ஆரோக்கியம் காக்கும் அமிலங்கள்

அன்றாட வாழ்க்கையில் பலவகையான சத்துக்களும் வைட்டமின்களும் சேர்ந்துதான் உடலை ஆரோக்கியமாக செயல்படவைக்கின்றன. ஒவ்வொரு சத்தும் உடலின் வெவ்வேறு உறுப்புகளுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. சில வைட்டமின்கள் அமிலங்களாக உடலுக்கு சத்துக்களைக் கொடுக்கின்றன. இவை உடலில் இயற்கையாகவே சுரக்கும் தன்மை கொண்டிருந்தாலும், இவை அதிகமாக அல்லது குறைவாகச் சுரக்கும்போது, பாதிப்புகள் ஏற்படுகின்றன. உடல்நலனுக்கு இன்றியமையாத சில முக்கிய அமிலங்கள் பற்றியும் அவற்றின் பயன்கள் மற்றும் எந்த மாதிரியான உணவுகள் மூலம் இவற்றை நிலைப்படுத்தலாம் என்பது பற்றியும் அறியலாம் .

நிக்கோடினிக் அமிலம் (நியாசின்)

ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றின் அளவை நிலைப்படுத்துவதற்கு நியாசின் பெரிதும் உதவுகிறது. இந்த அமிலத்தின் அளவு உடலில் குறையும்போது அதிகப்படியான டென்ஷன், சத்துக் குறைபாடு, எரிச்சல், ஞாபகமறதி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

முட்டையின் மஞ்சள் கரு, ஆட்டின் ஈரல், பாதாம் மற்றும் பருப்பு வகைகள், முழு தானியங்கள் போன்ற உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் அமிலத்தின் அளவை அதிகமாக்கலாம். நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு 18 மில்லி கிராம் வரை தேவை.

பேத்தொடெனிக் அமிலம்

உடம்புக்குத் தேவையான சத்துகளை உற்பத்தி செய்ய பெத்தொடேனிக் அமிலம் தேவை. மூளை மற்றும் நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகளுக்கு மிகவும் உதவுகிறது. கவனமின்மை, பல்வலி, வாந்தி மற்றும் சத்து குறைபாடு போன்ற பாதிப்புகள் இந்த அமிலத்தின் குறைவினால் ஏற்படும். முழுதானியங்கள், பருப்பு வகைகள், முட்டை மஞ்சள் கரு ஆகிய உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த அமிலக் குறைபாட்டை சரிசெய்துவிடலாம் நாள் ஒன்றுக்கு நபருக்கு 6 மில்லிகிராம் தேவை.

ஆஸ்கார்பிக் அமிலம்

வைட்டமின் சி தான் அஸ்கார்பிக் அமிலம். பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களில் முக்கியமான வைட்டமின் இது. இந்த வைட்டமின், தசை வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை உடம்புக்கு உருவாக்கிக் கொடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

மேலும் இரும்புச் சத்தை உணவிலிருந்து உறிஞ்சுவதற்கும், கேன்சர் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கவும் பயன்படுகிறது. இந்த அமிலத்தன்மை குறையும்போது, ஈறுகளில் ரத்தம் வடிதல், ரத்தசோகை போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. மிளகை அதிக அளவு உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இந்த இழப்பைச் சரிசெய்யலாம். மேலும் ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, முருங்கைக்கீரை, தக்காளி, கிவி பழம், முந்திரி, நெல்லிக்காய் போன்ற உணவுகளிலும் இந்த அமிலம் நிறைந்துள்ளது. ஒரு நாளைக்குத் தேவையான அளவு 40 மில்லி கிராம்.

ஃபோலிக் அமிலம்

ரத்த சிவப்பணுக்களைத் தூண்டுவதற்கும், அவற்றின் முதிர்ச்சித் தன்மைக்கும் ஃபோலிக் அமிலம் பயன்படுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்பக் காலத்தில் அவசியம் தேவைப்படக்கூடிய அமிலம் இது. இந்தக் காலகட்டத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் உதவக்கூடியதும்கூட. காசநோய், கேன்சர் நோய்களுக்கான மருந்து தயாரிப்பிலும், அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பால், முட்டை, ஈரல், ஈஸ்ட், கீரை, ஓட்ஸ் மற்றும் பச்சைக் காய்கறிகள், கோதுமை, முந்திரிப் பருப்பு போன்ற உணவுகளின் மூலமும் இந்த அமிலத்தின் உற்பத்தியை அதிகரிக்க முடியும். சாதாரண மனிதர்களுக்கு ஒரு நாளைக்கு 200 மைக்ரோகிராம் தேவை. கர்ப்பிணிப் பெண்களுக்கு 500 மைக்ரோகிராம் வரை தேவைப்படும்.

ஹைட்ரோ குளோரிக் அமிலம்

இந்த அமிலம் மட்டும்தான் நம் வயிற்றிலேயே சுரக்கக்கூடியது. இரைப்பையில் அமில காரத் தன்மையை நிலைநிறுத்தி உணவைச் செரிமானம் செய்வதற்கு உதவுகிறது.

அமிலம் இரைப்பையில் குறைந்தால் செரிமான கோளாறுகள், வயிற்று உப்பசம், அதீத தூக்கம், அடிக்கடி பசி, தொற்றுநோய் போன்றவை ஏற்படும். அமிலம் இரைப்பையில் அதிகமானால் வயிற்றுபுண், ஆரோக்கிய பிரச்னைகள் ஏற்படும். இந்த அமிலம் நிலைத்தன்மையில் இருப்பது அவசியம். மிளகு, வினிகர் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நிலைப்படுத்தமுடியும். சிலருக்கு இயல்பாகவே இந்த அமிலம் குறைவாக இருக்கும். அவர்கள் மருத்துவரின் ஆலோசனைபடி மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிகள், நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு, அமிலத் தேவைகளின் அளவுகள் மாறுபடும். மருத்துவரின் தகுந்த ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்’.

%d bloggers like this: