உணவு என்பது… ஸ்டேட்டஸ் அல்ல!

ப்போதும் இல்லாத அளவுக்கு, கடந்த சில ஆண்டுகளாக இளம்வயதுக் குழந்தைகள், ‘கொழுப்பு’ என்கிற எமனின் உறவுக்காரனால் ஆட்டிப்படைக்கப்பட்டு வருவதாகவும், இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களில் அதிகமானோர் ‘ஒபிசிட்டி’ உள்ளிட்ட பலவிதமான நோய்களின் பிடியில் சிக்கித் தவிப்பதாகவும் அதிர்ச்சி செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதைப்பற்றி கவலையோடு பேசும் சென்னை, கே.கே.நகர், இ.எஸ்.ஐ. மருத்துவமனையைச் சேர்ந்த ‘டயட்டீஷியன்’ பவானி, ”இது நூற்றுக்கு நூறு உண்மை. குழந்தைகள் பலரும் தங்கள் உயரத்துக்கு ஏற்ற எடையைவிட, அதிக எடையிலேயே இருக்கிறார்கள். இதற்குக் காரணம்… குழந்தைகளின் தாறுமாறான உணவுப் பழக்கம் என்று சொல்வதைவிட, இதற்கு அவர்களை ஆளாக்கிய, அனுமதித்த பெற்றோர்களே!” என்று குற்றம் சாட்டுகிறார்.

”டி.வி. விளம்பரங்களில் காட்டப்படும் உணவுப் பொருட்களை, குழந்தைகள் கேட்டதுமே… ‘ஆசைப்பட்டு கேட்குது’, ‘ஒரு முறைதானே’ என்பது போன்ற சப்பைக்கட்டுகளுடன் வாங்கிக் கொடுத்துவிடுகிறார்கள். பிறகு, அந்த ருசியை மறக்காததுடன், வேறு சத்தான உணவின் மீதும் நாட்டம்கொள்ளாமல் அதையே நாட ஆரம்பித்து விடுகிறார்கள் குழந்தைகள். இந்த வகையில், ஃபாஸ்ட் ஃபுட் மற்றும் கூல்டிரிங்க் வகைகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் கணக்கில் அடங்காது” என்று எச்சரித்த பவானி,

”காலையில் பிள்ளையை பள்ளிக்கு அனுப்ப வேண்டிய, அலுவலகம் செல்ல வேண்டிய அவசரத்தில் நூடுல்ஸ், சாக்கோஸ் போன்ற உணவுகளைக் கொடுக்காதீர்கள். பள்ளியில் குழந்தைக்குத் தேவையான சத்தையும், தெம்பையும் இவற்றால் தர இயலாது. கால்சியம் மாத்திரை, விட்டமின் மாத்திரை போன்றவற்றை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் கொடுக்கும் பழக்கமும் கூடவே கூடாது. ‘என் பிள்ளைக்கு அதைக் கொடுக்கிறேன், இதைக் கொடுக்கிறேன்’ என்று பிறர் பெருமையாகச் சொல்வதைக் கேட்டு, விதம்விதமான ‘ஹெல்த் டிரிங்க் பவுடர்’, ‘சாக்லேட் பானங்கள்’ போன்றவற்றை உங்கள் பிள்ளைகளுக்கும் தராதீர்கள்.

பின் எதைத்தான் கொடுப்பது என்கிறீர்களா?

சுவைக்கு முக்கியத்துவம் தருவதைவிட, சத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இட்லி, தோசை, சிறுதானிய உணவுகள் என்று பாரம்பரியமான உணவுகளையே சிறுவயதிலிருந்தே பழக்கப்படுத்துங்கள். இவற்றின் முக்கியத்துவத்தைப் புரியவைக்க வேண்டியது உங்களின் கடமை. தினமும் குழந்தைகளை விளையாடவும், உடற்பயிற்சி செய்யவும் பழக்குங்கள். இதைவிட நல்ல மருந்தும், மருத்துவமும் உலகத்தில் கிடையவே கிடையாது. ‘நல்லா வெயிட் போடணும்’ என்பதைவிட, ஆரோக்கியமான உணவு வகைகளைக் கொடுத்து, உயரத்துக்கு ஏற்ற எடையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்” என்றெல்லாம் அறிவுறுத்திய பவானி,

”ஆசைக்காகவும், ஸ்டேட்டஸுக்காகவும் விலை உயர்ந்த குப்பை மற்றும் விஷ உணவுகளை வாங்கிக் கொடுப்பதைவிட, சத்தான உணவுகளே குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்கும்” என்று வலியுறுத்தினார்.

%d bloggers like this: