வெளிநாடுகளில் உள்ள இந்திய கறுப்பு பணத்தின் அளவு ரூ.120 லட்சம் கோடி : ஆய்வில் தகவல்

புதுடில்லி : வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தின் அளவு சுமார் ரூ.120 லட்சம் கோடி என சமீபத்திய ஆய்வு ஒன்றில் கணக்கிடப்பட்டுள்ளது. அசோசம் தொழில்துறை நிறுவனத்தால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு கறுப்பு பணத்தின் அளவு இந்தியாவின் சராசரி உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2013-14ம் நிதியாண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி ரூ.114 லட்சம் கோடி ஆகும்.

இந்தியர்களின் ஏராளமான கறுப்பு பணம் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும், அவற்றின் சரியான மதிப்பு எவ்வளவு என இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை. இதற்கு முன் தரப்பட்ட கறுப்பு பண மதிப்பீட்டு அளவு, சமீபத்திய அளவீடுகள் ஆகியவற்றைக் கொண்டு அசோசம் நிறுவனம், வெளிநாடுகளில் இருக்கும் கறுப்பு பணம் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இதற்கு முன் அளிக்கப்பட்ட மதிப்பீடுகளின்படி, கறுப்பு பணத்தின் அளவு 500 பில்லியன் டாலரில் இருந்து 1.4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என கூறப்படுகிறது.
2011ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு காலத்தில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தின் மதிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட்டு வருகிறது. இந்த பணி அடுத்த 18 மாதங்களுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற முதல் நாளில் இருந்து, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் குறித்து ஆய்வு செய்வதற்காக சிறப்பு புலனாய்வு குழு ஒன்று அமைக்கப்பட்டு, பணியாற்றி வருகிறது. புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழுவின் வழிகாட்டுதலின்படி இந்த ஆய்வு நடத்தப்பட்டு. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அசோசம் தெரிவித்துள்ளது.
நேரடி வரிவிதிக் கழக தலைவர் வேத் ஜெயின் கூறுகையில், மோடி தலைமையிலான புதிய அரசு பொதுமன்னிப்பு முறை அடிப்படையில் அடுத்த 6 மாதங்களில் வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணங்களை 40 சதவீதம் வரிசெலுத்தி திரும்ப இந்தியாவிற்கு கொண்டு வரும் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். இது வெளிநாடுகளில் உள்ள பெருமளவிலான இந்திய பணத்தை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வர வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார். அசோசம் அளித்த ஆய்வு அறிக்கையிலும், அமெரிக்காவிலும் இத்தகைய பொது மன்னிப்பு முறை பயன்படுத்தப்பட்டதால் 14,700 க்கும் மேற்பட்டவர்கள் வரி செலுத்தி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜெர்மனியில் இதே முறைப்படி 20,000 பேர் வரி செலுத்தி வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருந்த சுமார் 4 பில்லியன் யூரோக்கள் பணத்தை திரும்ப கொண்டு வந்துள்ளனர்.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான முத்திரை வரியை கொண்டு வந்தால் சொத்து விலையில் நிர்ணயத்தில் ஏற்படும் குளறுபடிகளை தடுக்க முடியும் என தொழில்துறை நிறுவனம் தெரிவித்துள்ளது. ரியல் எஸ்டேட் துறையில் கறுப்பு பணம் கைமாறுவது அதிகரித்திருப்பதற்கு அதிகளவிலான முத்திரை வரி நிர்ணயம் மிகப் பெரிய காரணம் என நிபுணர்கள் பலரும் ஒத்துக் கொண்டுள்ளனர். ஏராளமான சொத்துக்களின் விற்பனை பதிவு செய்யப்படாமல் ஒப்பந்த அடிப்படையில் முடித்துக் கொண்டு கறுப்பு பண பரிமாற்றத்தை அதிகரிப்பதற்கு முத்திரை வரியே முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
சொத்துக்களின் விற்பனை மதிப்பு, சந்தை மதிப்பை விட குறைவாக காட்டி ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான கறுப்பு பண புழக்கம் அதிகரித்து வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் வேலை செய்யும் ஏராளமான இந்தியர்கள் தங்கள் வீட்டிற்கு சட்டவிரோதமாகவோ அல்லது மாற்று வழியிலோ தான் பணம் அனுப்பி வருவதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கம் இறக்குமதி செய்வதற்கு சமீபத்தில் விதிக்கப்பட்டுள்ள அதிகளவிலான கட்டுப்பாடுகள் தங்கம் கடத்தல் மற்றும் கறுப்பு பண பதுக்கலுக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
கறுப்பு பண பதுக்கலை தடுக்க, வெளிநாடுகளில் இருந்து அரசியல் கட்சிகள் நிதி பெறும் முறையில் வெளிப்படை தன்மையை கொண்டு வர வேண்டும் என அசோசம் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளது.

%d bloggers like this: