நல்லவனாக இரு; நல்லதை செய்!

ஜூலை 14 – சிவானந்தர் முக்தி தினம்


ஒரு குழந்தை சிறுவயதில் பெற்றோரால் எப்படி வளர்க்கப்படுகிறதோ, அதைப் பொறுத்தே அதன் எதிர்கால வாழ்க்கை அமையும் என்பர். அவ்வாறு சிறுவயதிலேயே பழக்கப்படுத்தப்பட்ட நற்குணங்களால், வளர்ந்து வாலிபனான பின், கருணை உள்ளத்துடன், அன்பு, தொண்டு, தானம் செய்தல் என, தன்னை ஆன்மிக பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டவர், சுவாமி சிவானந்தர்.
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில், செப்., 8, 1887ல், சிவானந்தர் அவதரித்தார். தந்தை வெங்கு ஐயர்; தாய் பார்வதி அம்மையார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் குப்புசுவாமி. எட்டயபுரத்திலுள்ள ராஜா உயர் நிலைப்பள்ளியில் படித்த போது, பாரதியாரும், அவரும் நண்பர்கள் ஆயினர்.
குப்புசுவாமி சிறுவனாக இருந்த காலத்திலேயே மிகுந்த இரக்க குணத்துடன் விளங்கினார். அதுவே பிற்காலத்தில், அவரை ஜாதி, மத பேதமற்று, அனைத்து உயிர்களையும் நேசிக்கத் தூண்டியது.
குப்புசுவாமிக்கு நீச்சல் என்றால், மிகவும் பிரியம். சிறந்த வீரரும் கூட. அதிலும் கிணற்றுக்கு மேலிருந்து கிணற்றுக்குள் குதித்து, தண்ணீரில் நீண்ட நேரம் மூழ்கி எழுவார். மற்றவர்களை திகைக்க வைக்கும் சாகசங்களைச் செய்வார். ஆன்மிகத்திற்கு அடிப்படை தேவையே இத்தகைய தைரியமும், வைராக்கியமும் கலந்த உணர்வு தான்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில், மருத்துவம் படித்த குப்புசுவாமி, பணிக்காக மலேசியா சென்றார். ஏராளமாக சம்பாதித்தாலும், அவர் மனம், துறவறத்தையே விரும்பியது. அதனால், அவர் இமயமலைக்கு சென்று தவமிருந்தார். அங்கிருந்த சுவாமி விஸ்வானந்தர், குப்புசுவாமி என்ற பெயரை, ‘சிவானந்தர்’ என்று மாற்றி, தீட்சை அளித்தார்.
‘மத அமைப்புகளின் பெயர் தான் மாறுபடுகிறதே தவிர, அவற்றின் நோக்கம் ஒன்றுதான். அது, மனித வாழ்வை தெய்வீக மயமாக்குவது…’ என்பார் சிவானந்தர். தன் கொள்கைக்கேற்ப, தன் ஸ்தாபனத்திற்கு, ‘தெய்வீக வாழ்க்கை சங்கம்’ என்று, பெயரிட்டார்.
‘மனிதன் கடவுளிடமிருந்து எல்லாவற்றையும் பெறுகிறான். ஆனால், அவரை மறந்து விடுகிறான். கடவுள் எல்லாவற்றையும் கொடுக்கிறார்; ஆனால், தன்னை மறந்தவர்களையும் மன்னித்து விடுகிறார்…’ என்று, கடவுளின் இயல்பைக் கூறும், சிவானந்தர், கட்டுப்பாடுடன், கூடிய மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தவர்.
தியானத்தை கடைபிடிக்கும் போது கூட, உணவில், உப்பு, சர்க்கரை, மிளகாய், புளி போன்றவற்றை கைவிட்டதாக, அவரது டைரி குறிப்பு கூறுகிறது. மேலும், காய்ந்த ரொட்டியை கங்கை நீரில் கரைத்துக் குடித்துள்ளார். பல சமயங்களில் இது மட்டுமே இவரது உணவாக அமைந்துள்ளது.
சிவானந்தர், 300 புத்தகங்கள் எழுதியுள்ளார். இவை எல்லாவற்றிலுமே, நல்லவனாக இரு; நல்லதையே செய்; என்பதே முக்கிய கருத்து. பல்வேறு பணிகளுக்கும் மத்தியில், இவ்வாறு ஏராளமான நூல்களை எழுதியது எப்படி சாத்தியமானது என்று கேட்போருக்கு, ‘ஒரு வேலைக்கு ஒரு மணி நேரம் என, ஒதுக்கிக் கொள்ள வேண்டும். இச்சமயத்தில் இன்ன வேலை என்று வகுத்து, அதைச் சரியாகச் செய்து விட்டால் போதும். ஆறே மாதத்தில் உங்கள் வேலைகள் அத்தனையும் எந்தளவு முன்னேறியுள்ளது என்பதை நீங்களே உணர்வீர்கள். முதலில் உங்கள் மனதில் சரியான திட்டமிடல் உருவாக வேண்டும்…’ என்பார்.
இவர், 1963, ஜூலை 14ல் முக்தியடைந்தார். சுவாமி சிவானந்தரின் மனஉறுதி, நமக்கும் ஏற்பட அவரது ஆசியை வேண்டுவோம்.

%d bloggers like this: