கடவுள் நம் வேலைக்காரனல்ல!-

ஜூன் 21 – கலிக்காமர் குருபூஜை

இந்த உலகிலேயே கோபப்படாதவர் யார் என்றால், கடவுள் மட்டும் தான். அவரை துதித்தாலும், நிந்தித்தாலும் கோபப்படுவதில்லை. அவரிடம், அதைத் கொடு, இதைக் கொடு என, பக்தர்கள் கோரிக்கை வைத்தாலும், கோபப்படாமல், யாருக்கு என்ன தர வேண்டுமோ அதைத் தந்து கொண்டிருக்கிறார்.
இப்படித்தான் ஒருமுறை, சிவனைச் சந்தித்தார் சுந்தரர். சுந்தரருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது; இருப்பினும், சங்கிலி நாச்சியார் மேல் கொண்ட காதலால், அவரையும் தனக்கு திருமணம் செய்து வைக்கக் வேண்டுமென சிவனிடம் கோரிக்கை வைத்தார். சுந்தரரும், சிவனும் நண்பர்கள் என்பதால், பரவை நாச்சியாரிடம் தூது சென்றார் சிவன்.
இந்த விஷயம், கலிக்காமர் என்னும் சிவனடியாருக்கு தெரிய வந்தது. இவர் சோழ மன்னரிடம் தளபதியாக இருந்தார். சிவனடியாரான கலிகாமர், மற்றொரு சிவனடியாரான மானக்கஞ்சாற நாயனாரின் மகளைத் திருமணம் செய்தவர். சிவன் மேல் உயிரையே வைத்திருந்த கலிங்காமருக்கு காதலுக்காக, தன் உயிருக்கும் மேலான சிவனை தூது அனுப்பிய சுந்தரர் மீது, வெறுப்பு ஏற்பட்டது. இதை அறிந்த சுந்தரர், தன் செய்கையால், ஒரு சிவனடியார் மனம் புண்பட்டதே என்று வேதனை பட்டார்.
இவர்களுடைய மன வேதனையை அறிந்த சிவன், முற்பிறவி கர்மத்தால் சங்கிலியை, சுந்தரர் மணம் முடிக்கும் சூழல் வந்ததை உணர்த்தவும், சுந்தரரையும், கலிக்காமரையும் நண்பர்களாக்கவும் முடிவெடுத்தார். இதனால், கலிக்காமருக்கு தீராத வயிற்று வலியைக் கொடுத்தார். அவரைப் பார்க்க, கலிக்காமரின் சொந்த ஊரான பெருமங்கலம் புறப்பட்டார் சுந்தரர்.
அவர் வரும் செய்தி, கலிக்காமருக்கு பணியாளர்கள் மூலம் தெரிந்தது. ‘கடவுளை அவமதித்த சுந்தரர் முகத்தில் விழிக்க பிரியப்படவில்லை…’ என்று கூறியவர், வயிற்றை கத்தியால் குத்தி, இறந்து போனார். அங்கு வந்து, நடந்ததை அறிந்து, வேதனைப்பட்டார் சுந்தரர்.
அப்போது, அவர் முன் சிவன் தோன்றி, கலிக்காமருக்கு உயிர் கொடுத்தார். நடந்த விஷயங்களைச் சொல்லி, கலிக்காமரைத் தேற்றினார். அதன்பின், கலிக்காமரும், சுந்தரரும் நண்பர்களாயினர்.
கலிக்காமரின் குருபூஜை, ஆனி மாதம், ரேவதி நட்சத்திரத்தில் வருகிறது. இந்த நன்னாள் முதல், கடவுளிடம் நாட்டில் மழையும், அமைதியும் வேண்டும், எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற, பொதுவான கோரிக்கைகளை வைப்போம். மற்ற கோரிக்கைகளுக்காக, அவர் கொடுத்த உடலைக் கொண்டு உழைப்போம்

%d bloggers like this: