விண்டோஸ் 8 – செயலாக்க கீ தரும் பிரச்னைகள்

விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து, ஆனால் மெதுவாகவே, உயர்ந்து வருகிறது. இவர்களில் பலர், இதன் செயலாக்க / செயல்படுத்தும் கீ (activation key) குறித்து சில பிரச்னைகளைத் தெரிவித்துள்ளனர்.
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒவ்வொரு சட்ட ரீதியான உரிம நகலும் அதற்கான செயல்படுத்தும் கீயுடனேயே வருகிறது. இதனை அந்த சாதனத்தை அடையாளம் காட்டும் கீ (product identification (PID)) எனவும் அழைக்கின்றனர். இது ஐந்து தொகுதிகளாக அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு தொகுதியிலும் ஐந்து கேரக்டர்கள் (எண்கள் மற்றும் எழுத்துகள்) இருக்கும். இது ஒவ்வொரு விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கும் தனியான அடையாளத்தினைத் தரும். இன்னொரு கம்ப்யூட்டரில் இது இயங்காது. நீங்கள் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இலவசமாக தரவிறக்கம் செய்து பதிந்து கொள்ளலாம். ஆனால், அதனை இயக்க அதற்கான செயல்படுத்தும் கீ தேவை.

நீங்கள் விண்டோஸ் இன்ஸ்டால் செய்கையில், இந்த கீயினை டைப் செய்திடும்படி கேட்டுக் கொள்ளப்படுவீர்கள். நீங்களாக, கடையில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வாங்கினால், அதற்கான சி.டி. மற்றும் தகவல் குறிப்புகள் அடங்கிய அட்டைப் பெட்டியில், அல்லது சி.டி. கவரில் இந்த கீ அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டிருக்கும்.
உங்களுடைய கம்ப்யூட்டர் விண்டோஸ் 7 அல்லது அதற்கு முந்தைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வாங்கப் பட்டிருந்தால், இந்த கீ ஓர் உலோகத் தகட்டில் அச்சிடப்பட்டு, சி.பி.யு. உள்ள கேபின் பெட்டியில் இணைக்கப்பட்டிருக்கும். அடிப்பாகத்திலோ அல்லது பக்கவாட்டிலோ இதனைக் காணலாம்.
ஆனால், விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில் இந்த முறை பின்பற்றப்படவில்லை. கம்ப்யூட்டரைத் தயாரிப்பவர்கள், இந்த உரிமத்திற்கான கீயினைத் தயாரித்து, பெர்சனல் கம்ப்யூட்டரில் பதிப்பதனை மைக்ரோசாப்ட் விரும்பவில்லை. அதற்கேற்ப, கம்ப் யூட்டர் தயாரிப்பவர்களும் இந்த வேலையை மேற்கொள்வதில்லை.
அப்படியானால், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் பிரச்னை ஏற்பட்டால், மறுபடியும் அதனை இன்ஸ்டால் செய்திட வேண்டும் என்றால், கீ வேண்டுமே? அதற்கு எங்கே போவது? இதுதான் இன்றைய பிரச்னை. கம்ப்யூட்டரை தயாரித்து நமக்கு விற்பனை செய்தவர்களுக்குக் கம்ப்யூட்டரை அனுப்பி ரீ இன்ஸ்டால் செய்து தருமாறு கேட்டுக் கொள்ளலாம். அல்லது, இன்னொரு விண்டோஸ் 8 சிஸ்டம் விலை கொடுத்து வாங்கிப் பதியலாம். அப்படி என்றால், நாம் பயன்படுத்தும் ஒரு பொருளுக்கு இருமுறை விலை செலுத்தும்படி ஆகிறதே?
இந்த சூழ்நிலையைத் தவிர்க்க, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்.
உங்கள் விண்டோஸ் 8 பெர்சனல் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கையில், அதன் ஆக்டிவேசன் கீயினை அதிலிருந்தே பெற்றுக் கொள்ளலாம். ProduKey என்று அழைக்கப்படும் புரோகிராம் இந்த வேலையை மேற்கொள்கிறது. இந்த புரோகிராம் இலவசமாகக் கிடைக்கும். அது இந்த வேலையினை மிக எளிதாக மேற்கொள்கிறது.இந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடவும் தேவை இல்லை. உங்கள் கம்ப்யூட்டருக்கேற்ற வகையில், 32 பிட் அல்லது 64 பிட் வகையினை தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.
இந்த ஆக்டிவேஷன் கீ பெற Belarc Adviser என்ற இன்னொரு இலவச புரோகிராமும் உள்ளது. இது ஆக்டிவேஷன் கீ உட்பட, ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த பல தகவல்களைத் தருகிறது.
இவற்றின் மூலம் ஆக்டிவேஷன் கீ கிடைத்தவுடன், அதனை ஓர் ஆவணத்தில் பதிவு செய்து, வேறு ஒரு கம்ப்யூட்டரில் பதிந்து வைக்கவும். பாதுகாப்பான ஓர் குறிப்பேட்டில் எழுதியும் வைக்கலாம்.
இன்னொரு குறிப்பும் தருகிறேன். உங்களுடைய பெர்சனல் கம்ப்யூட்டரை உங்கள் விருப்பப்படி அமைத்திடும்போது, வெளியிலிருந்து இணைக்கப்பட்ட, எடுத்துச் சென்று பயன்படுத்தக் கூடிய, இன்னொரு ஹார்ட் ட்ரைவில் அதன் இமேஜ் பேக் அப் ஒன்றை பதிந்து வைக்கலாம். இதன் மூலம் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை எளிதாக மீண்டும் இன்ஸ்டால் செய்துவிடலாம். இதற்கு மீண்டும் ஆக்டிவேஷன் கீ கேட்கப்பட மாட்டாது. மீண்டும் பதிக்கப்படும்போது, ஏற்கனவே பதிந்த புரோகிராம்கள், அமைப்புகள் எல்லாம் அப்படியே உங்களுக்குக் கிடைக்கும்.
விண்டோஸ் 7 மற்றும் 8 சிஸ்டங்களில் இந்த இமேஜ் பேக் அப் புரோகிராம்கள் தரப்படுகின்றன. இவற்றைக் காட்டிலும் எனக்கு மிகவும் பிடித்த புரோகிராம் EaseUS ToDo Backup Free என்பதாகும். இதனை http://www.todobackup .com/products/home/freebackupsoftware.htm என்ற முகவரியில் உள்ள இணையதளப் பக்கத்திலிருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

%d bloggers like this: