சசிகலா என் உறவினர் அல்ல… சுதாகரன் வளர்ப்பு மகனும் அல்ல!

”ஜெயலலிதாவுக்கு சசிகலா, சுதாகரன், இளவரசி மூன்று பேரும் உறவினர்களும் அல்ல. சுதாகரன், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனும் அல்ல. அவர் திருமணச் செலவை ஜெயலலிதா செய்யவும் இல்லை. நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார்தான் சுதாகரனின் திருமணத்துக்கான செலவுகள் அனைத்தும் செய்தார்” என்ற அதிரடி வாக்குமூலத்தைக் கொடுத்து அதிர்ச்சியைக்  கிளப்பியிருக்கிறார் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார். இது அந்த வழக்கில் மட்டுமல்லாமல், தமிழக அரசியலிலும் முக்கியமான வாதமாக அமைந்துவிட்டது.

பெங்களூரில் நடந்துவரும் சொத்துக் குவிப்பு வழக்கில் அரசுத் தரப்பு இறுதி வாதம் முடிந்து, குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு இறுதி வாதங்கள் தொடங்கியுள்ளன. முதலில் ஜெயலலிதா தரப்பின் வாதங்களை மூத்த வழக்கறிஞர் குமார் வைத்து வருகிறார். அவர் முதல் இரண்டு நாட்கள் வைத்த வாதங்களை, கடந்த இதழில் வெளியிட்டு இருந்தோம். இதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் வைத்த வாதங்கள் அதிர்ச்சிரகமாக அமைந்து இருந்தன. பல்வேறு வழக்குகளை மேற்கோள்காட்டி குமார் வாதிடுவதால், நீதிபதி குன்ஹாவும் உற்று கவனித்து வருகிறார். 

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், ஜெ. ரியல் எஸ்டேட், ஜெ. ஃபார்ம் ஹவுஸ், க்ரீன் ஃபார்ம் ஹவுஸ், ஜெ.எஸ் ஹவுஸிங் டெவலப்மென்ட் லிமிடெட் ஆகிய ஐந்து நிறுவனங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று மனுவைத் தாக்கல் செய்து இருந்தனர். இதனை முதலில் எடுத்துக்கொண்டு விசாரித்த நீதிபதி குன்ஹா, ”இந்த வழக்கு 1996 முதல் நடைபெற்று வருகிறது. பெங்களூருக்கு மாற்றப்பட்டும் 10 ஆண்டுகள் ஆகின்றன. அப்போதெல்லாம் மனு தாக்கல் செய்யாமல், வழக்கு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வழக்கை இழுத்தடிக்கும் நோக்கத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று கண்டித்து அந்த மனுவைத் தள்ளுபடி செய்தார்.

அதன் பிறகு வழக்கறிஞர் குமார் தன் வாதங்களைத் தொடங்கினார். ”தனிமனித சுதந்திர பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிராக ஜெயலலிதாவின் வீட்டில் போலீஸார் ரெய்டு நடத்தினார்கள். ஐந்து நாட்கள் ஆய்வு என்ற பெயரில் மீடியாக்களை அனுமதித்து படம் பிடித்து வெளியிட்டது தவறு. ஹவுஸ் ஓனர் அல்லது குற்றம்சாட்டப்பட்டவர்கள் இருக்கும்போதுதான் ஆய்வு செய்ய வேண்டும் என்பது விதி. அதனை அப்பட்டமாக மீறினார்கள்.

வருமானத்துக்கு அதிகமான சொத்துகள் சேர்த்தார் என்ற வழக்குக்கு கைதுசெய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் அரசு ஊழியர்கள் கிடையாது. அவர்களிடம் விசாரித்து இருக்கலாம். விசாரணை அதிகாரி நல்லம நாயுடுவும் போலீஸ் உயர் அதிகாரி வி.சி.பெருமாளும், தவறான உள்நோக்கத்துடன் சதி செய்து எங்கள் மனுதாரரிடம் முறையாக விசாரிக்காமல் தன்னிச்சையாகக் கைது நடவடிக்கையும் செய்திருக்கிறார்கள்.

இந்த வழக்கைப் பதிவுசெய்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி நல்லம நாயுடு, எட்டு கமிட்டிகள் அமைத்து ஜெயலலிதாவின் வீடு, அலுவலகத்தை சோதனை நடத்தி சொத்துகளை மதிப்பீடு செய்தார். அன்றைய தி.மு.க அரசால் நியமிக்கப்பட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள் அதில் இருந்தனர். அவர்கள், கட்டடங்களின் மதிப்பை பொதுப்பணித் துறை விலை மதிப்புப் பட்டியலில் உள்ள மதிப்பைவிட 100 மடங்கு அதிகமாகப் பதிவு செய்திருக்கிறார்கள். என் மனுதாரருக்கு வந்த வருமானங்களை, நல்லம நாயுடு வேண்டுமென்றே சேர்க்காமல் விட்டுவிட்டார்.

போயஸ் கார்டன் மதிப்பு 13 கோடி என்று பதிவுசெய்யப்பட்டது. அது முழுக்க முழுக்கத் தவறானது. இதுபோன்று பல கட்டடங்களின் மதிப்பு கூடுதலாகப் போடப்பட்டுள்ளது. என் மனுதாரர் வாங்கிய சொத்துகள் அனைத்தும், வழக்கு நடக்கும் காலகட்டத்துக்கு முன்பே வாங்கப்பட்டவை. ஆனால், வழக்கு நடைபெற்ற காலகட்டத்தில் வாங்கியதாக, உண்மைக்குப் புறம்பாகப் போட்டிருக்கிறார்கள். சொத்து மதிப்பையும் மிகைப்படுத்திக் காட்டியிருக்கிறார்கள். அதே வேளையில் நமது எம்.ஜி.ஆர், சூப்பர் டூப்பர் நிறுவனங்களுக்கு பொதுமக்கள் டெபாசிட் செய்த தொகையெல்லாம் காட்டவே இல்லை.

இந்திய வரலாற்றிலேயே முதன்முதலில் இந்த வழக்கில்தான், ஒரு திருமணத்துக்கு ஆன செலவுகளை மதிப்பீடு செய்திருப்பதாக நான் கருதுகிறேன். இந்த வழக்கில் சுதாகரனின் திருமணத்துக்கு 6 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகக் கூறுகிறார்கள். திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் கழித்து எப்படி துல்லியமாக மதிப்பீடு செய்ய முடியும்?  சுதாகரனின் திருமணச் செலவை ஜெயலலிதா செய்ததாகப் பொய் சாட்சிகள் மூலம் ஜோடித்து இருக்கிறார்கள். ஆனால், இந்தத் திருமணச் செலவை நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார்தான் செய்தார். அதற்கு, வருமான வரியும் கட்டியுள்ளார். அரசுத் தரப்பு சாட்சியங்களாக 1,074 பேரை சேர்த்ததில் ராம்குமாரையும் சேர்த்திருக்கிறார்கள். அவரை கோர்ட்டில் விசாரிக்காதது ஏன்?

இந்த வழக்கில் பல்வேறு கம்பெனிகளின் சொத்துக்களாக 18 கோடியைக் காட்டுகிறார்கள். ஆனால் ஜெ. பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ் ஆகிய இரண்டு கம்பெனிகளில் மட்டும்தான் ஜெயலலிதா பார்ட்னராக இருக்கிறார். வேறு எந்த கம்பெனிக்கும் அவருக்கும் தொடர்பு கிடையாது. மற்ற கம்பெனிகளையும், அதன் சொத்துக்களையும் இந்த வழக்கில் சேர்த்தது தவறு.

இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் எனது கட்சிக்காரரான ஜெயலலிதாவின் உறவினர்கள் அல்ல. 3-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சுதாகரன், என் கட்சிக்காரரான ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனும் அல்ல. 1988 பினாமி சட்டப்படி தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள், உடன் பிறந்தவர்கள், ரத்த சம்பந்தமான உறவினர்கள் பெயரில்தான், பினாமி சொத்துகள் இருக்க முடியும். இந்த மூன்று பேரும் என்னுடைய கட்சிக்காரரின் உறவினர்கள் அல்லாத நிலையில், அவர்கள் பெயரில் உள்ள சொத்துகளையும் சேர்த்து எப்படி வழக்கு பதிவுசெய்ய முடியும்? 

கம்பெனியின் பங்குதாரர்களாக, பார்ட்னராக இருந்தார்கள் என்பதை வழக்காக எப்படி போட முடியும்? இது முழுக்க முழுக்க தி.மு.க-வின் அரசியல் காழ்ப்பு உணர்ச்சியின் காரணமாக போடப்பட்ட வழக்குத்தான்” என்று நீண்ட விளக்கம் அளித்தார் வழக்கறிஞர் குமார்.

அவரது தரப்பு வாதங்கள் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன. 

நன்றி -விகடன்

%d bloggers like this: