மிஸ்டர் கழுகு: கண்டுபிடிக்கவே முடியாதா?

”இரண்டு இதழ்களாக நான் சொல்லி வந்தது அவர்களது வாயில் இருந்தே வந்துவிட்டது பார்த்தீரா?” என்று சொல்லியபடி உள்ளே வந்தார் கழுகார்.

”சங்கரராமன் கொலை வழக்கின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் விவகாரத்தில், புதுவை கவர்னர் வீரேந்திர கட்டாரியாவின் பதவி காவு வாங்கப்பட்டுவிட்டது. இதனை அவரே வெளிப்படையாக ஒப்புக்கொண்டுவிட்டார். ‘என்னுடைய நீக்கத்துக்கான காரணங்களை ஜனநாயக முறைப்படி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக நான் கேட்டுத் தெரிந்துகொள்வேன். சங்கரராமன் வழக்கின் மேல்முறையீட்டில் புதுவை முதல்வர் ரங்கசாமி, தலைமைச் செயலாளர், சட்டத் துறை செயலாளர் ஆகியோர் கையெழுத்து போட்டிருந்தார்கள். தமிழக அரசின் பரிந்துரையும் அதில் இருந்தது. அதனால்தான், மேல்முறையீட்டு உத்தரவில் நான் கையெழுத்து போட்டேன். இந்த விவகாரத்தில் நான் ஏமாற்றப்பட்டேன்’ என்று வீரேந்திர கட்டாரியா வெளிப்படையாகவே புலம்பியிருக்கிறார். இதை வைத்துப் பார்க்கும்போது, சங்கரராமன் வழக்குதான் அவரது பதவியைப் பறித்துவிட்டது என்பது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது!”

”உண்மை!”

”இன்னொன்றையும் வீரேந்திர கட்டாரியா சொல்லி​யிருக்கிறார். ‘என்னிடம் அனுப்பி வைக்கப்பட்ட கோப்பில் இது சங்கரராமன் வழக்கு என்றோ, காஞ்சி சங்கராச்சாரியார் தொடர்புடையது என்றோ இல்லை. மொட்டையாக வழக்கு எண்ணை மட்டும் சொல்லியிருந்தார்கள். அதனால், என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்று சொல்கிறார் கட்டாரியா!”

”இது உண்மையா?”

”இந்தக் கோப்பைத் தயாரிக்கும்போது மிகுந்த தந்திரமாகத் தயாரித்தது போலத்தான் தெரிகிறது. புதுவை உள்துறை சார்பில் தயாரிக்கப்பட்ட அரசு ஆணையை நானே பார்த்தேன். ‘வழக்கு எண் 94/2005 தொடர்பாக புதுச்சேரி செஷன்ஸ் நீதிமன்றம் 27 நவம்பர் 2013-ம் தேதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப்படுகிறது’ என்ற பொதுவான தகவல் மட்டும்தான் உள்துறையால் தயாரிக்கப்பட்டு உள்ளது.”

”தமிழக அரசின் பரிந்துரை இருந்ததாகச் சொல்லியிருக்கிறாரே கட்டாரியா?”

”ஆமாம். 28.5.2014-ம் தேதி அன்று தமிழக சி.பி.சி.ஐ.டி ஏடி.டி.ஜி கையெழுத்து போட்டு ஒரு கடிதம் புதுவை அரசுக்கு வந்ததாக இந்தக் கோப்பில் ஆதாரம் காட்டப்பட்டு உள்ளது. அதனைத்தான் தமிழக அரசின் தூண்டுதல் என்று சொல்கிறார்கள்.”

”இப்படிப்பட்ட சூழ்நிலையில் சங்கரராமன் வழக்கு மேல்முறையீடு செய்யப்படுமா?”

”தமிழக அரசு இப்போதைக்கு இதனை அடக்கி வாசிக்கலாம் என்று நினைப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், சிலர் பொதுநல வழக்குப் போடுவதற்கான ஏற்பாடுகளில் இறங்கி வருகிறார்கள். ‘அரசு வழக்கறிஞர், புதுவை அரசு, கவர்னர் உத்தரவு போட்ட பிறகும், மேல்முறையீடு செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணம்?’ என்று அதில் கேட்க இருக்கிறார்களாம். இப்போதைக்கு இந்தப் பிரச்னை முடியாதுபோல் இருக்கிறது” என்றபடி அடுத்த மேட்டருக்கு வந்தார் கழுகார்.

”இதுவும் கொலை விவகாரம்தான்! கடந்த ஆண்டு  ஜனவரி மாதம் 31-ம் தேதி தி.மு.க தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் மதுரையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக ‘அட்டாக்’ பாண்டி உள்பட 18  மீது வழக்குத் தொடரப்பட்டது. ஒரு வருடம் ஆகியும் அவர் போலீஸ் கையில் சிக்கவில்லை. எனவே, போலீஸ் அவருக்கு கெடு வைத்தது. கடந்த ஜனவரி 24-ம் தேதிக்குள் போலீஸிடம் ஆஜர் ஆகவில்லை என்றால், அவரது சொத்துக்கள் முடக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இப்படிச் சொல்லி ஆறு மாதங்கள் ஆன பிறகும், இன்னமும் அட்டாக் பாண்டியை போலீஸாரால் நெருங்க முடியவில்லை.”

”எதைச் சொன்னாலும் ஸ்காட்லாந்துக்கு இணையான போலீஸ் என்பார்கள். அவர்​களால் அட்டாக் பாண்டியை பிடிக்க முடியவில்லை என்பது நம்பும்​படியாக இல்லையே?”

”அட்டாக் பாண்டி மதுரை வட்டாரத்தில்தான் இருக்கிறார் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். ‘ஜீன்ஸ் பேன்ட், டி-சர்ட், ட்ரிம் செய்யப்பட்ட முகம், கூலிங் கிளாஸ் என ஒரு சில மாற்றங்களோடு மதுரையில்தான் அட்டாக் பாண்டி இருக்கிறார். உறவினர், நண்பர்கள், வீட்டு விசேஷங்கள், துக்க நிகழ்வுகள் என அனைத்துக்கும் உடனுக்குடன் வரமுடியாத நிலைமையில் இருப்பதால், ஒரு வாரம் கழித்து வந்து பார்த்துவிட்டுச் செல்கிறார்’ என்றும் சொல்கிறார்கள். எனவே, ஆளைப் பிடிக்க முடியவில்லை என்று போலீஸ் சொல்வது ‘அலேக்’தான் என்றும் சொல்லப்படுகிறது. ‘ஒருமுறை மதுரை டோல்கேட்  பகுதியைக் கடந்துபோகையில் காருக்குள் அட்டாக் பாண்டி இருந்ததாகத் தகவல் வந்தது.  பிறகு அடுத்த 10 கிலோமீட்டரில் போலீஸ் வாகனசோதனை செய்தபோது  ஆள் சிக்கவே இல்லை. அவருக்கு போலீஸிலேயே பல பேரு இன்னமும் விசுவாசிகளாக இருக்கிறார்கள். அதனால், என்ன பிளான் பண்ணினாலும் அவருக்கு முதலில் தகவல் போய்விடுகிறது’ என்று போலீஸ் அதிகாரி ஒருவரே புலம்புகிறார்!”

”ம்!”

”அட்டாக் பாண்டி சொன்னதாக ஒரு தகவல் பரவியுள்ளது. ‘தி.மு.க, அ.தி.மு.க என யார் ஆட்சியில் இருந்தாலும், இனி என்னைப் பிடிக்க முடியாது. அந்த அம்மாவால வீரப்பனை மட்டும்தான் பிடிக்க முடியும். ஏன்னா, வீரப்பன் காட்டுக்குள் இருந்தார். அதனால, லேசுல பிடிச்சுட்டாங்க. என்னைப் பிடிக்கச் சொல்லுங்க பார்க்கலாம்’ என்று தைரியமாகச் சொல்லிவருவதாக போலீஸ் மேலிடத்துக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதைக் கேட்டு ஒரு அதிகாரி தலையில் அடித்துக்கொண்டாராம்!”

”பொட்டு சுரேஷ் வழக்கைப் பற்றி நீர் சொன்னதால், திருச்சி ராமஜெயம் கொலை ஞாபகம் வருகிறது… அது என்ன ஆச்சு?”

”அதுவும் அப்படித்தான் கிணற்றில் போட்ட கல்லாய் கிடக்கிறது. இரண்டு ஆண்டுகள் ஆன பிறகும், இந்த விவகாரத்தில் எந்தத் தடயமும் போலீஸுக்குக் கிடைக்கவில்லை. நூற்றுக்கணக்கானவர்களை விசாரித்து விட்டுவிட்டார்கள். அவர்களிடம் இருந்தும் வழக்கு நகரவில்லை. யாரோ ஒருவர் மீது சந்தேகம் வந்து, ஒரு மாதத்துக்கு முன் அவரை வளைத்து இருக்கிறார்கள். முழுமையாக விசாரித்ததில், அவருக்கும் இந்தக் கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்று  முடிவுக்கு வந்தார்களாம். ஆனால், அந்த நபர் லைசென்ஸ் இல்லாத துப்பாக்கி வைத்திருந்தார். அது சம்பந்தமான வழக்கை மட்டும் போட்டுள்ளார்கள். வேறு எந்த நகர்வும் இல்லாமல் இருக்கிறது இந்த வழக்கின் விசாரணை. ஜூன் 3-ம் தேதி தனது பிறந்தநாள் விழாவில் பேசிய கருணாநிதி, இந்த வழக்கு பற்றி குறிப்பிட்டார். ‘ராமஜெயம் கொலைக்குக் காரணமானவர்களை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அது ஏன் என்பது ரங்கநாதருக்கே வெளிச்சம்’ என்று சொன்னார். அதன் உள் அர்த்தம் என்ன என்பதும் போலீஸுக்குப் புரியவில்லை. ‘திருச்சி வட்டாரம் என்பதால் ரங்கநாதர் பெயரை கருணாநிதி பயன்படுத்தி இருக்கலாம். மற்றபடி, அதில் எந்தத் தகவலும் இல்லை’ என்கிறார்கள். ‘இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்குக் கொண்டுசெல்ல தி.மு.க முயற்சித்தால் மட்டும்தான் உண்மை வெளிப்படும்’ என்றும் சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்” என்று சொன்ன கழுகார், ஏதோ ஞாபகம் வந்தவராக மதுரை பி.ஆர்.பி பற்றி சொல்ல ஆரம்பித்தார்!

”மதுரை மாவட்ட ஆட்சியர்  சகாயம் கிளப்பிவிட்ட கிரானைட் ஊழல் தமிழகத்தை உலுக்கி உச்ச நீதிமன்றம் வரைச் சென்றது. அதிரடி நடவடிக்கைள் மூலமாகப் பலரை கைதுசெய்தபோது, தமிழகம் அதிர்ந்தது. சில காலம் கிரானைட் புள்ளிகள் அடக்கி வாசித்தனர். மீண்டும் அவர்கள்  விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வருகின்றன!”

”அப்படியா?”

”மதுரை தெற்குத்தெருவில் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ள பி.ஆர்.பி கிரானைட் நிறுவனத்தின் உள்ளே கடந்த வாரம் கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்ட மந்திரவாதிகள் மற்றும் பூசாரிகளால் பூஜை செய்யப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. மீண்டும் கிரானைட் தொழில் ஜரூராக செயல்படப்போகிறது என்று சொல்கிறார்கள்.’ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது திடீரென கிரானைட் கம்பெனிகள் ஜரூர் ஆகிவருவது சந்தேகம் கிளப்புகிறது.’ என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.”

”ஓஹோ!”

”பா.ம.க-வுக்கு இப்போது விழாக்காலம். 16.07.1989 அன்று பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டது. இது வெள்ளிவிழா ஆண்டு என்பதை ஞாபகப்படுத்தி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தனது கட்சியின் தோல்விக்கான காரணத்தை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.”

”பரவாயில்லையே?”

”ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், ‘1991-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க-வுக்கு இணையாகவும் 1996-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு இணையான இடங்களையும் பா.ம.க பிடித்தது. அதன்பின், இந்த இரு கட்சிகளுக்கும் மாற்றாக உருவெடுக்கும் அரசியலை கையில் எடுத்திருக்க வேண்டிய பா.ம.க, இந்த இரு கட்சிகளிடமே மாறி மாறி கூட்டணி அமைத்ததுதான் பெரும் சரிவை ஏற்படுத்தியது. பா.ம.க தேர்தல் தோல்விக்கு, கூட்டணி தொடர்பான தவறான அணுகுமுறையே காரணம். எனவேதான், தி.மு.க, அ.தி.மு.க அல்லாத மாற்று அணியை உருவாக்கி, கடந்த மக்களவைத் தேர்​தலை பா.ம.க சந்தித்தது. தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் ஆட்சி தொடங்கி, வரும் 2016-ம் ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதுவே, திராவிட ஆட்சியின் முடிவாகவும், பா.ம.க தலைமையிலான மாற்று ஆட்சியின் தொடக்கமாகவும் இருக்கும்’ என்றும் சொல்லியிருக்கிறார்.

அதாவது, 2016-ல் பா.ம.க தலைமையில் ஆட்சி அமைக்க சபதம் எடுத்துள்ளார் ராமதாஸ். அதற்கான புதிய கூட்டணியை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளார். இதே நேரத்தில் பா.ம.க-வினர் பவளவிழா உற்சாகத்தையும் அடைந்துள்ளார்கள். ராமதாஸ் பிறந்தநாள் ஜூலை 25-ம் தேதி. அவர் 1939-ம் ஆண்டு பிறந்தவர். அந்த அடிப்படையில் பார்த்தால், இது அவருக்கு பவளவிழா ஆண்டு. அதனைக் கொண்டாடுவதற்கும் கட்சியினர் தீவிர திட்டங்களைத் தீட்டி வருகிறார்கள்.”

”அப்படியானால் பி.ஜே.பி கூட்டணி?”

”அப்படி ஒன்று இன்று இருக்கிறதா என்றே தெரியவில்லையே? பி.ஜே.பி கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சி, அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம். இதன் தலைவர் சதக்கத்துல்லா சென்னையில் வரும் 26-ம் தேதி இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகளை செய்து வருகிறார். மத்திய அமைச்சரும் தமிழக பி.ஜே.பி தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஒப்புதல் கொடுத்துவிட்டாராம். அதோடு, பி.ஜே.பி கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்த தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளையும் அந்த இஃப்தார் நிகழ்ச்சிக்கு அழைக்கிறார்களாம். ‘தேர்தலுக்குப் பிறகு இந்தத் தலைவர்கள் சந்திக்கவில்லை. இஃப்தார் விழாவில் சந்தித்தால், இந்தக் கூட்டணி தொடர்கிறதா இல்லையா என்பது தெரிந்துபோகும்’ என்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார்,

”மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழகத்தைச் சேர்ந்த இந்து இயக்கங்களின் தலைவர்கள் சந்தித்து திரும்பியிருக்கிறார்கள். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சுப்பிரமணியன் சுவாமி சந்தித்து, இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் தமிழகத்தில் தொடர்ந்து படுகொலைகள் செய்யப்பட்டு வருவது பற்றி புகார் கொடுத்துள்ளார். இந்த நிலையில் அந்த விவகாரத்தை சீரியஸாக எடுத்துக்கொண்டுள்ளதாம் தமிழக அரசு. பாதுகாப்பு தேவைப்படும் இந்து அமைப்பு நிர்வாகிகளுக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு கொடுக்க மேலிடத்தில் இருந்து உத்தரவு போயிருக்கிறதாம்” என்றபடி பறந்தார்!

மணலில் கரன்ஸி அள்ளும் டிரான்ஸ்போர்ட் மாஃபியாக்கள்!

மணல் விற்பனை இப்போது கைமாறிய பிறகு, அந்தத் தொழில் அமைதியாகப் போய்க்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிலர் தேசிய நெடுஞ்சாலைகளில் நின்றுகொண்டு, இந்த லாரிகளை மடக்கி கடுமையான மாமூலை கறந்துகொண்டு இருப்பதாக மணல் விற்பனையாளர்கள் புலம்புகிறார்கள்.

‘அரசின் மணல் விற்பனை யார்டுகளில் இருந்து அதிகாரபூர்வமாக வாங்கிவரும் மணல் லாரிகளைக்கூட இவர்கள் மடக்குகிறார்கள். கட்டாய வசூல் செய்கிறார்கள். லாரிக்காரர்கள் வைத்துள்ள ரசீதைக் கிழித்துப் போட்டுவிட்டு பணம் வசூலிப்பதும் நடக்கிறது” என்று சொல்கிறார்கள்.

  கிளப்களுக்கு நெருக்கடி முற்றுகிறது!

வேட்டி விவகாரத்தில் சீரியஸாக இருக்கிறார் முதல்வர். கடந்த தி.மு.க ஆட்சி​யி​லேயே இந்தப் பிரச்னையை சட்டசபையில் கிளப்பினார் அ.தி.மு.க உறுப்பினர் கலைராஜன். ‘சென்னையில் உள்ள கிளப்களுக்கு வேட்டி கட்டிக்கொண்டு சென்றால், அனுமதிப்பது இல்லை. வேட்டி கட்டிச் செல்ல அனுமதிக்கப்படுமா?’ என்று கேட்டார் கலைராஜன். அப்போது துணை முதல்வர் ஸ்டாலின், ‘முதலில் கலைராஜன் வேட்டி அணிந்துகொண்டு சபைக்கு வரவேண்டும்’ என்று சொன்னாரே தவிர, தமது அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதைச் சொல்லவில்லை.

இப்போது இந்தப் பிரச்னை எழுந்ததும், ‘தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று ஸ்டாலின் சொன்னது ஜெயலலிதாவைக் கொந்தளிக்க வைத்தது. அதனால்தான் சபையில் வேட்டிப் பிரச்னையில் தீவிரமாகப் பேசினார். தமிழ்நாடு கிரிக்கெட் அஸோசியேஷன் கிளப் அமைப்புக்கு, தமிழக அரசின் சங்கங்கள் பதிவாளரை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார் முதல்வர். ‘இனி இதுபோல் நடந்தால், அந்த கிளப்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்துசெய்வோம்’ என்றும் சொல்லியிருக்கிறார்.

”இந்த கிளப்கள் தங்களது உறுப்பினர்களிடம் எவ்வளவு வசூல் செய்கின்றன, அரசுக்கு எவ்வளவு செலுத்துகின்றன, அரசுக்கு இந்த கிளப்களால் என்ன நன்மை, இந்த கிளப்கள் இயங்கும் இடங்கள் அவர்களது சொந்த இடங்களா அல்லது அரசிடம் பெற்ற இடங்களா என்பதற்கான ஆவணங்களை எடுக்கச் சொல்லியிருக்கிறார் முதல்வர்” என்று சொல்கிறார்கள்.

காலியாக இருந்த எட்டு மாவட்டங்களுக்கு புதிய செயலாளர்களை ஜெயலலிதா நியமித்துள்ளார். முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்துக்கு எட்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவி கிடைத்துள்ளது. பச்சைமாலிடம் இருந்த குமரி கிழக்கு மாவட்டச் செயலாளராக தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட, மேற்கு மாவட்டச் செயலாளராக ஜெங்கின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் எம்.பி-யான ராமச்சந்திரனுக்கு காஞ்சி புரம் மத்திய மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். அது, செங்கல்பட்டு நகரச் செயலாளர் சி.வி.என்.குமாரசாமிக்குக் கிடைத்துள்ளது. அரக்கோணம் எம்.பி-யான திருத்தணி அரி, திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். முன்னாள் எம்.எல்.ஏ-வான சிறுணியம் பலராமனுக்கு அந்த சான்ஸ் கிடைத்துள்ளது.

கே.பி.முனுசாமியிடம் இருந்து பறிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் பதவி, கிருஷ்ணகிரி முன்னாள் எம்.எல்.ஏ-வான கோவிந்தராஜுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க தேர்தல் பிரிவு செயலாளரும் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன், திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளராகியுள்ளார். கோவை மேயர் வேலுச்சாமியிடம் இருந்து பறிக்கப்பட்ட கோவை மாவட்டச் செயலாளர் பதவி, கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் கணபதி ராஜ்குமாருக்குக் கிடைத்துள்ளது. காலியாக இருக்கும் தர்மபுரி மாவட்டச் செயலாளர் பதவிக்கு, சி.கே.ராஜேந்திரன் பெயர் பரிந்துரை செய்யப்பட்டதாம். அந்த ராஜேந்திரன் மீது வழக்கு நிலுவையில் உள்ளது என்று ரிஜெக்ட் ஆகிவிட்டதாம்.

புதிய மாவட்டச் செயலாளர்கள் வாய்ப்பு தங்களுக்குக் கிடைக்கும் என்று புதிய எம்.பி-க்கள் பலர் எதிர்பார்த்தனர். எம்.பி-க்கள் யாருக்கும் மாவட்டச் செயலாளர் பதவி கிடையாது என்பதில் ஜெ. கறாராக இருப்பதால், அவர்களுக்கு வாய்ப்பு இல்லையாம். தொகுதி மக்கள் பிரச்னைகளில் முழு கவனத்தையும் செலுத்தச் சொல்லி உத்தரவாம்.

One response

%d bloggers like this: