மிஸ்டர் கழுகு: கோபாலபுரம் வந்த கோபக் கடிதங்கள்

”அறிவாலயத்தில் புகார் புயலடிக்க ஆரம்பித்துவிட்டது” என்றபடி வந்தார் கழுகார். அவரே ஆரம்பித்தார்… ”நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து ஆராய்வதற்காக கடந்த 2-ம் தேதி தி.மு.க உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் கூடியது அல்லவா? அந்தக் கூட்டத்தில், ‘தேர்தல் தோல்வி குறித்து தி.மு.க வேட்பாளர்களும், தேர்தல் பொறுப்பாளர்களும் 15-ம் தேதிக்குள் நடுநிலையோடு ஆராய்ந்து தலைவர் கலைஞரிடம் நேரில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்’ என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘இது பேருக்காக இருக்கக் கூடாது. உண்மையிலேயே இந்தத் தேர்தலில் கட்சிக்குள் யார் வேலை செய்யவில்லை என்பதை தைரியமாகச் சொல்லுங்க. அப்போதுதான் கட்சியை சரிசெய்ய முடியும்’ என்றும் அழுத்தம்திருத்தமாக சொல்லி அனுப்பினார் ஸ்டாலின். அந்த அறிக்கைகளுடன் வேட்பாளர்​களும் பொறுப்பாளர்களும் சென்னைக்கு வந்துவிட்டார்கள்.”

”கருணாநிதியே அந்த அறிக்கை​களை வாங்கினாரா?”

”ம்! ஒவ்வொரு வேட்பாளரையும் பொறுப்பாளரையும் கோபாலபுரம் வீட்டில் தனித்தனியாகவே சந்தித்தார். சில வேட்பாளர்கள் மட்டும் ஸ்டாலினை சந்திக்க அவரது வீட்டுக்குப் போயிருக்கிறார்கள். ‘இங்கே எதுக்கு வந்தீங்க? அறிக்கையை தலைவர்கிட்ட கொடுங்க!’ என்று ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். ‘எங்களுக்குத் தலைவர் நீங்கதான்! உங்ககிட்ட கொடுத்துட்டு அப்புறம் அவர்கிட்ட கொடுக்கிறோம்!’ என்று கொண்டுவந்த புகார் அறிக்கையின் நகல் ஒன்றினை ஸ்டாலினிடம் கொடுத்துவிட்டு, கோபாலபுரத்துக்குக் கிளம்பியிருக்கிறார்கள். அவர் பலரிடமும் இதனை வாங்கவில்லையாம்.”

”என்ன இருக்கிறது அந்தப் புகார்களில்? தொகுதி வாரியாகச் சொல்லும்!” என்றோம்.

”திருச்சியில் இருந்து ஆரம்பிக்கிறேன். திருச்சி வேட்பாளர் அன்பழகன், ‘தோல்விக்கு அ.தி.மு.க பணம் கொடுத்தது முக்கியக் காரணமாக இருந் தாலும், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர், திருச்சி சங்கிலியாண்டபுரம், ஸ்ரீரங்கம் பகுதிகளில் தி.மு.க கரைவேட்டி கட்டியவர்களே நமக்கு எதிராகப் பிரசாரம் செய்தார்கள். முன்னாள் அமைச்சர் திருச்சி செல்வராஜ், திருச்சி சிவா ஆதரவாளர்களும் நமக்கு எதிராகவே வேலை செய்தார்கள். எனக்குச் சொந்தமான பிளாட்களை விற்றுதான் தேர்தல் செலவு பார்த்தேன். என்னிடம் இருந்து பணம் வாங்குவதில் மட்டுமே அவர்கள் குறியாக இருந்தார்கள். மற்றபடி எந்த வேலையும் செய்யவில்லை. அதேபோல அழகிரி ஆதரவாளர்களாக இருந்த முன்னாள் கவுன்சிலர்கள் சிலரும், எனக்கு எதிராக வேலை செய்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.”

”சேலம்?”

”சேலம் வேட்பாளரான உமாராணி, ஏற்கெனவே கருணாநிதியைச் சந்தித்தபோது பொங்கிவிட்டாரே! இப்போது அவர் கொடுத்திருக்கும் புகாரில், ‘வீரபாண்டி ஆறுமுகத்தின் சகோதரர் மகன் பாரப்பட்டி சுரேஷ் நமக்கு வேலை செய்யாதது மட்டு​மல்லாமல், அ.தி.மு.க-வுக்காக பகிரங்கமாகவே பிரசாரம் செய்தார். ‘வன்னியர் ஏரியாவுல கவுண்டரை நிறுத்தினா என்ன ஆகும்னு காட்டுவோம்’னு சுரேஷ் பேசினது கட்சியில எல்லோருக்கும் தெரியும். அதேபோல நங்கவள்ளி ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன், ஓமலூர் ஒன்றியச் செயலாளர் பரமன் ஆகிய இருவரும் தீவிரமான வீரபாண்டி ராஜா விசுவாசிகள். அவர்கள் இருவரும் தி.மு.க-வுக்கு வேலை செய்யாதது மட்டுமின்றி, கட்சிக்காரர்களிடமும் ‘தி.மு.க-வுக்கு ஓட்டுப்போட வேண்டாம்’ என்று பேசியிருக்கிறார்கள். அந்த இரண்டு ஒன்றியங்களிலும் தி.மு.க-வைவிட தே.மு.தி.க அதிக அளவு வாக்குகளை வாங்கியிருக்கிறது. வீரபாண்டியாரை நாங்கள் எந்தச் சூழலிலும் மறக்கவும் இல்லை. மரியாதை தராமலும் இல்லை. ஆனால், அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அப்படி நினைக்க​வில்லை. சேலத்தில் தி.மு.க வாக்கு குறைந்ததற்கு இது முக்கியக் காரணம்’ என்று சொல்லியிருக்கிறார்.”

”நெல்லை?”

”வேட்பாளர் தேவதாச சுந்தரம் கொடுத்த அறிக்கையில், ‘நெல்லை தி.மு.க-வில் நடக்கும் கோஷ்டி சண்டையே கட்சியின் தோல்விக்கு பிரதான காரணம்’ என்று சொன்னதோடு அந்தப் பிரச்னைகள் பற்றி விளக்கமாகவே விவரித்திருக்கிறார். ‘மாவட்டச் செயலாளரான கருப்பசாமி பாண்டியன் தலைமையில் ஒரு அணியும், முன்னாள் சபாநாயகரான ஆவுடையப்பன் தலைமையில் மற்றொரு அணியும் செயல்படுகிறது. இந்த விவரம் தெரியாமல் மாவட்ட நிர்வாகி என்கிற அடிப்படையில் கருப்பசாமி பாண்டியனை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவரது வழிகாட்டுதலின்படி செயல்​பட்டதால், எதிர்கோஷ்டியினர் எங்களைப் புறக்கணித்துவிட்டனர். அவர்களைச் சமாதானப்படுத்தி வழிக்கு கொண்டுவருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. அத்துடன், தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனத்தில் ஆவுடையப்பன் தரப்பினரை முழுமையாக புறக்கணித்ததால், அவர்கள் வேலை செய்யவில்லை. பண விவகாரத்தில் எனக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கொடுத்த பணத்துக்கு சிலர் கணக்கு சொல்லவே இல்லை. தேர்தல் சமயத்தில் சில பூத்களில் நம் ஆட்களே இல்லை. அந்த அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது’ என்று கொட்டித் தீர்த்திருக்கிறார் தேவதாச சுந்தரம்.”

”ம்… மதுரை வேலுச்சாமி?”

”அவரும் வெளிப்படையாகத்தான் குற்றம்சாட்டியுள்ளார். ‘மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதி எனக்காக இறங்கி வேலை செய்யவில்லை. எதிலும் ஆர்வம் காட்டவில்லை. அவர் சார்ந்த நாயக்கர் சமூக வாக்குகளை பெற்றுத்தர எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதுமட்டுமில்லாமல் வேலை செய்யும் தொண்டர்களிடம் அன்பாகப் பேசாமல் எரிந்து விழுந்ததால், பல தொண்டர்கள் கடைசி நேரத்தில் வேலை செய்யாமல் சென்றுவிட்டார்கள். கட்சி அனுப்பிய பணத்தை செலவு செய்யாமல் இறுக்கி வைத்துக்கொண்டார். அதற்கான சரியான கணக்குவழக்குகளும் இல்லை. மாநகர கட்சி நிர்வாகி முருகவேலும், குமாரும் பணத்தை சரியாக பட்டுவாடா செய்யவில்லை.

முன்னாள் மேயர் குழந்தைவேலு அவருடைய யாதவ சமுதாய வாக்குகளை வாங்கித்தர எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நானேதான் எல்லாவற்றுக்கும் செல்ல வேண்டியிருந்தது. இதுபோன்ற நிர்வாகிகளால் மதுரையில் இனியும் கட்சியை வளர்க்க முடியாது’ என்று காட்டமாக இருக்கிறது இவரது புகார்.”

”கோவை?”

‘ ‘கட்சிக்காக யாரும் வேலை பார்க்கவில்லை. மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகள் பலர் கட்சிக்கு எதிராகத்தான் வேலை செய்தார்கள். தொகுதிக்கென நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் வேலையே பார்க்கவில்லை. ஒரு தொகுதியில் தேர்தல் பொறுப்பாளர் கடைசி வரை வெளியே வரவே இல்லை. இருவர் தீவிர பணம் வசூலில் மட்டுமே கவனமாக இருந்தனர். ‘கட்சி தோற்றால் என்ன? நமக்கு தேவை காசு’ என்ற ரீதியில், நிதி வசூலித்து, தொகுதிக்குச் செலவழிக்க வேண்டிய பணத்தை தாங்களே பிரித்துக்கொண்டனர். யாரும் மக்களைச் சந்திக்கத் தயாராக இல்லை. நிர்வாகிகளுக்கு அவர்களின் சாதியும் பணமும்தான் முக்கியமாக இருந்தது. கட்சி அவர்களுக்கு முக்கியமாகப் படவில்லை. இவர்களை எல்லாம் நிர்வாகியாக வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. தேர்தல் பொறுப்பாளர் முபாரக், மாநகர் மாவட்டச் செயலாளர் வீரகோபால் ஆகியோர் மீது விசாரணை நடத்த வேண்டும்’ என்று புகாரில் கோபப்பட்டிருக்கிறார் வேட்பாளர் கணேஷ்குமார்.”

”பொள்ளாச்சி?”

” ‘பேருக்குத்தான் நான் மாவட்டச் செயலாளராக இருக்கேன். எனக்காக யாரும் வேலை செய்யவே இல்லை. எல்லோருமே உள்ளடி வேலை செய்துவிட்டார்கள். கட்சியில் இருக்கும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலரையும் களையெடுக்க வேண்டியது அவசியம். அவர்கள் வேலை செய்திருந்தால் நாம் இங்கே மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டு இருக்க மாட்டோம்’ என்று போகிறது வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியின் மனு.”

”தூத்துக்குடி?”

”வேட்பாளர் என்.பி.ஜெகன் கொடுத்திருக்கும் விளக்கத்தில், ‘தேர்தல் பணிக் குழுக்களை அமைத்து, அதற்குத் தேவையான பணம் செலவு செய்யப்பட்டது. கடைசி இரண்டு நாட்களில் அ.தி.மு.க பணம் கொடுத்துவிட்டது. திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் போன்ற  சிலர் வெளிப்படையாகவே ம.தி.மு.க-வுக்கு வேலை செய்தனர். அனிதா ராதாகிருஷ்ணனின் சொந்த ஊர் தண்டுபத்து. இந்த ஊரில் இரண்டு பூத். ஒரு பூத்தில் அ.தி.மு.க-க்கு 104 ஓட்டுகள், ம.தி.மு.க-வுக்கு 282 ஓட்டு, தி.மு.க-வுக்கு வெறும் 41 ஓட்டுகள் மட்டும்தான். அதேபோல் இன்னொரு பூத்தில் அ.தி.மு.க – 191, ம.தி.மு.க – 229, தி.மு.க – 66. அனிதா, ம.தி.மு.க-வுக்கு வேலை செய்தார் என்பதற்கு இதுவே உதாரணம்’ என்று ஆதாரத்துடன் கொடுத்திருக்கிறார்.”

”தைரியம்தான்… விருதுநகர் பற்றி சொல்லும்!”

”அறிக்கையைப் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்று ரொம்பவே சீக்ரெட் மெயின்டெய்ன் செய்திருக்கிறார் வேட்பாளர் ரத்தினவேலு. ‘பலமான கூட்டணி இல்லை. அ.தி.மு.க-வில் ஓட்டுக்கு பணம் கொடுத்தார்கள்’ என்று பொத்தாம்பொதுவாக ஆரம்பித்த அவரது அறிக்கையில், ‘மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் எங்களிடம் வாங்கிய பணத்தை ஆரம்பத்தில் தாராளமாக செலவு செய்து வந்தார். கடைசி ஒரு வாரம் என்ன நினைத்தாரோ பணத்தை வெளியே எடுக்கவே இல்லை’ என்று சொல்லப்பட்டிருக்கிறதாம்.”

”அடுத்து?”

”கிருஷ்ணகிரி பற்றிச் சொல்றேன். வேட்பாளர் சின்னபில்லப்பா, ‘எங்கள் தொகுதிக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் பெரும்பாலான நேரம் தொகுதிக்குள் வரவே இல்லை. அடிக்கடி சேலத்துக்குக் கிளம்பிவிட்டார். அவர் கவனம் முழுக்க சேலத்திலேயே இருந்தது. இங்கே அ.தி.மு.க பணம் பட்டுவாடா செய்ததைக்கூட அவர் தடுக்கவில்லை’ என்று வருத்தப்பட்டுள்ளார்.”

”தர்மபுரி?”

”ஏற்கெனவே எம்.பி-யாக இருந்த தர்மபுரி தாமரைச்செல்வன் 55 பக்கத்துக்கு அறிக்கை கொடுத்திருக்கிறார். ‘கட்சிக்குள் நடந்த உள்ளடி வேலைகள்தான் தோல்விக்கு முதல் காரணம். மாவட்டப் பொறுப்பாளர்கள் முல்லைவேந்தன், இன்பசேகரன் இருவரும் எந்த வேலையும் செய்யவில்லை. என்னுடன் பிரசாரத்துக்கும் வரவில்லை. கழகத்தில் இருந்து கொடுத்த பிட் நோட்டீஸ்களைக்கூட யாருக்கும் கொடுக்கவில்லை. இன்பசேகரனின் சொந்தத் தொகுதியான பென்னாகரத்தில் கடந்தத் தேர்தலைவிட இப்போது 60 ஆயிரம் வாக்குகள் குறைவாக வாங்கியிருக்கிறோம். முல்லைவேந்தனுடைய சொந்த தொகுதியான பாப்பிரெட்டிப்பட்டியில் 19 பூத்களில் ஒற்றை இலக்க ஓட்டுகள்தான் கிடைத்துள்ளன. இங்கே நம் கட்சிக்காரர்களே நமக்கு ஓட்டுப்போடவில்லை. 700 பூத்களில் நமக்கு பூத் ஏஜென்ட்களே இல்லை. இன்பசேகரனுக்கு ஈகோ பிரச்னை. முல்லைவேந்தனுக்கு காழ்ப்பு உணர்ச்சி. இது இரண்டும்தான் நாம் தோற்க முக்கியக் காரணம்.

இங்கே தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்த செல்வகணபதிக்கு தேர்தலுக்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் தண்டனை உறுதி செய்யப்பட்டது. அதனால் கடைசி நேரத்தில் தேர்தல் வேலைகள் முடங்கிவிட்டன’ என்று விலாவாரியாகப் போகிறது அந்த அறிக்கை.”

”எல்லோருமே வீறுகொண்டு எழுந்துவிட்டார்கள் போல! அடுத்து சொல்லும்!”

”திருவண்ணாமலை வேட்பாளர் அண்ணா​துரை, ‘முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி, முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஸ்ரீதர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேணு​கோபால் ஆகிய முக்கியமான மூவருமே முழு மனத்தோடு பிரசாரம் செய்யவில்லை. பணம் கொடுக்காததால் கட்சிக்காரர்களிடமும் உற்சாகம் இல்லை’ என்று சொல்லியிருக்கிறார். ஆரணி தொகுதி சிவானந்தத்தின் அறிக்கையில், ‘எல்லா கட்சிகளிலும் வேட்பாளர் வன்னியர் என்பதால் ஓட்டுகள் பிரிந்துவிட்டன. ஆரணி, செய்யாறு பகுதிகளில் இருக்கும் முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த தி.மு.க-வினர் சரியாக வேலை பார்க்கவில்லை’ என்று சொல்லப்பட்டதாம்”

”பெரம்பலூர் என்னாச்சு?”

”வேட்பாளர் சீமானூர் பிரபுவும், முன்னாள் அமைச்சர் செல்வராஜ் மீதுதான் புகார் வாசித்திருக்கிறார். பெரம்பலூர் தொகுதியில் ஒரு பகுதி திருச்சி மாவட்டத்தில் இருக்கிறது. ‘செல்வராஜின் சுயநலத்துக்கு நான் பலியாகிவிட்டேன். என் சொத்தை விற்று தேர்தல் செலவு செய்தேன். மாற்று கட்சியைச் சேர்ந்தவர்களிடம் செல்வராஜ் விலை போய்விட்டார்’ என்று கொந்தளித்திருக்கிறார். திருப்பூர் டாக்டர் செந்தில்நாதன், ‘கட்சிக்குள் நடந்த உள்ளடி வேலைகள்தான் என் தோல்விக்கு காரணம்’ என்று பகிரங்கப்படுத்தியிருக்கிறார். விழுப்புரம் வேட்பாளர் டாக்டர் முத்தையனோ, ‘அ.தி.மு.க கொடுத்த பணம் மட்டும்தான் அத்தனைக்கும் காரணம். நான் யார் மீதும் குறை சொல்ல விரும்பவில்லை’ என்று மட்டும் சொல்லியிருக்கிறார். ராமநாதபுரம் வேட்பாளர் முகம்மது ஜலீல், சிவகங்கை வேட்பாளர் சுப.துரைராஜ் ஆகியோரும் கட்சிக்குள் யாரைப் பற்றியும் குறை சொல்லாமல் அ.தி.மு.க கொடுத்த பணத்தை மட்டும் காரணம் காட்டியிருக்கிறார்கள். பாவம்… அவங்களுக்கு என்ன பிரச்னையோ?”

”புதுச்சேரி சமாசாரம் எதுவும் உண்டா?”

”புதுவை வேட்பாளர் நாஜீமும் கருணாநிதியை சந்தித்திருக்கிறார். ‘தோல்விக்கு ஒரே காரணம் மாநில அமைப்பாளர்தான். கட்சித் தலைமை தேர்தல் நிதியாகக் கொடுத்த பணம் எவ்வளவு என்பதை கடைசி வரையில் என்னிடம் சொல்லவே இல்லை. தலைவர், தளபதி புதுவைக்கு வந்தபோதும் கூட்டத்தைச் சேர்க்கவே இல்லை. தனக்கு நெருக்கமானவர்களை மட்டும் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமித்துக்கொண்டார்’ என்று தன் அறிக்கையில் சொல்லியிருக்கிறார். இவர்கள் கொடுத்த அறிக்கைகளை கருணாநிதி நிதானமாகப் படிக்க ஆரம்பித்திருக்கிறார். அவ்வப்போது ஸ்டாலினையும் கூப்பிட்டு அதுபற்றி டிஸ்கஸ் செய்ய ஆரம்பித்துள்ளார். சீக்கிரமே நடவடிக்கையை எதிர்பார்க்கலாம்!”

”கருணாநிதி அமைத்த ஆறு பேர் குழுவும் தனது அறிக்கையை தாக்கல் செய்துவிட்டதாமே?”

”ஆமாம்! கடந்த 13-ம் தேதி காலையில் கோபாலபுரம் வீட்டுக்குச் சென்றார்கள் அந்த ஆறு பேரும். தங்களது விரிவான அறிக்கையை கருணாநிதியிடம் கொடுத்துவிட்டார்கள். அப்போது ஸ்டாலினும் உடன் இருந்துள்ளார். ‘மாவட்டக் கழகங்களை வலிமையும் எளிமையும் படுத்துவதற்கான ஆலோசனைகளைச் சொல்வதற்காக இந்தக் குழுவை கருணாநிதி அமைத்திருந்தார். அந்த அடிப்படையில் இவர்கள் முக்கியமான பல ஆலோசனைகளை வைத்துள்ளார்களாம். அதில் முக்கியமானது மாவட்டங்களின் எல்லைகளைச் சுருக்குவது. கடந்த முறையே நான் சொல்லியிருந்தேன் உமக்கு. ஒவ்வொரு மாவட்டமும் 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மேல் உள்ளதாக இருந்தது. அதனால்தான் அதிகார மையங்களாக மாவட்டச் செயலாளர்கள் வலம் வந்தார்கள். இப்போது அவர்களது செல்வாக்கை குறைக்கவும், சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் துரிதமாகச் செயல்பட வசதியாகவும் மூன்று அல்லது நான்கு சட்டமன்றத் தொகுதி கொண்டதாக ஒவ்வொரு மாவட்டத்தையும் மாற்ற இருக்கிறார்கள். இதன்படி சுமார் 70 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கலாம் என்று அந்தக் குழு அறிக்கை கொடுத்திருக்கிறது. மேலும், இரண்டு மூன்று முறைக்கு மேல் யாரையும் மாவட்டச் செயலாளராக வைத்திருக்கக் கூடாது என்றும் இந்தக் குழு ஆலோசனையாகச் சொல்லியிருக்கிறது!”

”தைரியமாகச் சொல்லியிருக்கிறார்களே?”

”கருணாநிதியும் ஸ்டாலினும் கொடுத்த தைரியம்தான் இதற்குக் காரணம் என்கிறார்கள். தேர்தலுக்குப் பிறகு கோபாலபுரம் வீட்டுக்கு கட்சித் தொண்டர்களிடம் இருந்து ஏராளமான கடிதங்கள் வந்துள்ளன. ஒவ்வொன்றையும் வாசிக்கச் சொல்லிக் கேட்ட கருணாநிதி நொந்து போனாராம். அதில் முக்கியமான கடிதங்களை ஃபைல் போட்டுக் கட்டி இந்த ஆறுபேர் குழுவின் பார்வைக்கு கருணாநிதி அனுப்பியுள்ளார். அதில் பொன்முடி, எ.வ.வேலு, கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொங்கலூர் பழனிசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கருப்பசாமி பாண்டியன், திண்டுக்கல் பெரியசாமி, தூத்துக்குடி பெரியசாமி, ஜெ.அன்பழகன்… ஆகிய 10 மாவட்டச் செயலாளர்கள் மீதுதான் அதிகமான புகார் கடிதங்கள் வந்துள்ளதாம். இதனைப் படித்துப் பார்த்த குழுவினர், மாவட்டச் செயலாளர்களை திருத்தாவிட்டால் கட்சியை வளர்க்க முடியாது என்ற முடிவுக்கு வந்தார்கள். அதனால் துணிச்சலாக அறிக்கையைக் கொடுத்தார்கள்!”

”இதனை மாவட்டச் செயலாளர்கள் கடுமையாக எதிர்ப்பார்களே?”

”இப்படி அறிக்கை கொடுத்துவிட்டார்கள் என்று தெரிந்து மாவட்டச் செயலாளர்கள் தங்களுக்குள் குழு அமைத்து பேசிக்கொள்கிறார்கள். திண்டுக்கல் பெரியசாமி, மூர்த்தி, பெரிய கருப்பன், மூக்கையா ஆகியோர் ஆலோசனை செய்ததாகச் சொல்கிறார்கள். கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மதுரை தளபதியிடம் பேசியிருக்கிறார். வேலுவும் பொன்முடியும் எப்போதும் பேசிக்கொள்பவர்கள்தான். நேருவுக்கும் எம்.ஆர்.கே.வுக்குமான நெருக்கம் அனைவரும் அறிந்தது. இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு நட்பானவர்களுடன் பேசி வருகிறார்கள். ‘ஸ்டாலின் என்ன முடிவு எடுக்கிறார் என்று பார்ப்போம்’ என்று இவர்கள் சொல்லியிருக்கிறார்கள்!”

”என்ன நினைக்கிறாராம் ஸ்டாலின்?”

”மாவட்டங்களின் எல்லையைப் பிரித்து கூடுதல் மாவட்டச் செயலாளர்களை நியமித்து கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும் என்றுதான் ஸ்டாலினும் நினைக்கிறாராம். அவரை முரசொலி செல்வம் மனமாற்றம் செய்ததாகவும் கூறப்படுகிறது. ‘மூத்த மாவட்டச் செயலாளர்களை அங்கிருந்து எடுத்துவிட்டு அவர்களை தலைமைக் கழகத்துக்கு அழைத்துக்கொள்ள வேண்டும்’ என்று முதலில் சொன்னது செல்வம்தான் என்று உமக்கு நான் சொல்லியிருந்தேன். அப்போது அருகில் இருந்த பொன்முடியிடம், ‘முதலில் நீங்கள் ராஜினாமா செய்யுங்கள். அதன் பிறகு மற்ற மாவட்டச் செயலாளர்கள் ராஜினாமா செய்யட்டும்’ என்றும் சொன்னவர் செல்வம். அதுதான் கருணாநிதியின் மனத்தை மாற்றி, குழு போட வைத்து, அறிக்கை கொடுக்க வைத்து, ஸ்டாலினையும் மனமாற்றம் செய்து விட்டது என்கிறார்கள். இப்போது இருக்கும் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை 35. கருணாநிதி அமைத்த ஆறு பேர் குழு பரிந்துரைத்து இருப்பது 70 மாவட்டச் செயலாளர்கள். அதாவது, இரண்டு மடங்கு அதிகம். 65 மாவட்டச் செயலாளர்களை நியமிக்க கருணாநிதி சம்மதித்துவிட்டார். ‘இப்படி மாவட்டங்களை சின்னச் சின்னதாகப் பிரித்தால் பெரிய மாவட்டச் செயலாளர்கள் யாரும் மாவட்டச் செயலாளர்கள் ஆக மாட்டார்கள். வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள்’ என்று சொல்கிறார்கள் கட்சியில்!”

”வேண்டாம் என்று சொல்வார்களா என்ன?” என்று நாம் கேட்க, ‘ம்கூம்’ என்பதுமாதிரி தலையாட்டியபடி பறந்தார் கழுகார்!

%d bloggers like this: