மிஸ்டர் கழுகு: சீண்டும் கன்னடப் படம்!

கழுகார் பெங்களூரில் இருப்பதாக ‘வாட்ஸ்-அப்’ தகவல் தந்திருந்தார். ஜெயலலிதா மீதான சிறப்பு நீதிமன்ற வழக்கு விவகாரங்கள் சூடுபிடித்து வருவதால் அவரது பயணம் அங்கு இருந்தது.

”பெங்களூரு சிறப்பு நீதிமன்ற விசாரணையின் லைவ் ரிலே காட்சிகளை உமது நிருபர் விளக்கி வருகிறார். ஆனால், நீதிபதி குன்ஹாவை மாற்றப்போகிறார்கள் என்பது செய்தியா, வதந்தியா என்பதை விசாரிக்க நான் சென்றேன். அதற்கு முன்னதாக ஒரு சினிமா செய்தி!”

”உமக்கும் சினிமாவுக்கும் என்ன சம்பந்தம்?”

”ஜெயலலிதா சம்பந்தப்பட்ட சினிமா என்பதால், நான் சொல்லலாம் அல்லவா? கர்நாடகாவில் ஒரு படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது. அதன் பெயர் ‘ஜெய்லலிதா’. இது சர்ச்சைக்கு உரியதாக ஆகியிருக்கிறது. கன்னட திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் சரண் நடிப்பில், பி.குமார் இயக்கத்தில், இந்திரா புரொடக்ஷனில் கடந்த 27-ம் தேதி வெள்ளிக்கிழமை வெளிவந்து ஒவ்வொரு காட்சியும் ஹவுஸ்ஃபுல் ஆகி, நல்ல வசூலை அள்ளிக்கொண்டு இருக்கிறது இந்தப் படம். இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என்று சசிகுமார் என்பவர் வழக்கு தாக்கல் செய்தார். ‘இந்தியாவின் மிகச்சிறந்த பெண் அரசியல் தலைவர், 10 கோடி தமிழ் மக்களின் உயிர்த் துடிப்பு, தற்போதைய தமிழகத்தின் முதல்வர். அவருடைய பெயரை இந்தப் படத்துக்கு வைத்திருப்பதால், உடனடியாக இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என்று சிட்டி சிவில் கோர்ட்டில் கடந்த 18-ம் தேதி சசிகுமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தரசாங்கி, படத்தைப் பார்த்தார்.”

”என்ன சொன்னாராம் அவர்?”

”நீதிபதி தரசாங்கி, ‘தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றியோ, அவருடைய வழக்குகள் பற்றியோ இந்தப் படத்தில் இடம்பெறவில்லை. படம் ஆரம்பிப்பதற்கு முன்பாக, இந்தப் படத்தில் வருபவை அனைத்தும் கற்பனை கதாபாத்திரங்கள், யாரையும் களங்கப்படுத்தவில்லை என்று எழுத்துப்பூர்வமாக அறிவித்து இந்தப் படத்தை வெளியிடலாம். தடையில்லை’ என்று தீர்ப்பளித்தார். அதையடுத்து இந்தப் படம் வெளிவந்து கர்நாடகாவில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்​டி​ருக்கிறது”

”என்ன கதை இது?”

”ஒரு நாடக கம்​பெனியைச் சுற்றி இந்தக் கதை நடக்கிறது. நாடக கம்பெனி​யை நடத்தும் தந்தையை, மகனாக இருக்கும் ‘ஜெய்’ கடத்திச் சென்றுவிடுகிறார். தன் தந்தையை மீட்பதற்காக ‘லலிதா’ என்ற மகள் முயற்சிக்கிறார். ‘ஜெய்’, ‘லலிதா’ இரண்டு வேடங்களிலும் காமெடி நடிகர் சரண் நடித்து கலக்கி இருக்கிறார். ஜெய், லலிதா என்ற இரண்டு கேரக்டர் பெயர்களைச் சேர்த்து ‘ஜெய்லலிதா’ என்று பெயர் சூட்டிவிட்டார்கள். இதுதான் வழக்கறிஞர் சசிகுமாரை ஆத்திரப்பட வைத்தது. கள்ளக்குறிச்சியை சேர்ந்த இவர், பெங்களூரில்தான் வாழ்ந்து வருகிறார். தீவிரமான அ.தி.மு.க விசுவாசி.

‘கடந்த மாதம் கன்னட பத்திரிகைகளில் ‘ஜெய்லலிதா’ பெயரிட்ட தலைப்பில் ஒரு காமெடி நடிகர் பெண் வேடமிட்டு அரைகுறை ஆடை அணிந்து நடித்த கன்னட திரைப்படம் விரைவில் வெளிவர இருப்பதாக விளம்பரத்தைப் பார்த்து அதிர்ந்து போனேன். காவிரி பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட சட்டபூர்வமாக அணுகி தீர்வுகண்டிருக்கிறார். அந்தத் தீர்ப்பாயம் இன்னும் நிலுவையில் இருக்கிறது. அம்மா மீது போடப்பட்ட பொய் வழக்கும் பெங்களூரில் நடந்துகொண்டு இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் விளம்பரத்துக்காக 10 கோடி தமிழ் மக்களின் உன்னதத் தலைவியாக விளங்கும் அம்மாவின் பெயரை வைத்து பணம் சம்பாதிக்கும் குறுகிய நோக்கத்தில் இந்தப் படத்தின் பெயரை வைத்திருக்கிறார்கள்’ என்று சொல்லித்தான் இந்த வழக்கை போட்டாராம்.”

”இதில் அரசியல் இருக்கிறதா?”

”அதைத்தான் படத்தின் இயக்குநர் குமாரிடம் கேட்டேன். ‘இந்தப் படம் முழுக்க முழுக்க கமர்ஷியல் படம். அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. படத்தின் கதைக்கு ஏற்றவாறுதான் பெயர் வைத்திருக்கிறோம். படத்தை முழுமையாக நீதிபதி பார்த்தார். படத்துக்கும் தமிழக முதல்வருக்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்று சொல்லியிருக்கிறார்.

எனக்​கோ, என் குழுவினர்​களுக்கோ யாரையும் புண்படுத்தும் நோக்கம் சற்றும் கிடையாது. அதுவும் தமிழக முதல்வர் எவ்வளவு சிறந்த தலைவர் என்பது எங்களுக்கும் தெரியும்’ என்றார்.”

”எப்படியோ பெயரை வைத்து படத்தை ஓட்டிவிட்டார்கள் என்று சொல்லும்!” என்றதற்கு தலையாட்டியபடி நீதிமன்ற மேட்டருக்கு வந்தார் கழுகார்.

”பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவை மாற்றப்போகிறார்கள் என்பது செய்தியா, வதந்தியா என்பது இன்னும் முடிவாகவில்லை. இது சம்பந்தமான தகவலை தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளிதழான ‘முரசொலி’தான் கடந்த 27-ம் தேதி வெளியிட்டது. நாளிதழின் முதல் பக்கத்தில், ‘இது உண்மையா?’ என்ற தலைப்பிட்டு ஒரு பாக்ஸ் நியூஸ் வெளிவந்தது. பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதியை மாற்றுவதற்கான முயற்சி தீவிரமாக நடப்பதாகவும், அதற்கு மத்திய அமைச்சர்கள் இருவர் உதவி செய்வதாகவும், பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரியாமல் அவருக்கு கீழே உள்ள அமைச்சர்கள் இப்படிப்பட்ட காரியத்தில் இறங்கிவிட்டார்களா என்றும் அந்தப் பெட்டிச் செய்தி சொல்கிறது. இறுதியாக, ‘சம்பந்தப்பட்டவர்கள் இந்திய நீதி பரிபாலன முறைகளின் மாண்புகளைக் காப்பாற்றும் நோக்கில், இப்படிப்பட்ட காரியங்களை உடனடியாக நிறுத்திக்கொள்ளாவிட்டால், இதுகுறித்த மேல் விவரங்களும் விவகாரங்களும் சாங்கோபாங்கமாக வெளியிட நேரிடும்’ என்று பூடகமான வார்த்தைகளைப் பயன்படுத்தி எச்சரிக்கை செய்துள்ளது முரசொலி!”

”மாற்றும் சூழ்நிலை இருக்கிறதா?”

”அதாவது, சிறப்பு நீதிமன்ற நியமனம் என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அமைக்கப்படுவது. கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட கொலிஜியம்தான் இந்த நீதிபதியை தேர்வு செய்யும். இந்த கொலிஜியம் தேர்வு செய்த நீதிபதியின் பெயரை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும். அந்த அடிப்படையில் பார்த்தால், கர்நாடக உயர் நீதிமன்றம், கர்நாடக சட்டத் துறைச் செயலாளர், உச்ச நீதிமன்ற நீதிபதி அனைவரும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு இது. எனவே, இது அவ்வளவு தூரம் சாத்தியம் அல்ல என்றே பெங்களூரில் சொல்கிறார்கள். கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக வகேலா இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் இரண்டாவது நீதிபதியாக மஞ்சுநாதா இருந்தார். அவர் சமீபத்தில் கௌஹாத்தி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். இவருக்குப் பதிலாக புதிய நீதிபதி நியமிக்கப்பட வேண்டும். இவர்கள் இருவரும் சேர்ந்ததுதான் கொலிஜியம். பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதியை மாற்றுவதாக இருந்தால், அதற்கான கோப்புகளை கர்நாடக சட்டத் துறைச் செயலாளர்தான் தயார் செய்ய வேண்டும்.”

”பி.ஜே.பி அரசு, ஜெயலலிதாவுக்கு சாதகமாக நடந்துகொள்கிறதா?”

”இப்போதைக்கு சொல்ல இயலவில்லை!” என்ற கழுகார் பா.ம.க மேட்டருக்கு வந்தார்.

”பா.ம.க பொதுக்குழு கூடி இருக்கிறது. ‘தி.மு.க-வை ஆரம்பித்து 18 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தார்கள். பா.ம.க-வை ஆரம்பித்து 25 ஆண்டுகளாகியும் ஆட்சியைப் பிடிக்காமல் போனதற்குக் காரணம்… போயஸ்கார்டன், கோபாலபுரம் என மாறி மாறிச் சென்று பாதை மாறியதுதான்’ என்று விழுப்புரத்தில் நடந்த பா.ம.க பொதுக்குழுக் கூட்டத்தில் பேசி அதிரவைத்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.”

”இப்போதுதானே செயற்குழு கூட்டினார்கள்?”

”ஆமாம்! திண்டிவனத்தில் நடந்த பா.ம.க செயற்குழுவில் தலைகாட்டிய ராமதாஸ், அடுத்தகட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக்குழுவைக் கூட்டி வருகிறார். ஐந்து நாட்களில் ஐந்து மாவட்டம் என பம்பரமாக சுழன்று வந்தவர், கடந்த 28-ம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்ற பொழுக்குழுவுக்கு வந்திருந்தார். புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, தேர்தல் நிதி வசூல் செய்வது என தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியவர், கடந்த காலத்தைப் பற்றி யாரும் இனி பேசக் கூடாது என்று கறார் கண்டிஷன் போட்டார். ‘நம்மால் ஏன் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை?’ என்று உறுப்பினர்களைப் பார்த்து காரணம் கேட்டவர், ‘1989-ல் இட ஒதுக்கீடுக்காக போராட்டம் நடத்திய நம்மை கலைஞர் கூப்பிட்டு ஏமாற்றினார். இதுபோன்ற ஆட்களை எல்லாம் நாம் ஏன் நம்பி இருக்க வேண்டும். நாமே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி இட ஒதுக்கீடு வழங்குவோம் என்பதற்காக கட்சி ஆரம்பித்தோம். 1996-ல் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள். இப்போது 2014-ல் முன்றே மூன்றுதான். கலைஞரிடமும் அவரது மகனிடமும் நமது தலைவர் கெஞ்சி கெஞ்சி 30 ஸீட் வாங்கினார். ஆனால், மூன்றில்தான் ஜெயித்தோம். 1996 வரை கட்சி சரியான பாதையில் போனது. அதன் பிறகு மாறி மாறி போயஸ் கார்டனுக்கும், கோபாலபுரத்துக்கும் போனதால் பாதை மாறிவிட்டோம்.

1967-ல் தி.மு.க-வுக்கு ஒரே கட்சிதான் எதிரியாக இருந்தது. இப்போது நமக்கு இரண்டு கட்சிகள் எதிரியாக உள்ளன. தி.மு.க இதோடு முடிந்துவிட்டது. இனி அது இருக்கும் இடம்கூட தெரியாது. அ.தி.மு.க-வை அகற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. பாதுகாப்பு இல்லாத சமுதாயமாக வன்னியர் சமுதாயம் உள்ளது. ஜெயலலிதா பா.ம.க-வை எதிரியாகப் பார்க்கவில்லை; ஒட்டுமொத்த வன்னியர் சமுதாயத்​தையும் எதிரியாகப் பார்க்கிறார். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த போலீஸ் எஸ்.பி-க்களை கன்னியாகுமரிக்கும் தூத்துக்குடிக்கும் போடுகிறார்கள். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த போலீஸ் எஸ்.பி-க்களை வன்னியர் பகுதியில் போடுகிறார்கள். வன்னியர்களை அழிக்க வேண்டும் என்ற வெறிதான் இதற்குக் காரணம். இன்னொரு சமூகத்தைத் தூண்டிவிட்டு போலீஸ் மூலம் நம்மை அழிக்கின்றனர். விழுப்புரம், வேலூர், தர்மபுரி என பல மாவட்ட எஸ்.பி-க்கள் இதற்கு உதாரணம். பா.ம.க தலைமையில் அமையபோகும் கூட்டணி 150 இடங்களில் வெல்வது நிச்சயம்’ என்று முடித்திருக்கிறார்!”

”ரியாக்ஷன்?”

”ஆட்சியைப் பிடிப்போம் என்று அய்யா சொன்னதற்குப் பிறகு என்ன இருக்கிறது? அமைதியாகவே கலைந்துவிட்டார்கள் உறுப்பினர்கள். மீண்டும் சாதியைக் கையில் எடுக்க முடிவு செய்துவிட்டாராம் ராமதாஸ். ’15 முதல் 20 வயதுள்ள மாணவர்களைக் கண்டுபிடித்து நம் கட்சியில் உறுப்பினராகச் சேர்க்க வேண்டும். எத்தனை ஆயிரம் சிங்கக்குட்டிகளை நீங்கள் சேர்க்கிறீர்களோ அதுதாம் நம் பலம். வன்னியர், நாயுடு, ரெட்டியார், யாதவ் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களை சேர்க்க வேண்டும். அடுத்த தலைமுறையிடம் நம் கட்சியை ஒப்படைக்கப் போகிறோம். இந்த வருடம் சித்திரைத் திருவிழாவைக் கொண்டாட முடியவில்லை. இனி ஒவ்வொரு பௌர்ணமிக்கும் விழுப்புரத்தில் ஒரு லட்சம் இளைஞர்களைத் திரட்டி விழா கொண்டாட இருக்கிறோம். இந்த விழாவுக்கு இளைஞர்கள் தொடைதட்டி ஆர்ப்பரித்து கிளம்புவார்கள்’ என்றும் சொல்லியிருக்கிறார்.”

”மீண்டும் விழுப்புரம் களேபரமா?”

”இது விழுப்புரம் தி.மு.க-வைப் பற்றிய செய்தி! விழுப்புரம் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்துள்ளார் கருணாநிதி. இப்போதைய மாவட்டச் செயலாளரான பொன்முடியின் அதிகார எல்லைகள் சுருங்க இருக்கின்றன. பரந்துபட்ட மாவட்டத்துக்குச் செயலாளராக இருந்தவர், சிறு மாவட்டத்துக்குச் செயலாளராக ஆக வேண்டுமா என்று யோசித்தார். ‘எவ்வளவு சின்னதாக இருந்தாலும் மாவட்டச் செயலாளர் பதவிதான் செல்வாக்கானது’ என்று முடிவுக்கு வந்துவிட்டார். இந்த நிலையில் மூன்றாகப் பிரிக்கப்பட்ட மாவட்டத்தை இரண்டாகப் பிரித்தால் போதும் என்று தலைமைக்கு சொல்ல நினைத்த பொன்முடி, தனக்கு கீழ் உள்ள ஒன்றியச் செயலாளர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு ஸ்டாலின் வீட்டுக்கு வந்துள்ளார். அனைவரும் ஸ்டாலினுக்கு சால்வை கொடுத்தார்கள். ‘என்ன மொத்தமாக வந்துள்ளீர்கள்?’ என்று ஸ்டாலின் கேட்க, இவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. எனவே திரும்பி வந்துவிட்டார்கள். ‘அனைத்து ஒன்றியச் செயலாளர்களும் எனக்குக் கட்டுப்பட்டு இருக்கிறார்கள் என்பதைக் காட்ட நினைத்தார் பொன்முடி. அதற்காகத்தான் எங்களை அழைத்து வந்தார். மூன்றாக பிரித்திருப்பதை இரண்டாக மாற்ற நினைத்தார். ஆனால், அதனை தலைமை ஏற்கவில்லை. ஆனாலும், பிடிவாதமாக எங்களை அழைத்து வந்தார் பொன்முடி’ என்று சொல்கிறார் ஒரு ஒன்றியச் செயலாளர்!”

”ஓஹோ!”

”ஸ்ரீஹரிகோட்டாவுக்குச் செல்வதற்காக சென்னை விமானநிலையம் வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. விமானநிலையத்துக்கு வந்ததும் ஹெலிகாப்டரில் ஏறி ஸ்ரீஹரிகோட்டா செல்வதாகத் திட்டம். மோடி வரும்போதும் செல்லும்போதும் விமானநிலையத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வந்து வரவேற்பு கொடுத்தது ஆச்சர்யம் வரவைக்கிறது. ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.33 மணிக்கு பிரதமரின் தனி விமானம் வர வேண்டும். இவர்களை வரவேற்பதற்காக முதல்வரும் கவர்னரும் வந்து ஐந்தாம் நம்பர் கேட்டில் உள்ள வி.ஐ.பி லாஞ்சில் காத்திருந்தனர். 3.37 மணிக்கு விமானம் லேண்ட் ஆவதற்கான ரன்வேயைத் தொட்டது. ஆனால், அந்த நேரம் பார்த்து அதிகப்படியான காற்று அடித்து, வானம் இருட்ட ஆரம்பித்தது. உடனே மீண்டும் விமானம் மேலே எழுப்பப்பட்டது. அதன் பிறகு மேகம் விலகிய நிலையில் 4.15 மணிக்குத்தான் மீண்டும் விமானம் லேண்ட் ஆனது. காத்திருந்த கவர்னரும் முதல்வரும் பதற்றமாக இதுபற்றியே விசாரித்துக்கொண்டு இருந்தார்கள். பிரதமர் இறங்கியதும் இவர்கள் இருந்த வி.ஐ.பி

லாஞ்ச்சுக்கு வந்துவிட்டார். அப்போது முதல்வர் இதுபற்றி விசாரித்தார். போரூரில் ஒரு கட்டடம் இடிந்த தகவலையும் முதல்வர், பிரதமருக்குச் சொன்னதாகச் சொல்கிறார்கள். பிரதமரை ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்வதா, அல்லது சாலை வழியாக அழைத்துச் செல்வதா என்று அதிகாரிகள் மட்டத்தில் பரபரப்பான ஆலோசனைகள் நடந்து வந்ததால் முதல்வர் உடனடியாக கிளம்பிவிட்டார்.”

”வழியனுப்பவும் சென்றுள்ளாரே முதல்வர்?”

”ஆமாம்! திங்கள்கிழமை மதியம் 12 மணிக்கு மேல், சென்னையில் இருந்து திருச்சி செல்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது முதல்வருக்கு. பிரதமர் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 11.20 மணிக்கு வருகிறார் என்ற தகவல் சொல்லப்பட்டது. எனவே, அந்த நேரத்துக்கு முதல்வரும் கவர்னரும் வந்துவிட்டார்கள். குறிப்பிட்ட நேரத்துக்கு பிரதமர் வந்தார். அவரை வழியனுப்பி வைத்துவிட்டு இவர் திருச்சி புறப்பட்டார். ‘மத்திய அரசுடன் குறிப்பாக மோடியுடன் நல்லிணக்கம் காட்ட முதல்வர் விரும்புகிறார். அதன் அடையாளமாகத்தான் இப்படி நடந்துகொண்டார்’ என்று சொல்கிறார்கள் பி.ஜே.பி ஆட்கள். ‘பிரதமர் ஆனதும் முதல் முறை வருகிறார். இது மரியாதைக்குரிய சந்திப்பு’ என்று அரசு வட்டாரம் சொல்கிறது” என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்!

%d bloggers like this: