மிஸ்டர் கழுகு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு!

”தைலாபுரம் பக்கம் போயிருந்​தேன்…” என்றபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார்.

”செயற்குழு என்று அறிவித்து இருந்தாரே டாக்டர் ராமதாஸ்?” என்று எடுத்துக் கொடுத்தோம். ‘ஆமாம்’ என்று தலையாட்டிவாறு கழுகார் ஆரம்பித்தார். ”நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் தர்மபுரியைத் தவிர வேறு எங்கும் தலைகாட்டாமல் இருந்த டாக்டர் ராமதாஸ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு திண்டிவனத்தில் நடந்த பா.ம.க செயற்குழு கூட்டத்துக்கு வந்திருந்தார். வழக்கத்தைவிட ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தார். மாநிலத் தலைவரான ஜி.கே.மணி முதலில் பேசினார். ‘தேர்தல் பிரசாரத்துக்கு அய்யா ஏன் வரவில்லை என்று எல்லாரும் கேட்கிறார்கள். அந்தக் கசப்பான நிகழ்வுகள் எல்லாம் மாறும் விதமாகத்தான் இந்தச் செயற்குழு கூட்டம் அமைந்துள்ளது. அ.தி.மு.க 37 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், அதை விஞ்சி நிற்கிற வெற்றியை தர்மபுரியில் நாம் பெற்றிருக்கிறோம். தர்மபுரி தொகுதியில் இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிட்டிருந்தால்கூட வெற்றி பெற்றிருக்க முடியாது. அந்தளவுக்கு நாம் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளோம். எல்லோருடைய கருத்தையும் கேட்டுத்தான் அய்யா எந்த முடிவையும் எடுப்பார். இனி அய்யா சர்வாதிகாரியாக இருந்து எந்த உத்தரவைப் பிறப்பித்தாலும், நாங்கள் பின்பற்றத் தயாராக இருக்கிறோம்’ என்று எடுத்த எடுப்பிலேயே பெரிய ஐஸ் கட்டியைத் தூக்கி வைத்தார்.”

”காடுவெட்டி குரு பேசினாரா?”

”அவர் பேசாமல் இருப்பாரா? ‘தர்மபுரியில் நமக்குக் கிடைத்த வெற்றி, கூட்டணியால் கிடைத்த வெற்றியல்ல. நம் சமூகத்து மக்களால் கிடைத்த வெற்றி. தர்மபுரி மக்களின் காலைத் தொட்டு நாம் வணங்க வேண்டும். இனி வரும் காலங்களில் கூட்டணி அமைவதாக இருந்தாலும் சரி, வேட்பாளர்கள் அறிவிப்பதாக இருந்தாலும் சரி, அய்யாவின் முடிவே இறுதி முடிவாக இருக்க வேண்டும். அதற்கு மேல் யாரும் அந்த முடிவில் தலையிடக் கூடாது. ஏ.கே.மூர்த்தி போன்ற நிர்வாகிகள் கூட்டணி வேண்டும் என்​றார்கள். வெற்றிபெற வேண்டும் என்பதிலே நிர்​வாகி​கள் குறியாக இருக்கக் கூடாது. வெற்றி தோல்வி முக்கியம் இல்லை. அய்யா சொல்வதை ஏற்றுக்கொண்டு அதை நிறைவேற்ற வேண்டும். அதுதான் முக்கியம். யாருக்கும் அடிபணியாத துணிச்சல் மிக்க தலைவரை, கடந்த தேர்தலில் நாம் வருத்தப்பட வைத்துவிட்டோம். அதற்காக அவரிடம் நாம் பாவமன்னிப்பு கேட்க வேண்டும். இனி இதுபோன்ற தவற்றை நாம் செய்யக் கூடாது. அய்யாவின் முடிவே இறுதி முடிவாக இருக்க வேண்டும்’ என்று அன்புமணியை மறைமுகமாக எச்சரித்தார்.”

”அன்புமணியின் ரியாக்ஷன் என்ன?”

”காடுவெட்டி குரு பேசும்போது எந்த ரியாக்ஷனும் காட்டாத அன்புமணி, ’37 தொகுதிகளில் வெற்றிபெற்ற மகிழ்ச்சி ஜெயலலிதாவுக்கு இல்லை. நாம் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுவிட்டோம் என்ற கோபம்தான் அவருக்கு இருக்கிறது. இந்தத் தேர்தலில் தர்மபுரியில் தி.மு.க-வை மூன்றாவது இடத்துக்குத் தள்ளியதே நம் சாதனைதான். அவர்கள் மீண்டு எழ இனி 15 ஆண்டுகள் ஆகும். இனி அய்யா என்ன சொன்னாலும் நிச்சயம் அதை ஏற்போம்’ என்று அப்பாவிடம் சரணடைந்தார் அன்புமணி.”

”பாசமழையாக இருந்திருக்கும்போல!”

”ம்… அன்புமணிக்குப் பிறகு ராமதாஸ் பேசினார். ‘அல்லி ராணி ஜெயலலிதாவுக்கு இனி ஒரு நிமிடம்கூட தமிழகத்தை ஆளத் தகுதி இல்லை. பிறகு எப்படி அவர்கள் ஜெயித்தார் என்று நீங்கள் கேட்கலாம். அது 200 ரூபாயால் கிடைத்த வெற்றி அல்ல. வாக்கு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்ததில் கிடைத்த வெற்றி. அதை நாங்கள் நிரூபிக்கத் தயாராக இருக்கிறோம். எனக்கு ஓர் ஆசை இருக்கிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் பாதி தொகுதிகளில் அ.தி.மு.க டெபாசிட் இழக்க வேண்டும். எனது ஆசையை நீங்கள்தான் நிறைவேற்ற வேண்டும்’ என்று தன் விருப்பத்தைச் சொல்லி வைத்தார். இந்தக் கூட்டத்துல இன்னொரு கவனிக்கத்தக்க விஷயம் இருந்தது.”

”என்ன?”

”பா.ம.க-வுக்கு இருந்த மூன்று எம்.எல்.ஏ-க்களில் ஒருவர், ஏற்கெனவே அ.தி.மு.க-வுக்குத் தாவிவிட்டார். மிச்சம் இருப்பது காடுவெட்டி குருவும், செஞ்சி கணேஷ்குமாரும்தான். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை… கணேஷ்குமார் இந்தக் கூட்டத்துக்கு வரவில்லை. ‘கணேஷ்குமார் ஏன் வரவில்லை?’ என்று பல சந்தேகங்களுடன் கூடிக் கூடிப் பேசியபடி இருந்தனர் பா.ம.க நிர்வாகிகள். ஆளுங்கட்சி தரப்பில் இருந்து கணேஷ்குமாருக்கு தொடர்ந்து அழைப்பு வந்தபடி இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். கணேஷ்குமார் என்ன யோசிக்கிறாரோ?” என்றவர் அடுத்த சப்ஜெக்ட்டுக்குத் தாவினார்.

”தேர்தல் தோல்வி குறித்து தி.மு.க வேட்பாளர்கள் கருணாநிதியிடம் கொடுத்த அறிக்கை பற்றி கடந்த இதழில் சொல்லியிருந்தேன் அல்லவா? அந்த அறிக்கைகளை கருணாநிதி கடகடவென படிக்க ஆரம்பித்துள்ளார். ஒவ்வொரு தொகுதியிலும் கட்சிக்காக வேலை செய்யாதவர்கள், கட்சிக்கு எதிராக வேலை செய்தவர்களின் பெயர்களை தனியாகப் பட்டியல் போட்டு வருகிறாராம். அந்தப் பட்டியல் விரைவில் ஸ்டாலின் கையில் ஒப்படைக்கப்படும். அதில் உள்ளவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்வதுதான் கருணாநிதியின் திட்டம் என்கிறார்கள், அவரது மனவோட்டத்தை அறிந்தவர்கள். வேட்பாளர்கள் கொடுத்த அறிக்கையில் கட்சிக்கு எதிராக வேலை பார்த்தவர்கள் பட்டியலில் இருக்கும் சிலர், கருணாநிதியையும் ஸ்டாலினையும் சந்தித்து தங்கள் தரப்பு விளக்கத்தைச் சொல்ல முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் ஸ்டாலினோ, ‘இப்போ நாங்க யாரையும் விளக்கம் கேட்க விரும்பலை. நாங்க கேட்கும்போது சொன்னால்போதும். யாரும் என்னைப் பார்க்க வர வேண்டாம்’ என்று சொல்லிவிட்டாராம்.”

”ஓஹோ!”

”ஆறு பேர் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் மாவட்டங்களின் எண்ணிக்கையை 65 ஆக அதிகப்படுத்தியதை முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் மாவட்டச் செயலாளர்கள் ஏற்கவில்லை. இது சம்பந்தமாக ஸ்டாலினை அவர்கள் தொடர்புகொண்டு பேசினாலும், சரியான ரெஸ்பான்ஸ் இல்லையாம். ‘அப்பாவும் மகனும் சேர்ந்துகொண்டு நாடகம் நடத்துகிறார்கள்’ என்று சிலர் வெளிப்படையாகப் புலம்ப ஆரம்பித்துவிட்டார்களாம். ‘தளபதியின் கரத்தை வலுப்படுத்தத்தான் நாம் உழைத்தோம். ஆனால், அவர் நமக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. நம்மைக் காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை’ என்று இவர்கள் சொல்கிறார்களாம்.

திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, நீலகிரி, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை… ஆகிய எட்டு மாவட்டங்கள் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களையும் நான்காக, மூன்றாக, இரண்டாகப் பிரித்துவிட்டார்கள். ஒருங்கிணைந்த மாவட்டமாக மிகப் பெரியதாக இருந்த அனைத்தும் சின்னச்சின்னதாக பிரிக்கப்பட்டுவிட்டது. இதுதான் மாவட்டச் செயலாளர்களின் கடுப்பு. தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன், கருணாநிதியைச் சந்தித்து தனது கொந்தளிப்பைக் காட்டிவிட்டார். தியாகராயர் நகரை மையமாகக் கொண்ட ஜெ.அன்பழகன், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ-வாகவும் இருக்கிறார். சேப்பாக்கம் – திருவல்லிக்கேணியை சென்னை கிழக்கு மாவட்டத்தில் சேர்த்துவிட்டார்கள். தியாகராயர் தொகுதி, சென்னை மேற்கு மாவட்டத்தில் இருந்தது. தன்னை மட்டம் தட்டுவதற்காக செய்யப்பட்ட தந்திரம் என்று ஜெ.அன்பழகன் நினைத்தாராம். அதனால், நேரடியாக கருணாநிதியைச் சென்று சந்தித்து கதறினார். எப்போதும் அவர் கருணாநிதி செல்லம் என்பதால், அவரும் உற்றுக் கவனித்தார். உடனடியாகப் பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டது. சேப்பாக்கம் – திருவல்லிக்கேணியும், தியாகராயர் நகரும் சென்னை மேற்கு மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுவிட்டன. அதன் பிறகுதான் இறுதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்படி ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, ‘இனி எதிலும் மாற்றம் இல்லை’ என்று சொல்லச் சொல்லிவிட்டார் கருணாநிதி.”

”அப்படியா?”

”ஆறு பேர் குழு கொடுத்ததில் ஒரு ஷரத்துதான், இந்த மாவட்டங்கள் பிரிப்பது. இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றனவாம். அதனையும் படிப்படியாக அமல்படுத்தச் சொல்லிவிட்டாராம் கருணாநிதி. இரண்டு முறைக்கு மேல் மாவட்டச் செயலாளராக இருந்தவர்கள், மூன்றாவது முறையும் ஆக முடியாது என்ற ஆலோசனையை கருணாநிதி ஏற்றுவிட்டாராம். அப்படிப் பார்த்தால் இப்போது மாவட்டச் செயலாளராக இருக்கும் ஒரு சிலரைத் தவிர, யாருமே மீண்டும் மாவட்டச் செயலாளர் ஆக முடியாது. தங்களை ஒழிக்க செய்யப்படும் தந்திரமாக மாவட்டச் செயலாளர்கள் இதனைப் பார்க்கிறார்கள்.

‘மாவட்டத்தை நான் நினைத்த மாதிரி மாற்றவில்லை என்றால், ராஜினாமா செய்துவிடுவேன் என்று ஜெ.அன்பழகன் கூறினார். இதே மாதிரியான நினைப்பில்தான் பல மாவட்டச் செயலாளர்கள் இருக்கிறார்கள்’ என்றும் சொல்லப்படுகிறது. ‘ஒவ்வொரு முறையும் தளபதி எங்கள் மாவட்டத்தை க்ராஸ் செய்து செல்லும்போது எங்களுக்கு எவ்வளவு செலவு தெரியுமா?’ என்று ஒருவர் பட்டியல் போடுகிறார். ‘கடந்த மூன்று ஆண்டுகளில் தளபதி எங்கள் மாவட்டத்துக்கு எத்தனை முறை வந்திருக்கிறார் தெரியுமா?’ என்று ஒருவர் பட்டியல் வாசிக்கிறார். ‘கோடை காலம் வந்தாலே எங்கள் மாவட்டத்துக்கு வந்து தங்க வருபவர்களால் எவ்வளவு செலவு?’ என்று இன்னொருவர் கணக்குக் கொடுக்கிறார். இப்படி ஒவ்வொருவரும் தங்களது செலவுக் கணக்குகளைச் சொல்லி தங்களது நெருக்கத்தைச் சுட்டிக்காட்ட ஆரம்பித்துள்ளார்கள். ஆனாலும், அவமானம்தான் பரிசா என்பது இவர்களது கேள்வி. ‘இத்தனை ஆண்டுகள் மாவட்டச் செயலாளர்களாக இருந்தால் போதாதா? எத்தனை தடவை அமைச்சர்களாக இருந்துள்ளீர்கள்… அது போதாதா?’ என்று எதிர் கோஷ்டி எதிர் கேள்வி கேட்கிறது” என்ற கழுகாரிடம், ”அ.தி.மு.க தகவல்களுக்கு வாரும்” என்றோம்!

”சமீபத்தில் நடந்த குருபெயர்ச்சி ஜெயலலிதாவின் ராசிக்கு குறிப்பிடும்படியாக இல்லை என்று சில ஜோதிடர்கள் சொல்லியிருக்​கிறார்கள். அதனால், குருபெயர்ச்சிக்கு முதல் நாள், வேறு இடத்துக்கு மாற வேண்டும். பிறகு, ஒரு வாரத்துக்கு எங்கும் வெளியில் செல்லக் கூடாது என்று ஜோதிடர்கள் சொன்னார்களாம். அதுபடியே சிறுதாவூர் சென்று வந்ததாகச் சொல்கிறார்கள். அதன் பிறகு, கோட்டைக்குக்கூட செல்லாமல் கார்டனிலேயே ஓய்வில் இருக்கிறார் முதல்வர்!”

”பெங்களூரு வழக்கு வேகம் பிடித்து​விட்டதே?”

”உச்ச நீதிமன்றம் இதுவரை பிறப்பித்து இருந்த தடை உத்தரவை விலக்கிக்கொண்டுவிட்டது. இதை ஜெயலலிதா தரப்பு கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லையாம். லெக்ஸ் ப்ராப்பர்ட்டீஸ் உள்ளிட்ட 12 நிறுவனங்களில் ஜெயலலிதா நிர்வாகியாக இருந்துள்ளார். எனவே, அந்த நிறுவனங்களையும் இந்த வழக்கில் சேர்த்துள்ளார்கள். அந்த நிறுவனங்களின் சார்பில் தடைகோரும் மனு முதலில் தாக்கல் செய்யப்பட்டது. ‘எங்களை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும். அதில், தீர்ப்பு வரும் வரை இந்த வழக்கின் விசாரணையை நிறுத்த வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்கள்.

நீதிபதிகள் சவுகான், சிக்ரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு மே 26-ம் தேதி விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணைக்கு ஜூன் 6-ம் தேதி வரைக்கும் தடை விதித்தனர். பின்னர், இந்தத் தடை ஜூன் 16-ம் தேதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி விக்ரம் சித் சென், சிவ கீர்த்தி சிங் முன்னிலையில் 17-ம் தேதி மீண்டும் வந்தது. தங்களது தரப்பு கோரிக்கையை மீண்டும் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் வலியுறுத்தினார்கள். ஆனால், அதனை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டார்கள். தடை விதிக்க முடியாது என்று கூறிவிட்டனர். இதையடுத்து பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா, ‘இறுதி விசாரணை 19-ம் தேதி முதல் தொடங்கும்’ என்று அதிரடியாக அறிவித்தார். ‘இனி வேறு வழியில்லை’ என்ற நிலைமையை அது உருவாக்கிவிட்டது.

அதன் பிறகும் ஐந்து கம்பெனிகள் சார்பில் மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்கள். அந்த மனு, 18-ம் தேதி சிறப்பு நீதிபதி குன்ஹா முன் விசாரணைக்கு வந்தது. ‘வழக்குத் தொடர்ந்து 17 ஆண்டுகள் கடந்துவிட்டன. அப்போதெல்லாம் கம்பெனியை விடுவிக்க வேண்டும் என்று கேட்காத நீங்கள், இப்போது கேட்பதற்கு என்ன காரணம்? யார் தூண்டுதலில் இந்த மாதிரி மனு போடுகிறீர்கள்?’ என்று கேட்டார். ‘தேவையில்லாமல் மனுக்கள் தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணாக்கியதற்காக ஐந்து கம்பெனிகளுக்கும் தலா 50 ஆயிரம் அபராதம் விதிக்கிறேன்’ என்று நீதிபதி சொன்னார். ‘அரசு தரப்பு வாதம் முடிந்துவிட்டது. 19-ம் தேதி முதல் குற்றவாளிகள் தரப்பு வாதம் தொடங்கும் என்று அறிவித்தார். இந்த நிலையில் வேறு வழியில்லாமல் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார் தனது இறுதி வாதத்தைத் தொடங்கினார்.”

”இனி ஒரு மாதத்துக்குள் வழக்கின் மொத்த விசாரணையும் முடிந்துவிடுமே?”

”ஆமாம்! விஷயம் அறிந்தவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். 22 நாட்களுக்குப் பிறகு 19-ம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார் ஆஜராகி தங்களுடைய இறுதி வாதத்தை தொடங்கினார். இதுவரை இந்த வழக்கை கண்டுகொள்ளாமல் இருந்த வட இந்திய சேனல்களுக்கும் இந்த வழக்கை ஃபாலோ செய்ய படையெடுத்து வந்ததைப் பார்க்க முடிந்தது. 

குமார் மூத்த வழக்கறிஞர் என்பதால் பதற்றம் இல்லாமல் தொடங்கினார். ‘என்னுடைய மனுதாரரான ஜெயலலிதா 1991 – 1996 வரை தமிழக முதல்வராக இருந்தார். அந்தக் காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா சொத்துக்கள் சேர்த்துள்ளதாக 21.6.1996 அன்று சுப்பிரமணியன் சுவாமி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை நீதிமன்றம், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையை விசாரிக்க ஆணையிட்டது. அதன் பிறகு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையின் டிஜிபி-யாக இருந்த லத்திகா சரண் இந்த வழக்கை விசாரித்தார். அப்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற்று தி.மு.க ஆளுங்கட்சியாக இருந்ததால், திட்டமிட்டு என் மனுதாரரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், தங்களுக்கு ஆதரவான அதிகாரிகளை வைத்துக்கொண்டு திட்டமிட்டே பொய்யான புலன்விசாரணை செய்து ஜோடித்து இந்த வழக்கைப் போட்டார்கள். விசாரணை அதிகாரியாக இருந்த லத்திகா சரணை மாற்றிவிட்டு, தி.மு.க-வுக்கு ஆதரவாக செயல்பட்ட வி.சி.பெருமாளுக்கு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநர் பதவி உயர்வு கொடுத்து இந்த வழக்கை விசாரிக்க செய்தது. அவர் இந்த வழக்கை விசாரிக்காமலேயே நேரடியாக ஜெயலலிதா மீது எஃப்.ஐ.ஆர் போட்டு, அதன் பிறகு விசாரணையைத் தொடங்கினார்.

ஒரு ஸ்டேஷன் அதிகாரிதான் எஃப்.ஐ.ஆர் போட வேண்டும். ஒரு இயக்குநராக இருப்பவர் எப்படி எஃப்.ஐ.ஆர் போட்டார்? நாட்டில் எத்தனையோ குற்றவாளிகள் இருக்கும்​போது அவர்களை எல்லாம் விட்டுவிட்டு நேரடியாக ஒரு இயக்குநர் ஜெயலலிதா மீது எஃப்.ஐ.ஆர் போட்டுள்ளது அரசியல் காழ்ப்பு உணர்ச்சிதான் என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது. 249 சாட்சியங்களை பொய்யாக சாட்சி சொல்ல வைத்து, பிறகு மீண்டும் அந்த சாட்சியங்கள் விசாரிக்கும்போது மறுத்திருக்கிறார்கள்’ என்று குமார் சொல்லி வந்தபோது நீதிபதி குன்ஹா அதனை உன்னிப்பாக கவனித்தார்!”

”ம்!”

”அதன் பிறகு 7.12.1996-ல் ஜெயலலிதா வீட்டில் போலீஸ் நடத்திய சோதனை பற்றி விவரித்தார் குமார். ‘ஜெயலலிதா சிறையில் இருக்கும்போது தனிமனித சுதந்திரத்தை மீறி சட்ட விரோதமாக அவர் வீட்டுக்குள் நுழைந்து சோதனை என்ற பெயரில் பெட்ரூம், பாத்ரூம் வரை சென்று வீடியோ, போட்டோக்களை எடுத்து, அதை மீடியாக்களில் காண்பித்து அசிங்கப்படுத்தினார்கள். என் மனுதாரருக்கு பொதுமக்களிடம் இருக்கும் செல்வாக்கைக் குறைத்து, அவர் மீது அவப்பெயரை ஏற்படுத்த தி.மு.க செய்த அரசியல் காழ்ப்பு உணர்ச்சி நடவடிக்கை இது’ என்று விளக்கிச் சொல்லிக்கொண்டு இருந்தார். இவரது வாதங்கள் சுமார் 10 நாட்கள் வரை நீடிக்கும் என்கிறார்கள்.

இதுபற்றி கோர்ட் வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் 10 நாட்கள் வாதங்களை வைப்பார். அதன் பிறகு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வழக்கறிஞர்கள் மொத்தமாக 20 நாட்கள் வரைக்கும் வாதங்களை வைப்பார்கள். ஜூலை 20-ம் தேதிக்குள் இவை அனைத்தும் முடிந்துவிடும். ஆகஸ்ட் முதல் வாரத்தில் தீர்ப்புத் தேதி அறிவிக்கப்படும்’ என்கிறார்கள். அ.தி.மு.க வட்டாரம் பதற்றம் ஆகி வருவதற்கு இதுதான் காரணம்” என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார்,

”அமைச்சரவையில் முன்வரிசையில் இருக்கும் வி.ஐ.பி-க்கள் இருவர் இந்த வாரத்தில் மாற்றப்படலாம். அப்போதே அ.தி.மு.க-வில் கட்சி ரீதியாகவும் சில மாற்றங்கள் இருக்கலாம்” என்று சொல்லிவிட்டுப் பறந்தார்.

%d bloggers like this: