மிஸ்டர் கழுகு: ”முன்கூட்டியே சட்டசபைத் தேர்தல்!”

‘கத்திரி முடிஞ்சாலும் அடிக்கிற அனல் இன்னும் குறையலையே…’ என்றபடி உள்ளே வந்தார் கழுகார்.

”வெயிலை மட்டும் சொல்லவில்லை; தே.மு.தி.க அனலையும் சேர்த்துதான் சொல்கிறேன்!” என்று லிங்க் பிடித்தபடி தொடங்கினார். ”தேர்தல் தோல்விக்குப் பிறகு கடந்த 4-ம் தேதி தே.மு.தி.க ஆலோசனைக் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள அந்தக் கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்டச் செயலாளர்களும் எம்.பி-க்கு போட்டியிட்ட 14 வேட்பாளர்களும் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். நிறைய பேசலாம் என்ற நினைப்புடன் வந்திருந்தார்கள் நிர்வாகிகள். ஆனால் அது நடக்கவில்லை. மறைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவுக்கு மௌன அஞ்சலி செலுத்தியதும், யாரையும் பேச விடாமல் மைக்கை வாங்கினார் விஜயகாந்த். ‘நடந்து முடிஞ்ச எலெக்ஷன்ல மாவட்டச் செயலாளர்கள் யாரும் தேர்தல் வேலையே பார்க்கலை. பல பேரு அ.தி.மு.க-காரங்க கொடுத்த காசுக்கு விலை போயிட்டீங்க. அது யார் யாருன்னு நான் இப்போ சொன்னா உங்களுக்குத்தான் அசிங்கம். நான் யாரைச் சொல்றேன்னு அவங்கவங்க மனசாட்சிக்குத் தெரியும். நீங்க யாரும் மக்களை சந்திக்கிறதே இல்லை. எல்லோரும் செல்போன் அரசியல் பண்ணிட்டு இருக்கீங்க. எங்கேயும் போகாமல் என்ன நடக்குதுன்னு போன்ல கேட்டா போதும்னு நினைக்கிறீங்க’ என்று கர்ஜித்திருக்கிறார்.”

”கனலானார் கேப்டன் என்று சொல்லும்!”

”அத்தோடு பேச்சை நிறுத்தவில்லை. ‘தேர்தல் செலவுக்காக ஒரு தொகுதிக்கு 50 லட்ச ரூபாய் கொடுத்தேன். இதுல எனக்கு ஏழு கோடி நஷ்டம். அந்தப் பணத்தையும் யாரும் உருப்படியா செலவு செய்யவே இல்லை. அதுக்கெல்லாம் முதல்ல கணக்கு கொடுங்க. உங்ககிட்ட பேசுறதுக்கு எனக்கு நேரம் இல்ல… பாருங்க எனக்கு போன் வந்துகிட்டே இருக்கு. மலேசியாவுக்கு ஷூட்டிங் போகணும். டப்பிங் வேலை இருக்கு. எனக்கும் தொழில் இருக்குது. மோடி சென்னைக்கு வந்து ரஜினியைப் பார்க்குறாரு. நான் டெல்லிக்குப் போனப்ப எனக்கு எவ்வளவு செல்வாக்கு இருந்துச்சுன்னு பார்த்தீங்க இல்ல. நாம எப்படி தோத்துபோனோம்னு எல்லோரும் லெட்டர் எழுதிக் கொடுத்துட்டு ஊருக்குக் கிளம்புங்க. எல்லோருக்கும் பிரியாணி போடச் சொல்லியிருக்கேன். சாப்பிட்டுட்டுப் போங்க. நான் பிஸியா இருக்கேன்’ என்று முன்னும் பின்னும் அலைபாயும் வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியிருக்கிறார்.”

”கட்சிக்காரர்கள் யாரும் எதுவும் கேள்வி கேட்கவில்லையா?”

”கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ சேகர் எழுந்து, ‘கேப்டன் நாங்க உங்ககிட்ட பேசணும்… பேசுறதுக்காகத்தான் வந்திருக்கோம்!’ என்று சொல்லியிருக்கிறார். அதற்கு விஜயகாந்த், ‘எனக்கு வேலை இருக்கு. அதெல்லாம் பேச முடியாது. நான் தொழிலைப் பார்க்கணும்’ என்று பதில் சொல்ல… மேட்டூர் எம்.எல்.ஏ பார்த்திபன் எழுந்திருக்கிறார். ‘கேப்டன் நீங்க எப்போ ஃப்ரீயா இருப்பீங்கன்னு சொல்லுங்க. அப்போ பேசலாம். ஆனா நிச்சயமா பேசணும் கேப்டன். நம்ம கட்சி எப்படி தோற்றது என்று உங்களோடு நாங்க விவாதிக்கணும். நிறைய விஷயங்களை உங்ககிட்ட சொல்லணும்னு வந்திருக்கோம்…’ என்றாராம்.”

”அதற்கு விஜயகாந்த் என்ன சொன்னாராம்?”

”எதுவும் பேசாமல் எழுந்தவர், ‘அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம்…’ என்று சொல்லிவிட்டு, தன் அருகில் இருந்த ஏ.ஆர்.இளங்கோவன் காதில் ஏதோ சொன்னாராம். உடனே இளங்கோவன், ‘தேர்தல் சமயத்தில் நீங்கள் வசூல் செய்த நன்கொடைகளுக்கும், செலவு செஞ்ச பணத்துக்கும் கணக்குக் கொடுக்கணும். கணக்குக் கொடுக்காதவர்கள் மேல கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அறிவித்திருக்கிறார். உடனே விஜயகாந்த் அங்கிருந்து கிளம்பிவிட்டாராம். பார்த்தசாரதி, சந்திரகுமார், இளங்கோவன் ஆகிய மூவர் மட்டும் அவர் பின்னாலேயே சென்றிருக்கிறார்கள். சற்று நேரத்துக்குப் பிறகு திரும்பிவந்து மூவர் அணி, ‘கேப்டன் உங்க எல்லோர்கிட்டயும் தனித்தனியா பேசப் போறாரு. ஒவ்வொரு நாளைக்கும் 10 மாவட்டச் செயலாளர்களை சந்திச்சித் தோல்விக்கான காரணத்தை கேட்கப்போறதாச் சொல்லியிருக்காரு. யாரை எந்த நாளில் சந்திக்கிறாருங்குறதை நாங்க சொல்றோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.”

”ம்..!”

”வந்திருந்த நிர்வாகிகள் எல்லோருக்கும் கடுமையான அதிருப்தியாம். ‘நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு யாருடன் கூட்டணி வைப்பது என்று கடைசி வரைக்கும் கேப்டன் குழப்பிக்கிட்டே இருந்தாரு. பிரசாரத்துக்குப் போன இடத்துலேயும் வாய்க்கு வந்ததைப் பேசினாரு. இதையெல்லாம் மக்கள் ரசிக்கிறதா அவரே நினைச்சுகிட்டாரு. ஆனா, மக்கள் தெளிவாகத்தான் இருந்திருக்காங்க. மற்றக் கட்சியெல்லாம் கோடிக்கணக்குல செலவு பண்ணிட்டு இருக்காங்க. இவரு 50 லட்சம் கொடுத்துட்டு அதுக்கே ஆயிரத்தெட்டு கணக்கு கேட்குறாரு. இப்படியே போயிட்டு இருந்தா சட்டமன்றத் தேர்தலிலும் இதே நிலைதான் நீடிக்கும்’ என்று வருத்தப்பட்டுக்கொண்ட மாவட்டச் செயலாளர்கள் பலரும், பிரியாணி சாப்பிடாமலேயே கிளம்பிவிட்டார்களாம்.”

”பிரேமலதா கூட்டத்துக்கு வரவில்லையா?”

”இது மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் என்பதால் அவர் வரவில்லை. ‘கூட்டத்தில் யாரையும் பேசவிட வேண்டாம். நீங்களும் எதுவும் பேசிட்டு இருக்க வேண்டாம்..’ என்று சொல்லி அனுப்பியிருக்கிறார் பிரேமலதா. விஜயகாந்த் கூட்டத்தில் இருக்கும்போது செல்போனில் தொடர்புகொண்டபடியே இருந்ததும் அவர்தானாம். கூட்டத்தில் இருந்து வெளியே வந்த பிறகு பிரேமலதாவிடம் போனில் பேசியிருக்கிறார் விஜயகாந்த். ‘நிர்வாகிகள் எல்லோரும் பேசணும்னு சொல்றாங்க. அவங்ககிட்ட பேசலைன்னா பெரிய பிரச்னை வெடிக்கும்…’ என்று விஜயகாந்த் சொல்ல… ‘ஒட்டுமொத்த கூட்டத்தையும் ஒரே இடத்துல பேச விட்டீங்கன்னா ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விஷயத்தைப் பேசுவாங்க. அவங்க கேட்குற கேள்விக்கு நீங்க பதில் சொல்ல முடியாது. அதனால தனித்தனியா பேசுறதா சொல்லிட்டு வாங்க…’ என்று ஐடியா கொடுத்திருக்கிறார் பிரேமலதா. அதன்படிதான் மாவட்டச் செயலாளர்களை தனித்தனியாக சந்திப்பதாகச் சொல்லியிருக்கிறார் விஜயகாந்த். தனித்தனியாகச் சந்திக்கும்போது பல்வேறு விஷயங்களை கொட்டத் தயாராக இருக்கிறார்களாம்!”

”அதில் முக்கியமானது என்ன?”

”இந்தக் கூட்டத்துக்கு வந்தவர்கள் வெளியில் பேசிக்கொண்டு இருந்ததைச் சொல்கிறேன். ‘பா.ம.க ஒத்துழைப்பு இல்லை. தே.மு.தி.க ஓட்டு பா.ம.க-வுக்கு விழுந்தது. ஆனால், பா.ம.க ஓட்டு தே.மு.தி.க-வுக்கு விழவே இல்லை. அந்த அளவுக்கு திட்டம் போட்டு பழிவாங்கிவிட்டனர். கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம் ஆகிய தொகுதிகளில் வெற்றி உறுதியாக இருந்தது. பா.ம.க முக்கிய நிர்வாகிகள் நமக்கு வேலை செய்து இருந்தால், வெற்றி பெற்றிருப்போம். இதுபற்றி அன்புமணியிடம் சொல்லியும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று பேசிக்கொண்டார்கள். தெற்கு, மேற்கு மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் தோல்வி குறித்து பேசுகையில், ‘ஆளுங்கட்சியின் பண பலத்தைக் கண்டு நம் நிர்வாகிகள் பயந்துவிட்டனர். கீழ்மட்ட அளவில் வேலை செய்யவில்லை. வரும் சட்டமன்றத் தேர்தலில் இதே பி.ஜே.பி கூட்டணியில் இருக்க வேண்டும். அப்போதுதான் அ.தி.மு.க-வையும் தி.மு.க-வையும் நம்மால் எதிர்கொள்ள முடியும். பா.ம.க இந்த கூட்டணியில் இருக்கக் கூடாது. நமது கட்சி சார்பில் மோடி அமைச்சரவையில் அமைச்சர் பதவி பெற்று தமிழகத்துக்கு ஏதாவது செய்து நல்ல பெயர் எடுக்கலாம். கட்சியையும் வளர்க்கலாம்’ என்று சொல்லிக்கொண்டனர். கூட்டணி முடிவைத் தாமதமாக அறிவித்தது, நமக்கு செல்வாக்கு இல்லாத தொகுதிகளை வாங்கியது, தகுதியானவர்களை வேட்பாளர்களாகப் போடாதது ஆகிய காரணங்களை அடுக்குகிறார்கள். ‘இப்போது இருக்கும் பி.ஜே.பி கூட்டணியை விட்டுவிடாதீர்கள். விட்டால் நமக்கு வேறு வழியே இல்லை’ என்பதையும் சொல்லப்போகிறார்களாம். அதற்கு விஜயகாந்த் என்ன பதில் சொல்லப்போகிறார், அதில் இருந்து என்ன நடவடிக்கைகள் எடுக்கப்போகிறார் என்பதைப் பொறுத்துத்தான் அந்தக் கட்சியின் எதிர்காலம்” என்று சொல்லிவிட்டு, அ.தி.மு.க மேட்டருக்கு வந்தார் கழுகார்.

”பிரதமர் மோடிக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு​மான சந்திப்பு சுமுகமாக அமைந்துவிட்டது என்றே டெல்லி தகவல்கள் சொல்கின்றன. ‘மோடியா? லேடியா?’ என்ற மோதலாக நாடாளுமன்றத் தேர்தலை ஜெயலலிதா மாற்றினார். தேர்தல் முடிவுகள் வந்த அன்றும், பி.ஜே.பி, மோடி பெயரைச் சொல்லாமல், ‘புதிய அமைச்சரவைக்கும் புதிய பிரதமருக்கும் வாழ்த்துக்கள்’ என்றுதான் சொன்னார். மறுநாள் நரேந்திர மோடிக்கு வாழ்த்து கடிதம் அனுப்பினார். அதனைப் பார்த்துவிட்டு மோடி இவரிடம் பேசினார். அமித் ஷாவும் பேசினார். நன்றி தெரிவித்து பதில் கடிதம் போட்டார். பதவியேற்புக்கு வரச்சொல்லி அழைப்பு அனுப்பினார்கள். ராஜபக்ஷே வருகையை எதிர்த்து மோடிக்கு கடிதம் அனுப்பிய ஜெயலலிதா, பதவியேற்புக்கும் செல்லவில்லை. இது மோதல் மாதிரி ஆகிவிடக் கூடாது என்பதிலும் ஜெயலலிதா கவனமாக இருந்தார். இதனைத் தொடர்ந்து சந்திப்புக்கான தேதி கேட்டார். ‘ஜூன் 3-ம் தேதி செவ்வாய்க்கிழமை சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா?’ என்று கேட்டார்கள். பொதுவாக ஜெயலலிதா முக்கியமான விஷயங்களை செவ்வாய்க்கிழமைதான் செய்வார் என்பது அனைவரும் அறிந்த செய்திதானே!”

”ஆமாம்!”

”ஜூன் 3-ம் தேதி காலை நேரம் டெல்லி துக்ககரமாக மாறியிருந்தது. 8.20 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட முதல்வருக்கு, மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மறைவு குறித்த தகவல் கிடைக்கவில்லை. டெல்லி விமான நிலையத்தில் இறங்கியபோதுதான் முதல்வருக்கு இந்தத் தகவல் சொல்லப்பட்டது. அன்றைய தினம் பிற்பகல் ஒரு மணி அளவில் பிரதமர் நரேந்திரமோடியைச் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால், முண்டேவின் மரணம், டெல்லி அரசியலை அதிர்ச்சியடைய வைத்தது. புதிய நாடாளுமன்றம் கூடி புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்கும் சமயத்தில் இந்த துயரச் சம்பவம் ஏற்பட பிரதமர் மோடிக்கு அதிர்ச்சி. முண்டேவின் உடல் பி.ஜே.பி-யின் தலைமை அலுவலகத்துக்கு பிற்பகல் சுமார் 12 மணியளவில் கொண்டுவரப்பட்ட உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தச் சென்றார். இதனால் முதல்வரின் சந்திப்பில் தடங்கல் ஏற்பட்டது. ஒதுக்கப்பட்ட நேரம் மாறியது. பிரதமர் சந்திப்புக்கு பின்னர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை பிற்பகல் 2:30 மணிக்கு சந்திக்க முடிவாகியிருந்தது. பிரதமருடனான சந்திப்பு 3:30 மணிக்கு என்று மாற, முதல்வர் முதலில் குடியரசுத் தலைவரைச் சந்தித்தார்”

”எதிர்பாராத சங்கடம்தானே?”

”ராஷ்டிரபதி பவனுக்கு முதல்வருடன் மக்களவை அ.தி.மு.க தலைவர் தம்பிதுரை மற்றும் மாநிலங்களைத் தலைவர் டாக்டர் மைத்ரேயன் ஆகியோர் உடன் சென்றனர். தமிழக முதல்வர் பொன்னாடை, மலர்க்கொத்து வழங்க… குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி முதல்வருக்கு ஏராளமான புத்தகங்களை வழங்கினார். இவை பெரும்பாலும் ஜனாதிபதி மாளிகை சம்பந்தப்பட்ட புத்தகங்களாக இருந்தன. நீண்ட நேரம் பேசினார்கள். முதன்முறையாக  முதல்வருக்குரிய நாற்காலி குடியரசுத் தலைவர் மாளிகைக்கும் கொண்டுசெல்லப்பட்டது.

முதல்வருக்கு இருக்கும் முதுகு வலி மற்றும் மூட்டு வலி காரணமாக அவர் பிரத்யேகமான நாற்காலியை உபயோகிக்கிறார். இந்த நாற்காலி டெல்லி தமிழ்நாடு பவனில் வைக்கப்பட்டுள்ளது. டெல்லி விஞ்ஞான் பவன் போன்ற அரங்குகளில் நடக்கும் முதலமைச்சர்கள் மாநாட்டின்போது முதல்வர் ஜெயலலிதா அமர இந்த நாற்காலியை பிரத்யேகமாகக் கொண்டுசெல்லப்படுவது வழக்கம். இப்போது முதன்முறையாக ராஷ்டிரபதி பவனில் முதல்வர் குடியரசுத் தலைவரை சந்திக்கும்போது நீண்ட நேரம் உரையாற்ற வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ, இந்த முறை தமிழ்நாடு பவனில் இருந்து முதல்வருக்காக நாற்காலி சென்றது. முதல்வர் ஜெயலலிதா 80-களில் மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்தபோது, அவர் பேசியதை நினைவுபடுத்திய பிரணாப், ‘நீங்கள் அப்போதே நன்றாகப் பேசுவீர்களே!’ என்று சொல்ல… முதல்வர், ‘உங்களுக்கு எவ்வளவு நினைவுத்திறன்? இதையெல்லாம் எப்படி ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்கள்?’ என்று முதல்வர் ஆச்சர்யமாகக் கேட்டார். குடியரசுத் தலைவரும் சில நிகழ்ச்சிகளைக் கூறியுள்ளார். ‘நான் என்னுடைய பேச்சையெல்லாம் புத்தகமாகப் போட்டுள்ளேன். நீங்கள் இதற்கு முன்னுரை எழுதினால், நான் மீண்டும் இதை புதிதாக அச்சிட்டும் வெளியிடுவேன்’ என்றும் முதல்வர் கேட்டார். குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை எதிர்த்து அ.தி.மு.க வாக்களித்திருந்தாலும், அந்த அரசியலையெல்லாம் மறந்து இருவரும் நன்றாகவே இப்போது புரிந்து பழகத் தொடங்கியுள்ளனர் என்பதன் அறிகுறிதான் இது.”

”பரவாயில்லையே!”

”தமிழக முதல்வரின் பிரதமர் நாற்காலி கனவு நனவாகிவிட்டது என்றுகூடச் சொல்லலாம். குடியரசுத் தலைவர் மாளிகைக்கு நாற்காலியைக் கொண்டுபோன மாதிரி பிரதமர் அலுவலகத்துக்கும் தமிழக போலீஸார் தேக்குமர நாற்காலியைக் கொண்டுபோனார்கள். இதில் ஓர் ஆச்சர்யமான விஷயம்… பிரதமர் மோடியையும் தனக்கு சமமான ஒரு நாற்காலியில் முதல்வர் உட்காரவைத்துவிட்டார். சௌத் பிளாக்கில் முக்கிய பிரமுகர்களைச் சந்திக்கும்போது, தன் இருக்கைக்கு அருகே போடப்பட்டுள்ள க்ரீம் கலர் ஷோபாவில் அமர்ந்துதான் முக்கியப் பிரமுகர்களை பிரதமர் சந்திப்பார்.  முதல்வருக்கு தமிழக அரசின் பிரத்யேக நாற்காலியை சௌத் பிளாக்குக்கு முதன்முறையாக கொண்டுவர அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதில் முதல்வரோடு பிரதமர் அமர்ந்து பேச வசதியாக, அவருக்கும் முதல்வர் அமரும் அதே மாதிரியான மற்றொரு நாற்காலி போடப்பட்டது. பிரதமர் அலுவலகத்துக்குள்ளே நுழைந்தார் முதல்வர். அவரைத் தயாராக நின்று வரவேற்றார் பிரதமர் மோடி. அவரிடம் ‘எவ்வளவு பெரிய வெற்றி மிஸ்டர் மோடி!’ என்று கேட்க, மோடியும் அந்தப் பாராட்டில் திகைத்துப்போனாராம்.  குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அரசியல் பிரமுகர்களோடு சென்ற முதல்வர், பிரதமர் அலுவலகத்துக்கு சக அதிகாரிகளை மட்டும் அழைத்துச் சென்றார். முதலில் தலைமைச் செயலாளர் உட்பட அதிகாரிகளை பிரதமருக்கு அறிமுகம் செய்துவைத்துவிட்டு, தன்னுடைய ஃபைல்களைத் திறந்தார் முதல்வர். கடந்த மூன்று வருடங்களாக மத்திய அரசோடு சந்தித்துவந்த பிரச்னைகளை ஒவ்வொன்றாக அடுக்கினார். 25 வகையான விவகாரங்கள் அடங்கிய இந்த கோரிக்கைகளை 65 பக்கங்களில் புத்தகமாகத் தயாரித்து கொண்டுவந்தார் முதல்வர். இதை அப்படியே முதல்வர், பிரதமர் மோடிக்கு படித்துக்காட்டவும் செய்தார்.”

”என்ன பேசினார்களாம்?”

”டெல்லி வட்டாரத்தில் உலவும் விஷயங்​களைச் சொல்கிறேன். ‘நீங்கள் பதவி ஏற்பு விழாவுக்கு வருவீர்கள் என்று நான் எதிர்பார்த்தேன்’ என்பது மோடியின் கேள்வியாக இருந்தது. ‘நீங்கள் ராஜபக்ஷேவை அழைத்து சங்கடத்தை ஏற்படுத்திவிட்டீர்கள்’ என்று ஜெயலலிதா சொல்ல, ‘சார்க் நாடுகளின் தலைவர்கள் அனைவரையும் அழைத்தேன். அதில் அவரும் பங்கேற்க வேண்டும்தானே!’ என்று பதில் அளித்துள்ளார் மோடி. ‘கொஞ்சம் தாமதித்து சில வாரங்கள் கழித்து அழைத்திருக்கலாம்’ என்பது இவரது எதிர்வாதமாக அமைந்தது. பிறகு, தன்னுடைய கோரிக்கைகள் பற்றி சுருக்கமாக ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். முல்லை பெரியாறு பற்றிச் சொன்னபோது, உடனடியாகச் செய்கிறேன் என்றாராம். ‘முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உடனடியாக மேற்பார்வை குழுவை அமைப்பேன்’ என்று மோடி சொல்லியிருக்கிறார். காவிரி பற்றி பேச்சு வந்தது. ‘காவிரிப் பிரச்னை முழுமையாகத் தீர வேண்டுமானால் நதிநீர் இணைப்புதான் முழுமையான தீர்வாக அமையும்’ என்றாராம் மோடி. ‘நதிநீர் இணைப்பு என்பது மிகமிக காலதாமதம் ஆகும் திட்டம்’ என்பது முதல்வர் கருத்து. ‘அப்படிச் செய்வதாக இருந்தால் தென்னகத்தில் இருந்து தொடங்குங்கள்’ என்று சொல்லியிருக்கிறார் முதல்வர். மின்திட்டங்கள் பற்றி பேச்சு வந்துள்ளது. ‘மற்ற மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்குவதற்கு வழித்தடம் இல்லை’ என்றும் சொல்லியிருக்கிறார். ‘நீங்கள் ஏன் சூரியசக்தி மின்சாரத் தயாரிப்பில் உங்கள் கவனத்தைத் திருப்பக் கூடாது’ என்று மோடி கேட்டுள்ளார். ‘சூரியசக்தி மின்சாரம் தயாரிப்பதற்கான மானியத்தை மத்திய அரசு வழங்க வேண்டும்’ என்று கேட்டுள்ளார் முதல்வர். அதன் பிறகு நிதி பிரச்னையைக் கையில் எடுத்துள்ளார் முதல்வர்!”

”பெரிய பிரச்னையாச்சே அது?”

”முதல்வர் பேசும்போது, ‘கடந்த மத்திய அரசு தமிழகத்துக்குத் தரவேண்டிய நிதியை முழுமையாகத் தரவில்லை. 13-வது நிதிகமிஷன் பரிந்துரைத்த பொது நிதியுதவியான 188 கோடியில் இதுவரை 125 கோடிதான் வந்துள்ளது. இப்படி ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டே போகலாம். எனது கடிதத்தில் இதுபற்றி விரிவாக இருக்கிறது’ என்று முதல்வர் சொல்லியிருக்கிறார். ‘இதுபற்றி நீங்கள் நிதிஅமைச்சர் அருண் ஜெட்லியிடம் பேசுங்கள்’ என்று சொன்ன மோடி,  தமிழக முதல்வரை வைத்துக்கொண்டே நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு தன்னுடைய தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, ‘தமிழக முதல்வர் வருகிறார். அவருடைய பிரச்னைகளை நாம் உடனே முடிந்த அளவுக்கு செய்ய வேண்டும்’ என்றும் அறிவுறுத்தினார். பிரதமர் மோடி தன் முன்பே ஆக்ஷனில் இறக்கியதைப் பார்த்து முதல்வருக்கும் ஏக குஷி. முதல்வர் பிரதமர் சந்திப்புக்கு அரை மணி நேரம்தான் ஒதுக்கப்பட்டது. அடுத்து மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருந்தது. ஆனால், இந்தச் சந்திப்பு நீண்டுகொண்டே சென்றது. எல்லா மத்திய அமைச்சர்களும் காத்திருந்தனர். இதனால், தமிழ்நாடு பவன் வந்த முதல்வர் பத்திரிகையாளர்களிடம், ”இது கிட்டதட்ட 50 நிமிட சந்திப்பு’ என்று பெருமையாகச் சொன்னார்!”

”ஓஹோ! அதனால்தான் அருண் ஜெட்லியையும் சந்தித்தாரா முதல்வர்? அந்த சந்திப்பு அவரது பயணத் திட்டத்தில் இல்லாதது ஆச்சே?”

”அருண் ஜெட்லி இருக்கும் நார்த் பிளாக் குக்கு முதல்வரின் நாற்காலி பயணம் ஆனது. முதல்வர் தனது அதிகாரிகளுடன் அருண் ஜெட்லியைச் சந்தித்தார். ‘கடந்த ஆட்சியில் தமிழகத்துக்கு எந்தவிதமான மரியாதையும் கொடுக்கவில்லை’ என்று கூறி நிதித் துறை சம்பந்தப்பட்ட விவகாரங்களை அவரிடம் எடுத்துவைத்தார். ஏற்கெனவே பிரதமரிடம் இருந்து வந்த கட்டளையின்படி ‘உங்கள் நிதியமைச்சரை அனுப்புங்கள். நான் கூட்டத்தை ஏற்பாடுசெய்து எதை எதைச் செய்ய முடியுமோ, அதில் உடனடியாக தீர்வு காண்கிறேன்’ என்று ஜெட்லி உற்சாகமாகக் கூறி அனுப்பினார்.”

”ம்!”

”தமிழக அரசு சார்பில் ஏராளமான கோரிக்கைகளை வைத்துவிட்டார் முதல்வர். கிட்டதட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு போட வேண்டிய ஒரு மினி பட்ஜெட் அளவில் இருக்கிறது என்றே சொல்லலாம். ஆனால், இதில் முதல்வர் மத்திய அரசால் எதையெல்லாம் செய்ய முடியும் என்கிற அடிப்படையில் இந்தப் பட்டியலை ஃபில்டர் செய்து கொண்டுவந்துதான் கொடுத்துள்ளார் என்பது முக்கியம். இந்தத் திட்டங்களும் நிதி உதவிகளும் கொள்கை அறிவிப்புகளும் கிடைத்தால்தான் சட்டமன்றத் தேர்தலை, தான் சந்திக்க முடியும் என்றும் முதல்வர் நினைக்கிறார்!”

”சட்டமன்றத் தேர்தலுக்குத்தான் இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கிறதே?”

”கால அளவுகோல்படி பார்த்தால் 2016-ம் ஆண்டுதான் சட்டசபைத் தேர்தல் வர வேண்டும். ஆனால், முன்கூட்டியே வரலாம் அல்லவா?”

”இது என்ன புதுப் பாதையாக இருக்கிறதே?”

”நாடாளுமன்றத் தேர்தலில் 39-க்கு 37 தொகுதிகளைக் கைப்பற்றிய சந்தோஷ காலத்திலேயே சட்டசபைத் தேர்தலையும் நடத்திவிட்டால், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிவிடலாம் என்பது முதல்வரின் மனக்கணக்கு. சில நாட்களாக அவர் இந்த யோசனையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. விரிவாகச் சொல்கிறேன்!

முதல்வரே எதிர்பார்க்காத வெற்றி இது. அவர் 33 தொகுதிகள் வரைதான் எதிர்பார்த்தார். ஆனால், 37 தொகுதிகளைக் கைப்பற்றிவிட்டார். இதனை சட்டசபை வாரியாக பிரித்துப் பார்த்தால் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அ.தி.மு.க 217 தொகுதிகளில் கூடுதல் வாக்குகளை வாங்கி உள்ளது. இதை வைத்து ஆட்சி மீது பொதுமக்களிடம் எந்தக் கோபமும் இல்லை என்று நினைக்கிறார் முதல்வர். ஒரே விஷயம், மின்வெட்டுதான். அதனையும் விரைவில் சரிப்படுத்திவிடலாம் என்று நினைக்கிறார். இரண்டு ஆண்டுகள் ஆனால் இப்படி கனிவான சூழ்நிலை இருக்கும் என்று சொல்ல முடியாது. 1984 முதல் இங்கு மாற்றி மாற்றிதான் மக்கள் வாக்களித்து வருகிறார்கள். அ.தி.மு.க, தி.மு.க என மாறி மாறி ஆட்சி அமைந்து வருகிறது. அடுத்தடுத்து ஒரே கட்சி ஆட்சி அமைந்ததே இல்லை. எனவே, இந்த சாதகமான சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நினைக்கிறார். அதாவது 2016 மே மாதம் நடக்க வேண்டிய சட்டமன்றத் தேர்தலை அதற்கு முன்னதாக 2015 மே மாதத்தை ஒட்டி நடத்திவிடலாமா என்பதே யோசனை.”

”சட்டரீதியாக இது சாத்தியமா?”

”ஓர் அரசு எந்தக் கோரிக்கைக்காகவும் தனது ஆட்சியை ராஜினாமா செய்யலாம். அப்போது மாநில கவர்னர் அதனை முழுமையாக ஏற்க வேண்டும். தேர்தல் ஆணையமும் உடனடியாக தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இவர்கள் இருவரும் மாறுபட்ட முடிவுகள் எடுத்துவிட்டால், இதில் சிக்கல் ஆகும். ஆனால், அரசியல்ரீதியாக இந்த சாதகமான நேரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று பார்க்கிறார் முதல்வர். அதற்காகவே, மிகமிக பெரிய கோரிக்கை மூட்டைகளுடன் டெல்லி போனார். மத்தியில் இருந்து நிதி உதவிகள் கிடைத்தால், அது பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்ற அடித்தளம் அமைக்கும் என்றும் முதல்வர் நினைக்கிறார். அவர் நினைப்பதெல்லாம் நடக்கிறதா என்று பார்ப்போம்!” என்றபடி பறந்தார் கழுகார்.

நன்றி -ஜூனியர் விகடன்

%d bloggers like this: