அமேஸான் நிறுவனத்தின் ஃபையர் ஸ்மார்ட் போன்

அனைத்து மக்களுக்கான ஸ்மார்ட் போன் என தன்னுடைய முதல் ஸ்மார்ட் போனை "Fire” என்ற பெயரில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது அமேஸான் நிறுவனம். இருபது ஆண்டுகளுக்கு முன்னால், நூல்களை இணையதளம் வழியாக விற்கும் நிறுவனமாக அமேஸான் தொடங்கப்பட்டது. இன்று, உலகின் மிகப் பெரிய வர்த்தக இணைய தளத்தினை நடத்தும் நிறுவனமாக உருவாகியுள்ளது.
தானே தயாரிக்கும் இ-புக் மற்றும் டேப்ளட் பி.சி.க்களை விற்பனை செய்தும் வருகிறது. எலக்ட்ரானிக் நூல்களைத் தயாரித்து வழங்குகிறது. க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் அதிக இடம் தரும் நிறுவனமாகவும் இயங்குகிறது. கடந்த சில ஆண்டுகளாக, கட்டணம் பெற்றுக் கொண்டு வீடியோ, மின் நூல்கள் மற்றும் இசைக் கோப்புகளை வழங்கி வருகிறது.

சென்ற வாரம், பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட, இதன் ஸ்மார்ட்போன் "Fire” என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இதன் திரை 4.7 அங்குல அளவில் உள்ளது. இதன் இயக்கத்தினை குவாட் கோர் ப்ராசசர் தருகிறது. 13 எம்.பி. திறன் கொண்ட கேமரா கிடைக்கிறது. பெரும்பாலான ஸ்மார்ட் போன்களில், இவை சாப்ட்வேர் மூலம் கையாளப்படுகின்றன. ஆனால், இதில், ஹார்ட்வேர் சாதனங்கள் மூலம் இவை இயங்குகின்றன. அதனால், இவை சிறப்பான இயக்கத்தினைத் தருகின்றன. இந்த போனை வாங்குபவர்களுக்கு, அமேஸான், இமேஜ் பைல்களைத் தேக்கி வைக்க தன் தளத்தில் இலவச இடம் தருகிறது.
இந்த ஸ்மார்ட் போனின் மிகச் சிறந்த செயல்பாடு இதன் "Firefly” அப்ளிகேஷனாகும். இதன் மூலம் அமேஸான் தளத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் திரைப்படங்கள், பாடல்கள், இசைக் கோப்புகள், நூல்கள் மற்றும் பொருட்கள் போன்றவற்றை எளிதில் அடையாளம் கொண்டு, வாடிக்கையாளர்கள் விலைக்கு வாங்கிட முடியும்.
இதில் தரப்பட்டுள்ள "Mayday” என்ற வசதி மூலம், நாம் அமேஸான் தள பிரதிநிதி ஒருவருடன் நேரடியாக உரையாடலாம். இது கட்டணம் எதுவுமின்றி 24 மணி நேரமும் தரப்படுகிறது. இந்த போன் 32 மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் மெமரியுடன் வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது. இதனை ஸ்மார்ட் டேட்டா கார்ட் மூலம் அதிகப்படுத்தும் வசதி தரப்படவில்லை.
இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் ஒரு வடிவமைப்பாக இருந்தாலும், கூகுள் ப்ளே சர்வீசஸ் எதுவும் இதில் இயங்காது. எனவே நாம் அதிகம் பயன்படுத்தும் Google Now, Gmail, Google Drive, Chrome, Google Maps மற்றும் பிற வசதிகள் இதில் கிடைக்காது.
தற்போதைக்கு இந்த ஸ்மார்ட் போன், அமெரிக்காவில் மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது. ஏ.டி. அண்ட் டி நிறுவன சேவை ஒப்பந்தத்துடன் கிடைக்கிறது. 32 ஜிபி மெமரி உள்ள போன் 200 டாலர் விலையிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் விற்பனை, போன் சந்தையில் எடுபடுமா என்பதை இனிமேல் தான் பார்க்க வேண்டும்.
ஏனென்றால், ஏற்கனவே பேஸ்புக் நிறுவனம், சென்ற 2013 ஆம் ஆண்டில், தைவான் நாட்டின் எச்.டி.சி. நிறுவனத்தின் போனை HTC First என்ற பெயரில் விற்பனை செய்திட முயற்சித்தது. ஆனால், அது தோல்வியிலேயே முடிந்தது. சில மாதங்கள் கழித்து, ஏ.டி.அண்ட் டி நிறுவனமே அதனை கழிவு விலையில் அளித்தது.

Click Here

<span>%d</span> bloggers like this: