விண்டோஸ் 8க்கான பயர்பாக்ஸ் இல்லை

மொஸில்லா நிறுவனம் விண்டோஸ் 8ல் இயங்கக் கூடிய பயர்பாக்ஸ் பிரவுசர் வடிவமைக்கும் திட்டத்தினைக் கை விட்டது. தொடு உணர் திரை மற்றும் மவுஸ் இயக்கங்களில் இயங்கக் கூடிய இரு வகை செயல்பாட்டினை ஒருங்கே கொண்ட பிரவுசரினைத் தயாரிக்கும் இலக்குடன், இத்திட்டத்தினைத் தொடங்கி, இரண்டு ஆண்டுகளாக மொஸில்லா உழைத்தது. ஆனால், முயற்சியில் வெற்றி அடைய முடியாமல், அதனை முடிவிற்குக் கொண்டு வந்துள்ளது. இது குறித்து பயர்பாக்ஸ் பிரிவின் துணைத் தலைவர் ஜொனாதன் நைட்டிங்கேல் குறிப்பிடுகையில் ""எங்களுடைய பொறியாளர்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டனர். ஆனால், வடிவமைப்பு தொடர்ந்து கவனம் தேவைப்படுவதாகவும், விரிவாக்கம் தேவைப்படுவதாகவும் இருந்ததால், அதனைக் கைவிட வேண்டியதாயிற்று” என்றார்.

2012ன் பிற்பகுதியில், மொஸில்லா, விண்டோஸ் 8க்கான பயர்பாக்ஸ் திட்டத்தினைத் தொடங்கிய போது, பிரவுசர் உலகில் இது ஒரு பெரிய போட்டிக்கான தளமாக அமைவதாக இருந்தது. இதில் செயல்படுகையில் தான், விண்டோஸ் என்பது மிகப் பெரிய இயக்க முறைமையினைக் கொண்டதாக உணர முடிந்தது. மைக்ரோசாப்ட் எந்த அளவிற்கு இதில் கடுமையாக உழைத்துள்ளது என்பதனையும் அறிய முடிந்தது. தொடக்கத்தில், இதில் நாம் தனிமைப்படுத்தப்படுவோம் என உணர்ந்தோம். பின்னர், மெட்ரோவின் கட்டமைப்பினை அறிந்து அதற்குள் சென்ற போது, பணியாற்றி வெற்றி காணலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. பின்னர், அதன் சோதனைத் தொகுப்பினை வழங்கியபோது, அந்த தொகுப்பினை ஆயிரம் வாடிக்கையாளர்கள் கூடப் பயன்படுத்தவில்லை என உணர்ந்தோம்.
இதற்கு முன்னர் மொஸில்லா எப்போது பயர்பாக்ஸ் பிரவுசரின் சோதனைப் பதிப்புகளை வெளியிட்ட போதும், ஏறத்தாழ பத்து லட்சம் பேர் அவற்றைப் பயன்படுத்தி, பயனுள்ள பின்னூட்டங்களைத் தந்து வந்தனர். எனவே, குறைவான பின்னூட்டங்கள் அடிப்படையில், முழுமையான இயக்கத்தினைத் தரும் பிரவுசரினைத் தரக் கூடாது என்ற முடிவில் இதனை முடிவிற்குக் கொண்டு வருகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி பயர்பாக்ஸ் பிரியர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவே அமைந்துள்ளது. தொடு உணர் திரையில் இயங்கும் பிரவுசர் எனில், இனி இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11 மட்டுமே செயல்பாட்டிற்குக் கிடைக்கும் என்றாகிவிட்டது.

ஒரு மறுமொழி

  1. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

%d bloggers like this: