சீன முதலீடு: மோடி பாணியை பின்பற்றுமா தமிழகம்?

சீன முதலீட்டை ஈர்ப்பதில், குஜராத் மாநிலத்தில், மோடி பின்பற்றிய பாணியை, தமிழகம் பின் பற்றுமா என்ற கேள்வி, தொழில் துறையினரிடம் எழுந்துள்ளது.
சீனா, தன் நாட்டில், பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து, அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதையே முக்கிய பணியாக கொண்டுள்ளது. அதனால், ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா நாடுகளைப் போல, உற்பத்தித் துறைக்காக, வெளிநாடுகளில், சீனா முதலீடு செய்வதில்லை.

பெரும் முதலீடு

அதே நேரத்தில், அடிப்படைக் கட்டமைப்புகளை ஏற்படுத்தித் தரும் முதலீட்டை, சீனா பெருமளவில் செய்து வருகிறது. சீனாவின் இக்கொள்கையை, குஜராத் முதல்வராக இருந்தபோது, மோடி கையகப்படுத்திக் கொண்டார்.இதன் மூலம், இந்தியாவில், சீனா செய்துள்ள முதலீடுகளில், பெரும்பகுதி குஜராத்தில் தான் உள்ளது. 6,600 கோடி ரூபாய் அளவுக்கு, குஜராத்தில், சீனா முதலீடு செய்துள்ளது.இந்த முதலீடுகளைக் கொண்டு, குஜராத்தில், பல ஆயிரம் தடுப்பணைகள் கட்டுவது, சாலைகளை மேம்படுத்துவது போன்ற பணிகளை மோடி செய்துள்ளார். இதன் மூலம், குஜராத்தின் குடிநீர் மற்றும் பாசன திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்படுகின்றன.

முன்னிலை:தமிழ்நாட்டை விட, சராசரி மழையளவு குறைவாக உள்ள குஜராத் மாநிலத்தில், இந்த நீர்ப்பாசன திட்டங்கள் பெரிதும் கைகொடுத்துள்ளன. அதேபோல், சாலை மேம்பாடு, சூரிய ஒளி மூலம் மின் சக்தி உற்பத்தி ஆகியவற்றிலும், குஜராத் முன்னணியில் உள்ளது.இப்பணிகள் எல்லாம், மத்தியில், காங்., கூட்டணி அரசு இருந்த போது, குஜராத்தில், மோடி நிகழ்த்திய சாதனைகள். இப்போது, பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின், அதிகளவில் சீன முதலீடுகளை, இந்தியாவுக்கு கொண்டு வர தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

விருப்பம்:துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி தலைமையில், வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் அடங்கிய குழு, சீனா சென்று, அந்நாட்டு முதலீடுகளை ஈர்க்க, ஒப்பந்தங்களை நிறைவேற்றியுள்ளன.இந்நிலையில், சீன முதலீடுகளை ஈர்க்க, மோடி பாணியை தமிழகம் பின்பற்றுமா என்ற கேள்வி, தமிழக தொழில் துறையினரிடம் எழுந்துள்ளது.
இதுகுறித்து, தமிழக சிறு மற்றும் குறுந் தொழில் முதலீட்டாளர் சண்முக வேலாயுதம் கூறியதாவது:உற்பத்தித் துறையில், சீனா முதலீடு செய்வதில்லை. ஆனால், மின்துறை, நீர்பாசனத் துறை, சாலை மேம்பாடு, துறைமுகங்கள் கட்டுவது, விமான நிலையங்கள் கட்டுவது போன்ற அடிப்படை கட்டமைப்புத் துறைகளில் முதலீடு செய்யவே விரும்புகிறது. பெரும் அணைகள், நீர் மின் திட்டங்கள் போன்றவற்றை கட்டி ஒப்படைப்பது அல்லது கட்டி, குறித்த காலத்துக்கு பராமரித்து ஒப்படைப்பது ஆகிய முறைகளில், அடிப்படைக் கட்டமைப்புத் துறையில் முதலீடு செய்கிறது.

வாய்ப்பு:

தகவல் தொழில்நுட்பம், மருந்து உற்பத்தி, ஆட்டோமொபைல் துறைகளில், சீனா பெரிய அளவில் கால் பதிக்கவில்லை. ஆங்கிலம், சீனர்களுக்கு பெரும் தடையாக இருப்பதால், தகவல் தொழில்நுட்பத் துறையில் அவர்களால் சாதிக்க முடியவில்லை.இதனால், தமிழகத்தில், சீனாவின் முதலீடு பெரிய அளவில் இல்லை. ஆனால், வரும் காலங்களில் முதலீடுகளைப் பெற வாய்ப்பு உள்ளது.தமிழக அரசு திட்டமிட்டுள்ள, 2000 மெகாவாட், 2,500 மெகாவாட் மின் உற்பத்தித் திட்டங்களில் பங்கு பெற, சீனா தயாராகி வருகிறது. எனவே, தமிழகத்தில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்களை முன்னிலை படுத்தும்போது, சீனாவின் முதலீட்டை ஈர்க்க முடியும்.இவ்வாறு, சண்முகவேலாயுதம் கூறினார்.
அதேவேளையில், தமிழகத்தில், உற்பத்தித் துறையில், சீனாவுடன் இணைந்து செயல்பட, உள்ளூர் உற்பத்தியாளர்கள் தயாராக இல்லை.தரம் மற்றும் தொழில்நுட்பங்களில், சீனாவை விட இந்தியா முன்னணியில் உள்ளது. இந்நிலையில், நம் தொழில்நுட்பத்தை, சீனாவுடன் பகிர்ந்து கொள்வது, எதிர்காலத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் தொழில்துறையினர் கூறுகின்றனர்.

%d bloggers like this: