எல்.ஐ.சி ஆன்லைன் டேர்ம் பாலிசி: பாலிசிதாரர்களுக்கு லாபமா?

இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் எல்லாமே ஆன்லைன் டேர்ம் பாலிசியை ஏற்கெனவே வைத்திருக்க, எல்.ஐ.சி நிறுவனம் இப்போதுதான் இ-டேர்ம் எனும் ஆன்லைன் டேர்ம் பாலிசியை அறிமுகம் செய்துள்ளது. இந்த பாலிசியை எடுப்பதால் பாலிசிதாரர்களுக்கு பலன் உண்டா  என நிதி ஆலோசகர் வி.சங்கரிடம் கேட்டோம்.

”எல்.ஐ.சி-ன் இந்தத் திட்டம் காலம் கடந்த முயற்சி என்றாலும்,  வரவேற்கத்தக்கதுதான். டேர்ம் பாலிசி என்கிற செக்மென்டில் எல்.ஐ.சி பின்தங்கியே இருக்கிறது. இப்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்த பாலிசி மூலம் எல்.ஐ.சி பல புதிய மாற்றங்களைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கலாம்.

இந்த பாலிசியைப் பொறுத்தவரை, எல்.ஐ.சி வழங்கும் நேரடி டேர்ம் பாலிசியைவிட சுமார் 35 சதவிகிதம் வரை ஆன்லைன் பாலிசியின் பிரீமியம் குறைவாக இருக்கிறது சாதகமான விஷயம். ஆன்லைன் பாலிசிகளுக்கு ஏஜென்ட் கமிஷன் இல்லை என்பதால் இதற்கு பிரீமியம் குறைவாக இருக்கிறது.

ஆனால், இதர தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் ஆன்லைன் பாலிசிகளின் பிரீமியத் துடன் ஒப்பிட்டால், எல்.ஐ.சி-ன் இந்த ஆன்லைன் டேர்ம் பாலிசி பிரீமியம் அதிகமாகவே உள்ளது. பிரீமியத்தை வைத்து மட்டுமே பார்த்தால், இதர இன்ஷூரன்ஸ் நிறுவன ஆன்லைன் டேர்ம் திட்டங்களே பொருத்தமானது என்று சொல்வேன். க்ளைம் செட்டில்மென்ட் விகிதத்தில் பார்த்தால் எல்.ஐ.சி.தான் முன்னணியில்  இருக்கிறது 

பாலிசி க்ளைம் என்கிற அடிப்படை யில் பார்த்தால், இப்போதும் இதர இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் க்ளைம் விகிதம் குறைவாகவே உள்ளது. என்றாலும், இந்த ஒரு காரணியின் அடிப்படையில் மட்டுமே இன்ஷூரன்ஸ் எடுக்கத் தேவையில்லை. பாலிசி எடுப்பவர் சரியான விவரங்களைச் சொல்லும்பட்சத்தில், எந்த நிறுவனத்திலும் க்ளைம் பெறுவதில் சிக்கல் இருக்காது.

தவிர, ஐ.ஆர்.டி.ஏ என்கிற வலுவான கண்காணிப்பு அமைப்பும் நம்மிடம் உள்ளது. இதனால் குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் கிடைக்கும் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பதில் எந்தத் தவறும் இல்லை’ என்றார்.

ஒப்பீட்டளவில் எல்.ஐ.சி-ன் இ-டேர்ம் பாலிசி பிரீமியம் அதிகமாகவே இருக்கிறது. உதாரணத்துக்கு, 30 வயதுடையவர் 50 லட்சத்துக்கு பாலிசி எடுக்க வேண்டும் எனில், எல்.ஐ.சி-ன் ஆண்டு  பிரீமியம் சுமார் ரூ.8,200-ஆகவும், அதுவே தனியார் நிறுவனங்களில் ரூ.4,000 – 4,500 வரைதான் உள்ளது.

அதேபோல, எல்.ஐ.சி.-ல் புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர் எனில், இதர நிறுவன ஆன்லைன் டேர்ம் பிளான்களைவிட பிரீமியம் அதிகமாக உள்ளது.

புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் இந்த பாலிசியை எடுக்க வேண்டுமெனில், அவர்களுக்கான பிரீமியமாக ரூ.11,000-யை நிர்ணயித்துள்ளது

எல்.ஐ.சி. ஆனால், இதுவே ஐசிஐசிஐ புரூ ஐகேர்2 மற்றும் ஹெச்டிஎஃப்சி லைஃப் போன்ற பிளான்களில் ரூ.10,000 முதல் 10,500 வரைதான் பிரீமியமாக உள்ளது. 

ஆக மொத்தத்தில், பிராண்ட் நம்பகத்தன்மை என்கிற அடிப்படையில்தான் ஆன்லைன் பாலிசியில் எல்.ஐ.சி. வெற்றி பெற நிறைய வாய்ப்புண்டு. எனினும், இந்தக் காரணத்துக்காக இதர நிறுவனத்தில் ஏற்கெனவே பாலிசி எடுத்து வைத்திருப்பவர்கள் அந்த பாலிசியிலிருந்து உடனடியாக வெளியேறத் தேவையில்லை.

இந்தத் திட்டத்துக்கான பிரீமியத்தை மற்ற நிறுவனங்களைவிட எல்.ஐ.சி. குறைவாக நிர்ணயம் செய்திருந்தால், வாடிக்கையாளர்களின் ஏகோபித்த வரவேற்பை இந்தத் திட்டம் பெற்றிருக்கும்!

%d bloggers like this: