குட்பை சொன்ன குஷ்பு! கடைசி நேர க்ளைமாக்ஸ் காட்சிகள்

‘என் மனத்தில் மிக உயர்ந்த மனிதர் தலைவர் கலைஞர். அவர் எனக்குக் கழகத் தலைவர் இல்லை. என்னுடைய அப்பா!’ – தி.மு.க-வில் இருந்து விலகு​வதாக அறிவித்த குஷ்பு, அடுத்த சில நிமிடங்களில் தனது ட்விட்டர் வலைதளத்தில், கனத்த இதயத்துடன் இப்படி ட்வீட் செய்திருந்தார்.

‘என் அர்ப்பணிப்பும் உழைப்பும் ஒருவழிப் பாதையாகவே தொடர்ந்து நீடிக்கும் என்ற நிலை கழகத்தில் உள்ளபோது, நான் தேர்ந்தெடுத்தப் பாதையும் பயணமும் தாங்க இயலாத மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே தி.மு.க-வில் இருந்து விலகுவது என்ற முடிவை கனத்த இதயத்துடன் மேற்கொள்கிறேன்’ – இப்படி குஷ்புவின் அறிக்கையில் உள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் வலியும் வேதனையும் நிறையவே தெரிந்தது.

கட்சியில் சேர்ந்த நாளில் இருந்து பவர்ஃபுல்லாக இருந்த குஷ்புவுக்கு

பிரச்னை  வெளிப்படையாகத் தொடங்கியது கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்தான். அந்த சமயத்தில் ஆனந்த விகடனுக்கு அவர் அளித்த பேட்டியில், ”தி.மு.க-வுக்கு அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்று நாமளே ஒரு முடிவுக்கு வந்துடக் கூடாது. தலைவர் என்ன சொல்லியிருக்கார்னா, எனக்கு அப்புறம் சமூகப் பணிகளைத் தளபதி செயல்படுத்துவார்னுதான். தி.மு.க தலைவரைத் தேர்ந்தெடுக்க தனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா, தளபதிதான் அவரோட சாய்ஸ்னு சொல்லியிருக்கார். ஆனா, இறுதி முடிவைப் பொதுக்குழுதான் எடுக்கும். ‘யார் கட்சித் தலைவர்’னு முடிவு பண்றப்போ, அதைப் பத்திப் பேசுவோம். என் வழி தலைவர் வழிதான்!” என்று சொல்லியிருந்தார் குஷ்பு. அந்தப் பேட்டிதான் அத்தனை பிரச்னைகளுக்கும் பிள்ளையார் சுழி போட்டது.

அந்தப் பேட்டி வெளியான சமயத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக திருச்சி சென்றிருந்தார் குஷ்பு. அங்கே ஸ்டாலின் ஆதரவாளர்கள் குஷ்புவை சூழ்ந்துகொண்டு செருப்பு வீசினார்கள். கட்சியே ஸ்டாலின் என்று ஆன பிறகு, குஷ்புவின் இந்தப் பேச்சை தி.மு.க-வில் உள்ள யாரும் ரசிக்கவில்லை. அப்போதே குஷ்பு கட்சியில் இருந்து வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கருணாநிதிதான் குஷ்புவை அழைத்து சமாதானம் பேசினார். ஆனாலும் ஸ்டாலின் சமாதானம் ஆகவில்லை.

அந்த நிகழ்வுக்குப் பிறகு குஷ்பு தொடர்ந்து கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். தி.மு.க-வில் குஷ்புவின் ஒரே நம்பிக்கையாக இருந்தது கருணாநிதி மட்டும்தான். அதனால் இந்த முறை எப்படியும் தனக்கு தென் சென்னை தொகுதியில் எம்.பி ஸீட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தார் குஷ்பு. தென் சென்னைக்கு ஸீட் கேட்டு பணமும் கட்டினார். ஆனால், வாய்ப்பு கிடைக்கவில்லை. தேர்தல் பிரசாரத்திலும் குஷ்புவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. கருணாநிதி தலையிட்ட பிறகே குஷ்புவுக்கு சில தொகுதிகளில் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போதும், ‘குஷ்புகூட நீங்க பிரசாரத்துக்கு போகணும் என்பது அவசியம் இல்லை. நீங்க உங்க வேலையைப் பாருங்க! அப்படியே போனாலும் ஒரு பாயின்ட் பார்த்தால் போதும்!’ என்று கட்சியில் உள்ள முக்கியப் பிரமுகரிடம் இருந்து வேட்பாளர்களுக்கு உத்தரவு போனது. பிரசாரத்துக்குச் சென்ற குஷ்புவை வேட்பாளர்களும் நாசூக்காகத் தவிர்த்தனர். குஷ்புவின் பிரசாரத்தை கலைஞர் டி.வி-யும் ஒளிபரப்பவில்லை. குஷ்புவுக்கு இப்படி நெருக்கடிகள் தொடர்ந்தன.

இந்தச் சூழலில்தான் கருணாநிதி பிறந்தநாள் வந்தது. கோபாலபுரம் வீட்டுக்கு பூங்கொத்துடன் குஷ்பு வந்தார். கருணாநிதிக்கு வாழ்த்துச் சொன்னார். அவரிடம் ஆசீர்வாதம் வாங்கினார். ஸ்டாலின் உட்பட ஒட்டுமொத்த குடும்பமும் அங்கே கூடியிருந்ததால், குஷ்பு எதுவும் பேசவில்லை. அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

குஷ்பு மனவருத்தத்தில் இருக்கும் தகவல் தெரிந்து அவரை சமாதானம் செய்ய கடந்த சில தினங்களுக்கு முன்பு கருணாநிதி அழைத்துள்ளார். ஆனால், குஷ்பு செல்லவில்லை. அதன் பிறகு தனக்கு நெருக்கமானவர்களிடம், ”நான் என் மனசுக்குத் தெரிஞ்சு எந்த தப்பு செய்யலை. கட்சியில சேர்ந்த நாளில் இருந்து என்னால் முடிஞ்சவரைக்கும் கட்சிக்காக உழைச்சேன். என் குடும்பத்துக்காக நான் செலவிட்ட நேரத்தைவிட, கட்சிக்காக செலவிட்ட நேரம்தான் அதிகம். ஆனால், அவங்க யாரும் அதைப் புரிஞ்சுக்கலையே… என்னை ஏதோ விரோதி மாதிரியேதான் பார்க்குறாங்க. தளபதிகூட இருக்கிறவங்க என் காதுபடவே என்னைத் திட்டுறாங்க. தளபதிகிட்ட இதைப் பற்றியெல்லாம் நான் பேசணும்னு நினைக்கிறேன். ஆனா, அவரு என்னைப் பார்க்குறதையே தவிர்த்துடுறாரு. இனி கட்சியில எல்லாமே தளபதிதான் என்பது முடிவாகிவிட்டது. நான் என்னதான் சொன்னாலும் அதை யாரும் ஏத்துக்கப்போறது இல்லை. தளபதி ராஜினாமா செய்வதாக அறிவிச்சப்ப, நான் அவரோட வீட்டுக்குப் போய் பார்க்கலாம்னு நினைச்சேன். ஆனா, அவர் குடும்பத்துல இருக்கிறவங்க என்னை வீட்டுக்குள்ளயே விடாம அவமானப்படுத்துவாங்க. அதனாலதான் போகல. தளபதி குடும்பத்துல யாருக்கும் என்னைப் பிடிக்கல. அவங்களா என்னை வெளியில போ… என்று சொல்வதற்குள் நானே கிளம்பிவிடுவதுதான் மரியாதை!” என்று சொல்லியிருக்கிறார்.

குஷ்பு அறிக்கை வெளியான சில நிமிடங்களில், கருணாநிதி வீட்டில் இருந்து அவரைத் தொடர்புகொண்டார்களாம். ‘இனி பேசுறதுக்கு எதுவும் இல்லை… குட் பை’ என்று போனை கட் செய்தவர், சுவிட்ச்டு ஆஃப் செய்துவிட்டாராம்.

%d bloggers like this: