முடிவு உங்கள் கையில்!

உடல் நன்றாக இருக்க வேண்டும் என்றால், மனம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஆனால், இன்றைய சூழ்நிலையில், வேலைக்கு செல்லாத பெண்களுக்கு ஒரு வகை பிரச்னை என்றால், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மற்றொரு வகை பிரச்னை. வாழ்க்கையில் பிரச்னைகள் வந்து கொண்டும், போகக் கொண்டும் தான் இருக்கும்.
இதை எளிதாக எடுத்துக் கொள்ளாமல், அதிலே மனதை மூழ்கவிட்டால், பின், அதிலிருந்து மீள முடியாது. அதற்கு பதில், பிரச்னைகளை ஏற்றுக் கொண்டு, அவற்றை சமாளிக்கும் செயல்களில் ஈடுபட்டால், மனம் பலப்படுவதுடன், நம்மால் எதையும் சமாளிக்க முடியும் என்ற, தன்னம்பிக்கையும் ஏற்படும்.
இன்று நிறைய பெண்களுக்கு, தங்கள் மீதான நம்பிக்கை குறைவாக உள்ளது. ஒரு செயலை செய்து முடித்த பின்பும் கூட, அதில் மனதிருப்தி அடையாமல் உள்ளனர். வேலையை செய்யும் முன், மட்டுமல்லாமல், செய்து முடித்தபின்னும், படபடப்பாகவே இருக்கின்றனர். இது கூடாது. ஒரு செயலை செய்யும்போது, அதில், மனதை முழுமையாக செலுத்துவதுடன், அதில், திருப்தி அடைய வேண்டும்.

கடையில், வெகுநேரம் ஒரு புடவையை புரட்டிப் பார்த்து வாங்கி, பின், வீட்டிற்கு வந்தவுடன் பிரித்துப் பார்க்கும் போது, உங்கள் எண்ணமே வேறாகி விடுகிறது. ‘இதைப் போய் எடுத்து விட்டோமே… இதை விட, அந்த புடவை நன்றாக இருந்தது. அதை எடுத்திருக்கலாம்…’ என்று, மனம் நினைக்கிறது; எரிச்சல் வருகிறது. இதனால், அன்று முழுவதும் செய்யும் செயல்கள் எதுவும், ஒழுங்காக இருப்பதில்லை.
இதைப் போன்று பல சந்தர்ப்பங்களில் முடிவு எடுப்பதும், பின், அது சரியில்லை என்ற எண்ணமும் உங்களுக்கு ஏற்படுகிறது என்றால், நீங்கள் உறுதியான முடிவு எடுக்கவில்லை என்று அர்த்தம். ஒரு முடிவு செய்து, புடவை எடுத்து விட்டீர்கள். இதைப் பற்றி, பிறர் என்ன அபிப்ராயம் கூறினாலும், அதைப் பொருட்படுத்தக் கூடாது என்று, தீர்மானம் செய்து கொள்ள வேண்டும்.
கடையில் புடவையை தேர்வு செய்த உடன், ‘இந்த புடவை நன்றாக உள்ளது; எனக்கு பொருத்தமாக இருக்கும். இந்த நினைவு மாறாது, பிறர் என்ன கூறினாலும், அதற்காக நான் மன வருத்தப்பட மாட்டேன். இந்தப் புடவையை வாங்கி விட்டேன்…’ என்று, கடையிலேயே, உங்கள் மனசஞ்சலங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள். பின், வீட்டில் வந்து பார்த்தாலும், யார் எதை சொன்னாலும், கவலைப்படாமல் இருக்கலாம்.
இதைப்போலவே, எந்த ஒரு செயலிலும், அந்த இடத்திலேயே, ‘இதை வாங்கப் போகிறேன், இவ்வாறு செய்யப் போகிறேன். இதைப் பற்றி, பின் நினைத்து, கவலைப்பட மாட்டேன்…’ என்று உறுதி எடுத்து, உங்கள் மனதை பக்குவப்பட பழக்கிக் கொள்ளுங்கள். இப்படி உறுதி எடுத்துக் கொள்ளும் போது, மனதை வேறு எதிலும் செலுத்தாமல், அமைதிப்படுத்தி, மூச்சை சீராக வைத்து, பின், முடிவு செய்யுங்கள்.
தேவையானால், எடுத்த முடிவு தவறு என்று தெரிந்தால், ஒரு முறைக்கு, பலமுறை சிந்தித்து, எடுத்த முடிவை மாற்றிக் கொள்ளுங்கள். பதற்றப்படாமல், பயப்படாமல், உணர்ச்சி வசப்படாமல், நீங்கள் ஒவ்வொரு முறையும் முடிவு எடுத்தால், அந்த முடிவு சரியாகவே இருக்கும்.
எனவே, மன திருப்தியுடன் இருங்கள்; எல்லாவற்றையும் ஆராய்ந்து முடிவு செய்யுங்கள்

%d bloggers like this: