மிஸ்டர் கழுகு: புதுவையில் வீசிய சுனாமி

கடந்த இதழைக் கையோடு எடுத்து வந்திருந்த கழுகார், ”ஜெயலலிதாவுக்கும் ஜெயேந்திரருக்குமான போரில் முதல் தலை உருண்டுவிட்டது பார்த்தீரா?” என்ற பீடிகையுடன் ஆரம்பித்தார்.

”காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் கைதான ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்டவர்களை புதுவை நீதிமன்றம் விடுதலை செய்தது. கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி வெளியான இந்தத் தீர்ப்புக்கு அப்பீல் போகும் கோப்பில் கடந்த 10-ம் தேதி புதுவை துணை நிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா கையெழுத்துப் போட்டார். 11-ம் தேதி நள்ளிரவில் வீரேந்திர கட்டாரியாவை துணை நிலை ஆளுநர் பதவியில் இருந்து நீக்கும் முடிவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி எடுத்தார். ‘மத்திய அரசின் நிலைப்பாடு என்னவென்று கேட்காமல் துணை நிலை ஆளுநர் இப்படி ஒரு சர்ச்சைக்குரிய கோப்பில் எப்படிக் கையெழுத்துப் போடலாம்?’ என்று கொந்தளித்துவிட்டதாம் மத்திய அரசு!”

 

”அப்படியா?”

”இதனை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகிய மூவர் கவனத்துக்கும் கொண்டு போனவர் சுப்பிரமணியன் சுவாமி. இப்போது அவர் வெளியில் அதிகம் வருவதில்லை, பேட்டிகள் கொடுப்பதில்லை, சர்ச்சைகளில் சிக்குவதில்லை என்றாலும் பி.ஜே.பி-யின் டெல்லி தலைமைப் பீடத்தில் உட்கார்ந்து கொண்டு இந்தியா முழுக்க இருக்கும் அரசியல் நிலவரங்களை கட்சிக்கும் ஆட்சிக்கும் தரவேண்டிய முக்கியமான வேலையை சுப்பிரமணியன் சுவாமிக்கு கொடுத்துள்ளனர். வாரத்தின் இரண்டு நாட்கள் அதிகாரப்பூர்வமாகவே அவர் பிரதமர் மோடியைச் சந்திக்கலாம் என்றும் அனுமதி தரப்பட்டுள்ளது. அதனால் தான் நினைப்பதை மோடியிடம் சொல்லக் கூடிய இடத்தில் சுவாமி இருக்கிறார். அந்த வகையில் மோடியிடம் கொண்டு போனார் சுவாமி.”

”ஓஹோ!”

”சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் மீது வழக்கு போடப்பட்டபோது மடத்துக்கு ஆதரவான பலரே அவருக்கு சார்பான நிலைப்பாடு எடுக்கத் தயங்கியபோது, சுவாமி மட்டும்தான் வெளிப்படையாக ஆதரித்தவர். ஜெயேந்திரருக்கு ஆதரவாக வெளிப்படையாகக் கருத்துச் சொன்னார். இந்த வகையில் சுவாமி – ஜெயேந்திரர் நட்பு பிரிக்க முடியாதது. ஜெயேந்திரர் விடுதலை செய்யப்பட்டபோது, ‘ஜெயலலிதா மீது மானநஷ்ட வழக்குப்போட வேண்டும்’ என்று பேட்டி அளித்தார் சுவாமி. ‘இந்த வழக்கில் அப்பீல் போவதற்கு, நெருக்கடி கொடுக்கிறார் ஜெயலலிதா’ என்று சுவாமிதான் முதலில் சந்தேகப்பட்டார். ‘கிறிஸ்தவ பாதிரியார்களும் முஸ்லிம் மதத் தலைவர்களும் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயலலிதா மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் தங்களுடைய ஓட்டுக்களை இழக்க வேண்டிவரும் என்றும் மிரட்டுகின்றனர். இதற்கு என்ன செய்யப் போகிறார் ஜெ.ஜெ?’ என்று டுவிட்டர் இணையதளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பதிவிட்டார் சுவாமி. இதுபற்றி 27.4.14 தேதியிட்ட ஜூ.வி-யில் சொல்லியிருந்தேன் அல்லவா?”

”ஆமாம்!”

”எனவே ஜெயேந்திரர் விவகாரத்தை சுவாமி உன்னிப்பாக கவனித்து வந்தார். சங்கரராமன் கொலை வழக்கை அப்பீல் செய்யும் கோப்பில் புதுவை துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா கையெழுத்திட்ட தகவலை உறுதிப்படுத்தியதும் மோடியைச் சந்தித்துள்ளார் சுவாமி. ‘ஜெயலலிதாவின் நெருக்கடியால்தான் புதுவை அரசு இந்த முடிவு எடுத்துள்ளது. கிறிஸ்தவ, முஸ்லிம் இயக்கங்களைத் திருப்திப்படுத்தவே ஜெயலலிதா இப்படி நடந்து கொள்கிறார். அவர் ஆட்சிக்கு வந்தபிறகு இந்து இயக்கங்களைச் சேர்ந்த 12 பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டு உள்ளார்கள். இதற்குக் காரணமானவர்களை கண்டுபிடிக்க எந்த முயற்சியையும் ஜெயலலிதா எடுக்கவில்லை. எது எதற்கோ நீதி விசாரணை போடுகின்ற ஜெயலலிதா இந்தக் கொலைகளுக்கு கமிஷன் வைக்கவில்லை. இதற்குக் காரணம், சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியல் லாபம்தான்’ என்று சொல்லியிருக்கும் சுவாமி, ‘சங்கரராமன் கொலை வழக்கு அப்பீல் போவதன் மூலமாக வேறு ஒரு லாபத்தை எதிர்பார்த்து நடந்து கொள்கிறார்’ என்றும் சொன்னாராம்!”

”அது என்ன?”

”சுப்பிரமணியன் சுவாமியே விரைவில் அதனை வெளியிடப்போகிறார் என்று டெல்லி தகவல்கள் சொல்கின்றன!”

”இதற்கு மோடி என்ன சொன்னாராம்!”

”புதுச்சேரி துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா கையெழுத்துப் போட்டது பற்றி மோடி விசாரித்திருக்கிறார். ‘கட்டாரியாவுக்கு தனிப்பட்ட ஆர்வம் இதில் இருக்கிறதா?’ என்று கேட்டுள்ளார் மோடி. ‘புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் இங்கு அனைத்து கோப்புகளிலும் துணைநிலை ஆளுநர் ஒப்புதல் தேவை. அதனால் அவர் கையெழுத்து போட்டுள்ளார். ஆனால் அவர், மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்றுவிட்டுத்தானே கையெழுத்துப் போடவேண்டும். அவர் இஷ்டத்துக்கு எப்படிச் செயல்பட முடியும்?’ என்று சுவாமி கேட்டுள்ளார். ‘இதனை ஜனாதிபதி கவனத்துக்கு கொண்டு செல்லுங்கள். அவரை மாற்றிவிடலாம்’ என்றும் மோடி சொல்லியிருக்கிறார். இதன்படி 10-ம் தேதி அன்று ஜனாதிபதியை சந்தித்துள்ளார் சுவாமி. மேல்மட்ட சந்திப்புகளில் நடந்த விஷயங்களை ஜனாதிபதிக்கு சுவாமி சொல்லியிருக்கிறார். உடனடியாக வீரேந்திர கட்டாரியாவை நீக்கும் கோப்பில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையெழுத்துப் போட்டார். 11-ம் தேதி இரவே அதற்கான உத்தரவு புதுவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.”

”இதை வைத்துத்தான் முதல் பலி புதுவை கவர்னர் என்று சொன்னீரா?”

”சென்னை, புதுவையில் நடந்த சம்பவங்களை கண்கொத்திப் பாம்பாக கவனிக்கிறார்களாம். ‘2013 நவம்பர் 27 அன்று புதுவை நீதிமன்றம் சங்கரராமன் கொலை வழக்கின் தீர்ப்பு வந்தது. அப்பீல் செய்ய வேண்டுமானால் 60 நாட்களுக்குள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய வேண்டும். அதாவது 2014 ஜனவரி 27-க்குள் தாக்கல் செய்திருக்க வேண்டும். தீர்ப்பு வந்த இரண்டு வாரத்திலேயே, அப்பீல் போடலாம் என்று புதுவை அரசுக்கு அரசு வழக்கறிஞர் தேவதாஸ் கடிதம் அனுப்பிவிட்டார். ஆனால், புதுவை அரசு அதில் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் 28.5.2014 அன்று தமிழக சி.பி.சி.ஐ.டி ஏ.டி.ஜி.பி புதுவை உள்துறைக்கு ஒரு கடிதம் அனுப்புகிறார். அதன் பிறகுதான் புதுவை அரசு இதில் கவனம் செலுத்துகிறது. 28.6.2014 அன்று இதற்கான கோப்பு புதுவை சட்டத் துறையில் தயாராகிறது. 3.7.2014 அன்று இரவு 11 மணிக்கு புதுவை ஹோட்டல் ஒன்றில் வைத்து முதல்வர் ரங்கசாமி கையெழுத்துப் போடுகிறார். 10.7.2014 அன்று புதுவை துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா கையெழுத்துப் போடுகிறார். ஒரு தீர்ப்பு வந்து ஏழு மாதம் சும்மா இருந்துவிட்டு, மே 28-ம் தேதியிலிருந்து ஜூலை 10-ம் தேதிக்கு 45 நாட்களுக்குள் துரிதமாக காரியங்கள் நடக்கிறது என்றால் இது ஏதோ ஒரு சதித்திட்டத்தின் விளைவுதான்’ என்று விவரம் அறிந்தவர்கள் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.”

”கவனிக்க வேண்டிய லாஜிக்தான்!”

”கடந்த 10-ம் தேதி ஜனாதிபதியை சந்தித்த சுப்பிரமணியன் சுவாமி 2 கடிதங்களைக் கொடுத்துள்ளார். ஒன்று, சோனியா காந்தியின் சொத்து சம்பந்தப்பட்டது. இன்னொன்று தமிழகத்தில் தொடர்ந்து கொலை செய்யப்பட்ட 12 இந்துப் பிரமுகர்கள் பற்றியது. இதில், காஞ்சி ஜெயேந்திரர் மீதான வழக்கின் அப்பீல் பற்றியும் குறிப்பிடும் சுவாமி, ‘இதுபற்றி அரசியலமைப்புச் சட்டம் 256-ன் படி தமிழக அரசிடம் விளக்கம் கேட்க வேண்டும். அல்லது 356-வது சட்டப்பிரிவு படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.”

”356 என்பது ஆட்சியைக் கலைக்கும் பிரிவு ஆச்சே?”

”ஆமாம்! ஒரு சீரியஸான சட்டப் பிரிவை தமிழக அரசு மீது பயன்படுத்துங்கள் என்று பி.ஜே.பி தலைமை அலுவலகத்தின் மிக முக்கியமான பொறுப்பில் இருக்கும் ஒருவர், பிரதமரைச் சந்தித்துவிட்டு ஜனாதிபதியிடம் ஒரு கடிதத்தைக் கொடுக்கிறார் என்றால் என்ன அர்த்தம்?”

”என்ன அர்த்தம்?”

”சங்கரராமன் அப்பீல் விவகாரத்தை மத்திய பி.ஜே.பி அரசு விரும்பவில்லை. இதில் தமிழக அரசு முனைப்பாக இருப்பதையும் கசப்புடன் பார்க்கிறது என்பது தெரிகிறது. முதல் ஆக்ஷன் புதுவை துணைநிலை ஆளுநர் கட்டாரியாவை காவு வாங்கிவிட்டது. அடுத்து என்ன நடக்க இருக்கிறது என்பதை காத்திருந்து கவனிப்போம்!” என்றபடி அடுத்த மேட்டருக்குத் தாவினார்!

”61 பேர் உயிரை பலி வாங்கிய மவுலிவாக்கம் கட்டட விபத்தை சி.பி.ஐ விசாரிக்கக்கோரி பேரணி நடத்தப்படும் என்று தி.மு.க தலைவர் கருணாநிதி அறிவித்தவுடன், அ.தி.மு.க தரப்பில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ‘கருணாநிதி குடும்ப அரசியலை மறைக்க பேரணி நடத்துகிறார்’ என்று அந்தக் கட்சியின் இலக்கிய அணியும், ‘அரசியலில் ஒதுக்கப்பட்ட கருணாநிதிக்கு பேரணி ஒரு கேடா?’ என்று தொழிற்சங்கத்தினரும் கோபாலபுரம், அறிவாலயத்தைச் சுற்றி போஸ்டர் ஒட்டினர். அதற்கு பதிலாக, புழல் தி.மு.க பெயரில், ‘பிண வாடையை மிஞ்சிய ஊழல் வாடையை பாரீர்! பாரீர்!!’ என்று போயஸ் தோட்டத்தை சுற்றியும் கோட்டைக்கு முதல்வர் செல்லும் வழியெங்கும் போட்டி போஸ்டர் ஒட்டினர். இப்படி ஒரு போஸ்டர் யுத்தத்தை இரண்டு கட்சியினரும் சென்னையில் நடத்திவருகிறார்கள்!”

”எல்லாம் கடந்துபோகும்!”

”தி.மு.க-வின் கண்டன பேரணியின் முடிவில் ஸ்டாலின் பேசினார். ஐந்தே நிமிடத்தில் பேச்சை முடித்துக்கொண்டு கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று சி.பி.ஐ விசாரணை கேட்டு கவர்னரிடம் மனு கொடுத்தார்.”

”என்ன சொன்னாராம் கவர்னர்?”

”வழக்கம்போல நடவடிக்கை எடுக்கிறேன் என்று சொல்லியிருப்பார். கவர்னர் ரோசய்யாவுக்கு தன்னை தமிழ்நாட்டில் இருந்து மாற்றாமல் இருந்தால் போதும் என்று தவம் இருப்பவர், தி.மு.க-வின் கோரிக்கைக்கு ஏதாவது வாக்குறுதி கொடுப்பாரா என்ன?” என்று கேட்டபடி ‘முரசொலி’ கட்டிங் ஒன்றை எடுத்துக் காட்டினார் கழுகார்.

”எம்.நடராஜன் கைது குறித்து கருணாநிதி பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறார். ‘சசிகலா நடராஜன் கைது விவகாரத்துக்கு சொல்லப்படும் கதை?’ என்று அவரே ஒரு கேள்வியைக் கேட்டுக்கொண்டு அளித்த பதிலில், ‘கதை தான்! ஒருவர் தனக்கு பணம் வரவில்லை என்று செய்த புகாரையொட்டி அவரை குற்றாலம் சென்று கைதுசெய்து, சென்னைக்கு அழைத்து வந்து புழல் சிறையில் அடைத்திருக்கிறார்கள். யார் ஒருவர் பணம் தரவில்லை என்று புகார் வந்தாலே இந்த அரசு அவர்களையெல்லாம் கைதுசெய்து விடுமா? கொடுத்த புகார் பற்றி விசாரிக்கப்பட்டதா? கைது செய்யப்பட்டவரின் துணைவியார் முதலமைச்சர் வீட்டிலே இருப்பவர்……… இப்படி திடீர் திடீரென்று நடராஜன் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதும் சில நாட்களுக்குப் பிறகு அவரை விடுவிப்பதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாக உள்ளது. இதிலே உண்மை என்ன? அவர் எதற்காக கைது செய்யப்படுகிறார்? எதனால் விடுவிக்கப்படுகிறார்?…………. என்னதான் நடக்குது இந்த நாட்டிலே என்றுதான் பாடவேண்டும்’ என்று  பூடகமாகக் கேட்டுள்ளார்.”

”என்ன சொல்ல வருகிறார் கருணாநிதி?”

‘தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘அ.தி.மு.க-வில் சிலரோடு இன்னமும் நெருக்கம் பாராட்டி வருகிறார் நடராஜன். அதன் மூலமாக தன்னுடைய அரசியல் எதிர்காலத்தைப் பற்றி பேசி வருகிறார். இந்த நட்பை உடைப்பதற்காகத்தான் கைதுசெய்யப்பட்டுள்ளார் நடராஜன். பெங்களூரு வழக்கைப் பற்றி அடிக்கடி விசாரித்து வருகிறார் நடராஜன். இது பலருக்கும் சந்தேகம் கிளப்பி உள்ளது. அதுதான் கைதுக்குக் காரணம்’ என்று சொல்கிறார்கள். இந்த அடிப்படையில்தான் கருணாநிதியும் எழுதினாராம்” என்று சொல்லிவிட்டு எழுந்து பறந்தார் கழுகார்.

<span>%d</span> bloggers like this: