ஃப்ளாட் சதுர அடி விலை: இதை மட்டும் கவனித்தால் போதுமா?

அடுக்குமாடிக் குடியிருப்பு  வீடு வாங்குபவர்களில் பெரும்பான்மையானோர், ஒரு சதுர அடிக்கான விலை குறைவாக இருந்தால், வீட்டின் விலை மலிவாக இருப்பதாக நினைக்கிறார்கள். அப்படி இருந்தால் தாராளமாக வாங்கலாம். அதனால் லாபமே கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால், பல சமயங்களில் இந்த நினைப்பு தவறாகவே இருக்கிறது.

ஒரு சதுர அடிக்கான விலையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. வீடு வாங்குபவர்கள் வீட்டின் உரிமையைப் பெறும் தேதி, நிலத்தின் பிரிக்கப்படாத பங்கு (U.D.S), வழங்கப்படுகிற வசதிகள் மற்றும் கட்டுமானத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், பொதுப் பயன்பாட்டு இடங்கள் உள்ளிட்டவை ஒரு சதுர அடிக்கான விலையை நிர்ணயம் செய்வதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும்.

‘புராஜெக்ட் ஏ’ என்பது 4 தளங்களில் சம அளவுள்ள 73 அபார்ட்மென்ட்களைக் கொண்டது என்று வைத்துக்கொள்வோம். இந்தத் திட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 89,000 சதுர அடி. கட்டுமானப் பரப்பளவு (பில்ட்-அப் ஏரியா) 76,650 சதுர அடி மற்றும் மொத்த மேற்பரப்பளவு (சூப்பர் பில்ட்-அப் ஏரியா) 1,02,200 சதுர அடி.

இந்தத் திட்டத்தில் உள்ள அடுக்குமாடி வீடுகள் குடியேறுவதற்குத் தயாராக உள்ளன. இதில் டென்னிஸ் விளையாட்டு அரங்கம், மின்சார பேக்- அப் வசதி, ஜிம் போன்றவை உள்ளன. இந்தத் திட்டத்தில் வீட்டை வாங்க வேண்டுமெனில், ஒரு சதுர அடிக்கான விலை ரூ.6,300-ஐ சொல்கிறார்கள்.

இதன் அருகே உள்ள மற்றொரு திட்டம் ‘புராஜெக்ட் பி’ இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இதில் 3 தளங்களுடன், சம அளவுள்ள 58 அபார்ட்மென்ட்கள் கட்டப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 46,400 சதுர அடி. கட்டுமானப் பரப்பு 58,000 சதுர அடி, சூப்பர் பில்ட்-அப் 72,500 சதுர அடி. இது மார்ச் 2017-ல் முடிவடைந்து உரிமை ஒப்படைக்கப்படும். இதில் நீச்சல் குளம், மின்சார பேக்-அப் வசதி ஆகியவை உள்ளன. இதில் வீடு வாங்க வேண்டுமெனில் ஒரு சதுர அடிக்கான விலை ரூ.5,700 என்கிறார்கள்.

இந்த அமைவிடத்தில் தோராயமான நில மதிப்பு ஒரு சதுர அடிக்கு ரூ.3,000. இப்போது நாம் இந்தத் திட்டங்களின் கார்பெட் பரப்பளவின் அடிப்படையில் ஒரு சதுர அடிக்கு என்ன உண்மையான விலையை வழங்குகிறார்கள் எனப் பார்ப்போம். (பார்க்க அடுத்த பக்கத்தில் உள்ள அட்டவணை)

சதுர அடி விலையானது கீழ்க்கண்ட விதங்களில் சரிசெய்யப்பட்டுள்ளது. எப்படி சரிசெய்யப்பட்டுள்ளது என்பதைக் கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்.

வீட்டின் உரிமையைப் பெறும் நாள்!

வீட்டின் உரிமையைப் பெறும் தேதியில் உள்ள வித்தியாசமானது ஒரு சதுர அடிக்கான விலையில் சரிசெய்யப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையைப் பெறும் தேதியில் தாமதம் ஏற்பட்டால், சதுர அடி விலையை அதிகரிக்க வேண்டும். ஏனெனில், வாடகை, இஎம்ஐ மீதான வட்டி, குறித்த காலத்துக்குள் முடிவடையாத திட்டத்துக்கான ரிஸ்குகள் ஆகியவை ஏற்பட வாய்ப்புண்டு. ஆகவேதான் தற்போதைய தேதியிலிருந்து ஒவ்வொரு மாதமும் தாமதமாவதற்கும் ஒரு சதுர அடிக்கான விலையில் 1 சதவிகிதம்  அதிகரிக்கப்படுகிறது.

புராஜெக்ட் ஏ உடனடியாகக் குடியேறும் வகையில் உள்ளது. ஆகவே, ஒரு சதுர அடிக்கான விலையை சரிசெய்யத் தேவையில்லை. புராஜெக்ட் பி மார்ச் 2017-ல் (34 மாதங்கள்) ஒப்படைக்கப்படவிருப்பதால் ஒரு சதுர அடிக்கான விலையில் ரூ.1,938 உயர்த்தப்பட்டுள்ளது. 

நிலத்தின் பிரிக்கப்படாதப் பங்கு!

பல அடுக்குமாடிக் குடியிருப்பு, நிலத்தில் கட்டப்படுவதால், தனிநபருக்கு என எந்த நிலப்பகுதியையும் இனம் காணமுடியாது. ஆனால், அவரது அபார்ட்மென்ட் பரப்பளவுக்கு விகிதாசார அடிப்படையில் நிலப்பங்கினைப் பெறமுடியும். இதனை ‘யூடிஎஸ்’ என்கிறார்கள். இது சதுர அடி பரப்பு அதிகமாக அதிகமாக அவருக்கு அதிக பங்கு நிலம் கிடைக்கும். நிலப்பரப்பு விலை உயரும். கட்டட மதிப்பு குறையும். திட்டம் ஏ-ஐ திட்டம் பி-வுடன் ஒப்பிடும்போது, சூப்பர் பில்ட்-அப் ஏரியா பரப்பில் அதிக யூடிஎஸ் கிடைக்கும். ஆகவே, திட்டம் பி-ல் நிலப்பரப்புக்கான சூப்பர் பில்ட்-அப் ஏரியாவின் ஒரு சதுர அடி விலையில் ரூ.242 உயர்த்தப்பட்டுள்ளது.

கார்பெட் ஏரியா!

கார்பெட் ஏரியா என்பது வீட்டில் நாம் நடமாடும் அல்லது புழங்கக்கூடிய பகுதி. அடுத்து, பிளிந்த் ஏரியா. இது கார்பெட் ஏரியா மற்றும் சுவர்கள் சேர்ந்ததாகும். இந்த பிளிந்த் ஏரியா என்பது கார்பெட் ஏரியா + 10% ஆகும். சூப்பர் பில்ட்-அப் ஏரியாவில் கார்பெட் ஏரியா + பொதுப் பயன்பாட்டு இடங்கள் (மாடிப்படி, லிஃப்ட், தாழ்வாரம், நுழைவாயில்) ஆகியவை அடங்கும். இது சாதாரணமாக கட்டுமானப் பரப்பளவு + 10 சதவிகிதமாக இருக்கும். சூப்பர் கட்டுமான பரப்பளவில் (ஒரு சதுர அடிக்கான விலை இதற்குப் பொருந்தும்) கார்பெட் பரப்பளவானது சுமார் 75% இருக்கும்.

சூப்பர் பில்ட்-அப் பரப்பளவில் கார்பெட் பரப்பளவு அதிக சதவிகிதம் இருந்தால், வீடு வாங்குபவருக்கு சிறந்தது. ஏனெனில், அவர் செலவிடும் பணத்துக்கு அவருக்கு அதிக புழங்குமிடம் (வாழ்விடம்) கிடைக்கிறது.

இறுதியாக, சூப்பர் கட்டுமான பரப்புக்கான ஒரு சதுர அடி விலை கார்பெட் பரப்பளவுக்கான ஒரு சதுர அடி விலையாக மாற்றப்படுகிறது. ஏனெனில், வீடு வாங்குபவர் அங்குதான் வசிக்கப்போகிறார். இந்த விதத்தில் திட்டம் ஏ-க்கான கார்பெட் பரப்பானது ஒரு சதுர அடிக்கு ரூ.8,400 எனவும், திட்டம் பி-ல் சதுர அடி விலை ரூ.8,826 ஆகவும் இருக்கிறது.

இந்த இரு திட்டங்களுக்கான ஒரு சதுர அடிக்கான விலையை ஒப்பிடும்போது மேற்கண்டவை தவிர, வீடு வாங்குபவர்கள் கட்டுமான நிறுவனங்கள் வழங்கும் இதர வசதிகளையும், கட்டுமான பொருட்களின் தரம் மற்றும் எந்த அமைவிடத்தில் இந்தத் திட்டம் அமையப்போகிறது என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும். மேலும், மேற்கண்ட கணக்கீட்டுக்கு சாத்தியமாகக்கூடிய உரிமையைப் பெறும் தேதியைக் கருத்தில்கொள்ள வேண்டுமே தவிர, அதற்காக கட்டுமான நிறுவனங்கள் அறிவிக்கும் தேதியை அல்ல.

 

இந்தக் கணக்கீட்டின்படி, புராஜெக்ட் ஏ-ல் ஒரு சதுர அடி அடுக்குமாடிக் குடியிருப்பு விலை ரூ.8,400 ஆகவும், புராஜெக்ட் பி-ல் இது 8,826-ஆகவும் உள்ளது. அந்த வகையில் புராஜெக்ட் ஏ-ல் பில்டர் சொன்ன விலை 6,300 ரூபாய், புராஜெக்ட் பி-ல் பில்டர் சொன்ன விலை 5,700 ரூபாய். இங்கே அதிகமாக சதுர அடி சொன்ன புராஜெக்ட்-ஏ-ல் வீடு வாங்குவதுதான் லாபகரமாக இருக்கும்.

%d bloggers like this: