ஆண்ட்ராய்டு எல் அடுத்த தலைமுறை ஓஎஸ்!

கூகுள் நிறுவனம் தனது புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷனை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ‘ஆண்ட்ராய்டு எல்’ என்கிற பெயரில் வெளியாகியுள்ள இந்த ஓஎஸ் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலமாகத் தொழில்நுட்பத்தில் மட்டுமே கவனத்தைச் செலுத்திவந்த கூகுள், முதல்முறையாக ஓஎஸ் டிசைனிலும் பிரத்யேகமாகக் கவனம் செலுத்தியுள்ளது.

பொதுவாக, ஆண்ட்ராய்டின் ஸ்டேட்டஸ் பார் வசதி மிகவும் பிரசித்தி பெற்றது. காரணம், ஆண்ட்ராய்டின் ஸ்டேட்டஸ் பாரை முன்மாதிரியாகக் கொண்டுதான் ஆப்பிளின் ஐஓஎஸ் மற்றும் மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் ஓஎஸ் தங்களது ஓஎஸ்-ல் ஸ்டேட்டஸ் பாரைக் கொண்டுவந்தது.

ஆனால், தற்போது ஆண்ட்ராய்டு எல் மூலம் ஸ்டேட்டஸ் பார் அடுத்த கட்டத்தைத் தொட்டுள்ளது கூகுள். இந்த ஓஎஸ்-ல் உள்ள ஸ்டேட்டஸ் பார் இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் தடவை இழுக்கும்போது மிஸ்டு கால், மெசேஜ், இ-மெயில் போன்ற பொதுவான நோட்டிபிகேஷன்கள் தெரியும். மீண்டும் ஸ்டேட்டஸ் பாரை இழுத்தால், போனுக்கான முக்கிய செட்டிங்குகள் திரையில் தோன்றும். இதை வைத்துக்கொண்டு சில நொடிகளில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்றாற்போல் செட்டிங்கை மாற்றிக்கொள்ளலாம்.

கூகுளின் இந்தப் புதிய ஓஎஸ்-ல் மெட்டீரியல் டிசைன் என்கிற புதிய டிசைன் தொழில்நுட்பத்தைப் பொருத்தியுள்ளது. இந்த டிசைன் ஓஎஸ் முழுவதும் வேறொரு பரிமாணத்துக்கு வாடிக்கையாளர்களை எடுத்து செல்கிற மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்தப் புதிய ஓஎஸ்-ல் உள்ள கீ-போர்டு பார்க்கக் கவர்ச்சிகரமாகவும் பயன்படுத்த எளிதாகவும் விரைவாகவும் இருக்கிறது. முந்தைய ஆண்ட்ராய்டு ஓஎஸ்-களைக் காட்டிலும் இந்த ஓஎஸ் அதிக பேட்டரி சேமிப்பு தரும் என்று கூகுள் உறுதியளித்துள்ளது.

தற்போது நெக்சஸ் 5 மற்றும் நெக்சஸ் 7 ஆகிய கருவிகளுக்கு மட்டுமே இந்த ஓஎஸ் கிடைக்கிறது. தவிர, ஒரு முன்மாதிரி வெர்ஷன்தான் இது. இன்னும் சில மாதங்களில் முழு வெர்ஷன் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் என்றும் கூகுள் உறுதியளித்துள்ளது.

%d bloggers like this: