முருகா வருக!-ஜூன் 11 – வைகாசி விசாகம்

வைகாசி மாதம், விசாக நட்சத்திரத்தில், சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தீப்பிழம்பாய், முருகப்பெருமான் அவதரித்தார். ‘வி’ என்றால், வெற்றி. சாகம் என்றால், ஆடு. ஆடு வாகனத்தை உடையவனாக இருந்து, பின், இந்திரனிடமிருந்து மயிலை வாகனமாகப் பெற்றவர் முருகன். ஒரு சமயம், பத்மாசுரன் உள்ளிட்ட அசுரர்களின் கொடுமைக்கு, தேவர்கள் ஆளாயினர். அவர்கள் சிவனிடம் இதுபற்றி முறையிட, சிவன் தன் நெற்றிக்கண்ணைத் திறந்தார். அதிலிருந்து வெளிப்பட்ட ஆறு நெருப்பு பொறிகள், சரவணப் பொய்கையில் வளர்ந்து, குழந்தையானது. கார்த்திகைப் பெண்கள் ஆறு பேர், அக்குழந்தையை சீராட்டி வளர்த்தனர். அவர்களிடம் வளர்ந்ததால், கார்த்திகேயன் என்று, போற்றப்பட்டார்.
முருகன், ஆறுமுகங்களும், 12 கரங்களும் கொண்டவர். ஒரு முகம், உயிர்களின் ஆணவ இருளை அகற்றி, ஞானச்சுடரை ஏற்றி அருள்கிறது. இரண்டாவது முகம், தன்னை வழிபடும் அடியார்களுக்கு வரத்தை தருகிறது. மூன்றாம் முகம், அந்தணர்கள் செய்யும் யாகங்களை காவல் காக்கிறது. நான்காவது முகம், வாழ்க்கை என்றால் என்ன என்ற, மெய்ஞானத்தை உணர்த்துகிறது. ஐந்தாவது முகம், தீயவர்களை எதிர்த்து போர் புரிகிறது. ஆறாவது முகம், வள்ளி நாயகியிடம் புன்முறுவல் பூக்கிறது.
அவரது, 12 கரங்களில், முதல் கை, தேவர் மற்றும் முனிவர்களைப் பாதுகாக்கிறது. இரண்டாம் கை, முதல் கை செய்யும் பணிக்கு ஒத்தாசை செய்கிறது. மூன்றாம் கை, உலகத்தை தன் கைக்குள் அடக்கி வைக்கும் அங்குசத்தை தாங்கியுள்ளது. நான்காம் கை, ஆசைகளைக் குறைக்கச் சொல்கிறது. ஐந்தாம் கை, நிறைந்த அருளைத் தருகிறது. ஆறாம் கை, வேல் கொண்டு பக்தர்களைப் பாதுகாக்கிறது.
ஏழாம் கை, ‘சரவணபவ’ என்னும் சொல்லுக்குரிய பொருளை வெளிப்படுத்தும் வகையில், மார்பில் உள்ளது. எட்டாம் கை, மார்பில் இருந்து தொங்கும் மாலையைத் தாங்குகிறது. ஒன்பது, பத்தாம் கைகள், யாக பலனை ஏற்கின்றன. 11ம் கை, மழையைத் தருகிறது. 12ம் கை, வள்ளி, தெய்வானைக்கு மாலை சூட்டுகிறது.
சிவன் வேறு, முருகன் வேறு அல்ல; சிவாம்சமே முருகனாகத் திகழ்கிறது. அதுபோல் பார்வதி தேவியும் முருகனை விட்டு அகலுவதில்லை. முருகன் சூரபத்மனை வெல்ல போருக்கு புறப்பட்ட போது, தாயிடம் ஆசி பெற்றார். பார்வதி தேவி தன் சக்தியையெல்லாம் ஒன்று திரட்டி, வேலாக தந்தாள். அதனால் தான், சக்திவேல் இல்லாமல், தனித்து முருகன் காட்சி தருவதில்லை. சக்திவேலுடன் கூடிய முருகனே, சூரனை வென்று, வெற்றி வாகை சூடினார். ஆக தாயும், தந்தையும் அவனே! ‘வேல்’ என்றால் வெற்றி. வெற்றி தரும் வேலை வணங்கினால், நம் வாழ்வில் என்றும் வெற்றியே!
வெற்றிவேல் முருகனின் பிறந்த நாளான வைகாசி விசாகத்தன்று, ‘முருகா வருக’ என, வரவேற்போம்; அவன் திருவடியைச் சரணடைவோம்.

%d bloggers like this: