Advertisements

‘ஒற்றை செருப்பை யாராவது அணிவார்களா?

‘அரபு மொழியில் ஃபார்மிசைடு ஃபீஸ்ட் என்று சொல்வார்கள். கற்பனையிலேயே வாழை மரத்தை வளர்த்து, கற்பனையிலேயே அதில் இலையை அறுத்து, கற்பனையிலேயே சமையல் செய்து, கற்பனையிலேயே இலையில் சாப்பாடு போட்டு, கற்பனையிலேயே சாப்பிடுவார்கள். உண்மையில் சாப்பிட்டீர்களா என்றால் சாப்பிட்டோம் என்பார்கள். அதுபோல சுதாகரன் திருமணத்தைப் பார்க்காமல், எங்களிடம் கேட்காமல், கற்பனையிலேயே மதிப்பீடு செய்து மிகைப்படுத்தி காட்டியிருக்கிறார்கள்’ என்று ஜெயலலிதா வழக்கறிஞர் குமார் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தன் வாதத்தை முன்வைக்க… மற்ற வழக்கறிஞர்கள் அவரை உற்று நோக்க ஆரம்பித்தனர். குமாரின் இறுதி வாதம் 10 நாட்களைக் கடந்தும் சூடு குறையாமல் அனல் பறக்கிறது.

 

”போயஸ் கார்டனில் 11.2.1997-ல் கைப்பற்றப்பட்ட 914 பட்டுப் புடவைகளின் மதிப்பு 61 லட்சத்து 13 ஆயிரத்து 700 ரூபாய். 6,195 பாலிஸ்டர் மற்றும் காட்டன் புடவைகளின் மதிப்பு 27 லட்சத்து எட்டாயிரத்து 720 ரூபாய் என்று கணக்கிட்டு இருக்கிறார்கள். 12 ஆயிரம் புடவைகளை 6 1/2 மணி நேரத்தில் மதிப்பீடு செய்திருக்கிறார்கள். ஒரு புடவையை 2 செகண்டில் எப்படி மதிப்பீடு செய்ய முடியும்? மதிப்பீடு செய்த ரிப்போர்ட்டும் சமர்ப்பிக்கவில்லை. புடவைகளை மதிப்பீடு செய்த பாலசுந்தரத்தை கோர்ட்டில் விசாரிக்கவும் இல்லை. என் கட்சிக்காரர் செல்வ செழிப்போடு வாழ்ந்தவர். வழக்கு  நடைபெற்ற காலகட்டத்துக்கு முன்பே அவர் நிறைய புடவைகள் வைத்திருந்தார். என் கட்சிக்காரரை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டு செய்யப்பட்டது” என்று வழக்கறிஞர் குமார் எட்டாவது நாள் வாதத்தை எடுத்து வைக்க… நீதிபதி அதை உன்னிப்பாகக் கவனித்தார்.

ஒன்பதாவது நாளும் புடவைகளைப் பற்றிய வாதம் தொடர்ந்தது. ”ஒரு புடவையை 2 செகண்டில் மதிப்பீடு செய்திருக்கிறார்கள். ஒரு புடவையை மதிப்பீடு செய்ய வேண்டும் என்றால், அந்தப் புடவையில் உள்ள நூல், ஜரிகையைக் கருக்கி அதில் வரும் வாசனையைப் பொறுத்து அது ஒரிஜினல் பட்டுப்பூச்சியில் இருந்து தயாரிக்கப்பட்ட புடவைதானா என்பதை அறிய வேண்டும். சிந்தடிக் புடவையாக இருந்தால், கருக்கும் போது மெழுகு போல உருகும். அதில் எது ஜரிகை, வெள்ளி, தங்கம் என்பதை கைதேர்ந்த வல்லுநர்களைக் கொண்டு மதிப்பீடு செய்ய வேண்டும். இது எதையும் பின்பற்றவில்லை.

இந்த வழக்கில் ஏ1 ஆக சேர்க்கப்பட்டுள்ள என் மனுதாரருக்கு நிறைய உறவினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வீட்டில் ஃபங்ஷன் நடந்தால் வருவார்கள், போவார்கள். அப்படி இருக்கும்போது எப்படி இந்தப் புடவைகள் அனைத்தும் என் மனுதாரருடையதுதான் என்று சொல்ல முடியும்? இந்தப் புடவைகள் அனைத்தும் வழக்கு நடைப்பெற்ற காலத்தில் வாங்கியது என்பதற்கு எந்த சான்றும் கிடையாது.

அதேபோல போயஸ் கார்டனில் கைப்பற்றப்பட்ட 389 ஜோடி செருப்புகளின் மதிப்பு ரூ.2,00,902.45 என்று மதிப்பீடு செய்திருக்கிறார்கள். இந்தச் செருப்புகள் ஜென்ஸ், லேடீஸ் அணியக் கூடியது எனும்போது, எப்படி அனைத்தும் என் மனுதாரருக்குச் சொந்தமாகும்? அதேபோல் நிறைய ஒற்றைச் செருப்புகளையும் சேர்த்து கணக்கிட்டு இருப்பது தவறு. ஒற்றைச் செருப்பை யார் போடுவார்கள்? முறையாக என் மனுதாரருடைய காலின் அளவை எடுத்து அந்த அளவில் உள்ள செருப்புகளை மட்டுமே மதிப்பீடு செய்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை.

என் மனுதாரர் வீட்டில் 14 பேர் இருக்கிறார்கள். கேம்ப் ஆபீஸ் இருக்கிறது. அவர் அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக இருக்கிறார். அதனால், கட்சிக்காரர்கள் பலரும் வீட்டுக்கு வருவார்கள். எல்லோருடைய செருப்புகளையும் சேர்த்து என்னுடைய கட்சிக்காரருக்கு சொந்தமானது என்பது எந்த விதத்தில் பொருந்தும். அதுவும் வழக்கு நடைபெற்ற காலத்தில் வாங்கப்பட்டவை என்பதற்கும் சான்று இல்லை” என்று சொல்லி அதிரவைத்தார் குமார்.

தொடர்ந்த அவர்,  ”போயஸ் கார்டனில் கைப்பற்றப்பட்ட ஏழு விலை உயர்ந்த வாட்ச்களின் மதிப்பு 9,03,000 ரூபாய் என்றும், 91 சாதாரண வாட்ச்களின் மதிப்பு 6,87,350 ரூபாய் என்றும் கணக்கிட்டு இருக்கிறார்கள். இந்த வாட்ச்களை தகுதியற்ற வல்லுநர்களைக் கொண்டு மதிப்பீடு செய்திருக்கிறார்கள். அனைத்து வாட்ச்களையும் பொத்தாம்பொதுவாக மதிப்பீடு செய்து மிகைப்படுத்தி காட்டியிருக்கிறார்கள். இதுவும் வழக்கு நடைபெற்ற காலத்தில் வாங்கப்பட்டவை அல்ல” என்று விவரித்தார்.

பத்தாவது நாள் வாதத்தில்தான், ஃபார்மிசைடு ஃபீஸ்ட் பற்றி சொன்னவர், ”திருமணத்துக்கு ஆன செலவுகளை நடிகர் சிவாஜியின் மகன் ராம்குமார் செலுத்தியிருக்கிறார். அதற்கு வரியும் செலுத்தியிருக்கிறார்” என்று அன்றைய வாதத்தை முடித்தார்.

ஒவ்வொரு நாளும் விறுவிறு திருப்பங் களுடன் சொத்துக் குவிப்பு வழக்கு நகர்கிறது!

Advertisements
%d bloggers like this: