பணம் கொட்டும் தொழில்கள்- உடனடி சப்பாத்தி!

உணவுப் பொருட்கள் தயாரிப்பு எப்போதுமே லாபகரமான தொழில். குறிப்பாக, உடனடி உணவுகளுக்கான சந்தை அதிகரித்து வருவதால், வாய்ப்புகளைப் பயன்படுத்தி உணவுத் துறை சார்ந்த தொழிலை தேர்ந்தெடுக்கலாம். அந்த வகையில் இந்த வாரம் நாம் பார்க்கப்போகிற தொழில், உடனடி சப்பாத்தி தயாரிப்பு.

நமது அன்றாட உணவுப் பழக்கத்தில் சப்பாத்தி இடம் பெற்றுவிட்டது. உடல்நலம் சார்ந்து மருத்துவர்களும் பரிந்துரைக்கிறார்கள் என்பதால், மார்க்கெட்டிங் செய்வதில் பெரிய சிரமங்கள் கிடையாது. நினைத்த நேரத்தில் தயார் செய்து சாப்பிட முடியும்; இதனால் நேரமும் வேலையும் மிச்சம் என்பதால், இதற்கு நல்ல வரவேற்பும் இருக்கும். 

தவிர, நீங்கள் வசிக்கும் ஏரியாவில் இருக்கும் ஹோட்டல்கள், ஹாஸ்டல்களை குறிவைத்து இறங்கினாலே போதும் நல்ல வருமானம் பார்க்கலாம். உணவு பொருட்களைப் பொறுத்தவரை, தரமாகவும், சுவையாகவும் கொடுத்தால் எந்த ஏரியாவிலும் ஜோராக விற்கலாம்! 

தயாரிப்பு முறை!

கோதுமை மாவை மொத்தமாக வாங்கிக்கொள்ளலாம். குறிப்பிட்ட அளவு மாவை, மாவு பிசையும் இயந்திரத்தில் கொட்டி அதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் எண்ணெய்விட்டு பிசைந்துகொள்ள வேண்டும். பிசையப்பட்ட இந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டும் இயந்திரத்தில் விட்டு உருட்டிக்கொள்ள வேண்டும். இந்த உருண்டைகளை சப்பாத்தி சுடும் இயந்திரத்தில் இட்டு சப்பாத்தியாகச் செய்துகொள்ள வேண்டும். தயாரித்த சப்பாத்திகளைக் குளிரவைத்து பாக்கெட்களாக அடைத்து விற்பனைக்கு அனுப்ப வேண்டியதுதான். பேக்கிங் கவரில் தயாரித்த தேதி மற்றும் பயன்படுத்தும் காலம் போன்றவற்றைக் குறிப்பிட வேண்டும்.

தேவையான இயந்திரங்கள்!

மாவு பிசையும் இயந்திரம், உருண்டை இயந்திரம், சப்பாத்தி செய்யும் இயந்திரம், குளிரூட்டும் கன்வேயர்கள், ஏர் கம்ப்ரஸர், தொடர் சீலிங் இயந்திரம். இந்த இயந்திரங்கள் மொத்தமும் ரூ.7 லட்சத்துக்குள் கிடைக்கும்.

திட்ட மதிப்பீடு! (ரூ.)

இடம் :     கட்டடம் வாடகை
இயந்திரங்கள் :            7 லட்சம்
மின்சாரம் :               1 லட்சம்

பாரதப் பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் அல்லது நீட்ஸ் திட்டத்தின் மூலம் உற்பத்தி தொழில் மானியம் பெற முடியும்.

நமது மூலதனம் (5%):  ரூ. 40,000
மானியம் 25%     : ரூ.2,00,000
வங்கிக் கடன் 70%  :ரூ.5,60,000

நடைமுறை மூலதனம்: 2 லட்சம் (இதற்கு தனியாக வங்கிக் கடன் கிடைக்கும்)

உற்பத்தி!

ஓர் இயந்திரத்தின் மூலம் தினசரி 10 ஆயிரம் சப்பாத்திகள் வரை உற்பத்தி செய்ய முடியும். நாம் 8,000 சப்பாத்திகள் எனக் கணக்கு வைத்துக்கொள்வோம். இதை 800 பாக்கெட்களாக அடைத்துக் கொள்கிறோம். ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.22 முதல் ரூ.25 வரை கிடைக்கிறது. நாம் 25 என்கிற வகையில் வாங்குவதாக வைத்துக்கொள்வோம். இதனோடு தண்ணீர், உப்பு, எண்ணெய் சேர்க்கும்போது 1,700 கிராம் எடையும், கூடுதலாக ரூ.6 செலவாகும். ஒரு சப்பாத்தி சுமார் 45 கிராம் எடை என்கிற அளவில் தயாரிக்க வேண்டும்.  இதன்படி கணக்கிட்டால், நமக்கு 38 சப்பாத்திகள் கிடைக்கும். நாம் 35 சப்பாத்திகள் என்று கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். இதன்படி, ஒரு சப்பாத்தியின் உற்பத்தி செலவு 88 பைசா. 10 சப்பாத்திகள் வீதம் பேக்கிங் செய்ய ஒரு பாக்கெட்டுக்கு ரூ.2.50 செலவாகும். 

ஒருநாள் மூலப்பொருள்: ரூ.8,000X0.88 = 7,040

பேக்கிங் செலவு : 800X2.5 = 2,000

தினசரி உற்பத்தி செலவு ரூ.9,040 என்கிறபோது மாதம் 25 வேலைநாட்கள் எனக் கொண்டால், மாதத்துக்கு ரூ.2.26 லட்சம் உற்பத்தி செலவாகும்.

பணியாளர்கள்: (ரூ.)

மேற்பார்வையாளர் 1: 12,000

பணியாளர்கள் 3X8: 24,000   

விற்பனையாளர்கள்: 2 X 8000 : 16,000

மொத்தம்: 52,000

விற்பனை!

10 சப்பாத்திகள் கொண்ட ஒரு பாக்கெட் ரூ.25-க்கு விற்பனை செய்யலாம். (இதை அதிகபட்சமாக ரூ.40 வரை  கடைக்காரர்கள் விற்பனை செய்ய முடியும்) தினசரி 800 பாக்கெட்கள் மூலம் கிடைக்கும் விற்பனை வரவு ரூ.20,000. மாதம் 25 வேலைநாட்கள் என்கிறபோது

மாத வருமானம் ரூ.5 லட்சம்.

 

மொத்த செலவுகள்! (ரூ.)

வாடகை :     10,000
மூலப்பொருட்கள் :   2,26,000
மின்சாரம் :     10,000
வேலையாட்கள் :     52,000
மூலதனக் கடன் வட்டி (12.5%) : 5,900
கடன் தவணை 60 மாதங்கள்:     9,500
நடைமுறை மூலதன வட்டி(12.5%) : 2,100
இயந்திர பராமரிப்பு :     10,000
மேலாண்மை செலவுகள் :      10,000
தேய்மானம் :      8,800
போக்குவரத்து :     20,000
விற்பனை ஊக்க செலவுகள் :     50,000
மொத்தம் :    4,14,300
மொத்த வரவு :    5,00,000
மொத்த செலவு :    4,14,300
லாபம் :     85,700

நன்றி-நாணயம் விகடன்

%d bloggers like this: