என்ன எடை அழகே!

ஃபிட்னஸ் உணவின் மூலம் எடை கட்டுப்பாட்டை எட்ட முடியுமா? சாப்பிடாமல் இருந்து பருமனை குறைக்க முடியுமா? காலை உணவை தவிர்ப்பதினால் தொப்பை குறையுமா? விரிவாகவும் தெளிவாகவும் விளக்குகிறார் டயட்டீஷியன் ரேவதி ராணி. எடை குறைப்பது என்பது அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. எடை குறைக்க நிறைய பணம் செலவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. உடலை வருத்துவதாலோ, பணம் செலவழிப்பதாலோ கூடுதல் எடையும் பானை போன்ற வயிறும் குறைந்துவிடாது. உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி – இரண்டும் இருந்தால்தான் எடையை குறைக்க முடியும். பருமனுக்கு என்ன காரணம் என்று அறியாமலே, மற்றவர்கள் சொல்லைக் கேட்டு என்னென்னவோ செய்கிறார்கள்.

பருமனுக்கு எவ்வளவோ காரணங்கள் உண்டு. அவற்றில் சில.

.. 1. வெளியே தெரியாத கோளாறாக இருக்கலாம் (உதாரணம்: தைராய்ட்).

 

2. நீர் உடலாக இருக்கலாம்.

3. நீங்கள் எடுத்துக்கொள்ளும் மாத்திரையின் பக்கவிளைவாக இருக்கலாம்.

4. உடற்பயிற்சி இல்லாததால் இருக்கலாம்.

முதலில் பருமனுக்குச் சரியான காரணத்தை அறிந்துகொண்டு அதற்கான வழிகளை பின்பற்றுவது நல்லது. காரணம் அறியாமல் நம்மை நாமே வருத்தி உடலை மெலிய பண்ணுவதில் எந்தப் பயனும் இல்லை. ஆனால், உடற்பயிற்சி என்றைக்கும் நல்லதே! ‘ஒல்லியாக இருப்பதே அழகு’ என்று பெருமைப்படும் காலமிது. கட்டுடலாக இருப்பதோ இன்னும் அழகு. அத்தகைய கட்டுப்பாட்டை அடைவதற்கான வழிமுறைகளை அறிவதோடு, முறையாக பின்பற்றினால்தான் நல்ல முடிவு கிடைக்கும். அளவான உணவு, இடைவேளை விட்ட உணவுமுறை, ஒழுங்கான உடற்பயிற்சி ஆகியவற்றைக் கொண்டு ஆரோக்கிய வாழ்வை மேற்கொள்ளுங்கள். எடை குறைக்க உண்ணும் பழக்கவழக்கங்களையும் உடற்பயிற்சியையும் கவனித்தாலே போதுமானது. உங்கள் உணவுப்பழக்கத்திலும் உடற்பயிற்சியிலும் மெதுவான மாற்றங்களைக் கொண்டுவாருங்கள். தடாலடியாக கடுமையான சோதனை முயற்சிகளில் இறங்குவது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். கர்ப்பிணிகள், குழந்தைகள், இளம்பெண்கள், நோயாளிகள் மருத்துவர் ஆலோசனையின்றி எவ்வித முறைகளையும் பின்பற்றக்கூடாது. எடை குறைக்க கண்ட மாத்திரை, மருந்துகளை உண்ணக்கூடாது. ஒரே மாதத்தில் நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு எடை குறையவில்லை என்றாலும், விடாமல் உணவுக்கட்டுப்பாட்டையும் உடற்பயிற்சியையும் தொடர வேண்டும். எந்த உடற்பயிற்சியாக இருந்தாலும் வியர்வை வெளியேறவில்லையென்றால்,  மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் தேவையற்ற அமிலங்கள் வெளியேறி பருமனை குறைக்கும். மதுப் பழக்கம் உள்ளவர்கள் அதைத் தவிர்க்கவோ, குறைக்கவோ வேண்டும். அதிக மது அதிக பருமனையே வழங்கும். உங்களைப் போலவே எடை குறைக்க விரும்புபவரின் நட்பைப் பேணுங்கள்… முடிந்தால் நடைப்பயிற்சியில் அவர்களையும் உங்களுடன் பங்குபெறச் செய்யுங்கள்… வாழ்த்துகள்!

பருமனை எளிதாக குறைக்க உதவும் ஜி.எம். டயட்(General Motors Diet)

முதல் நாள் : எந்தப் பழங்களும் (வாழைப்பழம் தவிர்த்து). தர்பூசணி சற்று அதிகமாக…

இரண்டாம் நாள் : அவித்த, உப்பு சேர்த்த உருளைக்கிழங்கு. சமைத்த / சமைக்காத காய்கறிகள் (சாலடுகள்) எவ்வளவு முடியுமோ அவ்வளவு…

மூன்றாம் நாள் : பழங்கள் + காய்கறிகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு… (தவிர்க்க வேண்டியவை: வாழைப் பழம் மற்றும் உருளைக்கிழங்கு)

நான்காம் நாள்: வாழைப் பழங்கள் + டம்ளர் பால் + இரவு வெஜிடபிள் சூப்…

ஐந்தாம் நாள் : காலை: காய்கறிகள். மதியம்: ஒரு கப் சாதம், ஒரு பெரிய தக்காளி. இரவு: புரதம் நிறைந்த உணவு, ஒரு பெரிய தக்காளி. நாள் முழுதும் நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம்.

ஆறாம் நாள்: காலை: காய்கறிகள். மதியம்: ஒரு கப் சாதம், நிறைய காய்கறிகள். இரவு: நான்வெஜ் (விரும்பினால்), ஒரு கப் சாதம்.

ஏழாம் நாள் : நிறைய பழச்சாறு, சமைத்த காய்கறிகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு… எந்த நோயும் இல்லாமலும் வேறு பிரச்னைகள் இல்லாமலும் இருந்தால்தான் இந்த 7நாள் டயட் எடுக்கலாம்.

ஒவ்வொரு நாளும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம்!

இந்த முறையில் எடை குறைய மிக எளிய காரணம்… ஒவ்வொரு நாளும் உணவு மூலம் நமக்குத் தேவைப்படுவது 2 ஆயிரம் கலோரி. இந்த முறை மூலம் தினம் 1200 கலோரி மட்டுமே கிடைப்பதால், ஒரே வாரத்தில் 5 கிலோ எடை குறைகிறது. இதனைத் தொடர்ந்து கடைப்பிடித்தால் அனீமியா ஏற்படும். முதல் முறை எடை குறைக்கவும், அதன் பின் உடற்பயிற்சி மூலம் தக்க வைக்கவும் மட்டுமே இது பயன்படும்.

உணவுப்பழக்கம்… முட்டைக்கோஸ், குடைமிளகாய், பாகற்காய், கேரட், முருங்கைக்காய், வாழைத்தண்டு போன்ற காய்கறிகளை அடிக்கடிச் சேர்த்துக்கொள்வது எடை குறைக்க உதவும். தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே உண்பது, மொபைலில் பேசிக்கொண்டே உண்பது, புத்தகங்கள் வாசித்துக்கொண்டே உண்பது போன்ற பழக்கங்களை நிறுத்துங்கள். கிழங்கு வகை உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், கொழுப்புச்சத்து மிகுந்த பண்டங்கள், ஐஸ்கிரீம், நெய், சீஸ், வெண்ணெய், சர்க்கரையில் செய்த பதார்த்தங்களைத் தவிர்த்திடுங்கள். 3 வேளை அதிகம் உண்பதற்குப் பதில் 6 வேளை குறைவாக உண்ணுங்கள். சாப்பிடும் முன் 200 மி.லி. தண்ணீர் உண்டபின் உங்கள் உணவை ஆரம்பியுங்கள். காலை உணவுக்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட வேண்டும். இது உடலில் இருக்கும் கேடு விளைவிக்கக்கூடிய விஷயங்களை வெளியேற்றும். ஒருநாளைக்கு 10 கப் தண்ணீர் அருந்துங்கள். காலை உணவைத் தவிர்க்காதீர்கள். காலையில் அதிகம் உண்டு நடப்பது, அன்றைய நாள் முழுவதும் பசியைக் கட்டுக்குள் வைத்திருக்கும். இரவில் வயிறு முட்ட உண்ணாதீர்கள். அரை வயிறு உணவும், கால் வயிறு தண்ணீரும், கால் வயிறு வெற்றிடமாகவும் இருக்கட்டும். உணவு உண்ட உடனே உறங்கக் கூடாது. ஒரு மணி நேரம் கழித்தே படுக்கச் செல்லுங்கள். மா, வாழை, பலா, சப்போட்டா, பேரீச்சை, சீத்தா ஆகிய பழங்களைத் தவிர்த்து விடுங்கள். உண்ட பின் ஒரு டம்ளர் மோர் குடித்தால் உண்ட உணவு ஜீரணம் ஆகிவிடும்… எடை கூடாது. உணவுக்குப் பின் குறைந்தது அரை மணி நேரமாவது நடக்க வேண்டும் (பசிப்பதுபோல உணர்வு ஏற்படும் வரை நடந்தால் உணவுப்பொருட்கள் ஜீரணமாகிவிட்டது என்று பொருள்… எடை கூடாது). காபி, டீ போன்ற பானங்களை அதிகம் அருந்தக்கூடாது. அவற்றிலுள்ள கஃபைன் இன்சுலினை அதிகரிக்கச் செய்து செரிமானத்தைத் தாமதமாக்குகிறது. அதற்குப் பதில் ஹெர்பல் டீ, லெமன் டீ, பழச்சாறு அருந்தலாம். நார்ச்சத்து, புரதச்சத்து அதிகம் உட்கொள்ள வேண்டும். பச்சைக் காய்கறி சாலட்கள், பழ சாலட்கள் நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள். பொரித்த உணவுகளைவிட ஆவியில் வேக வைத்த உணவுகள் ஆரோக்கியத்துக்கு உகந்தவை. இஞ்சிச்சாறு, இஞ்சி ரசம் என உணவில் இஞ்சியை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். சமையல் செய்ய நான்ஸ்டிக் பேன் பயன்படுத்துங்கள்… குறைந்த எண்ணெய் செலவாகும். வாய்ப்பும் நேரமும் இருப்பவர்கள் குக்கரில் சாதம் செய்து உண்ணாமல், சாதம் செய்து கஞ்சியை வடித்துச் செய்யும் அந்தக்கால முறையைப் பின்பற்றலாம். உடற்பயிற்சி… சுறுசுறுப்பாக இருப்பது எடை குறைக்க உதவும். காலையில் 45 நிமிடங்கள், மாலையில் 45 நிமிடங்கள் கண்டிப்பாக நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். புதிதாக நடைப்பயிற்சி செய்பவர்கள் தங்கள் வேகத்தை மெதுவாகத்தான் அதிகமாக்க வேண்டும். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, நீச்சல், மிதிவண்டி ஓட்டுதல் ஆகியன எடை குறைப்புக்கு உதவும். ஆரம்ப நிலையில் மெதுவாகவே உடற்பயிற்சியைத் தொடங்க வேண்டும். தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு! எடை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவுதான் அன்றைய தினத்துக்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அதைத் தவிர்த்தால், உடல்நலம்தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே, மறக்காமல் காலை வேளையில் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும். எடை குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகுத்தூள் சேர்த்து தினமும் குடிக்கலாம்.

%d bloggers like this: