Advertisements

மிஸ்டர் கழுகு: ஜெ. Vs ஜெ. மீண்டும் போர்

 

கழுகார் உள்ளே நுழைந்ததும் பழைய ஃபைலைக் கேட்டு வாங்கி, நெடுநேரம் திருப்பிக்கொண்டு இருந்தார். சிறிது இடைவெளியில் எதையோ கண்டுபிடித்தவராகச் சிரித்துக் கொண்டபடி நம்மைப் பார்த்தார்.

27.04.14 இதழில் இருந்து எடுத்து கழுகார் வாசிக்கச் சொன்ன செய்தி இதுதான்…

”சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் வலை​தளத்தில், ‘கிறிஸ்துவ பாதிரியார்​களும் முஸ்லிம் மதத் தலைவர்களும், சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயலலிதா மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் தங்களுடைய ஓட்டுக்களை இழக்க வேண்டிவரும் என்றும் மிரட்டுகின்றனர். இதற்கு என்ன செய்யப்போகிறார் ஜெ.ஜெ?’ என்று பதிவிட்டுள்ளாராமே?”

”திடீரென்று இந்த மேட்டர் கிளம்பியுள்ளது. சங்கரராமன் கொலை வழக்கில், புதுவை சிறப்பு நீதிமன்றம் காஞ்சி ஜெயேந்திரர் உள்ளிட்ட அனைவரையும் நிரபராதி என்று விடுதலை செய்தது. வழக்கமாக இந்த மாதிரி தீர்ப்பு வந்தால், மாநில அரசு அப்பீல் செய்யும். ஆனால், தமிழக அரசு அமைதியாக இருந்தது. ஆனால், மேல்முறையீடு செய்யப்போகிறார்கள் என்று இரண்டு, மூன்று நாட்களாக செய்தி பரவிக்கிடக்கிறது…” – நாம் வாசித்து நிறுத்த, பேச ஆரம்பித்தார் கழுகார்.

”நான் முன்பே குறிப்பிட்டது, இப்போது நடந்துவிட்டது. புதிய உத்வேகத்தோடு மேல் முறையீட்டுக்காக தயாராகி வருகிறது வரதராஜ கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விவகாரம். தீர்ப்பளித்து ஏழு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இந்த வழக்கு உயிர்பெற இருப்பதால் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளது காஞ்சி சங்கர மடம் என்று சொல்கிறார்கள்.

கடந்த ஆண்டு நவம்பர் 27-ம் தேதி சங்கரராமன் கொலை வழக்கில் தீர்ப்பளித்தார் நீதிபதி சி.எஸ்.முருகன். இந்தக் கொலை வழக்கில் 370 பேர் விசாரிக்கப்பட்டு இறுதியாக 187 முக்கிய சாட்சிகளில் 83 பேர் பிறழ்சாட்சிகளாகவும், 104 பேர் தெளிவான சாட்சிகளாகவும் இருந்தனர். 19 காரணங்களை சுட்டிக்காட்டி 253 பக்க தீர்ப்பைச் சமர்ப்பித்து கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயேந்திரர், விஜயேந்திரர், அப்பு, சுந்தரேச ஐயர், ரகு உள்ளிட்ட 23 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார் நீதிபதி சி.எஸ்.முருகன். நீதிபதியின் தீர்ப்புக்கு பல அரசியல் அமைப்பினர்களும் கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்திருந்தனர். புதுவை நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றதால் நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து புதுவை அரசால் மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும். தீர்ப்பளித்து பல மாதங்கள் கடந்த நிலையில், மேல்முறையீட்டுக்கான எந்தவொரு நடவடிக்கைகளிலும் ஆளும் என்.ஆர் காங்கிரஸ் அரசு ஈடுபடவில்லை. ஆனால், ஏழு மாதங்கள் கடந்த நிலையில் இந்த வழக்கானது அவசர அவசரமாக தூசுதட்டி, நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு மேல்முறையீடு செய்​யத் தயாராகி வருகிறது.”

”ஏனாம் இந்த திடீர் ஏற்பாடுகள்?”

”புதுச்சேரி அரசின் இந்த திடீர் பரபரப்புக்கான காரணங்களை விசாரித்தபோது, பல தகவல்கள் கிடைத்தன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க மற்றும் என்.ஆர் காங்கிரஸ் ஆகிய இரண்டும் ஒன்றாகக் களத்தில் இறங்கி பிரமாண்ட வெற்றி பெற்றது. ஆனால், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரங்கசாமி நன்றி சொல்லவில்லை. அதன் பிறகு, அமைச்சர் பதவியை அ.தி.மு.க-வுக்குத் தர ரங்கசாமி மறுத்தார். இதனால், கூட்டணி முறிந்து ஜெயலலிதாவின் கோபப் பார்வைக்கு ஆளானார் ரங்கசாமி. புதுவை மாநில முதல்வரான ரங்கசாமியை ‘துரோகி’ என்று தடித்த வார்த்தைகளால் விமர்சித்தார் ஜெயலலிதா. நிலைமை இப்படி இருந்த போதுதான், சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பு வந்தது. இந்தத் தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று சொல்லப்பட்டது. காரணம், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஜெயலலிதாவின் முயற்சிகளால்தான் ஜெயேந்திரர் கைதுசெய்யப்பட்டார்.”

”ம்..!”

”இந்த வழக்கை மிகவும் உன்னிப்பாக கவனித்ததில் ஜெயலலிதாவின் பங்கு அதிகம். ஆனால், தீர்ப்பு வந்தவுடன் அதற்கு மேல்முறையீடு செய்யாமல் மவுனம் காத்த ரங்கசாமி மீது கடும் அதிருப்தி அடைந்தவராக ஜெயலலிதா இருந்தார். ‘புதுவையில் அ.தி.மு.க ஆட்சி அமைப்போம்’ என்பதுதான் ஜெயலலிதாவின் இலக்காக உள்ளது. ‘அடுத்து வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் ரங்கசாமியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார். அதற்கான வேலைகளை ஜெயலலிதா தொடங்கிவிட்டார் என்று சொல்கிறார்கள்.”

”ஓஹோ?”

”கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க ஒரு லட்சத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், அடுத்து வரப்போகிற 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு இப்போதே புதுச்சேரியை தயார்படுத்தி அதற்கான காய்களை நகர்த்தத் துவங்கியுள்ளார் ஜெயலலிதா. தேர்தலுக்குப் பிறகு புதுச்சேரி அ.தி.மு.க-வை செம்மலை மற்றும் தமிழக உளவுத் துறை அதிகாரிகள்தான் இயக்குகின்றனர். என்.ஆர் காங்கிரஸில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் நால்வரிடமும், காங்கிரஸைச் சேர்ந்த இரு எம்.எல்.ஏ-க்களிடமும் பேச்சுவார்த்தையைத் துவங்கிவிட்டனர். 2016-ல் புதுச்சேரியில் ஆட்சியை எப்படியும் கைப்பற்றி ரங்கசாமிக்கு மரண அடி கொடுக்க வேண்டும் என்பது ஜெயலலிதாவின் திட்டம்.”

”இதற்கும் சங்கரராமன் வழக்குக்கும் என்ன சம்பந்தம்?”

”சங்கரராமன் கொலை வழக்கில் அப்பீல் செய்வதன் மூலமாக ஜெயலலிதாவின் கோபத்தை தணிக்கலாம் என்று ரங்கசாமி நினைக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ‘சங்கரராமன் கொலை வழக்கில் மேல்முறையீடு செய்ய, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது’ என்று சில மாதங்களுக்கு முன்பு சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் தளத்தில் செய்தி வெளியிட்டதை நான் உமக்குச் சொல்லியிருக்கிறேன். ‘புதுவை அரசு இதில் மெத்தனம் காட்டுவதாக ஜெயலலிதா நினைத்து ரங்கசாமி மீது கோபமாக இருந்தார். இந்த வழக்கில் அப்பீல் செய்தால் ஜெயலலிதாவை சமாதானப்படுத்தலாம் என்பதே ரங்கசாமியின் திட்டம் என்று புதுவை அரசியல் வட்டாரத்தில் சொல்கிறார்கள்.”

”ரங்கசாமியின் சமரச முயற்சிகள் கை கொடுக்குமா?”

”ரங்கசாமியின் சமரசம் கைகொடுக்குமா என்பதை காத்திருந்துதான் கவனிக்க வேண்டும். ஆனால், இந்த அரசியலுக்குள் காஞ்சி ஜெயேந்திரர் மீண்டும் சிக்கியிருப்பதுதான் அவரது ஆதரவாளர்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது. மடத்துக்கு வேண்டப்பட்டவர்கள் இந்தத் தகவலை டெல்லி பி.ஜே.பி மேலிடத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்றுள்ளார்கள். ‘மத்திய அரசுடனும் பி.ஜே.பி-யுடனும் ஜெயலலிதா அதிகமான நெருக்கம் காட்டுகிறார். ஆனால் மடத்தை மட்டும் எதற்காக ஒதுக்க வேண்டும்?’ என்று தங்களது ஆதங்கத்தைச் சொல்லியிருக்கிறார்களாம். இந்து அமைப்பின் தலைவர் ஒருவர் கவனத்துக்கும் இது சொல்லப்பட்டு உள்ளது. அவர் அநேகமாக அடுத்த வாரம் சென்னை வந்து ஜெயலலிதாவைச் சந்திக்கலாம் என்கிறார்கள். அதற்குள் புதுவையில் இருந்து இதற்கான கோப்புகள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்துவிடும். சட்ட சம்பிரதாயங்கள் விரைவாகத் தொடங்கிவிடும் என்கிறார்கள்” என்ற கழுகார், அடுத்து நடராஜன் கைது செய்திக்கு வந்தார்.

”ம.நடராஜன் – கராத்தே ஹுசைனி பிரச்னை தொடர்பாக உமது நிருபர் விரிவாக எழுதியிருந்தார். அதன் எதிரொலியாகவே ம.நடராஜன், இளவழகன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் ம.நடராஜன் மீது ஹுசைனி கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரைக் கைதுசெய்ய மேலிடத்தின் அனுமதி கிடைத்ததும், குற்றாலத்துக்குப் புறப்பட்டது போலீஸ் டீம்.

அதிகாலை நேரத்தில் நடராஜன் தங்கியிருந்த பங்களாவுக்குள் நுழைந்த போலீஸ் டீம், அவரை விசாரணைக்காக சென்னைக்கு வரும்படி அழைத்தது. நடராஜன் போலீஸாரிடம், ‘தப்பு செய்தவனை விட்டு என்னைக் கைதுசெய்ய வந்தது எந்த விதத்தில் நியாயம்? விசாரணை என்று என்னிடம் தகவல் தெரிவித்திருந்தால், நானே சென்னைக்கு வந்திருப்பேன். எதற்காக இவ்வளவு தூரம் வந்தீர்கள்?’ என்று காட்டமாகியிருக்கிறார்.”

”போலீஸ் தரப்பில் என்ன சொன்னார்களாம்?”

”அமைதியாக இருந்தவர்கள், அவரை காரில் அழைத்துக்கொண்டு சென்னைக்கு கிளம்பியுள்ளனர். ‘மதியம் என்ன சாப்பிடுகிறீர்கள்?’ என்று நடராஜனிடம் போலீஸார் கேட்க, ‘நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ, அதையே எனக்கும் ஆர்டர் செய்யுங்கள்’ என்று கூறியிருக்கிறார். மதியம் மதுரை திருமங்கலத்தில் போலீஸாருடன் சேர்ந்து நடராஜன் சாப்பிட்டிருக்கிறார். இரவு செங்கல்பட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் டிபன் சாப்பிட்டுவிட்டு 10.30 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தார்கள். நீதிபதியிடம் ஆஜர்படுத்தினார்கள். 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.”

”நடராஜன் கைதுக்கு கராத்தே ஹுசைனி மட்டும்தான் காரணமா?”

”நடராஜன், எப்போதும் வெளிப்படையாகக் கருத்துக்களைச் சொல்லக் கூடியவர். போனில் நண்பர்களிடம் பேசும்போது முதல்வரை விமர்சிப்பதை வழக்கமாகவே வைத்திருந்தார். இதுதான் கைதுக்கு முக்கியக் காரணமாகச் சொல்கிறார்கள்.”

”சசிகலா ரியாக்ஷன்?”

”அவர்தான் இப்போது நல்லது, கெட்டது எதற்குமே ரியாக்ஷன் காட்டுவது இல்லையே!”

”அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவராக மருத்துவமனைக்குப் போனது பரபரப்பு ஆகிவிட்டதே?”

”வைகோ, விஜயகாந்த் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் அப்போலோவில் அட்மிட் ஆனது பரபரப்பு கிளப்பிவிட்டது. விஜயகாந்த்துக்கு நார்மல் செக்கப் என்கிறார்கள். வைகோவுக்கு, ‘அலைச்சல், டென்ஷன், வயிற்றுப்போக்கு’ என்று சொல்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் பற்றி கட்சி நிர்வாகிகளிடம் கருத்துக் கேட்க வரிசையாக ஊர் ஊராக வலம் வர ஆரம்பித்துள்ளார் வைகோ. அந்த அலைச்சல்தான் அட்மிட் வரை போனது என்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார்,

”தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் தொடங்கிவிட்டது. சட்டசபை செயலகத்தில் இருக்கும் அதிகாரி ஒருவரின் ஆட்டம் அதிகமாக இருப்பதாக அனைத்து ஊழியர்களும் புலம்புகிறார்கள். கடந்த தி.மு.க ஆட்சியில் செல்வாக்காக இருந்த அவர், இப்போதும் அதே அதிகாரத்தைக் காட்டுகிறாராம். ‘அடுத்து ஆட்சி மாறியதும், உன்னை சஸ்பெண்ட் பண்ண வைத்துவிடுவேன்’ என்று பீதியைக் கிளப்பியே மற்றவர்களை மிரட்டுகிறாராம். உயர் அதிகாரி ஒருவரும் இவருக்கு உதவிகரமாக இருக்கிறாராம்” என்றபடி பறந்தார்.

Advertisements
%d bloggers like this: