பி.எஸ்.எல்.வி., சி – 23 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது; பிரதமர் மகிழ்ச்சி

ஸ்ரீஹரிகோட்டா : பி.எஸ்.எல்.வி., சி – 23 ராக்கெட், இன்று காலை, 9:52 மணிக்கு, ஐந்து வெளிநாட்டு செயற்கைக் கோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. பிரதமர் நரேந்திரமோடி இந்த நிகழ்வை பார்ப்பதற்காக ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திற்கு வந்தார். விண்ணில் வெற்றிகரமாக செலுத்திய பின்னர் பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளை ஆரத்தழுவி பாராட்டினார்.பி.எஸ்.எல்.வி., ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட நிகழ்ச்சி தினமலர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோ, வர்த்தக ரீதியாகவும் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, பி.எஸ்.எல்.வி., சி – 23 ராக்கெட், இன்று காலை, 9:52 மணிக்கு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள, முதலாவது ஏவுதளத்தில் இருந்து, விண்ணில் செலுத்தப்பட்டது.

விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு ; ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக

செலுத்தப்பட்ட பின்னர் பிரதமர் நரேந்திரமோடி பேசுகையில், கவர்னர், நரசிம்மன், முதல்வர்சந்திரபாபு நாயுடு, எனது அமைச்சரவை சகாக்கள் , இஸ்ரோ ராதாகிருஷ்ணன், ராவ், கஸ்தூரிரங்கன் மற்றும் மக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்களை விஞ்ஞானிகளுக்கு தெரிவித்து கொள்கிறேன். நமது விண்வெளி திட்டங்கள் தனித்துவம் வாய்ந்தவை . 5 சாட்டிலைட்டு சுமந்து செல்லும், இந்த நிகழ்வு இந்தியர்களின் இதயப்பூர்வமான விஷயம் ஆகும். இன்றைய வெற்றி அனைத்து இந்தியர்களுக்கும் பெருமை தரும் விஷயம் ஆகும். நான் நேரில் பார்த்து மகிழ்ந்தேன் , பெருமைபடுகிறேன். பி.எஸ்.எல்.வி., நமது பயணத்தில் இது மேலும் ஒரு மைல்கல்.அனைவருக்கும் பெரும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இது நம்பிக்கையின் துவக்கம். வளர்ந்த நாடுகளான பிரான்ஸ், கனடா. ஜெர்மனி, சிங்கப்பூரின் செயற்கை கோளை இந்தியா விண்ணில் செலுத்தியிருப்பது பெருமைபடக்கூடிய விஷயமாகும். இது உலக அளவில் இந்தியாவிற்கு விண்வெளி துறையில் கிடைத்த அங்கீகாரம்.
சார்க் சாட்டிலைட் உருவாக்குங்கள் :வாஜ்பாய் காலத்தில் நிலவுக்கு விண்கலம் அனுப்பும் கனவு எழுந்தது. நாம் தற்போது செவ்வாய்கிரகத்திற்கு அனுப்பியுள்ளோம். இந்தியா அறிவியல் துறையில் சிறந்து விளங்கி வருகிறது. வளமான தொழில்நுட்பம் பெற்றுள்ளது. விண்வெளி டெக்னாலஜி சாமானியமக்களுக்கு பயன்படும் விஷயம் ஆகும். நகர்ப்புறம், கிராமப்புறம் இணைப்பதற்கு விண்வெளி தொழில்நுட்பம் பெரிதும் உதவியாக இருக்கிறது. இளைஞர்கள், வேலைவாய்ப்பை பெற்றிட சாட்டிலைட் டெக்னாலஜி பெரிதும் உதவியாக உள்ளது. சார்க் சாட்டிலைட் வளர்ச்சி பெற விஞ்ஞானிகள் முழு முயற்சி எடுக்க வேண்டும். இது நமது அண்டைய நாடுகளின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்க வேண்டும். விண்வெளி ஆராய்ச்சி இந்த நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் துணையாக அமைகிறது. அனைவருக்கும் மீண்டும், நன்றியும், பெருமையும் தெரிவித்து கொள்கிறேன். பாராத் மாதாக்கி ஜெ., இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பி.எஸ்.எல்.வி., சி – 23 ராக்கெட், 49 மணி நேர, கவுன்ட் – டவுன் நேற்று முன்தினம் காலை, 8:52 மணிக்கு துவங்கியது. பி.எஸ்.எல்.வி., ராக்கெட், 44.4 மீட்டர் உயரம் கொண்டது. இதன் மொத்த எடை, 230 டன். பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம், பிரதான செயற்கைக்கோளாக, பிரான்ஸ் நாட்டின், ஸ்பாட் – 7 செயற்கைக்கோளும், ஜெர்மனி, கனடா மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் சிறிய ரக செயற்கைக் கோள்களும் விண்ணில் ஏவப்படுகின்றன.பி.எஸ்.எல்.வி., ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட, 18 நிமிடங்களில், பிரான்ஸ் நாட்டின், ஸ்பாட் – 7 செயற்கைக்கோள், பூமியில் இருந்து, 659.8 கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்தப்படும். இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள்.ஜெர்மன் நாட்டின், ஐசாட் செயற்கைக்கோள், விண்ணில் ஏவப்பட்ட, 18:55 நிமிடங்களில், பூமியில் இருந்து, 660.6 கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்தப்பட உள்ளது.கனடா நாட்டின், என்.எல்.எஸ்., 7.1செயற்கைக்கோள், 19.05 நிமிடங்களில், பூமியில் இருந்து, 661.2 கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்தப்படும்.
மற்றொரு செயற்கைக்கோள், என்.எல்.எஸ்., 7.1, 19.55 நிமிடங்களில், பூமியில் இருந்து, 661.8 கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்தப்படும்.சிங்கப்பூர் நாட்டின், வெலாக்ஸ்- 1 செயற்கைக் கோள், 19.96 நிமிடங்களில், பூமியில் இருந்து, 662.3 கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்தப்படும்.கடந்த 2013ல், பி.எஸ்.எல்.வி., சி- 20ராக்கெட் மூலம், கனடா, 2; ஆஸ்திரியா, 2; டென்மார்க், 1 மற்றும் பிரிட்டன், 1 ஆகிய, ஆறு வெளிநாட்டு, செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன.கடந்த 2008ல், அதிகபட்சமாக, பி.எஸ்.எல்.வி., சி – 9 ராக்கெட் மூலம், கனடா, ஜப்பான், நெதர்லாந்து, டென்மார்க், ஜெர்மனி, ஆகிய நாடுகளின், எட்டு ராக்கெட்டுகள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டன.
மூன்று நிமிடம் தாமதம்:பி.எஸ்.எல்.வி., சி – 23 ராக்கெட், 3 நிமிடம் தாமதமாக தன் பயணத்தை துவங்க உள்ளது.இது குறித்து, இஸ்ரோ சேர்மன் ராதாகிருஷ்ணன் கூறுகையில், விண் வெளியில் சுற்றும் செயற்கைக்கோள் கழிவுகளுடன், ராக்கெட் மோதுவதை தவிர்ப்பதற்காக, ஏற்கனவே திட்டமிட்டதை விட, 3 நிமிடங்கள் தாமதமாக ராக்கெட் ஏவப்படும். அதை கருத்தில் கொண்டு, இன்று காலை, 9:49 மணிக்கு ஏவுவதற்கு, பதிலாக 9:52 மணிக்கு (3 நிமிடம் தாமதமாக) ஏவப்படுகிறது, என்றார்.
பி.எஸ்.எல்.வி.,- ஜி.எஸ்.எல்.வி., வித்தியாசம் : பி.எஸ்.எல்.வி., என்பது, போலார் சேட்டலைட் லாஞ்சிங் வெகிகிள் எனவும், ஜி.எஸ்.எல்.வி., என்பது, ஜியோசிங்க்ரோனஸ் சேட்டலைட் லாஞ்ச்வெகிகிள் எனவும் அழைக்கப்படுகிறது.
*இரண்டுக்கும் இடையே பல வித்தியாசங்களும், மாறுபாடுகளும் உள்ளன; அதே நேரத்தில் சில ஒற்றுமைகளும் உள்ளன.இரண்டுமே ராக்கெட்டுகள் தான். பி.எஸ்.எல்.வி., பழைய முறை; ஜி.எஸ்.எல்.வி., புதிய முறை.
*பி.எஸ்.எல்.வி., ராக்கெட், 1 டன் (1,000 கிலோ) எடைக்கு குறைவான செயற்கைக்கோள்களை சுமந்து செல்லக் கூடியது. ஜி.எஸ்.எல்.வி., அதிகபட்சம், 2 – 2.5 டன் எடையை சுமந்து செல்லக் கூடியது.
*ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில் அதிநவீன, கிரையோஜெனிக் ராக்கெட் இன்ஜின் பயன் படுத்தப்படுகிறது. இதனால், அதிக அழுத்தத்துடன் கூடுதல் எடையை சுமந்து செல்ல முடியும்.
*பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுக்கு, நான்கு நிலைகள் உள்ளன; ஜி.எஸ்.எல்.வி.,க்கு மூன்று நிலைகள் உள்ளன.பி.எஸ்.எல்.வி.,யில், ஆறு சாலிட் பூஸ்டர்கள்; ஜி.எஸ்.எல்.வி.,யில், நான்கு லிக்யுட் பூஸ்டர்கள் உள்ளன.
*பி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஏவுதல் வெற்றிகரமானது. ஏவப்பட்ட, 18 முறைகளில், 16 முறைவெற்றி பெற்றுள்ளது; இரு முறை தோல்வி அடைந்துள்ளது.
*ஜி.எஸ்.எல்.வி.,ராக்கெட் ஏவுதல்,7முறைநடைபெற்றதில், நான்கு முறை தோல்வி அடைந்துள்ளது; இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது. ஒரு முறை, பாதி தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
எந்தெந்த நாடுகளின் ராக்கெட்டுகள்:
*பி.எஸ்.எல்.வி., சி – 23 ராக்கெட்டுடன், ஐந்து வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட உள்ளன.
*பிரான்ஸ் நாட்டின், ஸ்பாட் – 7 செயற்கைக்கோள், 714 கிலோ எடை உடையது. இந்த செயற்கைக்கோள், பூமியை ஆய்வு செய்ய பயன்படும். இதற்காக இந்த செயற்கைக் கோளில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன.
*ஜெர்மனி நாட்டின், ஐசாட் 14 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைக்கோள், கடல் வழிப் போக்குவரத்தைக் கண்காணிப்பதற்கு உதவும்.
*கனடா நாட்டின், என்.எல்.எஸ்., 7.1 மற்றும் என்.எல்.எஸ்., 7.2 ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களும், தலா, 15 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைக்கோள், ஜி.பி.எஸ்., அமைப்புக்கு உதவும்.
*சிங்கப்பூர் நாட்டின், வெலாக்ஸ் – 1 செயற்கைக்கோள், 7 கிலோ எடை கொண்டது. இது, சென்சார் கருவியுடன் விண்ணில் செலுத்தப்படுகிறது.
*பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகள் மூலம் ஏற்கனவே வெளிநாடுகளைச் சேர்ந்த, 35 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
*இஸ்ரோ, பல முறை பி.எஸ்.எல்.வி.,ராக்கெட்டுகளை, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

%d bloggers like this: