத்தும் ஒரு ஐகான் பட்டனில் இருக்கும். எடுத்துக்காட்டாக, நீங்கள் மூன்று வேர்ட் டாகுமெண்ட்டினைத் திறந்து இயக்கிக் கொண்டிருந்தால், அவை யாவும் ஒரு வேர்ட் ஐகான் பட்டனில் இருக்கும். மவுஸின் கர்சரைக் கொண்டு சென்றால், அவை ஒரு பட்டியலாகக் காட்டப்படும். நாம் தேவையானதைக் கிளிக் செய்திடலாம். இவ்வாறு ஒரு புரோகிராமிற்கு ஒரு பட்டன் அமைவது, நம் டாஸ்க் பாரினைத் தெளிவாக வைத்திட உதவும். ஆனால், சிலர் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் கிடைத்தது போல, ஒவ்வொரு டாகுமெண்ட்டிற்கும் ஒரு பட்டன் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.
புதிய விண்டோஸ் சிஸ்டங்களில் இதனைக் கொண்டு வர ஓர் எளிய வழி உள்ளது. இதற்கு டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties கிளிக் செய்திடவும். Taskbar டேப்பின் கீழாக Taskbar buttons செட்டிங் தேடவும். இந்த செட்டிங் வலது பக்கம் உள்ள கீழ்விரி மெனுவினைக் கிளிக் செய்திடவும். இங்கு Never combine, or Combine when taskbar is full என்பதனைக் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து Apply மற்றும் OK கிளிக் செய்து வெளியேறவும். இனி, எக்ஸ்பி சிஸ்டம் ஸ்டைலில், ஒவ்வொரு பைலுக்கும் ஒரு பட்டனுடன் டாஸ்க் பார் காட்சி அளிக்கும்.

%d bloggers like this: