உங்கள் குழந்தைகளின் எதிர்காலம்!

அன்னையரே… உங்கள் குழந்தைகளின் எதிர்காலம், உங்களிடம் தான் உள்ளது. "ஏன்… தந்தையிடம் இல்லையா…’ என்று கேட்கலாம்; அவர்களுக்கு பொறுப்பு இருந்தாலும்,பொறுமை இருப்பதில்லை. குழந்தைகளும், தந்தைக்கு பயந்து நடப்பரே தவிர, தாயின் சொல்லை தான் கேட்பர். தந்தையைவிட, தாயிடம் தான் அதிக அன்பு வைத்திருப்பர்.எனவே, குழந்தையில் எதிர்காலத்தை உணர்ந்து, நீங்கள் தான் செயல்பட வேண்டும்.இதில், போட்டிக்கே இடமில்லை. எனவே, உங்களுடைய விரக்தி, எரிச்சல், கோபம் போன்றவற்றை குழந்தைகளின் மனதை பாதிக்கும் அளவுக்கு வெளிப்படுத்தாதீர். மேலும்,குழந்தைகள் எதிரே பெற்றோர் சண்டையிடுவது, அவர்களது மனதை பாதித்து, படிப்பில் கவனத்தை சிதறச் செய்யும் என்பதை மனதில் கொள்ளுங்கள். அதேபோன்று,
குழந்தைகளின் மீது நம்பிக்கை வையுங்கள்.
அத்துடன், சிறு வயதிலேயே தெய்வ பக்தி மற்றும் வயதில் மூத்தோரிடம் பணிவு போன்ற நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுங்கள். அதேநேரம், நல்ல செயல்,

மரியாதையான சொற்கள் மற்றும் நல்ல பழக்க வழக்கங்களை நீங்கள் கடைபிடித்து, அவர்களுக்குமுன் மாதிரியாக இருந்தால்தான், அவர்களும், அதை பின்பற்றுவர். உதாரணமாக, காலணிகளை சரியாக வைத்தல், எந்தப் பொருளை எடுத்தாலும், மீண்டும் அது இருந்த இடத்தில் வைத்தல் மற்றும் வீட்டில் கண்ட இடங்களில் பொருட்களை போடாமை போன்ற செயல்களை நீங்கள் செய்தால், அதை, அவர்களும் பின்பற்றுவர்.
குழந்தைகளை கட்டாயப்படுத்தி ஒரு செயலைச் செய்ய சொல்லாமல்,விருப்பத்துடன் செய்ய, அன்புடன் கூறுங்கள். குழந்தைகளை பிறருடன் ஒப்பிட்டு திட்டாதீர்கள்; இது அவர்களின் மனதை மட்டுமல்ல எதிர்காலத்தையும் பாதிக்கும். "முதல் மார்க் எடுக்க வேண்டும்…’ என்று, கட்டாயப்படுத்தாமல், நன்றாக படிக்க வேண்டும் என்பதை மட்டும் வலியுறுத்துங்கள். போதிய மதிப்பெண் பெறாமை, படிப்பில் கவனமின்மை இருந்தால், காரணங்களை ஆராய்ந்து, அதற்கு தகுந்தவாறு, நடவடிக்கை எடுங்கள். குறைகளை, சாதாரணமாக நட்பு முறையில் சுட்டிக் காட்டுங்கள்; அதேநேரம், அவர்களது திறமையை பாராட்டுங்கள். பாராட்டுதல், மிக சிறந்த டானிக். செல்லம் கொடுத்து கெடுக்காமல், கண்டிக்க வேண்டிய நேரத்தில், கண்டிப்புடன் இருங்கள். அதிகமாக சாப்பிட வைத்து, அவர்கள் மூளையை மழுங்க வைத்துவிடாதீர்கள்; உடல் வளர்ச்சிக்கு ஏற்ற உணவை கொடுங்கள். குழுந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன், வயதிற்கேற்றவாறுஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் மற்றும் திருக்குறள், நாலடியார் போன்ற நீதி நூல்களை படிக்க சொல்லுங்கள். அதிக நேரம், "டிவி’ பார்த்து, நேரத்தை அதில்
செலவழிக்கவிடாதீர்கள்; அதற்கென, குறிப்பிட்ட நேரம் ஒதுக்கிக்கொள்ள சொல்லுங்கள். இரவு நீண்ட நேரம் கண்விழிக்கவிடாதீர்கள்.
அதிகாலையில் எழுந்து, படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதுடன், காலையில், காலைக் கடனை முடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துங்கள். தினமும், போதுமான அளவு தண்ணீர் குடிக்க அவர்களை பழக்குங்கள். அன்றைய செய்திகள் மற்றும் உலக நடப்புகளை அவர்கள் தெரிந்து கொள்ள, செய்திகள் பார்ப்பது, தினசரி பத்திரிகைகள் படிக்கும் பழக்கத்தை சிறுவயதிலிருந்தே ஏற்படுத்துங்கள். கணவன் மனைவி இருவரும் வேலை பார்த்து, பணத்தை மட்டும் சேர்த்து வைத்து பலன் இல்லை. குழந்தை நல்ல குழந்தையாக வளர வேண்டும். அது தான், பெரிய செல்வம்.
அதனால், உங்கள் பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து, அவர்கள் கூறுவதை கேளுங்கள். அவர்கள் ஏதாவது சொல்ல வந்தால், அதை அலட்சியப்படுத்தாதீர்கள். ஒரு பிரச்னையை அவர்கள் கூறினால், அதற்குரிய சரியான தீர்வை, அவர்களிடம் கூறுங்கள். ஒரு போதும் சட்டம் மற்றும் தர்மத்திற்கு எதிரான செயல்களை செய்யக்கூடாது என்பதை, அடிக்கடி வலியுறுத்துங்கள். எதிலும், தானேமுடிவு எடுக்கும் திறனை வளர்த்து விடுவதுடன், அனைவரையும் அனுசரித்து செல்வதன் அவசியத்தைவிளக்குங்கள்.
சமுதாயத்தில் மரியாதையுடனும், புகழுடனும் வாழ்வதே சிறப்பு என்பதை, அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும், அதிலிருந்துவிடுபடும் வழி மற்றும் தைரியமாக போராடும் தன்மையை கற்றுக் கொடுங்கள். மேலே கூறிய
எல்லாவற்றையும் படித்தபின், "இதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது?’ என்று, எண்ணாதீர்கள். பிள்ளைகள், நல்லவர்களாக வாழ வேண்டுமானால், அதற்கான நேரத்தை ஏற்படுத்தி, சிந்தித்து செயல்படுங்கள்.

%d bloggers like this: