மிஸ்டர் கழுகு: மீண்டும் ‘பவர்’ காட்டும் டாக்டர் வெங்கடேஷ்!

மழையில் நனைந்து சிறகுகளைச் சிலிர்த்தபடி வந்து அமர்ந்தார் கழுகார். ”ஊரைச் சொல்லும்… நான் விஷயத்தைச் சொல்றேன்!” என்று பீடிகையுடன் ஆரம்பித்தார்.

”புரியலையே!” என்றோம்.

”தேர்தல் தோல்வி பற்றி பேச பிரேம​லதா சொன்ன திட்டப்படி மாவட்டச் செய​லாளர்களையும், முக்கிய நிர்வாகி​களையும் தனித்தனியாக விஜயகாந்த் சந்திக்கப்போகிறார் என்று கடந்த இதழில் சொல்லியிருந்தேன் அல்லவா? அந்தச் சந்திப்பு தொடங்கிவிட்டது. எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்ன பேசினார்கள் என்றுதான் சொல்ல வந்தேன்!”

”சுதீஷ் போட்டியிட்ட சேலம்?”

”சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வந்து அமர்ந்ததும், ‘சேலத்தைப் பற்றி எதுவும் சொல்லத் தேவையே இல்லை. அங்கே என்ன நடந்துச்சுன்னு எனக்கு நல்லாவே தெரியும். நம்ம கூட்டணியில அரசியல் நாகரிகம் தெரியாத கட்சியை

சேர்த்துக்கொண்டதாலதான், நாம அங்கே தோற்றோம். அடுத்த தேர்தல்ல இதெல்லாம் நடக்காம நான் பார்த்துக்குறேன். நீங்க எதுக்கும் கவலைப்பட வேண்டாம். 2016-ல் நான்தான் முதல்வர். அதை மனசுல வெச்சுகிட்டு வேலையைப் பாருங்க. செயல்படாத நிர்வாகிங்க பட்டியலை உடனே எனக்கு அனுப்புங்க!’ என்று சொல்லியிருக்கிறார்.

உடனே ராதாகிருஷ்ணன், ‘வானத்தைப்​போல’ படம் ரிலீஸ் ஆனதும் மாவட்டம்தோறும் இருக்கும் ரசிகர்களோடு நின்னு குரூப் போட்டோ எடுத்துகிட்டீங்க. அதுக்குப் பிறகு அவங்க யாரையும் நீங்க சந்திக்கவே இல்லை. அதனாலதான் ரசிகர்களும் சோர்ந்து போய்ட்டாங்க. ரசிகர்கள் எல்லோரையும் நீங்க சந்திக்கணும். அப்போதான் உற்சாகமா வேலை பார்ப்பாங்க!’ என்றதும், ‘நிச்சயமா செய்யலாம்!’ என்று சொன்னாராம்.”

”கடலூர்?”

”கடலூர் நிர்வாகிகள் உள்ளே வந்ததும், ‘ஜெயசங்கருக்கு சீட் கொடுக்கும்போதே மாவட்டச் செயலாளர்கள்கிட்ட நான் என்ன சொன்னேன்? இவரை ஜெயிக்க வைக்க வேண்டியது உங்க பொறுப்புன்னு சொன்னேனா… இல்லையா?’ என்று ஆரம்பித்தாராம். அதற்கு அவர்கள், ‘நாங்களும் எவ்வளவோ கஷ்டப்பட்டோம் கேப்டன். நம்ம வேட்பாளர் யாருக்கும் அறிமுகம் இல்லாதவரு. அவரும் கீழே இறங்கி வேலை செய்யவே இல்லை. பா.ம.க நமக்கு ஒத்துழைப்பு தரவே இல்லை. நம்ம கட்சியில யாருகிட்டேயும் ஒற்றுமை இல்லை’ என்றார்களாம். விஜயகாந்த் தலையாட்டியபடி, ‘எல்லாத்தையும் சரிபண்ணிடலாம்!’ என்று மட்டும் சொல்லியிருக்கிறார்.”

”திருப்பூர்?”

‘திருப்பூரைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர், ‘தமிழகத்துல பி.ஜே.பி போட்டியிட்ட தொகுதியில் எல்லாம் நம்ம கட்சிக்காரங்க இறங்கி வேலை செஞ்சாங்க. ஆனா, நாம போட்டியிட்ட இடத்துல அவங்க வேலை செய்யவே இல்லை. அதேபோல பத்திரிகைக்காரங்களை நாம நடத்துற விதம் சரியில்லை. எல்லா கட்சியிலேயும் அந்தக் கட்சி சம்பந்தமான தகவல்களை பத்திரிகையாளர்களுடன் அதிகாரபூர்வமாக பகிர்ந்துகொள்ள பலர் இருக்காங்க. நம்ம கட்சியில யாரும் பேச முடியலை. பேசுற அதிகாரமும் யாருக்கும் கிடையாது. இதே நிலை நீடித்தால் அது நமக்கு எதிராகத்தான் முடியும்.

நாமதான் எதிர்க்கட்சி என்பதையே மறந்துட்டோம். எதிர்க்கட்சியா நாம செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு. மக்களும் உங்ககிட்ட நிறைய எதிர்பார்க்கிறாங்க கேப்டன். அதை நாம யாரும் செய்யவே இல்லை’ என்று சொன்னதை, பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாகக் கேட்டுக்கொண்டாராம் விஜயகாந்த்.”

”தூத்துக்குடி?”

”தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் பொன்ராஜ், தெற்கு மாவட்டச் செயலாளர் சண்முகராஜா ஆகிய இருவரும் விஜயகாந்த்தை சந்தித்திருக்கின்றனர். ‘உங்க ரெண்டு பேரைப் பற்றியுமே நிறைய புகார் இருக்கு. சண்முகராஜா செயல்பாடுகளில் வேகம் இல்லை; பொன்ராஜ் யாரையும் வளரவே விடுவது இல்லை என்று எனக்கு ஏகப்பட்ட புகார் வருது. அப்படியெல்லாம் இருக்கக் கூடாது. சட்டமன்றத் தேர்தல்ல உங்க மாவட்டத்துல இருக்கும் தொகுதியில் யாரை நிறுத்தினா ஜெயிக்க முடியுமோ அவரை வளர்த்துவிடும் வழியைப் பாருங்க…’ என்று விஜயகாந்த் சொல்ல… இருவரும் தலையை மட்டும் ஆட்டிவிட்டு அமைதியாகத் திரும்பியிருக்கிறார்கள்.”

”திருவண்ணாமலை?”

”திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் பேசும்போது, ‘பா.ம.க நமக்கு பல தொகுதியில் சரியாக வேலை செய்யவில்லை என்றாலும், எங்கள் தொகுதியில் தே.மு.தி.க ஓட்டுகள் பா.ம.க-வுக்கு கணிசமாக விழுந்துள்ளன. இதை அவர்களும் மறுக்கவில்லை’ என்று சொல்லியிருக்கிறார். அதற்கு விஜயகாந்த், ‘திருவண்ணாமலையைப் பற்றி எனக்குத் தெரியும். நீங்க புது உறுப்பினர்களைச் சேர்க்கும் வேலையைத் தீவிரமா பாருங்க. அடிக்கடி கட்சி ஆலோசனை கூட்டம் நடத்துங்க!’ என்று சொன்னாராம்.”

”வேலூர்?”

”வேலூர் தே.மு.தி.க மாவட்டச் செயலாளர் விஸ்வநாதன், ‘ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி தொகுதிகளில் தமிழக அமைச்சர் வீரமணி முஸ்லிம் ஓட்டுகள் தி.மு.க-வுக்கு செல்லாமல் தடுத்துவிட்டார். இங்குள்ள பல தொழிலதிபர்கள் தங்கள் சொந்தப் பணத்தைச் செலவழித்து அ.தி.மு.க வேட்பாளரை ஜெயிக்க வைத்தனர். ராமதாஸ் மட்டும் இங்கே ஒரு முறை பிரசாரத்துக்கு வந்திருந்தால், சுலபமாக ஜெயித்திருக்கலாம். அதேபோல பண விஷயத்திலும் சரியான முறை இங்கே கையாளப்படவில்லை’ என்று விஜயகாந்த்திடம் சொன்னாராம். ‘தேர்தல் நிதியை யாரெல்லாம் சரியாச் செலவு செய்யவில்லை என்ற லிஸ்ட் உடனே எனக்குக் கொடுங்க. அவங்க எல்லோரையும் பதவியைவிட்டு தூக்கிடுவோம். அவங்களை வெச்சுகிட்டு நாம மறுபடியும் எலெக்ஷனை சந்திக்க முடியாது!’ என்றாராம் விஜயகாந்த்!”

”திருச்சி?”

”மாவட்டச் செயலாளர் விஜயராஜன் கை நிறைய குற்றச்சாட்டுக்களுடன் போனாராம். அவர் ஏதேதோ சொல்ல ஆரம்பிக்க… ‘சுருக்கமாகச் சொல்லுங்க…’ என்றாராம் விஜயகாந்த். ‘கேப்டன்… பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக்னு சொல்லுவாங்களே… இப்போ நம்ம கட்சியும் அப்படித்தான் இருக்கு. கட்சியோட கிளைகளைப் பலப்படுத்தணும்!’ என்றாராம். அதற்கு விஜயகாந்த், ‘திருச்சியில நான் நிறுத்திய வேட்பாளருக்கு நீங்களே சரியா ஒத்துழைப்பு கொடுக்கலைன்னு சொல்றாங்க. இப்படியெல்லாம் இருக்கிறது நல்லது இல்ல!’ என்றாராம் கடுப்பாக.”

”திண்டுக்கல்?”

”திண்டுக்கல் மாவட்டத்தில் பூத் வாரியாக ஓட்டு வித்தியாசப் பட்டி​யலை கொண்டுசென்றார்களாம் நிர்வாகிகள். சில ஏரியா விவரங்களை மட்டும் கேட்டுக்கொண்ட விஜயகாந்த், ‘அதுக்கெல்லாம் வருத்தப்பட வேண்டாம். கம்யூனிஸ்ட், காங்கிரஸைவிட நமக்கு நல்லாத்தான் ஓட்டு கிடைச்சுருக்கு. ஆண்ட கட்சி தி.மு.க-வுக்கே ஒண்ணும் இல்லை. இதுல நாம வருத்தப்பட எதுவும் இல்லை. மோடிக்கும் எனக்கும் நல்ல உறவு இருக்கு… நாம எந்தப் பிரச்னையைச் சொன்னாலும் கண்டிப்பா அவர் நடவடிக்கை எடுப்பாரு!’ என்று சொன்னாராம்!”

”விருதுநகர்?”

”விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள், ‘பணம்தான் இங்கே வைகோவை தோற்கடிக்கச் செய்துவிட்டது. மற்றபடி நாங்கள் முழு மனதோடு வேலை பார்த்தோம்!’ என்றார்களாம். அதற்கு விஜயகாந்த், ‘விருதுநகருக்கு நான் பிரசாரத்துக்கு வந்தபோது, அங்கிருந்த எழுச்சியைப் பார்த்து அசந்துட்டேன். லட்சம் ஓட்டு வித்தியாசத்துல வைகோ ஜெயிப்பாருன்னு எதிர்பார்த்தேன். 200 ரூபாயை வாங்கிட்டு மக்கள் இப்படி மாறுவாங்கன்னு நான் எதிர்பார்க்கலை. இதுல வைகோவுக்கு எந்த இழப்பும் இல்லை. விருதுநகர் தொகுதி மக்களுக்குத்தான் இழப்பு. நாடாளுமன்றத்துக்குதான் இழப்பு!’ என்றாராம். ‘ஆமாங்க கேப்டன்…’ என்று சொல்லியிருக்கிறார்கள் நிர்வாகிகள். தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகளுடன் சந்திப்பு நடந்துவருகிறது” என்ற கழுகார், அடுத்த செய்திக்குத் தாவினார்.

”தயாளுவைத் தொடர்ந்து தயாநிதி தலை உருள்கிறது. சி.பி.ஐ இப்போது பி.எஸ்.என்.எல் விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது. டெல்லியில் உள்ள அதிகாரிகளே இதனை ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர். அரசுத் துறையின் மிக மூத்த அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகள், நடவடிக்கைகள், ஃபைல்கள் ஆகியவை சம்பந்தமாக, மூன்று மாத காலத்துக்கு யாரும் எந்த முடிவும் எடுக்க வேண்டாம். மேல் நடவடிக்கையும் வேண்டாம்’ என்று உத்தரவு போட்டாராம். அப்போது மத்திய உள்துறை அதிகாரிகளும் இருந்துள்ளனர். உள்துறை கன்ட்ரோலில்தானே சி.பி.ஐ-யும் வருகிறது. ஆனால், தயாநிதி மாறன் சம்பந்தப்பட்ட பி.எஸ்.என்.எல் விவகாரத்தை, சி.பி.ஐ மும்முரமாக தூசிதட்டிக் கிளம்பியிருப்பதைப் பார்த்தால், ஏன் இந்த ஆவேசம் என்றுதான் பலரும் யோசிக்கின்றனர். இந்திய அளவில் சி.பி.ஐ சினங்கொண்ட நிலையில் செய்யும் ஆபரேஷன் இது மட்டும்தான் என்றும் சொல்கிறார்கள்.

அமைச்சர்கள் அளவிலான மினி மீட்டிங் ஒன்று பிரதமர் அலுவலகத்தில் நடந்துள்ளது. அதில் அருண் ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டார்களாம். ‘மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்துக்குப் பதில் சொல்ல வேண்டிய விவகாரங்கள் எவை?’ என்பதுதான் அந்தக் கூட்டத்தின் சாராம்சம். ஸ்பெக்ட்ரம் வழக்கு உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடப்பது, வெளிநாட்டில் பதுக்கிவைக்கப்பட்ட கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவருவது ஆகிய இரண்டும்தான் உச்ச நீதிமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டியது என்று சொல்லப்பட்டது. கறுப்புப் பண விவகாரத்தில் விசாரணைக் குழுவை மோடி அமைத்துவிட்டார். ஸ்பெக்ட்ரம் பற்றி பேச்சு வந்தபோது, ‘அது சி.பி.ஐ-யின் நடவடிக்கைப்படி நடக்கலாம்’ என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டாராம். எனவே, இதுவரை இருந்த அரசியல் நெருக்கடிகள் இல்லாமல் சுதந்திரமாகச் செயல்படும் சூழ்நிலை உருவாகிவிட்டதாக நினைக்கிறார்களாம் சி.பி.ஐ அதிகாரிகள். அதனுடைய வெளிப்பாடுதான் சன் டி.வி-யில் பணியாற்றி வெளியேறிய சக்சேனா, சரத்குமார் ஆகிய இருவரையும் சி.பி.ஐ தனது விசாரணை வளையத்துக்கு கொண்டுவந்திருப்பது!”

”சொல்லும்!”

”2004-ம் ஆண்டு மே மாதம் முதல் 2007-ம் ஆண்டு மே மாதம் வரை மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தார் தயாநிதி மாறன். இவரது குடும்பத்துக்கும் மு.க.அழகிரிக்கும் ஏற்பட்ட மோதலால் பதவியை இழந்தார். ‘மத்திய அமைச்சர் என்ற முறையில் தயாநிதி மாறன் வீட்டில் இருந்த தொலைபேசி இணைப்பு, முறைகேடாக சன் டி.வி-யின் ஒளிபரப்பு விஷயத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது. இதற்காக தயாநிதி மாறன் வீட்டில் ஒரு தனி டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்து 3.4 கி.மீ தொலைவில் உள்ள சன் டி.வி அலுவலகத்துக்கு பூமிக்கு அடியில் பள்ளம் தோண்டி கேபிள் இணைப்பு கொடுக்கப்பட்டது. இப்படி தனக்குக் கொடுக்கப்பட்ட இலவச தொலைபேசி வசதியை, தயாநிதி மாறன் சன் டி.வி-யின் ஒளிபரப்புக்குப் பயன்படுத்தியதால் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டது’ என்று சொல்லப்பட்டது. இந்த விவகாரம் வெளியானதும் சி.பி.ஐ இந்த வழக்கை எடுத்து விசாரிக்க ஆரம்பித்தது. எஃப்.ஐ.ஆர் நிலையிலேயே  அது பல மாதங்கள் கிடந்தது. தயாநிதி மாறன், பி.எஸ்.என்.எல் அதிகாரிகளான பிரமானந்தம், வேலுசாமி ஆகியோர் மீது வழக்கு பதிவானது. ஆனால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருந்தது. தேர்தல் முடிந்து, ஆட்சி மாற்றம் நடந்த பிறகு சூடுபிடித்துள்ளது இந்த விவகாரம்!”

”சரத்குமார், சக்சேனா ஆகியோர் சி.பி.ஐ விசாரணையில் என்ன சொன்னார்களாம்?”

”சி.பி.ஐ டி.எஸ்.பி-யான ராஜேஸ் மகேந்திராதான் இவர்களிடம் விசாரணை நடத்திவருபவர். கடந்த 7-ம் தேதி சக்சேனாவை மட்டும் அழைத்து சாதாரணமாகப் பேசிவிட்டு அனுப்பிவிட்டார். ‘நான் சினிமா தொடர்பான விவகாரங்களைக் கவனித்தவன். அதனால், எனக்கு டெக்னிக்கல் விஷயங்கள் தெரியாது’ என்று சொன்னாராம். அப்படியானால், சரத்குமாருக்கு இது தெரிந்திருக்கலாமோ என்றுதான் மறுநாள் சரத்குமாரை அழைக்க முடிவுசெய்தார்கள். 8-ம் தேதி மதியம் சக்சேனா வந்த கால் மணி நேரத்துக்குள் சரத்குமார் வந்தார். இருவரையும் தனித்தனியாக விசாரித்தனர். டி.எஸ்.பி தலைமையில் நான்கு அதிகாரிகள் இருப்பதால், இரண்டு டீமாக பிரிந்து இவர்களை விசாரித்தனர். ‘அந்தப் பிரச்னை வெளிவந்தபோது நான் சன் டி.வி-யில் இல்லை.’ என்று கூறியுள்ளார் சரத்குமார். ‘இதுபற்றி சன் டி.வி டெக்னிக்கல் பிரிவு ஊழியர்களிடம் விசாரணை நடத்துங்கள்’ என்றும் இவர் சொன்னாராம்”

”அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?”

”இதுபற்றி பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் தரப்பில், ‘இது முழுக்க முழுக்க டெக்னிக்கலான விஷயம். 323 தொலைபேசி இணைப்புகள் கொண்ட சிறிய தொலைபேசி இணைப்பகம் ஒன்றை தயாநிதி மாறன் தனது வீட்டில் வைத்திருந்ததும், அதன்மூலமாக பல லட்சம் அழைப்புகள் சென்றுள்ளதும் தொழில்நுட்பரீதியாக கண்டு​பிடிக்கப்​பட்டுவிட்டது. இதில் சக்சேனா, சரத்குமார் போன்றவர்கள் சொல்வதற்கு எதுவும் இல்லை. அவர்கள் மூலமாக ஏதாவது விஷயம் கிடைக்கிறதா என்பதைப் பார்க்கவும், இந்த வழக்கை சி.பி.ஐ மீண்டும் வேகமாக எடுக்கப்போகிறது என்பதைக் காட்டுவதற்காகவும் இந்த விசாரணையை நடத்துகின்றனர்’ என்று சொல்லப்படுகிறது. அடுத்த வாரத்தில் சரத்குமார், சக்சேனா ஆகிய இருவரும் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு முழுமையான வாக்குமூலம் வாங்கப்படலாம் என்றும் சொல்கின்றனர்.”

”பி.ஜே.பி ஆட்சி என்ன முடிவு எடுக்கும்?”

”அது​தான் சொன்​னேனே… ‘சி.பி.ஐ கையில் முழுமையான அதிகாரத்தை தந்துவிட்டார் மோடி’ என்று!” என்று சொல்லிவிட்டு, அடுத்த மேட்டருக்கு போனார் கழுகார்.

”அ.தி.மு.க வட்டாரத்தில் மீண்டும் அதிகார மையங்கள் உருவாகிவருகின்றன என்று அமைச்சர்கள் அரசல்புரசலாகப் பேசிக்​கொள்கிறார்கள். இதில் முக்கியமானவராகச் சொல்லப்படுகிறார் டாக்டர் வெங்கடேஷ். சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகன் இவர். டி.டி.வி.தினகரன் மனைவி அனுராதாவின் சகோதரர். இவர் தொடங்கிய ஸ்கேன் சென்டரை முன்பு ஜெயலலிதாவே வந்து திறந்துவைத்தார். கட்சியின் இளைஞர்கள், இளம்பெண்கள் பாசறை பொறுப்பாளராகவும் இவர் ஆக்கப்பட்டார். சசிகலா குடும்பத்தினர் களையெடுப்புக்குப் பிறகு, கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். சசிகலா போயஸ் கார்டனுக்குள் சேர்க்கப்பட்டாலும், மற்றவர்கள் கார்டனுக்குள் நுழைய முடியாமல் இருக்கிறார்கள். இந்த நிலையில் டாக்டர் வெங்கடேஷ், தனது கோதாவை தொடங்கிவிட்டதாக கட்சிக்காரர்கள் புலம்புகின்றனர். ‘அமைச்சர்கள் சிலருக்கு திடீரென போன் வருகிறது. டாக்டருக்குப் பேசுங்க என்று சொல்கிறது அந்தக் குரல். பேசலாமா வேண்டாமா என்று குழம்பிப்போகிறார்கள் அமைச்சர்கள். பேசினாலும் குற்றம், பேசாவிட்டாலும் குற்றம் என்று தவிக்கின்றனர். டாக்டருக்கு உண்மையில் கார்டனுக்குள் செல்வாக்கு இருக்கிறதா, இல்லையா என்பதே பல அமைச்சர்களுக்குத் தெரியவில்லை. இதுபற்றி மற்றவர்களிடம் கேட்கவும் பயப்படுகிறார்கள்’ என்று சொல்கிறார்கள்.

‘சில அமைச்சர்கள் டாக்டருக்கே போன் செய்து பேசியிருக்கிறார்கள். சிலர் அவரை நேரடியாகவும் சந்திக்கிறார்கள். பதவியை இழந்தவர்கள் இவரைச் சென்று சந்தித்ததன் மூலமாகப் பதவியை மீண்டும் அடைந்துள்ளனர். இதனை வைத்துப் பார்க்கும்போது, டாக்டர் செல்வாக்கை அடைந்துவிட்டார் என்றே நம்ப வேண்டி இருக்கிறது’ என்கிறார்கள். இப்படியே ஒவ்வொருவராக உள்ளே நுழைய வாய்ப்பு இருக்கிறது” என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்!

ஹைதராபாத் ராமோஜிராவ் சிட்டியில் ‘லிங்கா’ பட ஷூட்டிங்கில் இருந்தார் ரஜினி. சனிக்கிழமை திடீரென்று அங்கிருந்து புறப்பட்டு சென்னை வந்தார். ‘வீட்டுக்குப் போய்விட்டு வருகிறேன்’ என்றுதான் கிளம்பி வந்தாராம். ஆனால், ஞாயிறு அன்று காலையில் கோபாலபுரம் போனார். கருணாநிதியைச் சந்தித்தார். கருணாநிதியின் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொல்லப் போனதாகவும், ‘கோச்சடையான்’ படம் பார்க்க அழைத்ததாகவும் கூறப்படுகிறது. ரஜினியை அழகிரி சந்தித்துப் பேசிய பிறகு, கருணாநிதியை ரஜினி சந்திக்கவே இல்லை. அது சம்பந்தமாக சில விளக்கங்களைச் சொல்வதற்காகத்தான் கருணாநிதியை ரஜினி சந்தித்ததாகச் சொல்கிறார்கள்.

”நாம் சபதம் ஏற்போம்!”

மு.க.ஸ்டாலினின் நேர்முக உதவியாளர் ம.அரிகிருஷ்ணன் மகள் சரண்யாவுக்கும் ஆனந்த்துக்கும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் 9-ம் தேதி திருமணம் நடந்தது. ஸ்டாலின் தலைமையேற்று திருமணத்தை நடத்திவைத்தார். அப்போது பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர், ‘இன்று முதல் நாம் ஒரு சபதம் ஏற்போம். தளபதிதான் வருங்காலத் தமிழகம் என்று அனைவரும் சபதம் ஏற்போம்’ என்று பேசினாராம். துரைமுருகன், பொன்முடி, முரசொலி செல்வம் ஆகியோர் இருந்த மேடை அது. ஆனாலும், யாரும் இதனை ரசிக்கவில்லையாம். ”தேவையில்லாமல் இப்படிப் பேசி ஏன் பிரச்னைகளை உருவாக்க வேண்டும்?’ என்று கட்சித் தொண்டர்கள் மத்தியிலேயே பேச்சு எழுந்தது.

மிரட்டும் சாட்சி!

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் சூடு குறையாமல் கொதித்துக்கொண்டு இருக்கிறது. ‘சென்னை வந்த ஷாகித் பால்வா, அப்போது துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினைச் சந்தித்தார்’ என்று ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்ஷா அளித்த வாக்குமூலம் கடந்த வாரத்தில் லீக் ஆனது. ‘சி.பி.ஐ மூலமாக நீதிபதியிடம் எந்த ரகசிய வாக்குமூலமும் கொடுக்கக் கூடாது’ என்று சிலர் மிரட்டல் விடுக்க… பிரஷர் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டார் சாதிக் பாட்ஷா. இந்த நிலையில் அவர் அளித்த வாக்குமூலம் செல்லுமா, செல்லாதா என்ற விவாதம் ஒரு பக்கம் நடந்துவருகிறது.

இந்த நிலையில் சாதிக் பாட்ஷாவின் நண்பர் ஒருவர், ‘சாதிக் இறந்தார் என்பதால், அவரது வாக்குமூலம் செல்லாததாக ஆகலாம். ஆனால், அப்போது நடந்த விஷயங்கள் அனைத்தையும் சாதிக் சார்பாக செய்தவன் நான்தான். எனவே, நான் அனைத்தையும் சொல்வேன்’ என்று மிரட்ட ஆரம்பித்துள்ளாராம். ‘சாதிக் தொடங்கிய ரியல் எஸ்டேட் கம்பெனியில் அவருக்கு உதவியாக இருந்தவர் இவர். பால்வா சென்னை விமான நிலையத்துக்கு வந்து இறங்கியது முதல் திரும்பிச் சென்றது வரை அவரோடு உடன் சென்றவர் இவர். சாதிக் பாட்ஷாவைவிட இவருக்குத்தான் அனைத்தும் முழுமையாகத் தெரியும்’ என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஏற்கெனவே, இவரை சி.பி.ஐ விசாரித்தும் உள்ளதாம்!

ஒன்றிணைக்கிறார் பழ.நெடுமாறன்!

திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க அந்தக் கட்சியின் தலைவர் கி.வீரமணி முயற்சிகள் எடுத்துவரும் நிலையில், தமிழ்த் தேசியக் கொள்கை கொண்ட அமைப்புகளை ஒன்றிணைக்க தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் முயற்சிகள் எடுத்து​வருகிறார். தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட தமிழ்த் தேசிய அமைப்புகள் உள்ளது. அனைத்து இயக்கப் பொறுப்பாளர்களையும் ஜூன் 29-ம் தேதி தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் நினைவகத்துக்கு வரச் சொல்லியிருக்கிறாராம் பழ.நெடுமாறன்.

ரியாக்ஷன் இல்லாத மன்மோகன்!

நாடாளுமன்ற மைய மண்டபக் கூட்டத்தில் நடந்த கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது முதல் உரையை ஆற்றினார். ஜனாதிபதி மாளிகையில் இருந்து வழக்கமான கம்பீரத்துடன் வந்த பிரணாப் முகர்ஜியை வாசலில் நின்று வரவேற்று அழைத்துச் சென்றார் நரேந்திர மோடி. அதேபோல், நிகழ்ச்சி முடிந்ததும் வாசல் வரை வந்து வழியனுப்பிச் சென்றார் மோடி. ‘இதுபோன்ற மரியாதைக்குரிய அழைப்பு நேரங்களில்  தலைவர்கள் பேசிக்கொள்ள மாட்டார்கள். ஆனால், பிரதமரிடம் ஜனாதிபதி சகஜமாக பேசிச் சென்றது ஆச்சர்யமானது’ என்கிறார்கள்.

இந்தக் கூட்டத்துக்கான இருக்கை போடப்பட்டு இருந்ததிலும், அரசியல் இருந்தது. மூன்று மூன்று பேர் உட்காருவதற்கான இருக்கை அது. ஒரு சோபாவில் நடுவில் அருண் ஜெட்லி இருக்க, அவரது இரண்டு பக்கமும் இன்றைய பிரதமர் மோடியும் முன்னாள் பிரதமர் மன்மோகனும் உட்கார்ந்து இருந்தார்கள். அடுத்த சோபாவில் சோனியா நடுவில் உட்கார்ந்திருக்க, அவருக்கு ஒரு பக்கத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் முன்னாள் துணை பிரதமர் அத்வானியும் உட்கார்ந்து இருந்தார்கள்.

ஜனாதிபதி வாசித்தாலும், இது பி.ஜே.பி அரசின் உரை இது. ஆரம்பத்திலேயே, ‘பெரும்பான்மை பலத்துடன் அமைந்துள்ள இந்த ஆட்சிக்குப் பாராட்டுக்கள்’ என்று பிரணாப் சொன்னதும், மோடி உள்பட பி.ஜே.பி. எம்.பி-க்கள் அனைவரும் மேஜையைத் தட்டினார்கள். முன்வரிசையில் இருந்த சோனியாவும் மன்மோகனும் அமைதியாக இருந்தார்கள். பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு அமலாகும் என்று பிரணாப் சொன்னபோது, சோனியா மேஜையைத் தட்டினார். அப்போதும் மன்மோகன் ரியாக்ஷன் காட்டவே இல்லை.

தனது உரையை நிகழ்த்துவிட்டு புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி, இவர்கள் இருவருக்கும் மறக்காமல் வணக்கம் வைத்துச் சென்றார். 

%d bloggers like this: