‘புகையிலையை சுவைத்தால் பிரச்னை இல்லையா!’

நிக்கோட்டினை எந்த ரூபத்தில் எடுத்தாலும், அது நுரையீரலில் சி.ஓ.பி.டி., என்ற நுரையீரல் அடைப்பு நோயை உருவாக்கும். இதை நிறுத்துவது தான் நல்லது. புகையிலையை தொடர்ந்து போடுவதால் வாய், தொண்டையில் புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம்
பள்ளிப் பருவத்தில், மாணவர்கள் சிலர் சிகரெட் பிடிக்கின்றனர். இது அவர்கள் வாழ்க்கையை பாதிக்கும் அல்லவா? இதற்கு என்ன செய்யலாம்?


இன்றைய வளரும் தலைமுறைக்கு அனைத்தையும் எளிதில் கற்கும் வாய்ப்பு அதிகம். கல்வி, உலக நடப்பு போன்ற விஷயங்களிலும் சரி, புகை, மது போன்ற பழக்கங்களும் சரி, இதற்கெல்லாம் காரணம் இன்றைய சமுதாய சூழல். தனிக்குடும்ப வாழ்க்கை முறை.
கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் போது, குழந்தைகளை கண்காணிக்க தவறுகின்றனர். பெண் குழந்தைகளை விட, ஆண் குழந்தைகளுக்கு வேண்டாத பழக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எல்லாவற்றையும் சட்டம் போட்டு தடுக்க முடியாது. இது பெற்றோரின் கவனிப்பு, ஆசிரியர்களின் கண்டிப்பு, தனிமனித ஒழுக்கம் சார்ந்த விஷயம். குழந்தைகளுக்கு பாடப் புத்தகத்திலேயே இதுபோன்ற பழக்கங்களால் ஏற்படும் பிரச்னைகளை கற்றுத் தரவேண்டும். இளம் வயதில் பழகிக் கொள்ளும் புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்கள், அவர்களின் ஆரோக்கியத்தை வெகு சீக்கிரத்தில் குலைத்து விடும்.
திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தையில்லை. பொது மருத்துவரிடம் காண்பித்தபோது, காசநோய்க்கான மருந்து சாப்பிடும்படி கூறினார். பரிசோதனை செய்யாமல் இதை சாப்பிடலாமா? இது குழந்தையின்மையை சரிசெய்யுமா?
இன்று மலட்டுத்தன்மை என்பது இருபாலரையும் பாதிக்கும் ஒரு பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதற்கு காரணம் சிறுவயதில் இருந்தே சிகரெட், குடிப்பழக்கம் போன்ற பல பிரச்னைகள் தான். டி.பி., இனப்பெருக்க உறுப்புகளை பாதிக்கும்பட்சத்தில் குழந்தை பிறப்பதில் சிக்கல் வரலாம். இது பெரும்பாலும் பெண்களை அதிகம் பாதிக்கும். எனவே பிரச்னை எதனால் என்பதை சரியான பரிசோதனைகள் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். டி.பி.,யால் தான் பிரச்னை என்றால், இம்மருந்தை எடுக்கலாம். இல்லையெனில் முறையான பரிசோதனை செய்யாமல், டி.பி., மருந்தை உட்கொள்ளக் கூடாது.
என் தாய் புகையிலை சுவைக்கிறார். நிறுத்தும்படி கூறினால், ‘சிகரெட் தான் நுரையீரலை பாதிக்கும். புகையிலை சுவைப்பதால் பிரச்னை வராது’ என்கிறார். புகையிலையை சுவைக்கலாமா?
சிகரெட்டில் எந்தளவு பிரச்னை உள்ளதோ, அதே அளவு பிரச்னை புகையிலையை சுவைப்பதாலும், மூக்குப் பொடி போன்றவற்றை உபயோகப்படுத்தினாலும் வரும். நிக்கோட்டின் என்ற மூலப்பொருள் தான், இவை அனைத்திலும் இருக்கிறது. நிக்கோட்டினை எந்த ரூபத்தில் எடுத்தாலும், அது நுரையீரலில் சி.ஓ.பி.டி., என்ற நுரையீரல் அடைப்பு நோயை உருவாக்கும் என்று பல ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இதை நிறுத்துவது தான் நல்லது. அத்துடன் புகையிலையை தொடர்ந்து போடுவதால் வாய், தொண்டை பகுதியில் புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம்.
டாக்டர் எம். பழனியப்பன்,
மதுரை.

%d bloggers like this: