உயிரைப் பறித்ததா லிச்சி பழம்? அதிர்ச்சியில் வட மாநிலங்கள்!

லிச்சி பழம் உயிரை மிரட்ட ஆரம்பித்துள்ளது!

வட மாநிலங்களில் கோடைக்காலத்தில் கிடைக்கும் மிகவும் பிரபலமான பழம் லிச்சி. இந்த ஆண்டு லிச்சி பழம் உற்பத்தி அதிகரித்துள்ளது. விலை குறைவு என்பதால், அதிக அளவில் மக்கள் வாங்கிச் செல்கின்றனர். இதற்கும் வேட்டு வைப்பதுபோல் வந்திருப்பதுதான் லிச்சி வைரஸ் சின்ட்ரோம். மேற்கு வங்கத்தில் லிச்சி பழத்தைச் சாப்பிட்ட சிறுவர்கள் எட்டு பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று பீகார் மாநிலத்திலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. அதுவும் லிச்சி பழ உற்பத்திக்குப் பெயர்போன முசாஃபர்பூர் மாவட்டத்திலேயே இந்தப் பாதிப்பு அதிகம் ஆகியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் மால்டா மாவட்டத்தில் லிச்சி பழத்தைச் சாப்பிட்ட ஒரே கிராமத்தைச் சேர்ந்த மூன்று முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட எட்டு குழந்தைகள் உயிரிழந்ததை, மால்டா மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் எம்.ஏ.ரஷீத் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”லிச்சி பழத்தைச் சாப்பிட்ட பிறகுதான் இந்தக் குழந்தைகளுக்குக் காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து வாந்தி எடுத்திருக்கிறார்கள். கடைசியில் வலிப்பு ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவர்கள் குழந்தையைத் தூக்கிக்கொண்டு

மருத்துவமனைக்கு வந்தனர். ஆனால், அந்தக் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவமனைக்குக் குழந்தைகளைக் கொண்டுவாருங்கள்” என்று கூறியுள்ளார் டாக்டர் ரஷீத். இந்த எட்டுக் குழந்தைகளைத் தவிர, மேலும் ஆறு குழந்தைகளுக்கு இதுபோன்ற அறிகுறிகள் ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் டாக்டர் ரஷீத் கூறியுள்ளார்.

சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் மூத்த பொதுநல மருத்துவர் வினோத் பிரேம் ஆனந்த்திடம் இதுகுறித்து கேட்டோம். ”இது புதிய வைரஸ் கிருமி என்று சொல்ல முடியாது. வைரஸைப் பிரித்தெடுத்து ஆராயும்போதுதான் அது ஏற்கெனவே உள்ள வைரஸ் கிருமியா அல்லது புதிய கிருமியா என்பது தெரியவரும். மேற்கு வங்கத்தில் குழந்தைகளுக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதை அக்யூட் வைரல் என்கெபலைட்டிஸ் (Acute viral encephalitis) என்போம். அதாவது, மிக விரைவாக மூளையைத் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தும் வைரஸ் பாதிப்பு என்று பெயர்.

பொதுவாக மூளையில் பாதிப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடியவை வைரஸாகவோ, பாக்டீரியாவாகவோ இருக்கலாம். ஆனால் பாக்டீரியா இவ்வளவு வேகத்தில் தாக்காது. வைரஸ் கிருமிதான் நான்கு, ஐந்து நாட்களுக்குள்ளாக அதிவேகத்தில் மூளையைத் தாக்கி மூளையை வீக்கம் அடையச் செய்து இதுபோன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். அதனால்தான் லிச்சி பழத்தில் இருந்து பரவியது வைரஸ் கிருமி என்கிறோம். இப்படி அதிவேகத்தில் மூளையைத் தாக்கி, மூளையை வீக்கம் அடையச்செய்து, காய்ச்சல், வாந்தி, வலிப்பை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் கிருமிகள் இதுவரை ஏழெட்டு கண்டறியப்பட்டுள்ளன. இதில் எந்த வகை வைரஸ் கிருமி என்று கண்டறியும்போதுதான் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது மிகவும் எளிதாக இருக்கும்” என்றார்.

”பழம் மூலமாக வைரஸ் கிருமி பரவுமா?” என்று நம்முடைய சந்தேகத்தைக் கேட்டோம். ”லிச்சி பழம் சாப்பிட்டு குழந்தைகள் உயிரிழப்பது இது முதல் முறை இல்லை. ஏற்கெனவே 2012-ம் ஆண்டில் இதுபோன்று நோய்த்தொற்று ஏற்பட்டு, சில குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போது என்ன வகையான வைரஸ் என்பதைக் கண்டறிய வைரஸ் கிருமியைப் பிரித்தெடுத்து ஆய்வு நடத்தி வருகின்றனர். ஜமைக்கா நாட்டில் ஒரு விநோத நோய் இருக்கிறது. ஜமைக்கன் வாமிட்டிங் சிக்னஸ் என்று அதற்கு பெயர். ஜமைக்காவில் அக்கி என்கிற பழம் விளையும். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அக்கி பழத்தைச் சாப்பிட்டால், இதேபோன்று காய்ச்சல், வாந்தி, வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே, பழத்தில் இருந்து வைரஸ் கிருமி பரவுவதற்கு வாய்ப்பு உள்ளதை மருத்துவ உலகம் உறுதிப்படுத்துகிறது.

இப்போது அதிக அளவில் லிச்சி பழம் விளைந்துள்ளது. இதனால் எப்படி அது சேகரிக்கப்படுகிறது, சேமிக்கப்படுகிறது என்பதை ஆராய வேண்டும். நம் ஊரில் மாம்பழத்தை செயற்கையாகப் பழுக்க வைக்க ரசாயனம் பயன்படுத்தப்படுவதுபோல, லிச்சி பழத்தைப் பத்திரப்படுத்தி வைப்பதில் ஏதேனும் குறைபாடு இருந்ததா என்பதை முதலில் கண்டறிய வேண்டும்.

ஓர் இடத்தில் நோய்த் தாக்கம் ஏற்பட்டுவிட்டது என்பதற்காக முற்றிலுமாக பழத்தைச் சாப்பிட வேண்டாம் என்று கூறுவது சரியாக இருக்காது. வைரஸ் எப்படி பழத்துக்குப் பரவியது என்பதைக் கண்டறிய வேண்டும். அதன் பிறகுதான் தடுப்பு முறைகளைப் பற்றிய ஆலோசனை வழங்க முடியும். இப்போதைக்கு, பழத்தை நன்கு கழுவி, தோல் உரித்துச் சாப்பிட வேண்டும். பழம் சாப்பிட்டு இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால், சாதாரணமாக மருந்துக் கடையில் மாத்திரை வாங்கிக்கொடுக்காமல் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதன் மூலம் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்” என்றார் டாக்டர் வினோத்.

ரசாயனம் தெளிக்கப்பட்ட திராட்சை, கல் வைத்துப் பழுக்க வைக்கப்படும் மாம்பழம்… இப்போது லிச்சி. பழம் என்றாலே பயம் என்று ஆகிவிட்டது. ஜாக்கிரதை!

%d bloggers like this: