‘சூரிய’ பலன்கள்! கிரகச் சேர்க்கை…

ருவரின் ஜாதகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் சேர்ந்து காணப்படுவது இயல்பு. ஒரு பாவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் சேர்ந்திருக்கும்போது ஏற்படக்கூடிய பலன்களைப் பற்றி பார்ப்போம்.

நவகிரகங்களில் சூரியனே முதன்மையானவர் என்பதால் சூரியனில் இருந்தே தொடங்குவோம்.

சூரியன் – சந்திரன்: – ஜனன ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் சேர்ந்து காணப்பட்டால், அந்த ஜாதகருக்கு ஸ்திரமான புத்தி இருக்காது. சதா மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். அவப்பெயருக்கு ஆளாக நேரிடுவதுடன் அரசாங்க தண்டனைக்கும் ஆளாகக் கூடும். கணவன் மனைவி இடையில் பணியின் காரணமாகவோ அல்லது கருத்து வேறுபாட்டின் காரணமாகவோ தற்காலிகமான பிரிவு ஏற்படும்.

சூரியன் லக்னாதிபதியாக இருந்தால், லக்னாதிபதி கெடுபலன் செய்ய மாட்டார் என்ற விதிப்படி மேற்கண்ட அசுப பலன்கள் சுப பலன்களாக மாறும். அதேபோல் சூரியனோ அல்லது சந்திரனோ அங்கு ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருந்தாலும் கெடுபலன்கள் ஏற்படாது. மற்றுமொரு முக்கியமான விதியையும் குறிப்பிட வேண்டும். அதாவது கேந்திர ஸ்தானாதிபதியும் திரிகோணாதிபதியும் யாரோடு சேர்ந்திருந்தாலும், தான் நல்லது செய்வதுடன் தன்னுடன் இணைந்திருக்கும் கிரகத்தையும் நல்லது செய்யவைக்கும்.

சூரியன் – செவ்வாய்: – உடல் உஷ்ணம் அதிகம். நேரம் தவறாமையைக் கண்டிப்புடன் கடைப்பிடிப்பார்கள். ஆண்மைக்கு உரிய கம்பீரம் இவர்களிடம் கூடுதலாகவே காணப்படும்.  காவல்துறை, ராணுவம் போன்ற சீருடை சார்ந்த பணியாகவே இவர்களுக்கு அமையும். அதிக சகோதரர்களும் அவர்களால் ஆதாயமும் உண்டு. இந்த சேர்க்கையானது ஒரு பெண்ணின் ஜாதகத்தில் காணப்பட்டால், அந்தப் பெண்ணுக்கு தலைமைப் பண்பு நிறைந்திருக்கும். அந்த வீட்டில் மீனாக்ஷி ஆட்சிதான் நடக்கும் என்று சொல்லலாம். இந்த சேர்க்கை மேஷத்தில் காணப்பட்டால், மேலே சொன்ன பலன்கள் கூடுதலாக நடக்கும்.

சூரியன் – புதன்:- சூரியன், புதன் சேர்க்கை பெற்ற 8 பாகைகளுக்குள் ஜாதகர் பிறந்திருந்தால், புதனுக்கு அஸ்தங்க தோஷம் ஏற்பட்டு பலன் தராமல் போய்விடும். குறிப்பாக புதனின் தசா புக்தி காலங்களில் கெடுபலன்களே நடைபெறும். 8 பாகைகளுக்குப் பிறகு பிறந்தால்தான் பலன் தரும். சூரியன் புதனின் சேர்க்கையானது ஜாதகரை கணிதத்தில் நிபுணத்துவம் பெறவைக்கும். அரசாங்க வகையில் ஆதாயம் உண்டு. படிக்கவேண்டிய வயதில் படிக்காமல் தாமதமாகவே படிப்பை முடிப்பர். தகுதியைவிட உயர்ந்த இடத்தில்  வேலைக்குப் போவர். இவருடைய பணி பெரும்பாலும் அரசாங்கப் பணியாகவே அமையும். தாய்மாமன் உறவுமுறை சுமுகமாகவும் ஆதாயம் தருவதாகவும் இருக்கும். வாக்குத்திறமை பெற்றிருப்பர்.

சூரியன்-குரு:- சூரியன், குரு சேர்க்கை பெற்ற ஜாதகருக்கு பொதுவாக இரட்டை குழந்தைகள் பிறக்கும் என்று சொல்லலாம். பொன் சம்பந்தப்பட்ட வியாபாரம் செய்யும் குடும்பத்தில் இருந்து வாழ்க்கைத் துணை அமையும். கோயில் திருப்பணிகளிலும் சமூகநலப் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்வர். நிதி அமைச்சகம், வங்கிகள், நிதிநிறுவனங்களில் வேலை அமையும். அத்தகைய பணியும்கூட தலைமையிடத்தில் இருக்கும். ஒருசிலர் பேராசிரியராகவும் பணிபுரிவர். இயல்பிலேயே ஆன்மிக நாட்டம் கொண்டிருக்கும் இவர்களில் சிலர் ஆன்மிக குருவாகவும் பிரகாசிப்பர்.

சூரியன் – சுக்ரன்:- சூரியன் சுக்ரன் சேர்க்கையானது ஜாதகருக்கு எதிர்பாராத பொருள்வரவைத் தரும். இவர்களுக்கு எதிலும் நஷ்டம் என்பதே ஏற்படாது. ராணுவத் தளவாடங்கள் விற்பனை மூலம் பணம் சம்பாதிப்பர். வசதியான குடும்பத்தில் இருந்து வாழ்க்கைத் துணை அமையும். அந்நியப் பொருள்களைப் பயன்படுத்துவதில் ஆர்வம் அதிகம் இருக்கும். விலை உயர்ந்த சொகுசு வாகன பிராப்தி இவர்களுக்கு உண்டு. இவருக்குச் சொந்தமான வீட்டில் தண்ணீர்ப் பஞ்சம் இருக்காது.

சூரியன் – சனி:- பகலில் பிறக்கும் குழந்தைகளுக்கு பித்ருகாரகன் சூரியன் என்றால், இரவில் பிறக்கும் குழந்தைகளுக்கு சனி பித்ருகாரகன். இந்தச் சேர்க்கையானது தந்தை மகன் உறவில் விரிசலை ஏற்படுத்துவதுடன், கோர்ட், கேஸ் என்றும் அலைக்கழிக்கும். அவ்வப்போது மன அமைதி பறிபோகும். சமையல் கலைஞராகவும், கேன்டீன் காண்ட்ராக்டராகவும் பணம் சம்பாதிப்பர். இரும்புக் கழிவுகளை வாங்கி விற்றும் ஜீவனம் நடத்துவர். கடினமான உழைப்பாளிகளான இவர்கள் அரசாங்கத்துடன் இணக்கமாக நடந்துக்கொள்வர். சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் பணம் சம்பாதிக்கவும், அதில் ஒரு பகுதியை ஆன்மிகப் பணிகளுக்குச் செலவழிக்கவும் தயங்கமாட்டார்கள். எதையுமே புதியதாக வாங்குவது இவர்களுக்குப் பிடிக்காது. மற்றவர்கள் பயன்படுத்திய கார், பைக் போன்றவைகளையே வாங்குவர்.

சூரியன் – ராகு:- சூரியன் ராகு சேர்க்கை அமையப் பெற்ற ஜாதகர்கள் சட்டத் துறையில் நிபுணத்துவம் பெற்றிருப்பர். எதிலும் மாற்றுச் சிந்தனையும், புரட்சிகரமான எண்ணங்களும் கொண்டிருப்பர். பிறருடைய சொத்துக்கள் எல்லாம் இவர்களுக்கு எதிர்பாராமல் வந்து சேரும். பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவைகளை ஏற்றுமதி செய்து பணம் சம்பாதிப்பர். இவர்களுக்கு அமையக்கூடிய பணியும்கூட மீன்வளத்துறை போன்று கடல் சார்ந்த பணியாகவே இருக்கும்.

சூரியன் – கேது:- ஆன்மிகவாதியாக இருப்பர். ஆன்மிகம் தொடர்புடைய மரங்களைக் கோயில்களுக்குக் கொடுப்பர். மரங்களை வெட்டி விற்பனை செய்வதால், இவர்கள் மரங்களை நட்டுப் பராமரிக்கவும் செய்வர். ஒருசிலர் காய்,கனி வகைகளை விற்றும் ஜீவனம் செய்வர். இவர்களுக்கு வனத்துறை சார்ந்த பணிகளே பெரும்பாலும் அமையும்.

நன்றி-விகடன்

%d bloggers like this: