பொருளாதாரச் சீர்திருத்தம்: அர்த்தகிராந்தியின் யோசனைகள் சாத்தியமா?

நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமாகச் செய்யவேண்டிய சீர்திருத்தங்களைப் பற்றி   அக்கறையுடன் விவாதித்துவரும் புனேவைச் சேர்ந்த ஆடிட்டர்கள் சிலர் அர்த்தகிராந்தி என்கிற அமைப்பை நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு  பிரதமர் வேட்பாளராக இருந்த நரேந்திர மோடியை சந்தித்து, சில  யோசனைகளை முன்வைக்க நேரம் கேட்டனர்.

நரேந்திர மோடி, அர்த்தகிராந்தி அமைப்பினருக்கு 9 நிமிடங்களை ஒதுக்கித்தந்தார். இந்த 9 நிமிடங்களுக்குள் அத்தனை யோசனைகளையும் சுருக்கமாகச் சொல்லிவிட வேண்டும் என்பது அவர்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை. ஆனால், தங்கள் யோசனையின் தாத்பரியங்களை அர்த்தகிராந்தி அமைப்பினர் எடுத்துச்சொல்ல ஆரம்பித்தவுடன், அதைக் கவனமாகக் கேட்க ஆரம்பித்த மோடி, ஏறக்குறைய இரண்டு மணி நேரம் ஒதுக்கி, விளக்கமாகக் கேட்டுத் தெரிந்துகொண்டாராம்.

அர்த்தகிராந்தி அமைப்பினர் அப்படி என்ன யோசனைகளை மோடியிடம் எடுத்துச் சொன்னார்கள்?

இந்த அமைப்பினர் முக்கியமான ஐந்து யோசனைகளை மோடியிடம் முன்வைத்தனர். அந்த யோசனைகள்…

1. இந்தியாவில் இறக்குமதி வரியைத் தவிர, மற்றபடி இருக்கும் 56 வரிகளையும் (வருமான வரியும் இதில் அடங்கும்) நீக்க வேண்டும்.

2. 1000, 500, 100 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற்றுவிட்டு, அவற்றைப் புழக்கத்திலிருந்து முற்றிலும் அகற்ற வேண்டும்!

3. அதிக அளவிலான பணப் பரிமாற்றங்கள் வங்கிகள் மூலமாக காசோலை அல்லது ஆன்லைன்  முறையில் நடக்க வேண்டும்.

4. பணப் பரிவர்த்தனைக்கு வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும்; அதற்கு வரி விலக்கு அளிக்க  வேண்டும்.

5. அரசு வருமானம் என்பது ஒற்றைமுனை வரியாக இருக்க வேண்டும். அது வங்கிப் பரிவர்த்தனை வரி என்கிற பெயரில் இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் சமமான அளவில், அதாவது 2% என்கிற அளவில் விதிக்கப்பட வேண்டும்.

அர்த்தகிராந்தி அமைப்பினரின் இந்த யோசனைகள் பார்ப்பதற்குப் புதுமையாக இருந்தாலும், இவை எந்த அளவுக்கு நிஜத்தில் சாத்தியம் ஆகக்கூடியவை என்பது முக்கியமான கேள்வி. இந்தக் கேள்வியை நான்கு முக்கியமான நிதித் துறை நிபுணர்களிடம் கேட்டோம். அந்த முக்கியமானவர்கள் பற்றிச் சுருக்கமாக சில வார்த்தைகள்…

எம்.ஆர்.வெங்கடேஷ்: சென்னையின் பிரபல ஆடிட்டர்; பொருளாதாரச் சீர்திருத்தம் பற்றித் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருபவர்.

எம்.ஆர்.சிவராமன்: மத்திய அரசின் முன்னாள் நிதித் துறை செயலாளர்; நிதிக் கொள்கைகளில் பரந்துபட்ட அனுபவமும் அறிவும் கொண்டவர்.

ராஜரத்தினம்: வரித் துறை நிபுணர்; வரி விதிப்பு தொடர்பாகத் தொடர்ந்து எழுதி வருபவர்.

செல்வராஜ்: வருமான வரித் துறை முன்னாள் தலைமை ஆணையர்.

இறக்குமதி வரியைத் தவிர, அனைத்து 56 வரிகளும் நீக்கப்பட்டு, ஒற்றைமுனை வரி 2 சதவிகிதமாக விதிக்கப்பட வேண்டும் என்கிற அர்த்தகிராந்தியின் யோசனையை எம்.ஆர்.வெங்கடேஷிடம் கேட்டோம்.

‘இது இன்று பேசப்படும் விஷயமல்ல; கடந்த பத்து வருடங்களாக இந்த கருத்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இதனை உடனே அமல்படுத்த முடியுமா என்று கேட்டால், கடினம்தான். ஆனால், இதனை நன்கு திட்டமிட்டுச் செயல்படுத்தினால், இன்னும் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் இந்தத் திட்டத்தை நோக்கிய செயல்கள் நிச்சயம் சாத்தியமாகும். ஆனால், இதற்குள் அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டிருக்க வேண்டும். அனைத்து கிராமப்புறங்களிலும் வங்கிகள் கணினி மயமாக்கப்பட்டு இருக்க வேண்டும். அடிப்படை வங்கி வசதிகள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும்பட்சத்தில் இது நிச்சயம் சாத்தியமே” என்றார் உறுதியாக.

ஆனால், அர்த்தகிராந்தியின் இந்த யோசனை நடைமுறையில் சாத்தியமற்ற விஷயம் என்றார் மத்திய நிதித் துறையின் முன்னாள் செயலாளர் எம்.ஆர்.சிவராமன். ”வரி விதிப்பின் அடிப்படைக் கொள்கையே, அதிகம் சம்பாதிப்பவர் அதிகம் வரி செலுத்த வேண்டும்; குறைவாகச் சம்பாதிப்பவர் குறைவாக வரி செலுத்த வேண்டும் என்பதே. வருமான வரி உள்பட 56 வரிகளையும் ஒரேயடியாக நீக்கிவிட்டு, வங்கிப் பரிவர்த்தனை வரி மட்டும் கொண்டுவந்தால், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல், அனைவரும் 2 சதவிகித வரி கட்டவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவார்கள்.  அதாவது,  கூலி வேலை செய்பவரும் 2% வரி, பல ஆயிரம் கோடிகளைச் சம்பாதிப்பவரும் அதே 2% வரி என்பது எந்தவிதத்திலும் நியாயமானதாக இருக்காது.

அதுமட்டுமின்றி, 2 சதவிகித வரிதானே என இருந்துவிட முடியாது. ஒருவர் நம் கணக்கில் பணத்தைப் போடும்போது 2 சதவிகித வரி, அதை நாம் செலவு செய்யும்போது 2 சதவிகித வரி, அந்தப் பொருளை விற்று பணம் பெறும்போது 2 சதவிகித வரி என சங்கிலித் தொடராக இந்த வரி நீள்வதால், இது மக்களுக்கு மிகப் பெரிய சுமையாகவே இருக்கும். இதனால் மக்கள் வருத்தப்படவே செய்வார்கள்” என்றார்.

‘திடீரென இந்த 56 வரிகளையும் ரத்து செய்வது என்பது நடைமுறை சாத்தியமில்லாத ஒன்று” என்று தனது கருத்தைச் சொல்ல ஆரம்பித்தார் வருமான வரித் துறை முன்னாள் தலைமை ஆணையர் செல்வராஜ். ”இந்தியா போன்ற மிகப் பெரிய நாட்டில் இத்தகைய சோதனை முயற்சிகளை மேற்கொள்ள இயலாது. சமூகத்தில் பொருளாதாரச் சமத்துவத்தை ஓரளவாவது நடைமுறைப்படுத்த வருமான வரி கட்டாயம் தேவை. கூடுதல் வருவாய் ஈட்டுபவர், கூடுதல் வரி கட்ட வேண்டும் என்பதே வரி விதிப்பின் பின்னுள்ள அடிப்படைத் தத்துவம். இதைத் தவிர்த்து எல்லாருக்கும் ஒரேமாதிரியாக வரி விதிப்பது சமூக நலனுக்கு கேட்டையே விளைவிக்கும்” என்றார்.

வரித் துறை நிபுணரான ராஜரத்தினமும் இந்த யோசனையின் நடைமுறை சாத்தியம் பற்றி சந்தேகத்தையே கிளப்பினார். ”சில காலமாகச் சொல்லப்பட்டு வரும் யோசனை இது. இருக்கிற வரிகளைத் தவிர்த்து, வங்கிப் பரிவர்த்தனை வரி மூலம் நமது பொருளாதாரம் அபரிமிதமான வளர்ச்சி பெறும் என்கிறார்கள்.  அவரவர் தகுதிக்கேற்ப வரி விதிக்கப்பட வேண்டும். இந்தத் தகுதி என்பது ஒருவரது வருமானம் மட்டுமல்ல, சேர்த்துவைத்த சொத்துக்களும்தான். நேர்முக வரிகள் தவிர, பொருட்கள் மீதும் மறைமுக வரிகள் விதிக்கப்படுகின்றன. தற்போது அர்த்தகிராந்தியால் முன்வைக்கப்பட்டிருக்கும் இந்த வங்கிப் பரிவர்த்தனை வரியும் ஒரு மறைமுக வரிதான். இதனால் குறைந்த வருமானம் உள்ளவர்கள் அதிகம் பாதிப்படைவார்கள். தகுதி அடிப்படையை விட்டுவிட்டால் அது ஒரு முதலாளித்துவ நோக்கமாக அமைந்து, சமதர்ம ஆட்சிக்கு நேர் எதிரானதாக இருக்கும்” என்றார்.

1000, 500, 100 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்திலிருந்தே அகற்றுவது; பணப் பரிவர்த்தனைகள் காசோலை அல்லது டிடி அல்லது ஆன்லைன் மூலமாக இருக்க வேண்டும் என்பது அர்த்தகிராந்தி அமைப்பின் பிற பரிந்துரைகள். இந்தப் பரிந்துரைகள் பற்றியும் இவர்களிடம் கேட்டோம். இதுபற்றி சிவராமன் இப்படி சொன்னார்.

‘1000, 500, 100 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து அகற்றுவது ஊழலைத் தடுக்கும் என்று கூறுகிறார்கள். இது எந்தவிதத்திலும் சாத்தியமாகாது. இவர்கள் கூறுவதுபோல், அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து நிறுத்தினால், பணத்தைப் பயன்படுத்தாமல் ஊழல் செய்வதற்கும் முறைகேடு நடத்துவதற்கும் வழி ஏற்படுத்தித் தந்துவிடும். அதுமட்டுமின்றி, வங்கிகள் என்பது பணப் பரிமாற்றம் செய்யும் இடம் என்பதிலிருந்து மாறி வரி வசூலிக்கும் மையங்களாக மாறும் நிலை உருவாகிவிடும்” என்றார்.

 

ஆனால், இந்தக் கருத்துக்கு நேரெதிராக இருந்தது எம்.ஆர்.வெங்கடேஷின் கருத்து. ”அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை நடைமுறையில் இருந்து அகற்றுவது என்பது சாத்தியமான ஒரு விஷயமே. இதன் மூலம் ஊழல் செய்த பணத்தையும் கறுப்புப் பணத்தையும் வெளியே கொண்டுவர அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளை கறுப்புப் பணமாக உள்ள அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை மறைக்க நினைத்தால் அது வீணாகுமே தவிர, அந்தப் பணத்தை வேறு எதற்கும் அவர்களால் பயன்படுத்த இயலாது. மேலும், நம் நாட்டில் அனைவரையும் வங்கிக் கணக்கு துவங்கி இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தும்போது நாம் கடைகளுக்குச் சென்று அத்தியாவசிய பொருள் வாங்க மட்டுமே பணம் கொண்டு செல்லும் நிலையும், மற்ற பரிவர்த்தனைகள் ஆன்லைன் மயமானால் கறுப்புப் பணம் என்பது ஒழிந்துபோவதற்கு நிறைய வாய்ப்பு உண்டு” என்றார் எம்.ஆர்.வெங்கடேஷ்.

‘இந்தப் பரிந்துரைகளை நடைமுறைக்கு கொண்டுவருவது ஓரளவுக்கு சாத்தியமே” என்றார் செல்வராஜ். ”ஏனெனில், அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து எடுத்துவிட்டால், அதனை வைத்துள்ளவர்கள் வங்கிகளுக்குச் சென்று, அதனை மாற்ற முயற்சி செய்வார்கள். அப்போது அந்தப் பணம் எப்படிக் கிடைத்தது என்ற கேள்விகள் எழும். அப்போது பதுக்கப்பட்ட கறுப்புப் பணம் ஓரளவுக்கு வெளிவர சாத்தியம் உள்ளது. ஆனால், அவர்கள் பணமாக அல்லாமல் பொருளாகவோ, ரியல் எஸ்டேட், தங்கம் போன்றவையாகவோ வைத்திருக்கும்பட்சத்தில், அவர்களை இந்த வட்டத்துக்குள் கொண்டுவருவது சற்று சிரமம்தான்” என்றார் அவர்.

”1000, 500, 100 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக வங்கிக் கணக்கின் மூலம் மட்டுமே நாம் நமது வியாபாரம், தொழில் மற்றும் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். இப்படி செய்வதால் ஊழல் ஒழிந்துவிடும் என்பது தவறான நம்பிக்கை. ஊழல் ரொக்கப் பணம் மூலமாகத்தான் நடக்கிறது என்பதும் தவறு. இன்றைய பொருளாதாரம் இயங்குவது அரசு அச்சடித்து விநியோகம் செய்யும் பணத்தால் மட்டுமல்ல. கனிசமான அளவில் நிழல் பணம் (க்ஷிவீக்ஷீtuணீறீ விஷீஸீமீஹ்) மூலம் நடக்கிறது. வங்கிகளின் கடன் அட்டைகள், ஏனைய கடன்களும் பணம்தான். இதுபோன்ற நிழல் பணப் பரிவர்த்தனையை இந்தப் பரிந்துரை கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை. வங்கிப் பரிவர்த்தனை வரி விதிப்பு மூலம் வரி ஏய்ப்புத் தவிர்க்கப்படும் என்பது ஒருபோதும் நடைமுறைக்கு ஒவ்வாதது. வங்கிப் பரிவர்த்தனை மூலம் மட்டுமே தொழில்கள் நடக்கும் என்ற நம்பிக்கையும் தவறு” என இந்த பரிந்துரையை முற்றாக நிராகரித்தார் ராஜரத்தினம்.

ஆக, அர்த்தகிராந்தி அமைப்பின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்குமுன் அனைவருக்கும் வங்கிக் கணக்கு, வங்கி கணினிமயமாக்கம் போன்ற முக்கியமான பல வேலைகள் நடக்க வேண்டியிருக்கிறது. நம் நாட்டின் பொருளாதாரம் முன்னேறிச் செல்வதற்கு பெரிய முட்டுக்கட்டைகளாக இருக்கும் இந்தப் பிரச்னைகளுக்கு என்ன தீர்வு என்பதில் அர்த்தகிராந்தி சொன்ன பரிந்துரைகள், இப்போதைக்கு நடைமுறை சாத்தியம் குறைவாக இருந்தாலும், எதிர்கால மாற்றத்துக்கான முதல் அடி என்பதை மறுக்க முடியாது.

இந்த அமைப்பின் பரிந்துரைகளைத் தேர்தலுக்குமுன் ஆர்வத்தோடு கேட்ட நரேந்திர மோடி தற்போது நம் நாட்டின் பிரதமராக இருக்கிறார். பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவர வகைசெய்யும் இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது பற்றி மோடி அரசாங்கம், பல்வேறு அமைச்சகங்களிடமும் அரசு அதிகாரிகளிடமும் கருத்துக் கேட்கலாம். இதன் நடைமுறை சாத்தியம் பற்றி பொதுவான கருத்து உருவாக்கியபின், இந்த பரிந்துரைகளைச் செயல்படுத்தினால், அது நாட்டுக்கும் நல்லது; மக்களுக்கும் நல்லது.

%d bloggers like this: