அதிகார குவிப்பை இழக்கும் திமுக மாவட்டச் செயலாளர்கள்…நிர்வாக மாவட்டங்கள் 65 ஆக பிரிப்பு!

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து, திமுகவை வலிமைப்படுத்துவதற்கான நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும் அக்க்கட்சியின்  நிர்வாக மாவட்டங்கள் 65 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டாண்டு காலமாக கட்சியில் கோலோச்சி வந்த பல திமுக மாவட்டச் செயலாளர்களின் அதிகார வரம்பு குறைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோற்றது தி.மு.க. இந்தத் தோல்வியால் அதிர்ச்சியடைந்த கருணாநிதி, கடந்த ஜூன் 2-ம் தேதி கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தைக் கூட்டி, அதுபற்றி ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து ”கழக உயர்நிலை செயல்திட்டக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையொட்டி, மாவட்டக் கழக நிர்வாகங்களை எளிமையாக்குவதற்கும் மேலும் வலிமைப்படுத்துவதற்கும் ஏற்ற வகையில், தேவையான சாத்தியக்கூறுகளை ஆய்ந்து முடிவெடுக்கவும் கழகத் தலைமைக்கு பரிந்துரைசெய்யவும் குழு அமைக்கப்படுகிறது” என்று அறிவித்த கருணாநிதி, அந்தக் குழுவில்  கலசப்பாக்கம் திருவேங்கடம், திருத்துறைப்பூண்டி கல்யாணசுந்தரம், ஒரத்தநாடு ராஜமாணிக்கம், தங்கம் தென்னரசு, வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஈரோடு சச்சிதானந்தம் ஆகிய ஆறு பேரை நியமிப்பதாக தெரிவித்திருந்தார்.
மாவட்டக் கழக நிர்வாகங்களை எளிமைப்படுத்தி, மேலும் வலுவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து முடிவெடுப்​பதற்காக இந்த குழு ஏற்படுத்தப்பட்ட நிலையில், இக்குழுவினருடன் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், கடந்த சில தினங்களாக கட்சித் தலைவர் கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வந்தனர்

.

இந்நிலையில் இந்த  மறுசீரமைப்பு குழு அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட பரிந்துரையின்படி தமிழகம் முழுவதும்  திமுக நிர்வாக மாவட்டங்கள் 65 ஆக பிரிக்கப்பட்டுள்ளது.

இதுக்குறித்து, திமுக தலைமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "கடந்த 3-2-2012 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, வருவாய் மாவட்ட எல்லைக்குட்பட்டு ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டக் கழகங்களோ அமையும் என்ற திருத்தத்தின் அடிப்படையில் கடந்த 2-6-2014 அன்று கூடிய திமுக உயர் நிலைச் செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் மாவட்டக் கழக அமைப்புகளை எளிமைப்படுத்தவும், அவற்றின் செயல்பாடுகளை வலிமைப்படுத்தவும் உரிய பரிந்துரைகளை வழங்குவதற்கு குழு ஒன்றை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

அவ்வாறு அமைக்கப்பட்ட குழுவினர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் வருவாய் மாவட்டங்களில் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய 65 மாவட்டக்கழகங்கள் அமையும். புதிதாக அமையவிருக்கும் மாவட்டக் கழக எல்லைகளுக்குள் அடங்கக் கூடிய ஒன்றிய மற்றும் நகரக் கழகங்கள் யாவை என்பது விரைவில் அறிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து ஒன்றிய, நகர, மாவட்டக் கழக அமைப்பு களுக்கான தேர்தல்கள் நடைபெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடிவுக்கு வரும் அதிகார குவிப்பு…

இதன்மூலம் 4 முதல் 6 மாவட்டங்களுக்கான திமுக நிர்வாக பொறுப்புகள், கட்சி விவகாரங்கள், போராட்டங்கள், வேட்பாளர் தேர்வு, கட்சி நிர்வாகிகள் தேர்வு போன்றவற்றை தங்களது பிடியில் வைத்துக்கொண்டு, தங்களது சொற்பேச்சு கேட்டு நடப்பார்கள் என்ற நம்பிக்கையில்,  தங்களுக்கு வேண்டப்பட்ட நபர்களுக்கு மட்டுமே கட்சியில் பொறுப்பு, வேட்பாளர் வாய்ப்பு போன்றவற்றை அளித்துவந்த மாவட்டச் செயலாளர்களின் அதிகார எல்லைகள் மற்றும் அதிகார குவிப்புகள் முடிவுக்கு வருகிறது.

மூன்று முதல் நான்கு நிர்வாக மாவட்டங்களாக…

எந்தெந்த மாவட்டங்கள் எத்தனை நிர்வாக மாவட்டங்களாக பிரிக்கப்படுகின்றன, பரிந்துரையில் வேறு என்ன கூறப்பட்டுள்ளது என்பது குறித்து திமுக தலைமை அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்காவிட்டாலும், பல மாவட்டங்களை மூன்று முதல் நான்கு நிர்வாக மாவட்டங்களாக பிரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக மதுரை, திருச்சி, கோவை போன்ற மாவட்டங்களை 4 மாவட்டங்களாக பிரிக்கவும், விழுப்புரம் மற்றும் சென்னை மாவட்டங்களை 3 ஆக பிரிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இளைஞர்கள், சாதி செல்வாக்கு…

மேலும் இவ்வாறு பிரிக்கப்படும் நிர்வாக மாவட்டங்களில் அந்தந்த பகுதியில் சிறப்பாக செயல்படும் படித்த இளைஞர்களுக்கும், குறிப்பிட்ட தொகுதிகளில் அதிகமாக இருக்கும் சாதி மக்களின் வாக்குகளை பெறும் நோக்கத்துடன் அந்த சாதியில் செல்வாக்கு உடையவர்களை கட்சியின் பொறுப்புக்கு நியமிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.

கட்சியின் இந்த சீரமைப்பு நடவடிக்கைகள் திமுகவுக்கு பலனளிக்குமா என்பது அடுத்த தேர்தலில்தான் தெரியும்!

%d bloggers like this: